சென்னையில் சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர் தினம்

தனக்காக நடத்தப்படும் போராட்டத்தில் ஒரு தொழிலாளர் கலந்து கொள்ள இயலவில்லை ஏனென்றால், அவர் செய்யும் வேலை நிலைமையில் விடுமுறைக்கான வழியே இல்லை. இதுதான் இன்றைய வீட்டு வேலைத் தொழிலாளர்களின் நிலைமை. பெண்களே இதுவரை செய்து வந்ததால், வீட்டு வேலை என்பது வேலையாகவே கருதப்படவில்லை. ஆனால் இன்றைய பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்க பெண்கள் வேலை செய்ய முட்படும் போது, வீட்டு வேலைகளை செய்வதற்கு தொழிலாளர் வர்க்க பெண் தொழிலாளர்களை நாடுகின்றனர். ஆனாலும் அரசாலும் சரி, அவர்களை வேலை வாங்கும் முதலாளிகளாலும் சரி, வீட்டு வேலை செய்பவர்களுக்கு தொழிலாளர்கள் என்ற உரிமை மறுக்கப்பட்டே வருகிறது. வீட்டு வேலைத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை நாட்டிட, உலகெங்கும் சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர் தினம் ஜுன் 16ல் அனுசரிக்கப்பட்டது. சென்னையில், இந்தியத் தொழிற்சங்க மையத்துடன்(சி.ஐ.டி.யு) இணைந்து சென்னை பெருநகர வீட்டு வேலைத் தொழிலாளர்கள் சங்கமும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவும் இணைந்து, கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.

  • வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு மணிக்கு ரூ50 ஆக குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்தல்
  • வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை. பண்டிகை நாளில் விடுமுறை
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐ.எல்.ஓ தீர்மானம் 189 ஐ அமல்படுத்த சடடரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • தொழிற் தகராறு தீர்க்கும் சட்டத்தில்(Industrial Disputes Act) வீட்டு வேலைத் தொழிலாளர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
  • வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவ வசதி, பி.எஃப் ஓய்வூதியம் அமல்படுத்தப் படவேண்டும்.
  • தொழிலாளர் நல உதவிகளை பெற தொழிலாளரே நேரடியாக வரும் முறையை கைவிட வேண்டும்.
  • கிராம அதிகாரி, வருவாய் துறை கண்காணிப்பாளர்கள் மூலம் தொழிலாளர் பதிவுகளை சரிபார்த்தலை கைவிட வேண்டும்.
  • பெண் தொழிலாளர்களுக்கு 50 வயது முதல் ஓய்வூதியம் அளி;க்கவேண்டும்.
  • வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு இலவச பட்டாவுடம் வீடுகள் தரப்படவேண்டும்.

இந்த போராட்டத்தில், வீட்டு வேலை, நிறுவனங்களில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர். இதில் பேசிய தொழிலாளர் தலைவர்கள் வீட்டு வேலைத் தொழிலாளர்கள் வேலைக்கான மதிப்பை கோரவும், தொழிலாளர்கள் ஒண்றினைந்து போராட்டங்களை வலுப்படுத்தவும் கோரினர்.

This entry was posted in Domestic Workers, News, Unorganised sector, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , . Bookmark the permalink.