குடிசைவாழ் மக்களையும், சாலையோர வியாபாரிகளையும் அகற்றுவதை நிறுத்த கோரி பெண்ணுரிமை இயக்கம் போராட்டம்

சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8, 2013 அன்று 70க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கூடி பெண் தொழிலாளர்களின் உரிமை குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர். பெண்ணுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்பு பிரதிநிதிகளும் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னர் நடந்த இந்த போராட்டத்தில் சென்னையில் குடிசைகளை அகற்றுவதையும், சாலையோர வியாபாரிகளை அகற்றுவதையும் தொழிலாளர்கள் வன்மையாக கண்டித்தனர்.

வாழ்வு மற்றும் குடியிருப்பு ஆகிய உரிமைகளை பறிக்கும் செயல்களை அரசு கைவிடவேண்டும் என அமைப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும் உச்சநீதி மன்ற ஆணையின் படி நடைபாதைவாசிகளுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பப்பட்டது. குடிசைவாசிகள் இருக்கும் இடத்திலேயே வீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் வாழும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும், மாற்று குடியிருப்பு இடங்களான கண்ணகி நகர்,செம்மஞ்சேரி பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பெண்கள் அதிகமாக வேலை செய்யும் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு இன்னும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படாததை கண்டித்த போராளிகள் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதோடு உடனடியாக வீட்டு வேலைத் தொழிலாளர்கள் மீது பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை விசாரிப்பதற்கு தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரினர். அண்மையில் ராஜ்யசபாவில் … செய்யப்பட்ட பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மசோதாவின் கீழ் அனைத்து வேலையிடங்கள்,கல்விக்கூடங்கள், நலவாரியங்களில் விசாரணைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதை கண்டித்து பெண்கள் மீதான வன்முறைகள் உடனடியாக காவல்துறையினறால் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். ஆசிட் வீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடியாக நிவாரணம்,மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டு;ம் எனப் பெண்ணுரிமை இயக்கப் பிரதிநிதிகள் கோரினர். பெண்களை இழிவாக காமிக்கும் ஊடகங்களின் போக்கை அவர்கள் வன்மையாக கண்டித்தனர்.

This entry was posted in Domestic Workers, News, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.