தொடரும் ஒப்பந்த செவிலியர் போராட்டம்! – இளந்தமிழகம் இயக்கம்

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுவரும் ஒப்பந்த செவிலியர்கள் 3000 பேரை உடனே பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த செவிலியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

12743755_830459830410677_6455192955074192350_n

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தின் உள்ளே 18.02.16 வியாழன் முதல் நடைபெறும் போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள் பலர் தங்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றிருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து போராட்டத்தில் பங்கெடுத்துள்ள செவிலியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்துள்ளனர்.வெயிலிலும், இரவில் கொசுக்கடியிலும் தொடரும் இப்போராட்டத்தில் சிலர் வைராக்கியமாக தண்ணீர் கூட அருந்தாமல் ஈடுபட்டுள்ளனர். பல செவிலியர்கள் மயக்கமடைந்து டிரிப்ஸ் ஏற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும், ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது.

அவர்கள் போராட்டத்தின் கோரிக்கைகள் :
1) தமிழக அரசின் சுகாதாரத்துறையில் 5 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டியும்,
2) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்சமாக 6 நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டியும்,
3) இந்திய மருத்துவக்குழு சட்ட விதிமுறைகளின் படி (MCI – Medical Council of India) அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மற்றும் புற நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டியும்,
4) தேசிய தரச் சான்றிதழ் பெற்ற அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் (NABH) விதிகளின்படி மற்றும் அனைத்து தாலூகா மருத்துவமனைகள் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புற நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டியும்,
5) 3 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனற நிபந்தனையின்படி அரசால் செவிலியர்கள் பணியமர்த்தம் செய்யப்படுகிறார்கள். ஆனால், 5 ஆண்டுகள் பணி முடித்த நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அரசின் ஆணைப்படி 3 ஆண்டுகள் பணி முடித்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட கோருகிறோம்.
6) தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் குழந்தைகளின் இறப்பி விகிதம், பிரசவிக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதமும் இந்தியாவின் பிற மாநிலங்களை விட குறைவாக உள்ளதென, மத்திய அரசால் பாராட்டப்பட்டு உரிய விருதுகளையும் தமிழக அரசு பெற்றுள்ளது. இப்பெருமைக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்திடும் ஒப்பந்த செவிலியர்களே காரணம் என்பதைஅரசும் ஏற்றுள்ளது என்பதை கணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, கூடுதல் செவிலியர் பணியிடங்களை உருவாக்கிடவும் வேண்டுகிறோம்.

ஊரில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வலியுறுத்துகிறோம். ஆனால், என் பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. தொடர் வேலை நேரத்தால் அத்தனை பணிச்சுமை, என ஒப்பந்த செவிலியர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தொடர் போராட்டத்தின் காரணமாக, 19.02.16 அன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் 1500 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், மீதி 1500 பேரின் பணி நிரந்த்ர ஆணை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள ஒப்பந்த செவிலியர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இதில் தற்போது பணி நிரந்த்ரம் செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.

இந்நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கம் சார்பில் 19.02.16 அன்று மதுரை ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. 20.02.16 முதல் தமிழகம் முழுவதும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வெல்லட்டும்!

This entry was posted in Contract Workers, News, Public Sector workers, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.