தொழிற்சங்க சட்டம் 1926-யின் கீழ் தொழிற்சங்கங்களை பதிவு செய்வது எப்படி?

தொழிலாளர் கூடம் கையேடு

இந்தக் கையேடு தொழிற்சங்கங்களை பதிவு செய்ய விரும்பும் எவருக்கும் உதவியாக இருக்கும். அனைத்து விவரங்களையும் கொண்டிருக்காவிட்டாலும் செயல்முறைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் புரிந்து கொள்ள உதவும்.

தொழிற்சங்கம் என்றால் என்ன?
பதிவு செய்வது அவசியமா? பதிவு செய்வதின் நன்மைகள் என்ன?
யார் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள்?
எவ்வித தொழிற்சங்கங்களை அமைக்கலாம்?
யார் பிரதான அதிகாரி? ஒரு தொழிலாளராக யாரை அணுக வேண்டும்?
தொழிற்சங்கத்தை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?
தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தேவைப்படும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?
தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் தருவாயில் எதிர்க்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருக்கும்?
தொழிற்சங்கத்தில் இணைந்ததற்காக நான் பணிநீக்கம் செய்யப்படலாமா?
எனது விண்ணப்ப படிவம் ரத்து செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
யார் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் ஆகலாம்?
தொழிலாளர் அல்லாதவர்கள் தொழிற்சங்கங்களில்  பிரதிநிதிகளாக இருக்க முடியுமா?
அமைப்பு விதிகள் என்னென்ன? தொழிற்சங்க பதிவை முறியடிக்ககூடிய அம்சங்கள் என்னென்ன? அமைப்பு விதிகளின் எந்தெந்த உட்கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?
என் தொழிற்சாலையில் ஏற்கனவே தொழிற்சங்கம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
தொழிற்சங்கங்கள் உங்களது நலனுக்காகத்தான் வேலை செய்கிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கும் பதிவு செய்வதற்குமான வேறுபாடு என்ன?
எனது தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிப்பதை எவ்வாறு உறுதி செய்வது?
ஒருவேளை அமைப்புசாரா தொழிலாளர்களை நாம் அணிதிரட்ட முயன்றால்? இல்லை, ஆலைரீதியாக இல்லாமல் துறை ரீதியாக ஒன்று திரட்ட முயன்றால்? இதே விதிகள் ஒத்துவருமா?
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கங்களுக்கு அனுமதியுண்டா?

தொழிற்சங்கம் என்றால் என்ன?

மேம்பட்டபணி நிலைமைகளுக்காகஒன்று கூடி போராடும் தொழிலாளர்களின் கூட்டமைப்பே தொழிற்சங்கம் ஆகும்.இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்ககளின் செயல்பாட்டை தொழிற்சங்க சட்டம் 1926 ஒழுங்குபடுத்துகிறது. இதன்படி தொழிற்சங்கம் என்பது:

நிலையான அல்லது தற்காலிகமான எந்த ஒரு கூட்டமைப்பும், பிரதானமாக தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இடையிலான அல்லது தொழிலாளர்கள் மத்தியிலான, அல்லது முதலாளிகள் மத்தியிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுவது.ஆதலால் தொழிற்சங்கம் என்பது பணியிடத்தில் தங்களுடைய உரிமைகளுக்காக போராடுவதற்காக ஒரு குறிப்பிட்ட தொழில்துறை, தொழிற்சாலை அல்லது வட்டாரத்தின் தொழிலாளர்கள் ஒன்று கூட முடிவு செய்தால் உருவாக்கப்படலாம்.

பதிவு செய்வது அவசியமா? பதிவு செய்வதின் நன்மைகள் என்ன?

தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் நிர்பந்திக்கவில்லை, ஆனால் தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அரசாங்கத்தால் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாக அது அங்கீகரிக்கப்படும் (பிரிவு 13, தொழிற்சங்க சட்டம்).பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கம் இருதரப்பில் (நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கு இடையிலான) அல்லது முத்தரப்பில் (நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் துறை இடையிலான) கூட்டு பேர ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கம் நீதிமன்றத்தின் மூலம் சட்டத்தின் மூலம் தீர்வு காண முயற்சிக்கலாம்.

