‘வெள்ளையனே வெளியேறு’ தினத்தை நினைவு கூறி தொழிற்சங்கங்கள் கூட்டம் – செப்டம்பர் 2 தேசிய வேலை நிறுத்தத்திற்கு பங்கேற்க அழைப்பு

1942, ஆகஸ்ட் 9 அன்று, ஆங்கிலேயரை எதிர்த்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்தை

Call for a National General Strike

Call for a National General Strike

நினைவு கோரியும், பாசிஸ தாராளவாத முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக நடத்தப்படும் தேசிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கோரியும், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, எல்பிஎஃப், ஹெஎம்எஸ், ஐஎன்டியுசி மற்றும் கட்சி சார்பற்ற தொழிற்சங்கங்கள் வரும் தேசிய வேலை நிறுத்தத்தைக் குறித்து விளக்கினர். மேலும் தேசிய வேலை நிறுத்தத்தின் 12 அம்ச கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

 

திருவான்மியூர் சிக்னல் அருகே தெருமுனைக் கூட்டம்
திருவான்மியூர் சிக்னல் அருகே நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎஃப் மற்றும் கட்சிசார்பற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு நிகழ்வுகளை குறித்து பேசினர். கடந்த 2015ல் செப்டம்பர் 2ல் நடைபெற்ற தேசிய வேலை நிறுத்தத்தை நினைவு கூறிய சிஐடியு சங்கத் தோழர் விஜயக்குமார், வேலை நிறுத்தத்தினால் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசு தொழிலாளர்கள் சீர்திருத்தங்கள் சிலவற்றில் இருந்து வாபஸ் வாங்கியதாகக் கூறினார். ஆனால் தாராளமயக் கொள்கைகளை தொடரும் அரசின் போக்கை கட்டுப்படுத்துவதற்கு வர்க்கப் போராட்டம் தொடர வேண்டும் என்று அவர் விளக்கினார். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்விக் கடன்களை வசூலிப்பதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வேலை ஒப்பந்தத்தை கொடுத்த பின்னர், ரிலையன்ஸ் துன்புறுத்தலைத் தாங்காமல் சமீபத்தில் ஒரு வேலையில்லா பட்டதாரி தற்கொலை செய்ததையும், அதே போல் 90சத கடனைக் கட்டிய ஒரு விவசாயி மீதிக் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Meeting at Thiruvanmuyur

Meeting at Thiruvanmuyur

மத்திய அரசின் பாசிஸ மனப்பான்மையை கண்டித்த ஏஐடியுசி சங்கப் பிரதிநிதி தோழர் சீனிவாசன், ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் தலித்துகள் மீதும் முஸ்லீம்கள் மீதும் கட்டவிழ்க்கப்படும் வன்முறையையும், அதை எதிர்த்து தற்போது நடைபெறும் தலித் எழுச்சியைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இது குறித்து பிரதமர் மோடி வெகுநாட்கள் மௌனம் சாதித்ததை குறித்து அவர் சாடினார்.

கடந்த ஆண்டு மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பிற்கு செவிசாய்த்த தொழிலாளர் வர்க்க எழுச்சியை புகழ்ந்த எழுத்தாளர்கள் சங்கத்தின் தோழர் சந்தானம், தேசிய வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற மற்ற சங்கங்கள் மற்றும் இயக்கங்களின் பங்கை நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஒரு கோடி இளைஞர்கள் வேலைக்கு தயாராகும் நிலையில் ஒரு லட்ச வேலை வாய்ப்புகளையே உருவாக்க முடிந்த பொருளாதார கொள்கைகளை தோழர் சந்தானம் விமரிசித்தார்.

விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் வேளையில் ஊதியத்தை குறைவாகவே வைக்கும் அரசின் கொள்கைகளை மலர் மருத்துவமனையில் உள்ள சிஐடியு சங்கத் தோழர் விஜயா சாடினார். தொழிலாளர் வர்க்கப் போராட்டம் அனைத்து வர்க்க நலனிற்கான போராட்டம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 17 வருடங்களாக நடக்கும் வேலை நிறுத்தங்களுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறிய போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதி தோழர் சிவராமன், ஒரு பக்கம் பொதுமக்களுக்கு பயணச்சீட்டு சலுகை அளித்து வரும் மாநில அரசு, அதை ஈடுகட்டாத பட்சத்தில் தொழிலாளர்களே சலுகைகளின் சுமையை ஏற்க்க நேரிடுகிறது என்று கூறினார். போக்குவரத்துத் துறையில் அதிகரித்து வரும் ஒப்பந்த தொழிலாளர் முறையையும், அவர்களின் ஓய்வூதியத்தை அளிப்பதில் ஏற்படும் தாமதங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். சரியான பராமரிப்பு இல்லாத வாகனங்களை ஓட்ட நேரிடும் தொழிலாளர்கள் பிரச்சனைகளையும் அவர் விவரித்தார்.
திருவான்மியூர் சிக்னலில் தற்காலிகமாக நின்ற பல பொது மக்கள், குறிப்பாக ஒரு கல்லூரியின் பேருந்தில் இருந்த அனைத்து மாணவிகளும் பேச்சாளர்களின் கருத்துகளை கூர்ந்து கவனித்தனர். பிரச்சாரத்தில் மருத்துவமனை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

வளசரவாக்கம்
ஆட்டோ ஓட்டுனர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் உட்பட 100 தொழிலாளர்கள் வளசரவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு குறித்த கருத்து பாடல்களுடன் போராட்டம் தொடங்கியது. மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் போக்குகளை கண்டித்தும், மத்திய தொழிற்சங்கங்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Voicing aloud the demands - Valasaravakkam

Voicing aloud the demands – Valasaravakkam

வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர் உரிமைகளை நிறுவனங்களுக்காக தாரை வார்த்து வரும் மத்திய அரசின் போக்கை சிஐடியு சங்கத் தோழர் தாமஸ் கண்டித்தார். தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை விட்டு விட்டு சட்ட சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக ஏஐசிசிடியு சங்கத் தோழர் குமரேஷ் சுட்டிக்காட்டினார். திடீர் என்று பெய்த மழையால், கூட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்தும், அதை தீர்ப்பதற்கான 12 அம்ச கோரிக்கைகளை விளக்கியும் பேசினர். தேசிய வேலை நிறுத்தத்தை ஆதரித்தும், அவற்றை வெற்றி பெறச் செய்யவும் தொழிலாளர்கள் உறுதியேற்றனர்.

அரும்பாக்கம் எம்எம்டியு காலனி மற்றும் தாம்பரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

செப்டம்பர் 2 அகில இந்திய 17வது பொது வேலை நிறுத்தக் கோரிக்கைகள்:

 • விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்.
 • குறைந்தபட்சு ஊதியம் அனைத்து பணிதளங்களிலும் ரூ18000 நிர்ணயித்து அமல்படுத்திட வேண்டும்.
 • ஒப்பந்த முறை உள்ளிட்ட பணி நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும்.
 • பொதுத் துறை நிறுவனங்களை, அதன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது.
 • முறைசாரா பிரிவுகளில் உள்ள தொழிலாளர் தனது நலவாரிய செயல்பாடுகளில் அபிவிருத்தி காண வேண்டும். விபத்து மரண நிவாரணம் ரூ5 லட்சம், இயற்கை மரணம் நிவாரணம் ரூ1 லட்சம் வழங்கிட வேண்டும்.
 • நலவாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்கிட வேண்டும். ஆண்களுக்கு 60 வயதிலும், பெண்களுக்கு 50 வயதிலும் ரூ4000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
 • பொது வினியோக முறையை பலப்படுத்திட வேண்டும்.
 • புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
 • அங்கன்வாடி, டாஸ்மாக், உள்ளாட்சி, கூட்டுறவு போன்ற அரசு நிறுவனங்களில், தொகுப்பூதியம், மதிப்பூதிய முறையை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
 • புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்கிட வேண்டும்.
 • 2015 சாலை போக்குவரத்து பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
 • தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர்களுக்கு பாதகமாக திருத்தாதே. தொழிற்சங்க பதிவினை 45 நாட்களுக்குள் உருவாக்கிடு. ஐ.எல்.ஓ இணக்க விதிகள் 87, 87ஐ அமல்படுத்து.
 • தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
This entry was posted in labour reforms, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.