பத்திரிக்கை செய்தி: தமிழ்நாட்டில் வேலை செய்யும் இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணி நிலைமை, தரமான வாழ்நிலைமை, மற்றும் சட்ட அமலாக்கம் நிறைவேற்ற தொழிற்சங்கம் கோருகின்றனர்.

16, ஆகஸ்ட் 2012, சென்னை: பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், அசாம், ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து வந்து பெருமளவு வேலை செய்யும் இடம் பெயரும் தொழிலாளர்கள் வேலை செய்யும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு கட்டுமானம் உள்ளிட்ட கட்டுமான இடங்களில் உள்ள பாதுகாப்பற்ற பணிநிலைமைகளை சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு, கட்டடத் தொழிலாளர்கள் பஞ்சாயத்து சங்கம் தொழிற்சங்க தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ‘கடந்த 15 நாட்களில் இரண்டு கட்டுமான இடங்களில் 13 தொழிலாளர்கள் மரணம் அடைந்ததையும் மற்றும் பல தொழிலாளர்கள் காயமுற்றததையும் ஊடகங்களை பதிவு செய்துள்ளன. ஆனால் பல கட்டுமான இடங்களில் நடக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில்லை’ என அவர்கள் கூறினர். பல மாநிலங்களிலிருந்து 10லட்ச தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்தும், இவர்கள் முறையாக பதிவுகள் செய்யப்படுவதில்லை என தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர்.

அரசு கட்டுமானப் பணிகளில் கூட இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தராத நிலையில், அவர்களின் பணிநிலைமை குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியிறுத்தினர். சென்னை மற்றும் கோவை பகுதிகளில் கட்டுமான இடங்களில் பல விபத்துகள் நடந்தும், இந்த இடங்களில் தொழிற்துறை கண்காணிப்புக்கான வரைமுறைகளை அமல்படுத்துவதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசு கட்டுமான இடங்கள் உட்பட இந்த பகுதிகளில் தொழிலாளர்கள் சின்ன தகர கொட்டாய்களில் வாழும் நிலைமையும் அவர்களுக்கு தரமுள்ள குடிநீர், கழிப்பறை, குளியலறை, குழந்தை காப்பகம் போன்ற எந்த வசதிகளும் செய்து தரப்படாதது கண்டனத்திற்குரியது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் உண்மை கண்டறியும் ஆய்வின் படி ‘ உரிய பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தால் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு பக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான இடத்திலும் நடைபெற்ற உயிர்பறிக்கும் விபத்துகள் நடைபெற்று இருக்காது’. கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996(Building and other construction workers act) மற்றும் 2006 ல் அறிவிக்கப்பட்ட அதற்குரிய தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின் கீழ் கட்டுமான இடங்களில் பாதுகாப்பு குறித்து பல விதிமுறைகள் இருக்கின்றன. அதை அமல்படுத்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் அரசு கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டும் கண்காணிப்புகள் நடக்கவில்லை. இதுவரை தமிழ்நாடு அரசு சட்டப்படி ஆலோசனைக் குழுவையும் நியமிக்கவில்லை.

அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் உண்மை கண்டறியும் ஆய்வின் படி:

‘சுங்குவார்சத்திரத்தின் அருகில் குன்னம் கிராமத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் நிறுவனத்தில் கட்டப்பட்டு வந்த கூடைப்பந்து மைதானத்தில் கட்டட அமைப்பில் குறைபாடுகள் இருந்தது மற்றும் பஞ்சாயத்தில் அனுமதி வாங்கப்படவில்லை. அங்கு உபயோகப்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள் தரம் குறைந்ததாகவும் இருக்கலாம். சம்பவம் நடந்த இடத்திலேயே 9 தொழிலாளர்கள் இறந்தனர். 6 பேர் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது 1 தொழிலாளர் போகும் வழியிலும், இருவர் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர். மற்றும் மூவர் இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 2 லட்ச ரூபாய் தொழிலாளர் நஷ்டஈடு(Workmen Compensation Act) சட்டத்தின் கீழ் வரையறுக்கப்படவில்லை. பின்னர் முதலாளி மற்றும் மேலாளர்கள் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர்’