மேலும், குறைந்தபட்ச ஊதியம் போன்ற முக்கியமான முடிவுகளை எடுக்கும் பல முத்தரப்பு குழுக்கள், பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்களையே உறுப்பினர்களாக கொண்டிருப்பர். ஆனால் இது இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதில்லை.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் (வீட்டு பணியாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள்) உறுப்பினர்கள் தங்களுடைய தொழிற்சங்கத்தால் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு மற்றும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் அவர்களை பதிவு செய்யலாம். இதிலிருந்து அவர்கள் சில சமூக பாதுகாப்பு நலன்களை பெறலாம்.

பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கம் சில உறுப்பினர்களை பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களாக நியமிக்கலாம். தொழில் துறையிலிருந்து அனுமதி பெறாமல் நிர்வாகம் இவர்களை பணியிலிருந்து நீக்க இயலாது.

யார் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள்?

பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள் என்பவர்கள் தொழிற்சங்கத்தில் அலுவலக பொறுப்பாளர்கள் அல்லது தலைமைக் குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள். தொழிலாளர் துறையின் அனுமதி இல்லாமல் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்க முடியாது. அப்படி நியமிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட பணியிடத்தின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீதமாக, குறைந்தபட்சமாக 5 நபர்களாகவும் அதிகபட்சமாக 100 நபர்களாகவும் இருக்கும்.தொழில் நிறுவனங்களுடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமும், அந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்க அலுவலர்களில் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் மற்றும் விலாசங்களை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30 ஆம் தேதியிற்குள் முதலாளிகளிடம் அளிக்க வேண்டும் என்று தொழில் தகராறுகள் (மத்திய) விதிமுறைகள், 1957-யின் விதி 61(1), கூறுகிறது. அந்த தொழிலாளர்களை முதலாளிகள் அங்கீகரிப்பது விதி 61(2)-யின் படி கட்டாயமாகும். தொழில் தகராறுகள் சட்டம், 1947 பிரிவு 33(4)-யில் குறிப்பிட்டுள்ள படி தொழிலாளர்களின் பெயர்கள் தொழிற்சங்கத்தினால் முன்மொழியப்பட்டு 15 நாட்களுக்குள் 12 மாதங்களுக்கு அவர்களை ’பாதுகாக்கப்பட்டவர்களாக’ அங்கீகரிக்க வேண்டும்.(பார்க்க: http://www.hrinfo.in/2014/02/protected-workmen.html)

எவ்வித தொழிற்சங்கங்களை அமைக்கலாம்?

உங்களுடைய தொழிற்சங்கம் தொழிற்சாலை சார்ந்ததாக, தொழில் சார்ந்ததாக அல்லது வட்டாரம் சார்ந்ததாகவும் இருக்கலாம். சில நேரங்களில் ஒரு குறிப்பட்ட வகை தொழிலாளர்கள் ஒன்று கூடி அவர்களுக்கான தனி தொழிற்சங்கத்தை அமைக்கலாம். வீட்டு பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், தின கூலிக் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களும் வேலை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க, மேம்பட்ட பணி நிலைமைகளுக்கு பரப்புரை செய்ய மற்றும் தங்களின் உரிமைகளுக்கு வாதிட தொழிற்சங்கங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்பது முக்கியமாகும். வட்டாரம், மாவட்டம், மாநகரம், அல்லது மாநில முழுவதுமாக என்று குறிபிட்ட புவிபரப்பில் இவை அமைக்கப்படலாம்.

யார் பிரதான அதிகாரி? ஒரு தொழிலாளராக யாரை அணுக வேண்டும்?

தொழிற்சங்கத்தை அமைப்பது மற்றும் பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு விதிகளை தொழிற்சங்கங்கள் சட்டம் 1926 பட்டியலிடுகிறது. பிரதானமான அதிகாரியாக தொழிற்சங்க பதிவாளரை பரிந்துரைக்கிறது இந்தச் சட்டம். இது பொதுவாக தொழிலாளர் துறையின் துணை தலைமை ஆணையர் பதவியில் இருக்கும் ஒருவராக இருக்கும். (பார்க்கவும்: http://www.tn.gov.in/rti/proactive/labour/handbook-labour.pdf)தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது பிராந்திய துணைத் தலைமை ஆணையர்கள் உள்ளனர்: சென்னை-1, சென்னை-2, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல் மற்றும் குன்னூர்.
தற்போதைய துணைத் தலைமை ஆணையர்களின் பெயர்களை தொழிலாளர் துறையின் இணையப்பக்கத்தில் காணலாம்.

