கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் – விஸ்வநாதன்

பொதுச்செயலாளா், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகளை சந்தைபடுத்த 1935ம் ஆண்டு துவங்கப்பட்டது. விற்பனையை அதிகரிக்க 1967 ம் ஆண்டு வாக்கில் பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் ஜவுளிகளுக்கு 10% மான்யம் தமிழக அரசு வழங்கியது. 1971 ம் வாக்கில் அரசு ஊழியா்களுக்கு கடனுக்கு துணிகள் வழங்கியது. அப்போது ஜவுளிகள் தரம் விலை தனியாருடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்த காரணத்தாலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதியம் குறைவாக இருந்தாலும் விற்பனை நிலையத்தை திறக்க முன்பே கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமல்ல 1980 ம் ஆண்டு நான்கு முழம் சலவை செய்யாத ஜனதா வேட்டி ரூ 4.50,சலவை செய்தது ரூ5.08, ஜனதா சேலை ரூ 15. 50 விற்பனை செய்யபட்டதால் கிராமபுற வறிய மக்கள் ஆர்வத்துடன் ஜவுளிகளை வாங்கி சென்றனா்.

IMG_2229

இன்று கிராமபுற மக்களை நெருங்க முடியாத அளவுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அவா்களைவிட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டது.

500 விற்பனை நிலையங்கள,20 மண்டல அலுவலகங்கள், 3000 ஊழியர்கள் இருந்த நிறுவனம் சுருங்கி 202 விற்பனை நிலையங்கள், 11 மண்டல அலுவலகம் 750 ஊழியர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

ஊழல்கள், முறைகேடுகள், மோசடிகள் இதனாலும் பாதிப்பு ஏற்பட்டது. 1996 ம் ஆண்டு மிகப்பெரிய ஊழல்களால் நிா்வாகம் பொிய பாதிப்பை சந்தித்தது. நிா்வாகத்தின் ஒட்டு மொத்த  85 கோடி நஷ்டம் ஒரு பொிய அதிா்வலையை ஏற்படுத்தியது.

2002 ம் ஆண்டு முதல் பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டது. மாதா மாதம் ஊதியம் தள்ளிபோனது.

2005 ம் ஆண்டு சிறப்பு விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டது. 640 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றனா். அதன் பிறகு சராசரியாக ஆண்டுக்கு 50 ஊழியர்கள் வீதம் பணிஓய்வில் சென்றனா்.

நிா்வாகத்தின் அழுத்தம் விற்பனை பிாிவு ஊழியா்கள் மீது கடுமையாக சுமத்தப்பட்டது.விற்பனை விற்பனை இதுதான் அவா்களின் இரத்தத்தில் பாய்ச்சப்பட்டது.

குடும்பத்தை மறந்தனா். ஓடி ஓடி விற்பனை செய்தனர். அரசு நிறுவனங்கள், அரசு பள்ளிகள் இப்படி பல்வேறு துறைகளில் படியேறி படியேறி  கடன் விற்பனை செய்ய பணிக்கப்பட்டனா். இதன் பயனாக கோ-ஆப்டெக்ஸ் ஒட்டு மொத்த நஷ்டம் 85 கோடி ஈடுசெய்யப்பட்டு நிகர லாபத்தில் இயங்க தொடங்கியது. IAS அதிகாாிகள் ஆளாளுக்கு நிறுவனம் இலாபத்திற்க்கு வர தான் காரணம் என்று சொந்தம் கொண்டாடினா்.

இந்நிலையில் வாராக் கடன் தொகை அதிகரித்தது. கடன் செலுத்தாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவா்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த துறையின் விற்பனை முழுவதும் பாதிக்கபடும். நஷ்டம் ஏற்படும். நாங்கள் சுகமாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள முடியாது. ஆகவே நீங்கள் வீதி வீதியாக படியேறி படியேறி விற்பனை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கபட்டனா். ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு விருப்ப ஓய்வில் வெளியேற முயற்சி செய்தபோது அதற்கும் தடை விதித்தனர்.

விருப்ப ஓய்வில் சென்றால் சேமிப்பு விடுப்பிற்கு உண்டான பணப்பயனை வழங்கமுடியாது என்று சட்டவிரோதமான சுற்றறிக்கை 2011ல் பிறப்பிக்கப்பட்டது.