‘ சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு பக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான இடத்தில் தொழிலாளர்கள் மேல் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதற்கு காரணம் சரியான உபகரணங்கள் உபயோகப்படுத்தப்படவில்லை. இதில் 1 தொழிலாளர் இறந்து 4 தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையிலும், ஒரு தொழிலாளர் அப்போலோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். கட்டுமான நிறுவனம் எல் ரூ டி யின் தொழிற்நுட்ப அலுவலகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.’

இந்த இரண்டு சம்பவங்களிலும், தொழிலாளர் நஷ்டஈடு சட்டத்தின் படி நஷ்டஈடு கணக்கிடப்பட்டு(தொழிலாளர் வயது மற்றும் ஊதியத்தின் படி – குறைந்த பட்ச ஊதியம் கொடுக்கப்படாத போதிலும் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிலெடுக்க வேண்டும்) தொழிற்துறை ஆணையாளர் முன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ‘குறிப்பாக இந்த பணத்தை தொழிற்துறை ஆணையாளரிடம் செலுத்தி அதை அந்த மாநில ஆணையாளருக்கு அனுப்பி தொழிலாளர் குடும்பத்திற்கு முறையாக செலுத்துவதற்கு ஆணையாளருக்கு அதிகாரம் உள்ளது.’ (அமைப்புசாரா தொழிலாளர் சங்கம்).

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இடம்பெயரும் தொழிலாளர்களின் பிரச்சனைகளை களைவதற்காக தொழிற்சங்கங்களின் பங்கோடு கூடிய இடம் பெயர் தொழிலாளர்கள் அமைப்பை அரசு அமைக்கவேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் வலியிறுத்தினர். பெரிய கட்டுமானங்களில் 1மூ செஸ் வரி தொழிலாளர் நலன்களுக்காக வசூலிக்கப்படுகின்றன. இந்த கட்டுமான இடங்களில் பெருமளவு இடம்பெயர் தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். தொழிலாளர் நல வாரியங்களில் இந்த தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் கோரினர்.

கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் நல வரிச்சட்டம் 1996ன் கீழ் அரசு கட்டுமானங்களில் டென்டர் விதிகளில் தொழிலாளர்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும் என உச்சநீதி மன்றம் (வழக்கு சிவில் ந. 318 (2006)) இடைக்கால உத்தரவு பிறப்பித்தும் இவை அமல்படுத்தப்படவிலை;லை. 2008ல் இருந்து தமிழ்நாடு அரசு ஆணை 122, 123, 124 ன்கீழ் கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தும் முறை அமலாக்கம் செய்யப்பட்ட பின்னர் இடம் பெயரும் தொழிலாளர்களின் பதிவு இயலாத காரியமாக உள்ளது. மாவட்ட அளவில் ஒரு தொழிலாளர் அலுவலகம் செயல்படும் போது பல தொழிலளாரகளின் தொழில் சார்ந்த பிரச்சனைகள் கவனிக்கப்படுவதில்லை. மற்றும் தொழிற்சங்கங்களை தொழிலாளர் பதிவுகளில் இருந்து நீக்கும் செயல் தொழிலாளர்களை மேலும் அதிருப்தியாக்கியுள்ளது.

கட்டுமான தொழிலாளர்களுக்கான மத்திய சட்டங்களை அமல் செய்து தொழிலாளர் துறை அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டுமானம், அமைப்புசாரா, இடம்பெயரும் தொழிலாளர்களின பாதுகாப்பு வழிவகை செய்யுமாறு தொழிற்சங்கங்கள் கோரினர். மற்றும் இடம்பெயரும் குழந்தை தொழிலாளர்களுக்கான கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயக்கவும் தொழிற்சங்கங்கள் வலியிறுத்தினர்.

This entry was posted in Migrant Workers, News, Unorganised sector, தமிழ். Bookmark the permalink.