தொழிற்சங்கத்தை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?

ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய, தொழிற்சங்க சட்டத்தின் கீழ் அரசு விதிமுறைகளை கொடுத்துள்ளது. ஏழு தொழிலாளர்கள் ஒன்று கூடி விண்ணப்பப்படிவம் -வில் கையெழுத்திட்டு விதிமுறைகளை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் தொழிற்சங்கத்தை பதிவு செய்யலாம். இந்த படிவத்தில் அட்டவணை 1 (அலுவலக பொறுப்பாளர்களின் பெயர்கள் மற்றும் விலாசங்கள்), அட்டவணை 2 (விதிகள் பற்றிய குறிப்புகள்) மற்றும் அட்டவணை 3 (பதிவுக்கான விண்ணப்பத்தை சமர்பிக்கும் ஒரு ஆண்டிற்கு மேல் தொழிற்சங்கம் இயங்கி வந்திருந்தால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிக்கை) உள்ளது.இந்த விண்ணப்பத்தில் உள்ளவை: தொழிற்சங்கத்தின் பெயர்; பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தின் பெயர்; நிறுவனர்கள் மற்றும் அலுவலக பொறுப்பாளர்களின் பெயர், விலாசம், வயது, மற்றும் பணி குறித்த தரவுகள்.இந்த விண்ணப்பம் தொழிற்சங்கங்களின் பதிவாளரிடம் (குறிப்பாக பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அல்லது தொழிற்சாலை உள்ள சட்ட வரம்பின் அதிகாரியிடம்) நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பெற்றவுடன் பதிவாளர் தொழிலாளர் துணை தலைமை ஆணையருக்கு அதை அனுப்பிவைப்பார். பின்னர் துணை தலைமை ஆணையர் சரிபார்த்தலுக்காக விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட ஏழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பார். அப்போது அசல் ஆவணங்களை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சரிபார்த்தலுக்கு கொண்டு வரவேண்டும்.ஆவணங்கள் பட்டியல்:

 • தொழிற்சங்கம் அமைப்பதற்காக பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் நகல்.
 • அலுவலக பொறுப்பாளர்களின் பெயர்கள் மற்றும் விலாசங்களை கொண்ட பட்டியல்
 • துணை விதிகள் (bye laws)
 • பூர்த்திச் செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்கள், உறுப்பினர் கட்டண ரசீதுகள், உறுப்பினர் பதிவேடு, குறைந்தபட்சமாக 100 உறுப்பினர்கள் அல்லது தொழிலாளர்களில் 10 சதவீத நபர்கள் (எந்த எண்ணிக்கை குறைந்ததோ) செலுத்தியுள்ள உறுப்பினர் நிலுவைகளின் பதிவேடு.
 • வருமானம் மற்றும் செலவு, ரசீதுகள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றின் பேரேடு.

இந்த அரசாணையின் படி, இச்செயல்முறை 90 நாட்களுக்குள் பதிவாளரினால் நிறைவேற்றப்பட வேண்டும். தொழிற்சங்க பதிவை புதுப்பிக்க, ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வருடாந்திர வரவு அட்டவணையை சமர்பிக்க வேண்டும்: படிவம் ஈ.

தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தேவைப்படும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?

பதிவு செய்ய தேவையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நிறுவனர்களாக ஏழு தொழிலாளர்கள் போதுமானது என்றாலும், 100 உறுப்பினர்கள் அல்லது 10 சதவீத தொழிலாளர்கள் (எந்த எண்ணிக்கை குறைந்ததோ) அவசியம். மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினமாக இருக்கக்கூடிய துறைச் சார்ந்த தொழிற்சங்கங்களில் குறைந்தபட்சமாக 100 உறுப்பினர்கள் அவசியம்.

தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் தருவாயில் எதிர்க்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருக்கும்?

