டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த பணிநீக்கத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் சுருக்கம்

பத்திரிக்கைச் செய்தி

டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த பணிநீக்கத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் சுருக்கம்

.டி. துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெரும் அளவில் பணிநீக்கங்கள் செய்யப்போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஒட்டியும், பணியாளார்களின் பணித்திறன் மதிப்பீட்டு அளவுகோலில் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுவதும் நிறைவேற்றியவர்களையும், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக பணி புரிந்தவர்களையும் கூட டி.சி.எஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்கிறது என்று ஐ.டி.தொழிலாளர்களுக்கான மன்றம் (Forum for IT Employees) முறையிட்டதைத் தொடர்ந்தும், உண்மை நிலைமைகளை கண்டறிவதற்காக, வெவ்வேறு வாழ்நிலைமைகளைச் சார்ந்த நபர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

Source: Forum for IT Employees Facebook Page

Source: Forum for IT Employees Facebook Page

டி.சி.எஸ் நிறுவனம், குறைவான பணித்திறனை வெளிப்படுத்துபவர்கள், அல்லது பணித்திறனையே வெளிப்படுத்தாதவர்கள் ஆகியோரை வெளியேற்றும் வழக்கமான ‘தன்விருப்பமற்ற ஆட்குறைப்பு’ தான் இது என்று ஊடகங்களில் திரும்பத் திரும்ப கூறி வந்துள்ளது. இச்சூழலில் டி.சி.எஸ்.சில் இருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களின் விவரங்களையும், அந்நிறுவனத்தில் பணியாற்றிய போது அவர்கள் வெளிப்படுத்திய பணித்திறனையும் பற்றி உறுதிபட அறிந்து கொள்வதே எங்கள் நோக்கம். மேலும், டி.சி.எஸ்.சால் கடைபிடிக்கப்படும் பணித்திறன் மதிப்பீட்டுக் கொள்கையையும் அது நடைமுறைபடுத்தப்படும் விதத்தையும், அதனுடன் சேர்த்து அந்த பணித்திறன் மதிப்பீடு முறை நியாயமானதாக இருக்கிறதா என்பதையும், அது நியாயமான முறையில் நடைமுறைபடுத்தப்படுகிறதா என்பதையும் பரிசீலித்து மதிப்பிட்டிருக்கிறோம். .டி.துறையில் உறுதியான கட்டுப்பாடுகள் எதுவுமின்றி தேவைக்கேற்றாற் போல பணிநீக்க கொள்கைகள் கடைபிடிக்கப்படும் சூழலில், தொழிலாளர் உரிமைகளும், தொழிலாளர் சட்டங்களும் இத்துறையில் எந்த அளவிற்கு பொருத்தமானதாக பயனுடையதாக இருக்கின்றன என்பதையும் இக்குழு ஆராய்ந்துள்ளது.

இவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்த உண்மை அறியும் குழு, பணிநீக்கம் செய்யப்பட்ட 20 பணியாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டோம். மேலும் 130 பணியாளர்களிடம் சர்வே நடத்தினோம். .டி.துறை பற்றி ஆழ்ந்த பார்வை கொண்ட மூத்த ஐ.டி. பணியாளர்களிடம் இருந்து டி.சி.எஸ். நிறுவனத்தின் ஆற்றல் வள மேலாண்மையில் உள்ள பல கூறுகளைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டோம்.

டி.சி.எஸ். நிறுவனத்தில் நடுநிலையில் உள்ள பணியாளர்களுள், இத்துறையில் குறைந்தபட்சம் 7 வருடங்கள் அனுபவம் கொண்ட ASTக்களும், 4 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்ட ASCக்களும் இந்த தன்விருப்பமில்லாத ஆட்குறைப்பு நடவடிக்கையில் குறி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் மூலமாக அறிந்து கொண்டோம். இந்த நபர்கள், நிறுவனத்தின் பணித்திறன் மதிப்பீட்டு அளவுகோலின்படி நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியவர்களுக்கு தரப்படும் மதிப்பீடுகளையே பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் டி.சி.எஸ்.சின் கொள்கைப்படி வகுக்கப்பட்டுள்ள ஆற்றல் மேம்பாட்டு திட்டம் எதிலுமே சேர்க்கப்படவில்லை. பணித்திறன் மதிப்பீட்டு நிலைக்கற்றைகளும், அதற்கு ஈடாக வழங்கப்படும் பதவி உயர்வுகள், உபரிகள் ஆகியவை பெரும்பான்மையான பணியாளர்களை திருப்தியுடன் வைத்திருக்கும் நோக்கில், வெறும் சம்பளத்தை மட்டுமே மையமாகக் கொண்டு எவ்வித விதிமுறையின்கீழும் அல்லாமல் தான்தோன்றித்தனமாக வழங்கப்படுகின்றன என்பதனையும் புரிந்து கொண்டோம். நீண்ட பணிநேரங்களோ பின்னிரவு வரையிலோ பணி செய்ய இயலாத பெண்களையும், மகப்பேறு விடுப்பு எடுக்க இருக்கும் பெண்களையும் இந்த பணித்திறன் மதிப்பீட்டு முறை பாகுபாட்டுடன், பாரபட்சத்துடன் நடத்துகிறது என்பதனையும், இது மென்பொருள் துறையில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்பதனையும் கண்டறிந்தோம். பணித்திறன் மதிப்பீட்டு முறையும் அதையொட்டி எந்தவித குறைதீர்ப்பு வழிமுறையுமற்று ஆட்குறைப்புகள் நடப்பதும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் பாதுகாக்கப்பட்டுள்ள இயற்கை நீதியின் அடிப்படை கொள்கைகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளன. தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததற்காக மட்டுமில்லாமல், பணித்திறன் அற்றவர்கள் என்று அவர்களை ,முத்திரை குத்தியதன் மூலம் அவர்களின் எதிர்கால பணி வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் அக்கறையற்ற போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

