கழிவுகள் மேலாண்மையின் அரசியல் – பார்பரா ஹாரிஸ்-வொய்ட்

இந்த கட்டுரை ஆங்கிலத்தில் இந்து பத்திரிக்கையில் (Politics of Waste Management) வெளியிடப்பட்டது.

இந்தியாவில் குப்பைகளின் உற்பத்தி மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த குப்பைகளை அகற்றுவதிலும், அதை மீண்டும் உபயோகப்படுத்தும் மறுசுழற்சி பணியிலும் ஈடுபடும் தொழிலாளர்களின் நிலைமையை குறித்து அரசு புறக்கணித்து வருகிறது.

Rag Picker On the Beach

மனிதர்கள் எப்போதும் குப்பைகளை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கின்றனர். உற்பத்தி – விநியோகம் நுகர்வு என்ற அனைத்து செயல்களிலும் குப்பைகள் உருவாகின்றன. மதிப்பில்லாத இந்த குப்பையை மீண்டும் மதிப்பிற்குறிய சாதனமாக்குவதற்கு சில நிமிடங்களாகலாம் அல்லது பல யுகங்களாகலாம். சில குப்பைகளுக்கு மறு உபயோக மதிப்பு உண்டு, பல குப்பைகள் இயற்கையின் மறுசுழற்சிக்கு விடப்படுகன்றன. ஆனால் இந்த மறுசுழற்சி மெதுவாகத்தான் யுகங்களாக நடக்கும்.

2013ல், நேச்சுர்(இயற்கை) எனும் ஆங்கில மாத இதழ், இந்தியாவில் குப்பை நிர்வாகம் வளர்ந்து வரும் தொழில் எனக் குறிப்பிட்டுள்ளது. என்னுடைய 2015 களப்பணியில், (தமிழ்நாட்டின்) சிறிய நகரத்தில் பார்த்த போது, குப்பைகளில் 50 சதம், எந்த மதிப்புமில்லாமல், மறு சுழற்சி செய்வதற்கு இயற்கையிடம் விடப்படுகிறது. இந்த நகரத்தில் குப்பையை கையாளுவதற்கு சரியான முறைகள் இல்லை. கையாளுவதற்கு நிறைய செலவாகின்றது என்பதனால், வெற்றிடங்களில் இவைகள் தள்ளப்படுகின்றன. அதன் மூலம் குப்பை சுகாதாரப் பிரச்சனையாகிறது.

மனித கழிவுகள்

நாம் மனித கழிவுகளிலிருந்து ஆரம்பிக்கலாம். முன்பு 1990களில் மனித கழிவுகளை அகற்றுவதற்கு பெண் தோட்டிகள் உபயோகப்படுத்தப்பட்டனர். தற்போது மனிதக் கழிவுகளை அகற்றுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பெண் தோட்டிகள் இன்று நகராட்சிகளில் காணப்படுவதில்லை. நகராட்சிகளில் உள்ள மோசமான ஈரக் கழிவுகளைஅகற்றுவதற்கு ஆண்கள் பணி செய்கின்றனர். மற்ற தொழில் நிலைமைகளுடன் ஒபபிட்டு பார்க்கும் போது இந்த வேலை நிரந்தரமானதும், ஊதியமும் கூட இருப்பதால், இந்த வேலைகளை வாங்குவதற்கு, அரசியல் ஆதரவு வேண்டியுள்ளது. நகராட்சிகளில், உள்ள துப்புரவுத் தொழில்களில் ஆண்கள் நிறைய உள்ளனர்.

நகரத்தில் பாதி வீடுகளில், செப்டிக் தொட்டிகள் உள்ளன. ஆனால் அனைவரும், ஒழுங்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் தொட்டிகளில் தேங்கும் கழிவுகளை அகற்றுவதில்லை. ஒரு தலைமுறைக்கு ஒரு தடவை அல்லது தொட்டிகள் பழுதாகும் போதே கழிவுகளை வெளியேற்றுகின்றனர். தொட்டிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மறு சுழற்சிக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. அருகில் உள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வெளியேற்றப்படுகின்றன. இவற்றை யாரும் கண்டு கொள்வதில்லை. அவ்வப்போது காவல்துறை பிடித்தால் லாரி ஓட்டுனர்கள் அபராதம் கட்டி விட்டால் போதும்.