நிர்வாகத்தின் இடையூறுகளை எதிர் கொள்வது: பலசமயங்களில், தொழிற்சங்கம் அமைப்பதை இடையூறு செய்ய அல்லது எதிர்க்க நிர்வாகம் திட்டமிடும். பெரும்பாலும் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அலுவலக பொறுப்பாளர்கள் அல்லது தலைவர்களுக்கு நிர்வாகம் தொல்லைக் கொடுக்கும் அல்லது அவர்களை அச்சுறுத்தும். மேலும், அரசு அதிகாரிகளுடன் இரகசியமாக இணைந்து தொழிற்சங்கம் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.என்றாலும், தொழிற்சங்கம் அமைப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த அந்த ஏழு நபர்களில் சில உறுப்பினர்கள் தொடர விரும்பாவிட்டால் அல்லது வெளியேற நினைத்தால் பிரிவு 4(2)யின் கீழ் சிறிதளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதன் படி குறைந்தபட்சமாக 4 நபர்கள் தயாராக இருந்தால் அரசு அதிகாரி விண்ணப்ப பரிசீலனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.”தொழிற்சங்கம் பதிவதற்காக உட்பிரிவு (1) யின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் போது, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஆனால் தொழிற்சங்க பதிவுக்கு முன்னரே சில விண்ணப்பதாரர்கள், ஆனால் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு அதிகமாக இல்லாதவர்கள், தொழிற்சங்கத்தில் இருந்து விலகி இருந்தால் அல்லது பதிவாளரிடம் தங்களை விலக்கிக் கொள்ளும் படி அறிவித்திருந்தால், இந்த காரணங்களால் மட்டுமே விண்ணப்பம் செல்லாததாக போய்விடாது.

இன்னொரு பிரச்சினை என்னவென்றால் தொழிலாளர்கள் துறையிடம் தொழிற்சங்கம் அனைத்து உறுப்பினர்களின் பட்டியல் மற்றும் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் (பதிவு செய்யும் போதும் வருடாந்திர வரவு அட்டவணையை சமர்பிக்கும் போதும்). இது முதலாளிகள் அல்லது நிர்வாகம் உறுப்பினர்களை மிரட்டும் அல்லது அச்சுறுத்தும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தொழிற்சங்கம் அமைக்கப்படும் தொடக்கக்காலத்தில் அதிகமான ஆபத்து இருக்கும்.

ஆலைக்கான தொழிற்சங்கத்தில் இருந்தால், அதை பதிவு செய்யும் தருணத்தை கவனமாக முடிவு செய்ய வேண்டும். அலுவலக பொறுப்பாளர்கள் எந்த நிலைமையையும் கையாள தயாராகும் வரை கவனமாக முன்னெடுப்பது அவசியமாக இருக்கலாம்.

காகித அலுவல் மற்றும் அதிகாரத்துவம்: பதிவு செய்ய ஏராளமான படிவங்களும் ஆவணங்களும் ஒப்படைக்க வேண்டும்(எடுத்துக்காட்டுக்கு இந்த சுட்டியை சொடுக்குங்கள்).தொழிலாளர்கள் புதியவர்களாகவோ அல்லது முன்அனுபவமா இல்லாதவர்களாகவோ இருந்தால் இவை பெரும்பாலும் சிக்கலானதாகவும் அதிகப்படியானதாகவும்  இருக்கும்.

தொழிற்சங்கத்தில் இணைந்ததற்காக நான் பணிநீக்கம் செய்யப்படலாமா?

அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத்தில் இணையவோ அல்லது தொழிற்சங்கம் அமைத்து செயல்படவோ சட்டப்படி உரிமை உள்ளது, ஆதலால் அதனை காரணம் காட்டி பணிநீக்கம் செய்ய முடியாது. எனினும்,பெரும்பாலான வழக்குகளில் நிர்வாகம் பணியிடத்தில் தனது அதிகாரத்துவத்தை நிலைநாட்ட தொழிற்சங்கத் தலைவர்களை மறைமுகமாக தாக்குகின்றனர். அவர்களை நிர்வாகம் அடிக்கடி பணி இடமாற்றம் செய்தும், இடைநீக்கம் செய்தும்,பொய் வழக்குகளில் பணிநீக்கம் செய்தும் தனது அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர். அந்த வழக்குகளில், தொழிலாளர் ஆணையரிடம் புகார் அளிப்பதன் மூலம் சட்டப்பூர்வமான உதவிகளை நாடலாம். ஏனென்றால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்குதலோ அல்லது துன்புறுத்தப்படுவதோ சட்டப்படி குற்றமாகும். எனினும் சட்டபூர்வமான உதவிகளை நாடுவதென்பது நீண்ட நெடிய போராட்டமாகும் மேலும் தொழிலாளர்கள் நிர்வாக அதிகாரிகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்தவாறே இருக்க வேண்டும்.

