தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கோரிக்கைகளும் – தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றம்

நீராவி,மின்சாரம்,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று தொழில் புரட்சிகளை இந்த மனித சமூகம் கடந்து வந்துள்ளது. தற்போது நாம் ‘மனிதனை போன்று சிந்திக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்களை தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட’ நான்காம் தொழில் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். Robotics, 3D printing Genetics,Nanotechnology,Bio Technology என்பவை இந்த நான்காவது தொழில்புரட்சியில் முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன.இவை சமூக உற்பத்தியில் மனித உழைப்பின் தேவையை பெருமளவில் குறைக்கப்போகின்றன.

இந்த தகவல் தொழில்நுட்ப தொழில் புரட்சி காலம் என்பது நம் வாழ்வியலை வெகுவாக மாற்றியது. அஞ்சல் அட்டைகளை விட கைப்பேசிகள் நமது உணர்வுகளை வேகமாக பகிர்ந்து கொள்கின்றன.மனித உறவுகளின் தன்மையை மாற்றி அமைத்துள்ளன.கணினியை தாண்டி கைப்பேசி வழியே நம்மின் அன்றாட வாழ்வின் செயல்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அறிவியல்,பொறியியல் துறைக்கு அடுத்து தகவல் தொழில்நுட்பம்தான் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்போகிறது.

இந்தியாவில் நேரிடையாக ஏறக்குறைய 30 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகின்றனர்.மறைமுகமாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். குறிப்பாக 30% பெண்கள் அதாவது 10 லட்சம் பெண்கள் இத்துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் குறைந்தது 5 லட்சம் பேர் இந்த துறையில் வேலை செய்கின்றனர். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்களிப்பும் ஏற்றுமதியில் 30% பங்களிப்பும் இந்தத் துறையின் மூலம் கிடைக்கிறது.இந்த ஏற்றுமதியில் தமிழ்நாடு(11%) மூன்றாவது இடத்தில் உள்ளது.

நம் நாட்டில் அரசு,தனியார்,சிறிய,பெரிய நிறுவனங்கள்,குறைந்த திறன் முதல் அதிக திறன் கொண்டவர்கள் என பாரம்பரிய தொழில்துறையில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் சங்கமாக இணைந்து பணியிடங்களில் தங்களுக்கு நேரும் குறைகளை அரசாங்கத்தின் துணை கொண்டு தீர்த்துக்கொள்ள வழி இருக்கிறது.புதிய துறை சார்ந்த நிறுவனங்களுக்காக தொழிலாளர் சட்டத்தில்,நிறுவன சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் அதே வேளையில், இந்த புதிய துறையில் பணிபுரியும் பணியாளர்கள்/தொழிலாளர்கள் எந்த குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு தேடமுடியும் என்ற அறிவுறுத்தல் அரசிடமோ,தொழிலாளர் துறையிடமோ,நீதிமன்றத்திடமோ இல்லை.ஆக, இன்று மனித சமூகத்தின் வாழ்க்கையை பெருமளவு மாற்றியுள்ள நவீன தொழில் துறையான தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களுக்கு தாங்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலையில் இருக்கிறார்கள்.

வேலை பாதுகாப்பின்மை

தொழிநுட்ப துறையில் பணி செய்யும் பணியாளர்களை எப்போது வேண்டுமானாலும் எந்த காரணமும் இன்றி பணியாளர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து எந்த அக்கறையும் இன்றி வேலையை விட்டும் வெளியேற்றும் அதிகாரம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.நிறுவனங்களின் இந்த முடிவை கேள்விக்குட்படுத்தி தீர்வு அளிக்கும் அதிகாரம் பெற்ற எந்த அமைப்பு முறையும் இல்லை.

கட்டாய பணிவிலகல்

பணியிடங்களில் நடக்கும் எந்த பாரபட்சத்திற்கும் எதிராக குரல் எழுப்பினால், பணியாளர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ஆண்டுதோறும் நடக்கும் கட்டாய ஆட்குறைப்பு போன்றவை பணியாளர்களின் ஒப்புதலுடன் நடக்கும் சட்டபூர்வமான பணிவிலகல் போன்று காட்டப்படுகிறது. “அனுபவ சான்று, பணிவிலகல் சான்று” போன்றவற்றை “பணயப் பொருளாக” வைத்துக்கொண்டு உளவியல் ரீதியில் பணியாளர்களை பயமுறுத்தி பணி விலகல் செய்ய வைப்பது என்பது நடைமுறையாக இருக்கிறது.

