மேற்கு வங்காள தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் விளிம்பு நிலையை ஆவணப்படுத்தும் ‘சாய் கரம்’

தேயிலை தோட்டங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அழகான பரந்த நிலங்களும், வரிசையாக நட்டப்பட்டிருக்கும் தேயிலை செடிகளும், பாரம்பரிய உடைகள் அணிந்த தொழிலாளர்கள் சந்தோசத்துடன் தேயிலைகளை பறிப்பதும் தான். பல சினிமாக்களிலும், விளம்பரங்களிலும், இவைகளே பிண்ணனியாக காட்டப்படுகின்றன. ‘சாய் கரம்'(தேநீரின் சூடு) ஆவணப்படம் தேயிலைத் தோட்டங்களில் உள்ள இருண்டப் பக்கங்களை, ஒடுக்கப்படும் சமுதாயங்களை அடிமையாக்கும் சுரண்டல் உற்பத்தி முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் தமிழ்நாடு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் விளிம்பு நிலைகளை அங்கு வாழ்ந்த மருத்துவர் பிஹெச் டேனியல் ரெட் டீ(தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது) என்ற கதையில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து மீண்ட பிறகும், மேற்கு வங்காள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிலைமைகள் இன்னும் மோசமாகத் தான் உள்ளன என்பதை சாய் கரம் சுட்டிக்காட்டுகிறது.

ஆவணப்படத்தின் கூற்றுப்படி, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது பஸ்தர், ரூர்கேலா, ராஞ்சி, சோட்டா நாக்பூர் மற்றும் நேபால் பகுதிகளி;ல் இருந்து 11 லட்சம் மக்கள் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலீங், தேராய் மற்றும் தோவார்ஸ் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 300 தேயிலை தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டனர். இத்தேயிலை தோட்டங்களில் மூன்று தலைமுறைகளாக தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 1955 ஆம் ஆண்டில், ஊதியம், வருடாந்திர போனஸ் மற்றும் முறையான பணி நிலைமைகள் கோரி எழுந்த ஒரு பெரிய போராட்டத்தை அரசு காவல்துறையை கொண்டு ஒடுக்கியது. எனினும் போராட்டங்களின் விளைவாக 1956ல் தோட்டத் தொழிலாளர்களின் சட்டத்தின்(1951) கீழ் தோட்டத் தொழிலாளர்கள் விதிமுறைகளை உருவாக்கியது.

பெரும் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை, ஓவர்டைம், வீடு, மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், சாப்பாடு விடுதிகள் என்று பல பணி நிலைமைகளை தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் உறுதி செய்கிறது. ஆனால் நிறுவனங்கள் இதை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்கான அரசு அமைப்புகள் மேற்கு வங்காளத்தில் முறையாக ஏற்படுத்தப்படவில்லை. மத்திய அமைச்சகத்தின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் அறிக்கை ஒன்றிற்கு, பல தோட்டங்களில் உள்ள பணி நிலைமைகள் மற்றும் வசதிகள் குறித்து மேற்கு வங்காள அரசால் உரிய தகவல்களை தர முடியவில்லை. இந்த அறிக்கையின் படி தேயிலை தோட்டங்களில் சட்டங்களை மீறும் நிர்வாகங்களுக்கு சராசரியாக 500ரூபாய் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு குறைவான அபராதங்கள் விதிக்கப்படும் போது நிர்வாகங்கள் சட்டங்களை மீறுவது சர்வசாதாரணம் ஆகின்றது. சமீபத்தில் மேற்கு வங்காள அரசு தோட்டத் தொழிலாளர்களை குறித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. அதில் தொழிலாளர்களின் மோசமான நிலைமைகளும் அவர்களுடைய உரிமைகள் நிறைவேற்றப்படாததும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில வருடங்களாக மேற்கு வங்காள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பட்டினி மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எப்போதும் தொழிலாளர் பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்யும் வெகுஜன ஊடகங்கள் கூட இதைப் பற்றி எழுதும் அளவில் இது முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள சில தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் உடல் நிறை குறியீட்டை(Body Mass Index) அளவிட்டபோது சுமார் 40சதத் தொழிலாளர்கள் 18.5 குறியீட்டிற்கும் கீழே இருப்பதாக கண்டறியப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்புகளின்(UNO) படி இத்தொழிலாளர்கள் எப்போதுமே பசியுடன் உள்ளார்கள் என்பதே இக்குறியீட்டின் தன்மையாகும். தேயிலைத் தோட்டங்களில் தரப்படும் குறைந்த ஊதியம் இதற்கு முக்கிய காரணம் ஆகும். 2015ல் இப்பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ122.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயம், கேரளாவின் தேயிலைத் தோட்டங்களில் குறைந்த பட்ச ஊதியம் ரூ300 ஆகவும்(இது ஒரு பெரிய போராட்டத்தின் விளைவாக பெற்ற ஊதியமாகும்) தமிழ்நாட்டில் ரூ200க்கும் அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (தமிழ்நாட்டில் குறைந்த பட்ச ஊதியம் அடிப்படை மற்றும் அகவிலைப் படியை கொண்டுள்ளதால் ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியம் உயரும். மேற்கு வங்களாத்தில் இது நடைமுறையில் இல்லை). மேற்கு வங்காளத்தில் ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளருக்கு கூட ரூ150 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் கிடையாது(அசாம் மாநிலத்திலும் இதே நிலைமை). மாறாக, நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே அரசு உட்பட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. அனைத்து தொழில்களிலும் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது அரசின் கடமையாகும். அதற்கு மேலே தொழிலாளர்கள் சங்கங்கள் மூலம் கூட்டு பேர உரிமையை நிலைநாட்டலாம். ஆனால் கூட்டு பேரமே குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் என்பது குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் நோக்கத்திற்கு புறம்பானதாகும்.