எனது விண்ணப்ப படிவம் ரத்து செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை, பதிவு செய்ததற்கு பிறகு, பதிவாளர் இப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று முற்பட்டால், இரண்டு மாதத்திற்கு முன்பே ரத்து செய்ததற்கான  காரணத்தை  அறிவித்த பின்னரே ரத்து செய்ய முடியும். இதில் தொழிற்சங்கம் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

யார் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் ஆகலாம்?

வயது தொடர்பான கட்டுப்பாடு இருக்கிறதா? வயது 15 நிரம்பியவராகவோ அல்லது அதற்குமேல் உள்ளவராகவோ இருக்கும் எந்த ஒரு தொழிலாளரும் தொழிற்சங்கத்தில் இணைய முடியும். எனினும் தொழிற்சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்களின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் பங்கு வகிக்க முடியுமா? நிச்சயமாக. எந்த ஒரு குறிப்பிட்ட வகை தொழிலாளர்களும் தொழிற்சங்கமாக ஒன்றுகூடுவதை இச்சட்டம் தடுப்பதில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் நிரந்தரத் தொழிலாளர்கள் இருக்கும் அதே தொழிற்சங்கத்தில் இருக்க முடியும். நிர்வாகம் தொழிலாளர்களை பிரித்து வைத்தாலும், அனைத்து வகைப்பட்ட தொழிலாளர்களும் ஒன்றுதிரட்டப்பட்டால், தொழிற்சங்கம் வலுப்பெறும். ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்று திரட்டினாலே ஒழிய தொழிற்சங்கத்தால் உற்பத்தியை நிப்பாட்ட முடியும் இல்லையேல் அது மிகக்கடினமான பணியாகிவிடும், ஏனென்றால் நிர்வாகம் தொழிற்சங்க ஊழியர்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து இணையான வேலை வாங்கிட முடியும். இருப்பினும் பல தொழிற்சங்கங்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதென்பது சவாலானதாகவே உள்ளது.

ஒப்பந்த தொழிலார்களை ஒன்று திரட்டுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன? பணியிடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நியமனம் மற்றும் அவர்கள் நிர்வாகத்தால் பழிவாங்கப்படுதல் மற்றும் பணி நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்தல் ஆகியவையே தொழிற்சங்கங்கள் ஒப்பந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதில் சந்திக்கும் பொதுவான இரண்டு சவால்களாகும். உதாரணமாக நிர்வாகம் அவர்களை தொழிற்சாலையில் நியமிக்கப்பட்ட தொழிலாளர்களே இல்லை என்று நிராகரிக்கும், ஆதலால் தொழிற்சங்கங்கள் முன்கூட்டியே ஒப்பந்த தொழிலாளர்களின் புகைப்படம், பணியாளர்களின் வருகைப் பட்டியல், நுழைவு அடையாளம் மற்றும் இடம் பெயர் தொழிலாளர் சட்டம் அல்லது ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்ட பதிவேடுகள் ஆகியவைகளை சேகரிக்க வேண்டும். இருப்பினும், ஒப்பந்தத் தொழிலாளர்களை எளிதில் பணிநீக்கம் செய்ய முடியும் என்று பரவலாக நம்பப்பட்டாலும், தொழில் தாவா சட்டப்படி பணி நியமனத்துக்கான ஆதாரம் வழங்கப்படுவதன் மூலம் பணி பாதுகாப்பு உள்ளது.

தொழிலாளர் அல்லாதவர்கள் தொழிற்சங்கங்களில்  பிரதிநிதிகளாக இருக்க முடியுமா?

ஆம், அலுவலக நிர்வாகிகளில் பாதிக்கும் குறைவானவர்கள் தொழிலார்கள் அல்லாதவர்களாக இருக்க சட்டத்த்தில் அனுமதி உள்ளது.

பிரிவுஎண் 22-ன்படி –

 • அமைப்பு சாரா துறைகளில் – அலுவலக நிர்வாகிகளில் குறைந்தது 50% நபர்கள் தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.
 • அமைப்பு சார் துரைகளில் –  மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக தொழிலாளர் அல்லாதவர்களில்  5 பேர் அலுவலக நிர்வாகிகளாக இருக்க முடியும்.