வெளிப்படை தன்மை அற்ற performance appraisal அமைப்பு

இந்த முறையில் ஒவ்வொரு மேலாளரும் குறிப்பிட்ட சதவீதத்தில் Exceeding the Expectation,Above Expectation,Meeting the Expectation, Below Expectation, Need Improvement என்பதாக பணியாளர்களை வகைப்படுத்துகின்றனர்.இந்த முறையில் ஒவ்வொரு ஆண்டும் 10% பணியாளர்கள் கட்டாய ஆட்குறைப்புக்கு ஆளாகிறார்கள். இது மேலாளர் கருத்தை ஒட்டி முடிவு எடுக்கப்படுகிற ஒரு பாரபட்சமான முறையாகும். இந்த முறை தொழிலாளர்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்துகிறது எனக்கூறி இன்போசிஸ் உள்ளிட்ட சில பெரிய நிறுவனங்களே மாற்று முறையை நோக்கி நகர்கின்றன. சம்பள உயர்வு,பதவி உயர்வு போன்றவை இந்த திறன் மதிப்பீட்டு முறையிலேயே நடக்கின்றன. ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு இந்த முறை மறைமுகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தொழில் நுட்ப நிறுவனங்களின் அடியாள் வேலை

பணியிடங்களில் நடக்கும் எந்த பாரபட்சத்திற்கும் எதிராக பணியாளர்கள் குரல் எழுப்ப முடியாது. அதிக வேலை நேரம், அதிக வேலை பளு, பதவி உயர்வு,சம்பள உயர்வு,இடமாற்றம்,வேலை மாற்றம்(Project Transfer),விடுமுறை,வெளிநாட்டு பணி நியமனம் என எது குறித்தும் தனியாகவோ கூட்டாகவோ கேள்வி எழுப்ப கூடாது.மீறி எழுப்பினால் கட்டாய பணிவிலகளுக்கு/பணிநீக்கத்திற்கு ஆளாக்கப்படுவர். கட்டாய பணிவிலகளுக்கு உடன்படாதவர்களை அடியாட்கள் கொண்டு விரட்டப்படுவர்.அனுபவ சான்று, பணி விலகல் சான்று போன்றவை பிடித்து வைக்கப்படும்.பணியாளர்கள் பணிபுரியும்போது கொடுத்த எதிர்ப்பு குரல்கள் யாவும் பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு நிறுவனமும் பணியாளரை வேலைக்கு எடுக்கும் போது background check செய்யும். அப்போது அவருடைய முந்தைய நிறுவனம் அவர் பற்றிய குறிப்பாக நிறுவனத்தின் பாரபட்சமான போக்குக்கு எதிரான செயல்பாடுகளை தெரிவிக்கும். இந்த background check என்பதை செய்து கொடுப்பது நிறுவனங்களின் சங்கமான NASSCOM.ஆக, தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஒருவர் எதையும் எதிர்த்து கேள்வி கேட்காதவராக இருந்தால் மட்டுமே அந்த துறையில் வேலை செய்ய முடியும்.தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கமாக ஒன்று சேர மிகப்பெரிய தடையாக இருப்பது “background check” என்ற நடைமுறையும் அது கொடுத்துள்ள “பய உணர்வே” ஆகும்.

பணியிடத்தில் ஆண் பெண் பாலின சமத்துவமின்மை

தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் பெண்களுக்கு திருமணம்,குழந்தை பிறப்பு என்பது அவர்கள் வேலையில் தொடர்ந்து செய்வதற்கு பெரிய தடையாக இருக்கிறது. திறன் மதிப்பீடு அதன் அடிப்படையிலான சம்பள உயர்வு,பதவி உயர்வு போன்ற உரிமைகள் பெரும்பாலும் அவர்களின் குழந்தை பிறப்புக்கு முன்பு பின்பு என பாதிப்புக்குள்ளாகின்றன.கட்டாய ஆட்குறைப்புக்கு மகப்பேறு காலக் கட்டத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தை வளர்ப்பு என்பது பெண்களின் கடமையாக உள்ள சமூகத்தில் நிறுவனங்களும் அதே கண்ணோட்டத்தில் பெண்களை அணுகுகின்றன. போதிய மகப்பேறு விடுமுறை அளிக்காதது, வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி மறுப்பு, குழந்தை பராமரிப்பு என்ற காரணத்தால் விடுமுறை நீட்டிப்பு போன்ற உரிமைகள் மறுக்கப்படுவதால், பெரும்பாலான பெண்கள் வேலையை விட்டு விலகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப துறையில் ஆணுக்கு சமமாக பெண்கள் வேலை செய்யும் உரிமை பெண் என்ற காரணத்தாலேயே மறுக்கப்பட்டு வருகிறது.

