தில்லியில் தொழிலாளர்களின் மாபெரும் பேரணி

பஞ்சாப், பீஹார், ஒரிசா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலிருந்து ஏஐடியுசி, சிஐடியு, ஏஐசிசிடியு, ஐஎன்டியுசி, பிஎம்எஸ் உட்பட 11 மத்திய தொழிற்சங்ககளை சார்ந்த 2லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டிசம்பர் 12 அன்று கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். குறைந்த பட்ச ஊதியமாக ரூ10000, சமவேலைக்கு சம ஊதியம், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், ஒப்பந்தமுறை வேலையை நீக்குதல், அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை, அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். ‘ஒப்பந்த தொழிலாளர் முறை, குறைவான ஊதியம், வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகிய இன்றைய பொருளாதார நிலைமையில் இவை மிகவும் அடிப்படையான கோரிக்கைகள்’ என பேரணியில் கலந்து கொண்ட சிஐடியு மாநில பொது செயலாளர் சுகுமாரன் கூறினார்.

ஏஐடியுசி தேசிய செயலாளர் வகீதா நிசாம் இதுபற்றி குறிப்பிடுகையில் ‘இன்றைய தேசிய கூட்டணி கட்சிகள் என்டிஏ மற்றும் யுபிஏ அரசுகள் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக கொள்கைகளை வளர்க்கும் நிலையில் 2009 முதல் கட்சிசார்பற்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு போராடுவதற்காக ஒருங்கிணைந்து உள்ளன’ என்று கூறினார். 2009ல் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டு குழு அமைத்ததன் பின்னர் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி 20, 21 அன்று தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.(http://tnlabour.in/?p=1201) வேலைநிறுத்தத்தின் முன்னர் பிரதம மந்திரி அழைத்த பேச்சுவார்த்தை ஒப்புக்காக செய்யப்பட்து என வகீதா கூறினார்.

இந்திய தொழிலாளர் மாநாட்டில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை நியாயமானது என பிரதமர் ஒத்துகொண்டதாக கூறிய சுகுமாரன் அதன் பின்னர் அமைக்கப்பட்ட மந்திரிகளின் குழு இது குறித்து சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை என சுகுமாரன் குற்றம் சாட்டினார். இது குறித்து பிரதம மந்திரிக்கு எழுதியும் அவர் எந்த நடவடிக்கை எடுக்காததனால் இந்த பேரணியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம், பொது நிறுவனங்களை தனியார் மயப்படுத்துதல், பொருளாதார சீர்குலைவு எனப் பல தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகள் அமல்படுத்தப்படும் நிலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நிறுவனங்களின் செலவுகளில் தொழிலாளர்களின் ஊதியபங்கு குறைந்து கொண்டே வருகிறது. தற்காலிக வேலைவாய்ப்பு, ஒப்பந்த பணிகள் போன்ற செயல்களினால் முதலாளிகள் தொழிலாளர்களின் உண்மையான ஊதியத்தை குறைத்து உழைப்பை சுரண்டுகின்றனர். தொழிலாளர்கள் சட்ட சீர்திருத்தம் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக நீதியை கோருவதற்கான வாய்ப்புகளை குறைத்து கொண்டே வருகிறது.

‘2009 முதல் அடிப்படை உணவு மற்றும் பொருட்களின் விலைகள் 350சதம் வரை உயர்ந்துள்ளன. ஆனால் எங்கள் கோரி;க்கையான குறைந்த பட்ச ஊதியம் 10000ரூபாய் மாறவில்லை என்றாலும் அதையும் செயல்படுத்த அரசு தயாராகவில்லை’ என வகீதா குறிப்பிட்டார். விலைவாசி உயர்ந்தாலும் ஊதியமும் உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் இணை இயக்குனரின் கூற்றை கண்டித்த வகீதா ‘ஜிடிபி வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சிகள் குறியீடு அல்ல. ஐடி துறையில் உள்ள வளர்ச்சி மற்ற துறையில் வளர்ச்சியில்லாமல் உள்ள நிலையை மறைக்கிறது’ என வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டிலிருந்து வீட்டு வேலைத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் உட்பட ஏஐடியுசி தொழிலாளர்கள் 1100 பேரும், சிஐடியு சார்பில் 2400 தொழிலாளர்கள் தில்லி பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கையை அளித்ததாகவும், ஏ கே ஆன்டனி குழுவின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும் என பிரதமர் வாக்குறுதி கொடுத்தாகவும் பேரணித் தலைவர்கள் கூறினர். தில்லியில் பெருந்திரளாக தொழிலாளர்கள் கூடி பெரிய அளவில் போராட்டம் நடத்தியும் பத்திரிக்கைகள் இதை இருட்டடிப்பு செய்துள்ளது கண்டிக்கதக்கது. இன்றைய ஊடகங்கள் நிறுவனங்கள் ஆதிக்கத்தில் உள்ள நிலையில் தொழிலாளர்களின் போராட்டங்கள் இருட்டிப்பு செய்யப்படுவதாக சுகுமாரன் கருத்துரைத்தார். ஆனாலும் போராட்டத்தின் கோரிக்கைகள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சுட்டிகாட்டுவதனால் இப்போராட்டத்தின் விளைவுகள் வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என ஏஐடியுசியும் சிஐடியுவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

This entry was posted in News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , . Bookmark the permalink.