ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் சங்கம் அமைக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் சங்கம் அமைப்பதற்கும் நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கும் கடந்த 5 வருடங்களாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரி;ல் உள்ள நோகியா சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் சுங்குவார்சத்திரத்திலும் தொழிற்சாலைகளை அமைத்துள்ள பன்னாட்டு நிறுவனம் ஃபாக்ஸ்கான் நோகியாவிற்கு உதிரிபாகங்களை செய்து வருகிறது.
2010 ஆம் ஆண்டில் சிஐடியு வின் கீழ் அமைக்கப்பட்ட சங்கத்தை அங்கீகரித்து ஊதிய பேச்சுவார்த்தைகளை நடத்த கோரி 1000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 58 நாட்களுக்கு தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது சிஐடியு தலைவர்களும் 319 தொழிலாளர்களும் கைது செய்யபட்டு வேலூர் சிறையில் அடைக்கபட்டனர். போராட்டத்தை கலைப்பதற்கு நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் சங்கத்தை தேர்ந்தெடுத்து அங்கீகரிப்பதாக தொழிலாளர் துறைக்கு கடிதம் மூலம் உறுதியளித்தனர். ஆனால் நிர்வாகம் வாக்கெடுப்பை நடத்தவில்லை. தொழிலாளர் துறையும் கண்டுகொள்ளமால் விட்டதை அடுத்து சிஐடியு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
2011 ஜனவரி 4 அன்று அளித்த தீர்ப்பில் உயர்நீதி மன்ற நீதிபதி தேர்தல் நடத்தி சங்கத்தை தேர்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. முன்னர் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் பல்டியடித்து உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. ஜனவரி 2011 31 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஆணையை உறுதி செய்த பின் நிர்வாகம் உச்ச நீதி மன்றத்திற்கு சென்றது.
2013 ஆகஸ்ட் 8 அன்று உச்ச நீதி மன்றமும் உயர்நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்து தொழிலாளர் துறையை தேர்தல் நடத்துமாறு ஆணையிட்டது. நவம்பர் 6 அன்று நடத்தவுள்ள ரகசிய வாக்கெடுப்பில் சிஐடியு தவிர மற்ற எந்த சங்கமும் குறிப்பாக தொழிலாளர் முன்னேற்ற முண்ணனி(எல்.பி.ஃஎப்) வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. சிஐடியு சமர்ப்பித்த தொழிலாளர் உறுப்பினர் பதிவுகளை ஆய்வு செய்த உதவு தொழிலாளர் ஆணையர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு நவம்பர் 5ஆம் தேதியில் எழுதிய கடிதத்தில் அக்டோபர் 17-18 ல் சிஐடியு தவிர எந்த சஙகமும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை எனவும் இந்த தகவல்களை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் பின்னர் சங்கம் அமைப்பது குறித்து உச்ச நீதி மன்றம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக கருதப்படும், அமைப்புகளை உருவாக்கும் உரிமை இந்தியாவின் தொழிலாளர்களுக்கு இன்னும் எவ்வளவு காலத்திற்கு மறுக்கப்பட்டு வரும்?

This entry was posted in Electronics Industry, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.