தொழிற்சங்கத்தின் இந்த சட்டவிதிகள் வெளியாட்கள் அலுவலக நிறுவனர்களாக இருக்க அனுமதி வழங்கியுள்ளது மற்றும் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினராகவும் இருந்து சந்தா செலுத்த வேண்டும். அவர்களின் உறுப்பினருக்கான ஆதாரங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

அமைப்பு விதிகள் என்னென்ன? தொழிற்சங்க பதிவை முறியடிக்ககூடிய அம்சங்கள் என்னென்ன? அமைப்பு விதிகளின் எந்தெந்த உட்கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

அமைப்பு விதிகள்தான் தொழிற்சங்கங்களின் செயல்பாட்டை நிர்வகிக்கிறது,மேலும் தொழிற்சங்க சட்டத்தில் வரைவு அமைப்பு விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் தொழிற்சங்கங்கள் இவ்விதிகளை தங்களுக்கேற்றவாறு வடிவமைத்துக் கொள்கின்றனர்.

இந்த விதிகள் மிக முக்கியமானவையாகும், பொதுவாக தவறுகளையும் குறைபாடுகளையுமே தொழிற்சங்கப் பதிவை இழுத்தடிக்கவும் அல்லது நிராகரிக்கவும் காரணமாக பயன்படுத்தப்படுகின்றன.

பின்வருவனவற்றை அமைப்புவிதிகளின் கீழ் குறிப்பிடவேண்டும்(பிரிவு எண் 6):

 • தொழிற்சங்கத்தின் பெயர்,
 • தொழிற்சங்கம் தோற்றுவிக்கப்பட்ட நோக்கம் கொண்ட ஒரு அறிக்கை,
 • உறுப்பினர் கட்டணம் எவ்வாறு சேகரிக்கப்படும்
 • தொழிற்சங்கத்தின் பொதுநிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது (இவை தொழிலாளர் சட்டத்தின் 15 வது பிரிவுடன் இணங்க வேண்டும்),
 • எந்தவொரு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் ஒரு உறுப்பினருக்கு நிதிவழங்க முடியும்,
 • உறுப்பினர்களின் பட்டியல்,
 • சாதாரண உறுப்பினர்களின் தகுதி (தொழிற்சங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியில் பணியாற்றும் தொழிலாளர்கள்) மற்றும் கௌரவ அல்லது தற்காலிக உறுப்பினர்கள் (தொழிலாளர் அல்லாதவர்கள்) எவ்வாறு பதவிக்குரியவர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.
 • விதிகளை மாற்றக்கூடிய அல்லது தொழிற்சங்கத்தை கலைக்ககூடிய செயல்முறைகள்.

என் தொழிற்சாலையில் ஏற்கனவே தொழிற்சங்கம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஏற்கனவே உங்கள் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் இருந்தால் அதன் அலுவலகம் சென்று தொழிற்சங்க உறுப்பினர்களையும், அலுவலக நிறுவனர்களையும் சந்தித்து அவர்கள் அந்த தொழிற்சங்கம் கையிலெடுத்து தீர்வு கண்ட பிரச்சனைகளை பற்றி வினவுங்கள். மேலும் அது அமைப்பு விதிகளின் நகலை வாங்கவும் அதன் மூலம் தொழிற்சங்க அலுவலக நிறுவனர்கள் யார் என்பது தெளிவு பெறவும் உதவும்.

பணியிடத்தில் பல தொழிற்சங்கங்கள் இருக்குமாயின் தொழிலாளர்களின் ஒற்றுமையை பிரித்து,  உங்கள் கூட்டு பேர உரிமைகளை முடக்கவும், போராடுவதற்குமான  உங்கள் திறனைக் குறைக்க முடியும். எனினும், ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கம் உங்களது நலன்களை முன்னிறுத்தவில்லையென்றால், நீங்கள் ஜனநாயகமான, உங்கள் நலன்களை முன்னிறுத்தக்கூடிய இன்னொரு தொழிற்சங்கத்தை அமைக்க கருத்தில் கொள்ளலாம். தொழிலாளர்களின் ஒற்றுமையும் அனைவரும் தகவல் சொல்லப்பட்ட முடிவை எடுப்பதென்பது மிக முக்கியமானதாகும்.