காணாமல் போகும் நிறுவனங்கள்

சிறிய முதலீட்டில் தகவல் தொழிநுட்ப துறையில் உள்ள நிறுவனங்கள் ஏராளம். இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாத சம்பளம்,வருங்கால வைப்பு நிதி(PF) உள்ளிட்டவை காலம் தவறாமல் வந்து சேரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இந்த நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் வியாபாரத்தை நிறுத்திக்கொள்ளலாம்,நாட்டை விட்டு வெளியேறலாம். கேள்வி கேட்க எந்த அரச அமைப்பும் இல்லை. இவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு செல்லும்போது பணிபுரிந்த ஊழியர்களுக்கு எந்த இழப்பீடும்(compensation) கொடுக்காமல் போகலாம். நாம் சட்டப்படி நீதி கேட்டு தட்டும் நீதிமன்ற கதவுகள் திறப்பதற்கு முன்னரே இவர்கள் காணாமல் போய் விடுகின்றனர்.

மறுக்கப்படும் வேலை நேர உரிமை

ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் வேலை செய்ய சொன்னாலும் செய்ய வேண்டும். வார இறுதி நாட்களில் வந்து வேலையை முடிக்க வேண்டும் என்றாலும் கேள்வி கேட்க முடியாது.இருவர் செய்யும் வேலையை ஒருவரை செய்யச் சொன்னாலும் எதிர்க்க முடியாது.இதையும் தாண்டி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால், அவரது பணிப்பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்.

அரசு விடுமுறை தினங்களை மதிப்பதில்லை.அதையும் மீறி அரசு விடுமுறை தினங்களில் வேலை செய்தால் இரட்டை சம்பளம் தருவதில்லை. ஒவ்வொரு Project ம் அதை செய்து முடிக்க ஆகும் மொத்த வேலை நேரத்தை குறைத்து பேசி வாடிக்கையாளரிடம் வாங்கப்படுகிறது.அதே நேரத்தில் குறைந்த பணியாளர்களை வைத்து அதிக நேரம் வேலை வாங்குவது அதே நேரத்தில் அதை வாடிக்கையாளரிடம் மறைப்பது உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று வேலைகள் மூலம் பணியாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

சங்கமாக ஒன்று சேரும் உரிமை

தங்கள் தொழில்துறை நலனை பாதுகாத்துக்கொள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சங்கமாக சேர்ந்துள்ள அதே நேரத்தில், நமது அரசியலமைப்பு அடிப்படை உரிமையாக வைத்துள்ள சங்கம் சேரும் உரிமை தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பல்வேறு வழிகளில் மறுக்கப்படுகிறது. பணியிடப் பிரச்சினைகள் நிறுவனங்களின் மனித வள மேலாளர்களை கொண்டே நிறுவனத்திற்கு சாதகமாகவே முடித்துவைக்கப்படுகின்றன.பாரம்பரிய துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ள சங்க உரிமைகள் கூட இந்த நவீன தொழில்துறையில் உள்ள பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை.

பெருகி வரும் தற்கொலைகளும் மண விலக்குகளும்

அலுவலகம் செல்வது என்பது பணியாளர்கள் தினமும் ஏதோ போட்டி களத்தில் நுழைவது போன்று மாறி விட்டதும்,பணியிடங்களில் எல்லா பிரச்சினைகளையும் தனித்தே எதிர்கொள்வதும் பணிப்பாதுகாப்பு அற்ற சூழலும் அதனால் ஏற்படும் மன அழுத்தமும் பணியாளர்களை தற்கொலையை நோக்கி தள்ளிக்கொண்டு இருக்கிறது. தகவல் பணியாளர்கள் மத்தியில் பெருகிவரும் தற்கொலைகளும்,விவாகரத்துகளும், அவர்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் பாதிப்பை காட்டும் ஒரு கண்ணாடி ஆகும்.

ஆண்டுதோறும் 10% மேல் வளர்ச்சியை கொண்டது இந்திய தொழில்நுட்ப துறை.வருடக்கணக்கில் வரிச் சலுகை, குறைந்த விலையில் நிலம்,மின்சாரம் போன்ற சலுகைகளையும் அனுபவிக்கின்றன.இதே நேரத்தில் “தேவைப்படும் வரை பயன்படுத்துவது பின் தூக்கி எறிவது”(Hire and Fire) என்ற நோக்கத்திலேயே பணியாளர்களை அணுகுகிறது. 40 வயதுக்குள் நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்து பின் எந்த எதிர்காலப் பாதுகாப்பு இன்றி தூக்கி எறியப்பட்ட பணியாளர்கள் ஏராளம்.

அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நான்காம் தொழில்புரட்சியை நோக்கி நகரும் இதே நேரத்தில் ரோபோடிக்ஸ் போன்ற தன்னியக்கமாக்கல் (automation)தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு என்பதும் எதிர்காலத்தில் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தீர்மானகரமான எந்த சட்ட பாதுகாப்பும் அற்ற சங்க உரிமையும் அற்ற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் கீழ் காணும் கோரிக்கைகள் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றம் (Forum for IT/ITES Employees-FITE) கோருகிறது.

  1. தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாளர்கள் தங்கள் பிரச்சினைகளை நிறுவனங்களோடு பேசி தீர்த்துக்கொள்ள சங்கம் அமைப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
  1. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் பற்றிய தகவல்களை மைய அளவில் National Skill Registry என்ற பெயரில் NASSCOM திரட்டி வைக்கிறது. பணியாளர்கள் பற்றிய தனிப்பட்ட ஏராளமான இந்த தகவல்களின் பயன்பாடு என்பது வெளிப்படை தன்மை அற்றது. எனவே NSR என்பது உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.
  1. Background Check என்ற முறையால் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களில் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள முடியாமல் பணியிட உரிமை மீறல்களை மௌனமாக கடந்து செல்கிறனர்.எனவே, Background Check என்ற முறை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.
  1. Annual Performance Appraisal என்ற பணியாளர்களின் திறனை மதிப்பிடும் முறையானது இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாலேயே பாரபட்சமானது என புறக்கணிக்கப்பட்டுள்ளது.பணியாளர்களின் சம்பள உயர்வு,பதவி உயர்வு போன்றவை இந்த திறன் மதிப்பீடு அடிப்படையிலேயே கொடுக்கப்படுவதால் பாரபட்சமான இந்த முறையை அரசு கண்காணித்து தகவல் தொழில்நுட்ப துறையினருக்கு பொருத்தமான மாற்று முறையை அமல்படுத்த வேண்டும்.
  1. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் பணியாளர்களுக்கான தரம் வாய்ந்த கட்டுப்படியான வாடகையில் ஆண்,பெண் அரசு விடுதிகள் அமைத்து தர வேண்டும்.
  1. தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் பிரச்சனைகளை விசாரிக்கக்கூடிய தனித்த நீதிமன்றங்கள்(Tribunal) உடனடியாக நிறுவப்பட வேண்டும்.
  1. தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் பிரச்சினைகளை பேசித்தீர்க்க தொழிலாளர் சமரச அலுவலகங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் உடனடியாக நிறுவப்பட வேண்டும்.
  1. தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை உடனடியாக தொழில் தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பொருந்தக்கூடிய திருத்தங்களை தொழில் தகராறு சட்டத்தில் கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
  1. தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்ற அளவில் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பெண் பணியாளர்களுக்கான கோரிக்கைகள்

  1. தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் பெண்களின் மகப்பேறு விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்த வேண்டும்.
  1. தகவல் தொழில்நுட்ப துறையில் உடனடியாக எல்லா நிலைகளிலும் குறைந்த பட்சம் 3 ஒரு 1 பங்கு பெண்கள் வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி வேண்டும். எதிர்காலத்தில் ஆணும் பெணும் சம எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு பெறுவதை நோக்கி நகருவதை உறுதி செய்ய வேண்டும்.
  1. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தை காப்பகங்கள் அமைத்துத் தரப்பட வேண்டும்.
  1. பெண்கள் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் மீதான புகார்களை விசாரிக்கும் தகுதியான நபர்களை கொண்ட உள்ளக புகார் குழுக்கள் (Internal Complaints Committee) அமைப்பதை உறுதி படுத்த வேண்டும்.
  1. மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு நெகிழ்வு தன்மை கொண்ட வேலை நேரம்,பணியிடம்(Flexible Work Time,Location,Work From Home) வழக்கப்பட வேண்டும்.
  1. இரவு நேரம் பணிமுடித்து இருப்பிடம் திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை நிறுவனங்கள் தருவதை உறுதிபடுத்த வேண்டும்.
This entry was posted in IT Workers, News, Resources, Service Sector, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.