பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் 2012 குறித்து வழக்குறைஞர் வைகையுடன் நேர்காணல்

2012 செப்டம்பரில் பாராளுமன்றத்தின் லோக்சபாவிலும், 2013 பிப்ரவரியில் ராஜ்யசபாவிலும் பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் 2012 நிறைவேற்றப்பட்டுள்ளது. 1997ல் உச்சநீதி மன்றம் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான விசாகா வழிகாட்டுதல் அமைத்து 15 வருடங்களுக்கு பின்னர் பெண்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் விடாத போராட்டங்களுக்கு பின்னர் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இச்சட்டத்தின் கீழ் பாலியல் கொடுமை என்பது
அ. உடல்ரீதியாக தொடுதல்
ஆ. பாலியல் உறவு கொள்ள கேட்பது அல்லது துன்புறுத்துவது
இ. பாலியல்ரீதியான பேச்சுகள்
ஈ. பாலியல்ரீதியான படங்ககை காட்டுவது
உ. உடல் அல்லது மொழிரீதியாக பாலியல் சைகைகள்என வரையறுக்கப்பட்டுள்ளது. 10 பேருக்கு மேல் வேலை செய்யும் இடங்களில் உள் முறையீடு குழு(Internal Complaints Committee) அமைக்கவேண்டும் எனவும், சிறு தொழிற்சாலைகளுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உள்ளாட்சி முறையீடு குழுக்கள்( Local Complaints Committee) அமைக்கவேண்டும் என சட்டம் கோருகிறது. பணியடத்தில் ஒரு பெண் துன்புறுத்தப்படும்போது, அவர் இச்சட்டத்தின் கீழ் முறையீடு செய்யலாம்.

இந்த சட்டம் குறித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்குறைஞர் வைகையுடன் நேர்காணல்:

இந்த சட்டத்தின் பிண்ணனி குறித்து கூறமுடியுமா?

உச்சநீதி மன்றத்தில் பன்வாரி தேவியின் வழக்கு வரும் வரை, இந்தியாவில் பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை குறித்து எந்த சட்டமும் கிடையாது. பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டமே இருந்தது. ஆனால் இம்மாதிரியான குற்றங்களை கிரிமினல் குற்றச்சாட்டாக வழக்கை நடத்துவதில் சிரமம் இருந்தது. பன்வாரி தேவிக்கு நடந்த குற்றத்தை ஒரு அரசு சாரா நிறுவனம் உச்சநீதி மன்றத்திற்கு எடுத்து சென்ற போது, முதன் முதலாக உச்சநீதி மன்றம் இந்த குற்றத்தை வெறும் பெண்களுக்கு எதிரான குற்றமாக மட்டும் பார்க்காமல், பெண்களின் வேலையிடத்தில் ஏற்படும் பிரச்சனையான நிலைபாட்டை எடுத்தது. கிரிமினல் குற்றமாக மட்டுமல்லாமால், பெண்கள் தங்களுடைய பொருளாhதார சுதந்திரத்தை இழப்பதற்கு காரணமாக பாலியல் கொடுமை பார்க்கப்படவேண்டும்.

இதையே கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறையிலிருந்து பாதுகாப்பிற்கான சர்வதேச பிரகடனத்தை உபயோகித்து ஒரு நூதனமான தீரப்பளித்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சர்வதேச பிரகடனங்களை தங்களுடைய தீர்ப்புகளை நீதிமன்றம் பிரயோகித்ததில்லை.ஆனால் முதன்முறையாக இவ்வாறு செய்தது முக்கியமானது. இதன் மூலம் அடிப்படை உரிமை 14ன் கீழ் பாலியல் கொடுமை பெண்கள் வேலை செய்யும் உரிமையை பறிப்பதாக உச்சநீதி மன்றம் கருத்துறைத்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தினால் வரையறுக்கப்பட்ட விசாகா வழிமுறைகள் பணியிடங்களில் பெண்கள் மேல் பாலியல் கொடுமைககு எதிராக முதலாளிகள் பாதுகாப்பு தரவேண்டும் எனக் கூறுகிறது.

பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் உழைக்கும் பெண்களுக்கு அனைத்து வகைகளிலும் பாதுகாப்பு தரக்கூடுமா?

இந்த சட்டம் விசாகா வழிமுறைகளிலிருந்து வரைமுறைபடுத்தப்பட்டாலும், பல வகைகளில் குறைபாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் மாவட்ட, தாலுகா அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவை சிறப்பாக செயல்படுமா என்ற கேள்விக்குறி எழுகிறது. முக்கியமாக விவசாயப் பெண் தொழிலாளர்களுக்கும், தேயிலை தோட்டங்களில் போன்ற இடங்களில் உள்ளப் பெண் தொழிலாளர்களுக்கும் எந்த வகையில் இந்த சட்டம் உதவி செய்யும் என்று தெரியவில்லை.