தொழிற்சங்கங்கள் உங்களது நலனுக்காகத்தான் வேலை செய்கிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

தொழிற்சங்கம் என்பது உறுப்பினர்கள் கூடி விவாதித்து ஒரு பிரச்சினையின் மேல் வாக்களிக்க கூடிய ஜனநாயக அமைப்பாகும். அலுவலக நிறுவனர்களும் ஜனநாயகத்தின் அடிப்படையில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். உங்களது குறைகளை உங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லையென்றாலோ, உங்களது அல்லது உங்களுடைய சகதொழிலாளியுடைய நலனை நேர்மையான வழியில் முன்னிறுத்தவில்லையென்றாலோ, தொழிற்சங்கம் தொழிலாளர்களை நலனை விட்டு பணி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. வெளிப்படையாகவும், விழிப்புடனும் இருந்து கேள்விகளை கேளுங்கள்.

தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கும் பதிவு செய்வதற்குமான வேறுபாடு என்ன?

ஒரு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம் உடனடியாக நிறுவன அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அதாவது என்ன தான் அரசாங்கம் தொழிற்சங்கத்திற்கு பதிவு சான்றிதழ் வழங்கி அதை சட்டபூர்வமான அமைப்பாக அங்கீகரித்தாலும், சில காரணங்களால் நிர்வாகம் தொழிற்சங்கத்திடம் பேச்சவார்த்தை நடத்த மறுக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பது நிர்வாகத்துடன் கூட்டு பேரத்தில் பங்கெடுத்து கூலி மற்றும் வேலை செய்யும் நிலைமைகளையும் நிபந்தனைகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடிவு எடுப்பதாகும்.

எனது தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிப்பதை எவ்வாறு உறுதி செய்வது?

தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கப்பட்டதாக மாற்ற வேண்டுவதென்பது ஒரு கடினமான போராட்டமாகும், தொழிற்சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் கடுமையான போராட்டத்திற்கு தயாராக இருக்கவேண்டும். தொழிற்சங்கங்கள் பொதுவாக நிர்வாகத்திற்கு தொழிற்சங்கம் அமைப்பை பற்றியும் தொழிலாளர் கோரிக்கைகளை பற்றியும் எழுத்துபூர்வமாக அறிவிக்கின்றனர். நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுக்கும் போது, பொதுவாக தொழிற்சங்கங்கள் நேரடியான போராட்டங்களில் ஈடுபடுகின்றன அல்லது பிரச்சினையை வேலை நிறுத்த அறிக்கையின் மூலம் தொழிலாளர் ஆணையத்தின் வழியாக சமரசம் பேசுகின்றன.

மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், கேரளா, ஒரிசா போன்ற மாநிலங்களில், ரகசிய வாக்கெடுப்பில், தொழிலாளர்களின் ஓட்டுகளில் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் பெற்ற தொழிற்சங்கங்களை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற சட்டநெறிகள் உள்ளன. வழக்கமாக, தொழிலாளர்களின் ஓட்டுக்களில் 50% வரை பெறும் தொழிற்சங்கம் தொழிலாளர்களின்  ஒட்டுமொத்த பிரதிநிதியாக நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படும். 10-15% என குறைந்தஓட்டுகளை வாங்கும் நிலையில், தொழிற்சங்கங்களின் கூட்டு பேர குழுவின் அங்கமாக அத்தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்படும். மகாராஷ்டிரா தொழிற்சங்கங்கள் அங்கீகரிப்பு மற்றும் தவறான தொழிலாளர் நடைமுறைகள் தடுப்பு  சட்டம், 1971; மேற்க வங்க தொழிற்சங்க விதிகள் ,1998; கேரளா தொழிற்சங்கங்கள் அங்கீகரிப்பு சட்டம், 2010; ஒரிசா தொழிற்சங்கங்கள் அங்கீகரிப்பு மற்றும் உறுப்பினர் சரிபார்ப்பு சட்டம், 1994 உள்ளிட்ட சட்டங்கள் மேற்க்கண்ட நடைமுறைகளை உள்ளடக்கியவை.