செப்டிக் தொட்டிகள் இல்லாத வீடுகளில் இருந்தும், அனைத்து வணிக கட்டுமானங்களில் இருந்து வரும் மனிதக் கழிவுகள், திறந்த வாய்க்கால்களில் வெளியேற்றப் படுகின்றன. மனிதக் கழிவுகள் மட்டுமல்ல, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளும் இதே வழியில் தான் அகற்றப்படுகின்றன. மற்ற கழிவுகளிலிருந்து இவைகளை பிரிக்க முடிவதில்லை. இவைகள் அனைத்து ஒரு குப்பை மேட்டுக்கு செல்கின்றன. இந்த குப்பை மேடுகளில் தான் குப்பை பெறுக்குபவர்கள் ஏதாவது மதிப்பு மிக்க குப்பைகள் உள்ளதா என்று தேடுகின்றனர். தாழ்த்தப்பட்ட ஜாதி, பழங்குடியினர்கள் என குடும்பமே இந்த தொழிலில் ஈடுபடும் நிலை. இவ்வாறு பெருகி வரும் குப்பைகளை குறைப்பதற்கு, அடிக்கடி குப்பைகளுக்கு நெருப்பை வைத்து விடுகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். அரசின் கொள்கைகளில் சுகாதாரம் என்பது கழிப்பிடங்களை மட்டுமே சாரந்து உள்ளது. அங்கிருந்து வெளியேறும் கழிவுகளை குறித்து பேசுவதில்லை.

குப்பை நிர்வாகத்தில் உள்ள வேலை நிலைமைகள்

கடந்த 25 வருடங்களாக, குப்பைகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளன. இவைகளில் மக்காத குப்பைகளே அதிகமாகி வருகின்றன. ஆனால் இதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60சதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டு விட்டன.

ஒரு பக்கம், நகராட்சிகளுக்கு வரி வசூலிப்பு குறைந்துள்ளது. மறுபக்கம் இந்த தொழிலில் உள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் மாறவில்லை. பின்பு எவ்வாறு இது(குப்பைகளை கையாளுவது) சாத்தியமாகிறது? குப்பைகளை கையாளுவதில் அமைப்பு சாரா தொழில்களின் பங்கு அதிகரிப்பதாலேயே இது சாத்தியமாகிறது. இன்றைக்கு பொதுத் துறைகளை தனியாருக்கு ஒப்படைப்பதன் மூலம், நிரந்தரப் பணி, குறைந்த பட்ச ஊதியம் என்ற நிலைமைகள் மாறி, ஒப்பந்த முறை, அடிமைத்தன வேலைகளே குப்பை பொருளாதாரத்தில் நிறைந்துள்ளது. இந்த பணியில் ஈடுபடும் ஒரு நிரந்தரத் தொழிலாளருக்கு 15000-25000ரூபாய் வேலை, சமூகப் பாதுகாப்பு என்ற நிலைமையென்றால், ஒப்பந்தத் தொழிலாளருக்கு 4000-7000ரூபாய் வேலை, எந்தச் சமூகப் பாதுப்பும் கிடையாது.

குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் தொழிலாளருக்கு இன்னொரு வேலை செய்வது அல்லது கூடுதல் வேலை செய்வது தான் ஒரே வழி. நெடு நேர ஷிஃப்டுகளில் வேலை செய்யும் இந்தத் தொழிலாளர்கள் வரும் குப்பைகளை பிரித்து அதை பேக் செய்கின்றனர். இதைத் தவிர விடிவதற்கு முன்னரே குப்பை பொறுக்குபவர்கள், நகரம் முழுதும், நடந்தோ அல்லது சைக்கிள்களிலோ சென்று, மதிப்புள்ள குப்பைகளை பொறுக்கி, பெரிய குப்பை கிடங்குகளுக்கு விற்கின்றனர். இந்த கிடங்குகளில், குப்பைகள் நூற்றுக்கணக்கான வகைகளாக விற்பதற்காக பிரிக்கப்படுகின்றன. இந்த கிடங்குகளின் உரிமையாளர்களே குப்பைகளிலிருந்து லாபம் பெறும் முதலாளிகள்.

குப்பைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு கடின, சுரண்டல்தனமான, அபாயகரமான வேலை தான் மிஞ்சுகிறது. 2014ல் மனித உரிமை உன்னிப்பு(Human Rights Watch) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், குப்பைகளை கையாளும் 90 சத தொழிலாளர்கள் ஓய்வு வயதை எட்டு முன்னரே இறந்து விடுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தொழிலில் தலித்துகளும், ஆதிவாசிகளும் வேலை செய்வதாக பலர் கூறுகின்றனர். நான் பார்த்த நகராட்சியில் மூன்றில் ஒரு பங்கு தலித் அல்லது ஆதிவாசிகள் இல்லை. அவமானம் என்று கருதப்பட்ட இந்த தொழிலை நகரமயமாக்குதலும், (நிரந்தர) நகராட்சி தொழிலாளர் வேலை வாய்ப்புகளும் மாற்றி வருகின்றன.

ஆனால் அமைப்புசாரா குப்பை கையாளும் தொழில்களில் உள்ள தொழிலாளர்கள், தலித் மற்றும் பழங்குடியினர்களாகவே உள்ளனர். இவ்வாறு குப்பைகளை கையாளுவதிலும், இன, சாதி பரிமானம் பிரதிபலிக்கின்றது. இதில் வேலை செய்யும் ஒரு இனம் விலங்குகளாகவே கருதப் படுகின்றனர. அவர்கள் குற்றவாளிகளாகவும், நோயுற்றவர்களாகவும், போதைக்கு அடிமைகளாகவும், சமூகத்தின் எந்த உரிமைகளுக்கும் தகுதியற்றவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர.