அமைப்புசார்ந்த துறைகளுக்கும் இந்த சட்டம் போதாது தான். குறிபபாக பெண்கள் அதிகமாக வேலை செய்யும் கார்மண்ட் தொழிற்சாலைகளில் பல்வேறு தொழிலாளர் உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. சுமங்கலி திட்டத்தில் உள்ள வன்முறைகளை எதிர்ப்பதற்கு இந்த சட்டம் போதாது. நாங்கள் சுமங்கலி திட்டத்திற்கு எதிராக போட்ட வழக்கில் முதலாளிகளை விசாகா வழிமுறைகளை பின்பற்ற நிர்பந்தித்த போது அவர்கள் என்ன கூறினார்கள்? தொழிற்சாலையில் ஆண் தொழிலாளர்களே வேலை செய்யாத போது இது தேவையில்லை என்று கூறினார்கள். அதாவது ஆண் கண்காணிப்பாளர்கள், மேனேஜர்கள், முதலாளிகளின் பாலியல் கொடுமைகளைப்பற்றி அவர்கள் கணக்கில் எடுத்து கொள்ளவே இல்லை.

இன்னொரு பெரிய குறைபாடு என்பது சட்டத்தில் தொழிலாளர் துறையின் பங்கு இல்லை. தொழிலாளர்களுக்கு எந்த சட்டமும் தொழிலாளர் துறை போன்ற நிறுவனங்களை பலப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்தில் தொழிலாளர துறை பற்றிய எந்த குறிப்பும் இல்லை. வேண்டும் என்றால் மாநிலங்கள் இந்த சட்டத்தின் விதிமுறைகளில் தொழிலாளர் துறையை உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்னை பொறுத்தவரையில் இந்த சட்டம் தொழிலாளர் துறையின் கீழ் அமல்படுத்தப்பட வேண்டும் மேலும் இதன் மூலம் இத்துறைகளில் உள்ள குறைகளை முக்கியமாக பெண் அலுவலர்கள் இல்லா பற்றாகுறையும் நீக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தில் உள்ள குறுகிய நோக்தத்தோடு சட்டத்தை உபயோகிக்கும் பகுதியும் பிரச்சனைக்குரியது. இது பெண்கள் பணியிடங்களில் உள்ள பாலியல் கொடுமையை வெளியே கொண்டு வருவதைத் தடுக்கும். இவ்வாறு தவறாக சட்டத்தை உபயோகிப்பதை தடுக்கும் முறைகள் ஏற்கனவே உள்ளன. இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டியதில்லை.

நீதித்துறை, இந்திய அரசியல் துறை மற்றும் படைகளில் உள்ள பாலியல் கொடுமைகளை கலைவதற்கு இச்சட்டம் எதுவும் கூறவில்லை. ஏற்கனவே நீதித்துறையில் விசாகா வழிமுறைகளை கடைபிடிப்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என ஒரு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் அநீதிக்கு இழப்பாக பணநிவாரணம், சமரசம் என்ற நோக்கம் தேவையா?
விசாகா வழிமுறைகளில் சமரசத்திற்கான நோக்கம் இல்லாதபட்சத்தில் இந்த சட்டத்தில் உள்ள சமரசத்திற்கான நோக்கம் பிரச்சனைக்குறியதே. அநீதிக்கு நிவாரணம் என்பது நீதியல்ல. இதன் மூலம் முதலாளிகள் பெண்களை நிவாரணம் வாங்கிகொண்டு வழக்கை கைவிடும் போக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 2 மாதங்களுக்கு முன் நடந்த 4 வருடக்குழந்தை கற்பழிப்பு வழக்கில் தில்லி காவல்துறை பெற்றோர்களை பணம் வாங்கிக்கொண்டு வழக்கை கைவிட நிர்பந்தித்தது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே இம்மாதிரியான அநீதிகளில் பெண்களின் மேல் உள்ள நிர்ப்பந்தம் அதிகம். பெரும்பாலும் இந்த நிரப்பந்தம் அவருடைய குடும்பத்திலிருந்து கூட வரும் இதன் மூலம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நீதி கேட்க முடியாமல் வாய்மூடும் நிர்ப்பந்தம் எழக்கூடும்.

முறையீடு குழு தன்னுடைய வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று ஒரு பெண் கருதினால் அவருக்கு மேல்முறையீடு என்ன?

அவர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

இச்சட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு,

http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=92690

http://www.lawyerscollective.org/blog/sexual-harassment-women-workplace-bill-2012-passed-lok-sabha.html

http://www.lawyerscollective.org/wp-content/uploads/2012/09/Sexual-Harassment-at-Workplace-Bill-2012.pdf

This entry was posted in Analysis & Opinions, Labour Laws, தமிழ் and tagged , . Bookmark the permalink.