ஊழியர்கள் ஒவ்வொருவரும் கடன் விற்பனை நிலுவை என்ற பெயரில் ஊதியத்தில் பிடித்தம் செய்தது நிா்வாகம். அதிகபட்சமாக ரூ 10 லட்சம் வரை பொறுப்பு நிா்ணயம் செய்தது.

சென்னை கோ-ஆப்டெக்ஸ் ஒப்பந்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் திருமதி சாருமதி 30.06.2016 ஓய்வு பெற்றாா்கள். அவருக்கு முந்தைய பணிபுாிந்த ஊழியர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி சீருடை 2011-13 ம் ஆண்டு சப்ளை செய்ததில் 23 லட்சம் தரவேண்டி இருந்தது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் எழுதினார். நீங்கள் பணம் செலுத்த தவறினால் பணிஓய்வு பெறும் சாருமதி அவா்களுக்கு பணப்பயனை வழங்கமாடோம் என்று கடிதம் எழுதியுள்ளார். கடிதம் எழுதியவரும் கடிதத்தை பெற்று கொண்டவரும் இந்திய ஆட்சிப் பணித்துறையை சோ்ந்த மூத்த அதிகாரிகள்.

சென்னை கடன் வசூல் அலுவலகத்தில் பணியாற்றி 30.06.2016 பணிஓய்வு பெற்ற நல்லதம்பி அவா்களுக்கு பல்வேறு அரசு துறை கடன் நிலுவைகளை காரணம் காட்டி அவரது பணிக்கொடை உட்பட எந்த பணப்பயனையும் வழங்கவில்லை.

தஞ்சாவூரை சோ்ந்த விஜயனிடம் 4.50லட்சம்,பாலுவிடம் 4.50லட்சம், குணசேகரனிடம் 5லட்சம் இப்படி நாடு முழுவதும் பிடித்தம் செய்யப்பட்டது. பல்வேறு அரசு துறை ECS மூலமாக செலுத்தபட்ட  கோடிக்கணக்காண தொகை சம்பந்தப்பட்ட துறையின் கணக்கில் வரவு வைக்காமல் நிலுவை காண்பிக்கபட்டு ஊழியர்கள் தலையில் பாரத்தை ஏற்றப்பட்டது.

நியூசிலாந்தை சோ்ந்த கம்பெனி ரூ 5.50லட்சம் கடன் பெற்று செலுத்தாத போது நிா்வாகத்தால் தள்ளுபடி செய்ய தீா்மானம் நிறைவேற்றபட்டது.தரம் குறைவான ஜவுளி கொள்முதலில் ஏற்பட்ட நஷ்டம் 7.50கோடி வஜா செய்வதற்கு தீா்மானம் நிறைவேற்றபட்டது.

பணிக்கொடையில் பிடித்தம் செய்யகூடாது என்று நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும(High Court of calcutta, in eastern coalfielos limited vs.Rlc (c)calcutta and others )
(office of the Regional labour commissioner (central) BANGALORE Application No 349/87/B3  26.09.1988)கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகம் அதனை அசட்டை செய்தது.

இந்த கொடுமைகளையெல்லாம், கைத்தறி துறை அமைச்சர், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர், தொழிலாளா் துறை அமைச்சர், கைத்தறி மற்றும் கதா்துறை செயலாளர், தொழிலாளா் துறை செயலாளர், தொழிலாளா் துறை கமிஷனர் மற்றும் பல்வேறு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் நீதி கிடையாது.

இதனை கண்டித்து 12.7.2016 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு  எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்துவதெனவும்,  அந்த போராடத்தை வாழ்த்தி பேச மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் அழைத்து கண்டன உரை வழங்க கேட்டுக் கொண்டுள்ளோம். செப்டம்பர் 2 ந்தேதி நாடு முழுவதும் கடையை அடைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்வும் முடிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் முறையிட்டு நிா்வாகம் தீா்வு பெறவும் முடிவு செய்துள்ளோம்.

This entry was posted in News, Press Releases, Public Sector workers, Workers Struggles, தமிழ் and tagged , . Bookmark the permalink.