தேயிலைத் தோட்டங்களில் நடக்கும் கூட்டு பேர உரிமைகள் குறித்து ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. அவ்வாறான ஒரு அறிக்கையின் படி 2012ல் தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வாக ரூ100 கோரினர். பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வு வெறும் ரூ10 ஆகும். ஒரு இடதுசாரி அரசின் கீழ் ஏஐடியுசி,சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி மற்றும் ஹெஎம்எஸ் போன்ற பல மத்திய தொழிற்சங்கங்கள் தேயிலைத் தோட்டங்களில் இருந்தும் இவ்வளவு குறைவான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய கேள்வி ஆகும். மேற்கு வங்காளத்தில் உள்ள பட்டினி மரணங்கள், அண்மையில் கேரளத் தோட்டத் தொழிலாளர்களின் எழுச்சி உற்பத்தி முறைகளில் உள்ள நெருக்கடிகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளில் உள்ள நெருக்கடிகளையும் கோடிட்டு காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ளது போல அடிப்படை மற்றும் அகவிலைப்படி கொண்ட குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய தற்போது தொழிற்சங்கங்களும், தொழிலாளர் ஆர்வலர்களும் தொழிலாளர்களும் கோரி வருகின்றனர் என்பதை ஆவணப்படம் சுட்டிக் காட்டுகிறது.

தொழிலாளர்களின் பட்டினி மரணங்கள் வெளியான உடனே, தேயிலை தோட்டங்கள் மூடுவதை குறித்தும் அதனால் தேயிலை தோட்ட முதலாளிகள் நெருக்கடியில் உள்ளனர் என்று சில ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்த கூற்றை ஆவணப்படம் விவாதிக்கின்றது. தேயிலை குழுவின் (Tea Board) விதிமுறைகளின் படி தேயிலைகளை முதலாளிகள் ஏலத்தில் விற்பதில்லை. மாறாக கருப்பு சந்தையில் விற்கின்றனர். மேலும் உள்ளுர் தேவை 12சதமாக உயர்ந்திருக்கையில் உற்பத்தி 3சதமாகத் தான் உயர்ந்துள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த வருடத்தில் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன. சந்தையில் கொடுக்கப்படும் சலுகைகளுக்கு அப்பாற்பட்ட விலை(Realized Price) 8சதம் உயர்ந்துள்ளது. இதனால் முதலாளிகள் அதிக லாபம் அடைகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் தேயிலை உற்பத்தி நெருக்கடியில் இருப்பதாக காட்டுவது தொழிலாளர்களின் பிரச்சனகளை வைத்து முதலாளிகள் சலுகை வாங்குவதற்காக முயற்சி செய்கின்றனர் என்பதை காட்டுகிறது.

தமிழ்நாட்டில் பல கட்டுமான இடங்களில், ஹோட்டல்களில், அரசி மில்களில், விவசாய நிலங்களில் மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் இருந்து வட மாநிலத் தொழிலாளர்களை காண்பது வழக்கமாகி விட்டது. எவ்வாறான சுரண்டல் முறைகளில் இருந்து தப்புவதற்காக குறைவான ஊதியத்திற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர் என்பதற்கான எடுத்துக்காட்டாக ‘சாய் கரம்’ ஆவணப்படம் விளங்குகிறது. இந்த ஆவணப்படம் மூலம் உள்ளுர் தொழிலாளர்கள் இவர்களின் விளிம்புநிலையை அறிந்து வடமாநிலத் தொழிலாளர்களுடன் வர்க்க உறவை வளர்க்க வேண்டும்.

குறிப்புகள்:

http://labourbureau.nic.in/Rep_WPL_2009.pdf
https://www.wblc.gov.in/download/Synopsis-of-Tea-Garden-Survey-Final-Report.pdf
http://www.epw.in/journal/2015/46-47/tea-plantation-labour/living-conditions-tea-plantation-workers.html
http://cds.edu/wp-content/uploads/2015/07/46_Kingshuk.pdf
http://www.thehindu.com/business/Industry/bengal-tea-industry-sees-ray-of-hope-in-ministers-visit/article8148220.ece
http://www.business-standard.com/article/markets/india-records-highest-ever-tea-production-in-2015-16-116061700687_1.html

Munnar strike: a wake up call to unions

This entry was posted in Agriculture, Art & Life, Featured, Migrant Workers, Resources, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.