டி.சி.எஸ். நிறுவனத்தில் தற்போது நடந்துவரும் மறுசீரமைப்பு நடவடிக்கை, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுவது போல வழக்கமான ஒன்றல்ல என்பதனை உண்மை அறியும் குழு சேகரித்த ஆவணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மாறாக, இது தனது நடுநிலை தொழில்நுட்பப் பணியாளர்களை வெளியேற்ற டி.சி.எஸ். நிறுவனம் கடைபிடிக்கும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். பாதிக்கப்பட்ட பணியாளர்களின் வயதையும், தொழில் அனுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இவர்கள் சிலகாலமாக நிலையான வருமானம் பெற்றுவந்துள்ளனர் என்பதையும், நீண்டகாலப் பொருளாதாரக் கடன்களைப் பெற்றுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. பாதிக்கப்பட்டவர்களுள் பலரது குடும்பங்கள் ஒற்றை வருமானத்தையே நம்பியுள்ள நிலையில், இந்த திடீர் பணிநீக்கம் அவர்களது குடும்பங்களின் நிதி மேலாண்மையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. திறமையற்றவர்கள் என்ற பட்டத்துடன் சேர்த்து, இந்த நடுநிலைப் பணி நிலையில் உள்ளவர்களுக்கு தொழிலாளர் சந்தையில் மந்தமான வாய்ப்புகளே உள்ள சூழலில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேறு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு.

இச்சூழ்நிலையில், நாங்கள் டி.சி.எஸ். நிறுவனத்தை, நடுநிலைப் பணியாளர்களை பெருமளவு ஆட்குறைப்பு செய்யும் அதன் முடிவினை உடனடியாக மீளாய்வு செய்யுமாறு வற்புறுத்துகிறோம். ஒருவேளை, டி.சி.எஸ். நிறுவனம் உண்மையிலேயே தனது பணியாளர் அமைவு முறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருந்தால், அதனை வெளிப்ப்டைத்தன்மையுடன், அரசுக்கும் பணியாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அறிவுப்பூர்வமான திறன்மதிப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் பாரபட்சமான திறன்மதிப்பீட்டினை நீக்க வேண்டும். திறன்மதிப்பீட்டு முறையில், தங்களுக்கெதிராக இழைக்கப்பட்டிருக்கக்கூடிய அநீதிகளை எதிர்த்து தங்களது நியாயங்களை எடுத்துக் கூற சரியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பிற்கும் பணியாளர் நலனுக்கும் பொறுப்பேற்க வேண்டிய அரசு, ஒரு பெரும் நிறுவனத்தில் நடக்கும் பெருவாரியான ஆட்குறைப்பினை இனிமேலும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்த பிரச்சனை நிலவும் அனைத்து மாநிலங்களின் அரசுகளையும் இப்பிரச்சனையில் குறுக்கிட்டு பாதிக்கப்பட்ட பணியாளார்களின் நலன்களைக் காக்க வேண்டுமென்று கோருகிறோம்.. குறிப்பாக பிற நிறுவனங்களும், இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் (.பி.எம். நிறுவனம் தனது பணியாளர்களை ஆட்குறைப்பு செய்வதாக வந்த பத்திரிக்கை செய்தியை சுட்டிக் காட்டுகிறோம்.) டி.சி.எஸ். ஆட்குறைப்பை விசாரிக்கவும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்றும் வரைமுறையற்ற ஆட்குறைப்புக் கொள்கையால் நிகழும் மனித உரிமை மீறல்களையும் தொழிலாளர் உரிமை மீறல்களையும் விசாரிக்க, மாநில அரசு நீதி விசாரணையைத் துவக்க வேண்டும். IT, ITES, BPO உள்ளிட்ட அறிவுசார் தொழில்துறைக்கான நிரந்தர தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து ஐ.டி. துறையினருக்கு விலக்களிக்கப்பட்டதை உரிய முறையில் மீளாய்வு செய்ய வேண்டும்.

நாஸ்காம் திறன் அட்டவணையின் மீதான ஐ.டி. தொழிலாளர்களின் பயத்தினடிப்படையில், அரசு ஐ.டி. தொழிலாளர்களின் தனியுரிமை பாதிக்கப்பட்டதை ஆய்வு செய்து, .டி. பணியாளர்களின் தேவைக்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தைப் போன்றது ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும்.

(உண்மை அறியும் குழுவின் உறுப்பினர்கள்: திரு. பி.ஆர்.பி. பாஸ்கர், மூத்த பத்திர்க்கையாளர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர், திருவனந்தபுரம், முனைவர் விஜய பாஸ்கர், இணைப் பேராசிரியர், MIDS, சென்னை, வழக்குரைஞர் பாபி குன்னூ, சட்ட வல்லுனர், சேலம், சந்திரிகா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் தொழிலாளர் உரிமை செயற்பாட்டாளர், சென்னை.)

06 – பிப்ரவரி – 2015 உண்மை அறியும் குழுவிற்காக

சென்னை

இந்த குழுவின் முழு அறிக்கை ஆங்கிலத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: Fact Finding Report on TCS IT Workers Layoff

This entry was posted in News, Press Releases, Service Sector, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.