இவ்வாறு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒரே வழி குப்பை பொறுக்குதல், ஆனால் அவர்களுக்கு அனைத்து வேலைப் பாதுகாப்புகள் மறுக்கப்படுகின்றன. இவர்களின் மேல் சமூகக் கட்டமைப்பின் வன்முறைகள் சுமத்தப்படுகின்றன. வேலையில், பாகுபாடுகளை சந்திக்கவில்லை என்று பலர் கூறினாலும், சமூக மற்ற அங்கத்தினருடன் உள்ள உறவுகளில் மோதல்களை இவர்கள் சந்திக்கின்றனர். உதாரணமாக, ரயில்களில் துப்புரவாளர் தங்களுடைய சீட்டுகளை கூட தொட்டால், பயணிகள் ஏசுகின்றனர். மருத்துவமனைகளில், நோயாளிகள் துப்புரவாளர்களை கண்டிக்கின்றனர். வீடு, கல்வி,சுகாதாரம், போக்குவரத்து என்று அனைத்து மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருளாதாரத்தை அமைக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் கூறியுள்ளார். அதற்கு இவ்வாறான சமூகப் பாகுபாடுகளை கலையும் சமூகத்தை அமைக்கும் வேலையும் செய்ய வேண்டியுள்ளது. சாதி, இனம், பாலினம் என்ற பாகுபாடுகள் மட்டுமல்லாமல், வறுமை, படிப்பின்மை, அழுக்கு, போதை என்ற மனப்பான்மைகளிலும் பாகுபாடுகள் வெளிப்படுகின்றன. சமூகப் பாகுபாடிலிருந்து தனிமனிதப் பாகுபாட்டை அவை மேல் நிறுத்துகின்றன.

ஏன் இதற்கு தீர்வு இல்லை

கழிப்பிடங்களை கட்டுவதும், மாசுக் கட்டுப்பாடும் முக்கியம் என்றாலும், குப்பை மேலாண்மையில் அவை ஒரு சிறிய பகுதியாகும். தொழில் நுட்பத் தீர்வுகள் ஏராளமானவை உள்ளன. மனிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தொழில்நுட்பங்கள உள்ளன. இவை ஒன்றும் சிக்கலான நுட்பங்கள் அல்ல. அவைகளை நகரத்திற்கு ஏற்ப மாற்றி பயன்படுத்துவதில் சில நுட்பங்கள் தேவையுள்ளது. அவ்வாறு செய்யும் போது அதை தலித்துகளும், ஆதிவாசிகளும் மற்றும் ஏன் இயக்க வேண்டும். அதே சமயம் இதை கையாளும் இன்றைய தொழிலாளர் வர்க்கத்திற்கு மாற்று ஏற்பாடும் செய்யப்பட வேண்டும்.

இந்தியாவின் குப்பைப் பொருளாதாரம் சாதி கட்டமைப்புடன் பிணைந்துள்ளது. இவற்றை மாற்ற வேண்டுமென்றால், அதை தொழில்நுட்பம் கூடிய நவீன வேலைகளாக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதே சமயம் தொழிலாளர்களுக்கு கல்வியும் வேறு வேலை வாய்ப்புகளும் அவசியம். நான் பேசிய அனைத்து தொழிலாளர்களும் சுய தொழில் வாய்ப்புகள் தற்போதைய நிலைமையில் இருந்து தங்களை விடுவிக்கும் என்று நம்புகின்றனர். இவை அனைத்திற்கும் அரசின் பங்கு மேலும் தேவை.

ஆனால் ஒரு பக்கம் வேலை, சமூகப் பாதுகாப்பு, குறைந்த விலையில் அரிசி போன்ற நலத் திட்டங்கள் மூலம் அரசு முன்னேற்றத்தின் அடிப்படையாக தெரிந்தாலும், இன்னொரு பக்கம் அரசு ஆதிக்க ஜாதியின் கைப்பாவையாகவே தொழிலாளர்கள் காணுகின்றனர். தேசிய வங்கிகளில் கணக்கு திட்டம் என்பது இன்னொரு வகையான பாகுபாடையே நிலை நிறுத்துகிறது. தொழிற் சங்கங்கள், சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இதை ஒரளவுக்கு எதிர்க்கின்றன. ஆனால் என்னுடைய ஆய்வின் படி, இவை ஒரளவுக்கு அதிகார முன்னேற்றத்தை வைத்தாலும், இன்றைய அடையாள அரசியலை அவை பலப்படுத்துகின்றன. சுவச்ச பாரத் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்தியாவின் ஆதிக்க அரசியலில் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் அரசுக்கு தலையாய பிரச்சனையாக தெரிவதில்லை.

பார்பரா ஹாரிஸ்வொயிட் ஆக்ஸ்போர்ட் மற்றும ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

This entry was posted in Environment and Working Class, Manual Scavenging, Research Papers, தமிழ். Bookmark the permalink.