சட்டவிரோதமாக மூடப்பட்ட சி-க்யூப்ட் ஐ.டி. நிறுவனத்தைக் கண்டித்து கோவையில் ஃபைட் ஆர்ப்பாட்டம்

சட்ட விரோதமாக மூடப்பட்ட சி-க்யூப்ட் சொல்யூசன்ஸ்(C-Cubed Solutions (P) Ltd) என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைக் கண்டித்து ஏப்ரல் 18-ம் தேதி கோவையில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் சங்கமான ஃபைட் (FITE – Forum for IT Employees) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்குத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை சரவணம்பட்டியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். தொழில்நுட்பப் பூங்கா (KGISL IT Park) வளாகத்தில் இயங்கி வந்த சி-க்யூப்ட் சொல்யூசன்ஸ் (C-Cubed Solutions (P) Ltd) என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த 2015 சனவரி 19-ம் தேதி அரசுக்கும், அங்கு வேலை செய்து வந்த 230 பணியாளர்களுக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக இழுத்து மூடப்பட்டது. இதனால் 230 பணியாளர்களும் ஒரே நாளில் வேலை இழந்து தெருவில் நிறுத்தப்பட்டனர். இந்த நிறுவனம் அமெரிக்க முதலாளி மார்க் ஹெபெர்மேன் என்பவருக்குச் சொந்தமானதகும். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கோவையிலும், சென்னையிலும் அலுவலங்களை மூடிவிட்டு பெங்களூருவில் பெரும்பாலான பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, தற்போதும் இயங்கி வருகிறது.

சம்பள பாக்கி, அனுபவச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், பணி விடுவிப்பு ஆணை, தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு, நிவாரணத் தொகை ஆகியவற்றை நிர்வாகம் உடனே வழங்கிட வலியுறுத்தி மூடப்பட்ட கோவை நிறுவனப் பணியாளர்கள் சனவரி 19 அன்றே நிறுவனத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அடுத்த நாள் பெங்களூருவில் இருந்து மேலாளர்கள் சாய் கார்த்திக், ப்ரித்தம் ஆகியோர் வந்தும் எந்த உறுதிமொழியும் கொடுக்காததால், பணியாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்தது. பின்பு இந்த விவகாரம் தொழிலாளர் துறைக்கு மாவட்ட ஆட்சித் தலைவரால் அனுப்பப்பட்டது. சனவரி 22 அன்று கோவை தொழிலாளர் அலுவலர் முன் பணியாளர்களுக்கும், நிறுவன மேலாளர்களுக்கும் இடையில் சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் சனவரி 27-ம் தேதி அன்று நிறைவேற்றித் தருவதாகவும், சம்பள பாக்கியில் 25%-ஐ அன்றே கொடுத்துவிடுவதாகவும், மீதித் தொகையை பிப்.20-ம் தேதியிட்ட காசோலையில் தருவதாகவும் வாக்குறுதி அளித்தது நிர்வாகத் தரப்பு. இதை பணியாளர்களிடம் சொல்லி சமாதானப்படுதினார் தொழிலாளர் அலுவலர். இதன் பிறகே, பணியாளர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது .

தொழிலாளர் அலுவலர் முன் நிறுவனம் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி சனவரி 27 அன்று அலுவலகம் சென்ற பணியாளர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. அலுவலகத்தில் யாருமே இல்லை. பதறியடித்துக் கொண்டு பணியாளர்கள் தொழிலாளர் அலுவலரிடம் முறையிட்ட போது அவர் ரொம்ப சாதாரணமாக, அவர்களை அன்று நீங்கள் விட்டிருக்கக் கூடாது என்று கூறிவிட்டார். செய்தித்தாள்களில் வந்த தகவல்கள் அடிப்படையில் ஃபைட் சங்கம் (FITE) சார்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்களைச் சந்தித்து அமைப்பாவதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. நிறுவனத்தாலும், அரசாலும் கைவிடப்பட்ட பணியாளார்கள் அமைப்பாவதின் தேவை உணர்ந்து தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் சங்கமான ஃபைட் சங்கத்தில் இணைந்தனர். இந்த சிக்கலுக்கான தீர்வு அமைப்பாவதில் தான் உள்ளது என்பதை C – Cubed நிறுவனப் பணியாளர்கள் உணர்ந்து கொண்ட தருணம் இது.

பாதிக்கப்பட்ட பணியாளர்கள் 84 பேர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது ஃபைட் சங்கம். வழக்கு நடைபெற்று வரும் வேளையில் வழக்கு தொடர்பான கடிதங்களைக் கூட வாங்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது பெங்களூரு நிர்வாகம். பணியாளர்கள் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சம்பள பாக்கி உள்ளிட்ட சான்றுகளைக் கூட பெற முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, பணி விடுவிப்பு ஆணை இல்லாததால், வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்த பணியாளர்கள் கூட கிடைத்த வேலையில் சேர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

11174828_1580397588896623_2395408481768740035_n
இந்நிலையில், பணியாளர்களின் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சனவரி 18 அன்று மாலை கோவையில் ஃபைட்சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் :

தமிழக அரசே!

1) சட்டவிரோதமாக மூடிய சி-க்யூப்ட்(C-cubed) நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடு!
2) பாதிக்கப்பட்ட 230 பணியாளர்களுக்கு சம்பள பாக்கியுடன் இழப்பீட்டுத் தொகையும் உடனே கிடைத்திட நடவடிக்கை எடு!
3) பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவ சான்றிதழ், பணி விடுப்பு சான்றிதழ் உடனே கிடைத்திட ஆவண செய்!
4) பணியாளர்களுக்குச் சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதியை (PF) உறுதிபடுத்து!
5) வேலையிழந்த 230 பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உறுதி செய்!

பாதிக்கப்பட்ட தகவல்தொழில்நுட்பப் பணியாளார்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். தங்கள் உரிமைகளுக்காக தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களும் சங்கமாக அணிதிரண்டு போராட்டம் நடத்தும் மகத்தான நடவடிக்கையை ஃபைட் சங்கம் வெற்றிகரமாக தமிழக வரலாற்றில் தொடக்கி வைத்திருக்கிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஃபைட் சங்கத்தின்(FITE) பொதுச் செயலாளர் தோழர் தமிழ் நாசர் தலைமை தாங்கினார். போராட்டத்திற்கு ஆதரவாக சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் தோழர் ஆறுமுகம், தோழர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தாமோதரன், லட்சுமி மில்ஸ் தொழிலாளர் சங்கத் தலைவர் த.சந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிலாளர் சங்கங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ஷாஜகான், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை. இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய மக்கள் இயக்கத்தின் தோழர் மருதுபாண்டியன், ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் தோழர் முருகேசன், அகில இந்திய வழங்கறிஞர்கள் சங்க பொதுக் குழு உறுப்பினர் தோழர் ஜோதி குமார், சமூக நீதி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் தொழர் கார்க்கி, தோழர் பன்னீர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தோழர் குமார், பொதுநல மாணவர் சங்கத்தின் தோழர் பார்த்திபன், வழக்குரைஞர் கலையரசன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் தமிழினி,  இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் சத்யா உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டு போராடும் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

This entry was posted in IT Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.