தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் கோரி அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபயணம் தொடங்கிய தொழிலாளர்கள் கைது

திருப்பெரும்புதூர், ஜூலை 16 –

தொழிற்சங்க அங்கீகார சட்டம் கொண்டு வரவும், குறைந்தபட்ச கூலி ரூ.10,000 உறுதிபடுத்தவும் வலியுறுத்தி கோட்டை நோக்கி சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமையில் நடைபயணம் தொடங்கியதொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய தொழில் நகரங்களிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் உள்ள நிறுவனங்களின் தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள். மற்ற தொழிலாளர்கள் பயிற்சியாளர், அப்பரண்டீஸ், காண்ட்ராக்ட், கேசுவல், தினக்கூலி என்ற அடிப்படையில் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துகளில் உடல் உறுப்புகளையும், உயிரையும் இழக்க நேரிட்டாலும் உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை. தொழிலாளர் நலச்சட்டங்கள் எதுவும் இப்பகுதிகளில் அமலாக்கப்படுவதில்லை.

தொழிலாளர்கள் சங்கம் அமைத்தால் வேலை நீக்கம் உள்ளிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் சவால் விடுகின்றன.

இந்நிலையில், கூட்டுபேர உரிமையை உறுதி செய்யுவும், தொழிலாளர் நலச்சட்டங்களை அமலாக்கவும் தொழிற்சங்க அங்கீகார சட்டம் கொண்டு வருதல், ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துதல், நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்தல் ஒப்பந்த தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகள் பாதுகாத்தல், பழிவாங்கல் நடவடிக்கைகளை விலக்கிக்கொள்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 16) கோட்டை நோக்கி பாதயாத்திரை புறப்பட்டது. நடைபயணத்தின் முடிவில், கோட்டையில் கோரிக்கை மனு அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

சிஐடியு விடுத்திருந்த அறைகூவலை ஏற்று, விரிவான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ள திருபெரும்புதூரிலிருந்து தொடங்கிய இந்த பாதயாத்திரைக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் அ. சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். சிங்காரவேலு தொடங்கி வைத்தார். துணைப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் மற்றும் சிஐடியு தலைவர்கள் எஸ். கண்ணன், இ.முத்துக்குமார் (காஞ்சிபுரம்), எம்.சந்திரன், எஸ்.அப்பனு (தென்சென்னை) உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நடைபயணம் தொடங்கியபோது அங்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வி.ஆர். கஜேந்திரகுமார் பாதயாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அ.சவுந்தரராசன், ஜி. சுகுமாறன், எஸ். அப்பனு, எஸ். கண்ணன் உள்பட, பங்கேற்ற தொழிலாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

This entry was posted in Electronics Industry, News, Workers Struggles, தமிழ். Bookmark the permalink.