16ஆவது இந்திய தொழிலாளர் காங்கிரஸ்,தொழிற்சங்கங்களும் கம்பெனி நிர்வாகங்களும் பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிகளை பரிந்துரைசெய்தது. இவை, தொழிற்சங்கங்களும், நிர்வாகங்களும் பின்பற்ற வேண்டிய பல்வேறு விதிகளை உள்ளடக்கியுள்ளன. உதாரணத்திற்கு, நிர்வாகங்கள் தொழிலாளர் விரோத நடைமுறைகளை(unfair labour practices)பின்பற்றக்கூடாது. அதேவேளை, தொழிற்சங்கங்களும், அடிதடி, ரவுடித்தனம் மற்றும் வன்முறையான போராட்டங்களை நடத்தக்கூடாது. இந்த ஒழுங்கு விதிமுறையானது, ஒரு கம்பெனி நிர்வாகம் ஒரு தொழிற்சங்கத்தினை அங்கீகரிக்க வேண்டிய சூழ்நிலைகள் குறித்து விளக்குகிறது.

குறித்த கம்பெனியின் தொழிலாளர்களில் குறைந்தது 15% தொழிலாளர்களை ஒரு தொழிற்சங்கம் உறுப்பினராகக் கொண்டிருக்கவேண்டும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில், குறைந்தது 3 மாத சந்தா செலுத்தியவர்களே உறுப்பினர்களாக கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு கம்பெனியின் குறித்த கிளையில் பணிபுரியும் தொழிலாளர்களில் 25% பேர் வரை ஒரு தொழிற்சங்கத்தின் உறுப்பினராயிருந்தால் மட்டுமே, அத்தொழிற்சங்கம், குறிப்பிட்ட கம்பெனியின், குறித்த கிளையின் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் என அறிவித்துக் கொள்ள முடியும்.

ஒரு கம்பெனியிலோ அதன் ஒரு கிளையிலோ, பல தொழிற்சங்கங்கள் இருந்தால், அதில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்க் கொண்ட தொழிற்சங்கத்தினையே அங்கீகரிக்க வேண்டும்.

எம்.ஆர்.எஃப் ஆலையைப் பொறுத்தவரை, நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்டு, மற்ற தொழிற்சங்கம் ஓரங்கட்டப்பட்டபோது, நீதிமன்றம் மேற்கண்ட ஒழுங்குவிதிகளை பயன்படுத்துமாறு ஆணையிட்டது. ஆனால், அத்தகைய ஆணைகள் வழக்கமான ஒன்றல்ல. மேலும், இத்தகைய ஒழுங்குவிதிகள் கட்டாயமானவையல்ல. ஆதலால், பலநேரங்களில், நீண்ட நெடிய நீதிமன்ற போராட்டங்களின் வாயிலாக மாநில அரசுகள் இதனை நடைமுறைபடுத்தியுள்ளன. சில நேரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அங்கீகாரத்தைக்கோரியபோது, தொழிலாளர்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்திய, பெரும்பாண்மையினை அறிய நிதிமன்றம் ஆணையிடும்.

ஒருவேளை அமைப்புசாரா தொழிலாளர்களை நாம் அணிதிரட்ட முயன்றால்? இல்லை, ஆலைரீதியாக இல்லாமல் துறை ரீதியாக ஒன்று திரட்ட முயன்றால்? இதே விதிகள் ஒத்துவருமா?

அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களோ, அமைப்புசாரா தொழிலாளர்களோ, துறைரீதியாகவோ, ஆலை ரீதியாகவோ, ஒரு தொழிற்சங்கத்தினை பதிவு செய்யும் வழி ஒன்று தான். எனினும், சில விடயங்களில், நீங்கள் வேறு மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கங்களுக்கு அனுமதியுண்டா?

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கங்களுக்கு அனுமதியுண்டு. எனினும், தொழிலாளார் சட்டத்தின் சில அம்சங்களை அரசாங்கம் இவ்விடங்களில் தளர்த்தும். எந்தெந்த அம்சங்களைத் தளர்த்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் முடிவுசெய்யும். வழக்கமாக, வேலைநிறுத்த உரிமை மறுப்பு, தொழிற்சங்கங்களில் வெளியாரின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தல் என்ற நிலையில் இருக்கும்.

இதில் ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், தொழிற்சங்கங்களால், தங்களது போராட்டங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள் செய்யமுடியாது. (பார்க்கவும் பக்கம் 36 – (http://www.ilo.org/wcmsp5/groups/public/—ed_dialogue/—actrav/documents/publication/wcms_221002.pdf).

This entry was posted in Featured, Labour Laws, Resources, தமிழ் and tagged , , . Bookmark the permalink.