ஆந்திரா சிறைகளில் வாடும் தொழிலாளர்களுக்கு சட்ட உதவி கோரி உண்ணாவிரதப் போராட்டம்

செம்மரக் கடத்தலில் 20 தொழிலாளர்கள் என்கவுன்டரில் சுடப்பட்டு படுகொலை செய்யபட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆந்திராவில் சிறையிடப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யபட்டு 2 வருடங்களாகியும், அவர்களின் விசாராணை மேற்கொள்ளபடவில்லை. பலர், குற்றத்திற்கு மேலாகவே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களை பிணையில் விடுவிக்கவும், அவர்களுக்கு சட்டரீதியான உதவிகளை செய்ய கூறியும் மாநில அரசை வற்புறுத்தி, ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 7 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அகில இந்திய மக்கள் மேடை சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் விழுப்புரம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கைது செய்யபட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

AIPF-Hunger-Fast-Aug07

என்கவுன்டர் குறித்து வெளியிட்ட உண்மை அறியும் குழு அறிக்கை இத்தொழிலில் ஈடுபடும் குறிப்பாக பழங்குடி சமூகத்தை சார்ந்த தொழிலாளர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை வெளியிட்டது. அந்த அறிக்கையின் படிஅவர்கள் எல்லோரும் முழு நேரமாக மரம் வெட்டுவதையே தொழிலாகக் கொண்டவர்களும் அல்ல. கடும் வறுமை, கடன் தொல்லை, வட்டி கட்ட இயலாமை, மழை இல்லாமை, பஞ்சம் ஆகியவற்றால் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத தருணங்களில், கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளவர்களாக அவர்கள் உள்ளனர். எவ்வளவுஉயிர் ஆபத்து உள்ள வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற நிலையில் உள்ளனர். பலர் கேரளா, கர்நாடகம் முதலான மாநிலங்களில் குறைந்த ஊதியத்திற்குப் பல மாதங்கள்அங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். தவிரவும் இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள் வெட்டப் போகும் மரங்கள் அரசு அனுமதியுடன் வெட்டப் படுகின்றன என்றோ, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துச் சரி கட்டியாகிவிட்டதால், பிரச்சினை  ஏதும் இருக்காது என்றோ பொய் சொல்லியும்அழைத்துச் செல்லுகின்றனர்.”

செம்மரக் கடத்திலில் அரசியல் மற்றும் பன்னாட்டு மூலதனமும் ஈடுபடுவதை சுட்டிகாட்;டும் இந்த அறிக்கை உண்மையான குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் காவல்துறை, தொழிலாளர்களை சுட்டு தள்ளுகிறது என கூறுகிறது. மேலும், இந்த பிரச்சனையில் கைது செய்யபட்டவர்கள் மரங்களை வெட்ட சென்றவர்கள் அல்ல. ஆந்திராவிற்கு யாத்திரைக்கு சென்றவர்களை தொழிலாளர்கள், தமிழ் பேசும் பழங்குடியினத்தவர்களாக இருந்தால் கூட கைது செய்யபட்டுள்ளனர். கைது செய்தவர்களை விடுவிக்க 20000 முதல் 50000 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் குடும்பங்கள் கூறினர்.

என்கவுன்டரில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ஆகஸ்ட் 6 அன்று வேலை வாய்ப்பு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் சமையல் செய்வது உதவி செய்வது என்று கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்த ஊதியத்துடன் உள்ளன என போராட்டத் தலைவர்கள் கூறினர்.

இப்பிரச்சனைக்கு சரியான தீர்வு காண கீழ்கண்ட கோரிக்கைகளை உண்மை அறியும் குழு வெளியுட்டுள்ளது.

1.மனித உரிமைஅமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப் படை மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர் மட்டுமே அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதுவும் கூட அவர் தலைமையில் சென்ற யாரோ சில காவலர்கள் என்றுதான் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்து நீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதி மன்றக் கண்காணிப்பின் (monitering) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி..ஜி எம்.காந்தாராவ் உட்படக் கொலைச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. கொல்லப்பட்ட20 பேர்களின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

3. கொலை நடந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாமல் இப்போது போடப்பட்டுள்ள 144 தடை, கண்டால்சுடும் உத்தரவு முதலியன உடனடியாக நீக்கப்பட வேண்டும், கொல்லப்பட்ட அன்று இந்த 20பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்றவர்களின் கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்படவேண்டும்.தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

3.செம்மரக்கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவுகுறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்த பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.

4.செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ளவர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் உடனடியாக ஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத் தக்கவடிவில் வெளியிடப்பட வேண்டும்.

5. செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயேகைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் சென்ற பகுதிகள் மட்டுமின்றி திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், வேலூர் முதலான மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான கிராமங்களிலிருந்து பலரும் கைது செய்யப்பட்டு இன்று ஆந்திரச் சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பழங்குடி மற்றும் வன்னியர், ஒட்டர் முதலான அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாகவிடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்டஇரு ஆந்திர வனத்துறை அதிகாரிகள் ஶ்ரீதர் மற்ரும் டேவிட் ஆகியோரின் கொலை குறித்து ஒரு விசாரணை ஆணையம்  அமைக்க வேண்டும். தமிழகத் தொழிலாளிகளைப் போலவே கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அடித்தளத் தொழிலாளிகள் பலரும் கூட இன்று கைது செய்யப்பட்டுச் சிறைகளில் உள்ளதாக ஆந்திர டி.ஜி.பி சொல்கிறார். அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேல் மட்டங்களில் உள்ள செம்மரக் கடத்தல் மாஃபியாக்களைக் கைது செய்து தண்டனை வழங்குவத்ற்கு ஆந்திர அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

6. சுமார் 1.4 கோடிசெம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும் தொகையைக் கொண்டு இவ் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். 2014 மேயில் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்துவாரில் உள்ல பாபா ராம்தேவின் பதஞ்சலி யோக பீடம்மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் இம்மரங்களின் மதிப்பு டன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில்இவற்றை அவ் அமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது இது தடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிப்புகளுக்கென ராம்தேவின் அமைப்பு எவ்வாறு செம்மரங்களைப் பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

7. கடத்தல்காரர்களால் வெட்டப்பட்டு அழிக்கப்பட்ட செம்மரங்களை ஈடுகட்டப் புதிய கன்றுகளை நடுதல், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க தாவரவியலாளர்கள்மற்றும் இது தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. தமிழக அரசு இதுவரை வனச் சட்டத்தை (Forest Act 2006) அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது,இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிற மாநிலங்களைப் போல அது இங்கு உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ளபழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம்ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத் துறை அதிகாரிகளுக்குபழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள்(sensitisation programmes)) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

9. பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ல உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படு மோசமாக உள்ளது. போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல பழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதியமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாகமருத்துவ மனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும் பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச் சத்து, மருந்துகள் முதலியவற்றை வினியோகிக்கவேண்டும். இந்தப்பணி முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

10.அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள் இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்கு வரத்து வசதிகளை அதிகப் படுத்த வேண்டும். தமது விளை பொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில் சுமைகளுடன் பயணம் செய்யத் தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும்.இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurement centres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro based industries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில் மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.

11. மலைஅடிவாரங்களில் வசிக்கும் வன்னியர், போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும் பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்று கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச் சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள் அதிக அளவில் உள்ளர். இவர்கள் மத்தியிலும் மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டங்கள் முதலியவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

12. ஆந்திரமாநில அரசின் இந்த வன்செயல்களை ஆந்திர மாநிலத்தில் இயங்கும் APCLC, HRF, NCDNTHR மற்றும் PUDR முதலிய மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு வழக்குகளும் தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவ்வமைப்புகளை இக்காரணங்களுக்காக மனதாரப் பாராட்டுகிறோம். எம் மக்கள் ஒவ்வொரு முறையும் ஆந்திரம் வந்திருந்து வழக்கை நடத்துவதிலும், சிறையிலுள்ளவர்களைச் சந்திப்பதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்வது, அவர்களுக்குரியசட்ட மற்றும் பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றுக்கென வழக்குரைஞர்களுடன் கூடிய குழு ஒன்றை அமைத்து உதவி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

13.பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைதுசெய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிற நிலையில் தமிழக அரசு, “முறையான விசாரணை வேண்டும்என ஆந்திர அரசை வேண்டிக் கொண்டதோடு”  நிறுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுஎன்கவுன்டர் கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

14. கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளைவழங்க வேண்டு, குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும்.
என்கவுன்டர் குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

This entry was posted in Migrant Workers, News, Unorganised sector, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.