சாதியம், ஆணாதிக்கத்தை உடைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் – சென்னை ஐஐடி கூட்டத்தில் பெசவாடா வில்சன் கோரிக்கை

தேசிய சேவை திட்டம்(என்எஸ்எஸ்) நிறுவிய தினம் செப்டம்பர் 26 அன்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றறும் வேலையை அழிக்கப் போராடி வரும் துப்புரவு தொழிலாளர்கள் இயக்கத்தின் (சஃபாய் கரம்சாரி அந்தோலன்) நிறுவனரும், 2016 மாக்சசே விருது பெற்றவரும் ஆன பெசவாடா வில்சன் பங்கேற்றார். மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் காலங்காலமாக தீண்டத்தகாத தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதை முற்றுமாக ஒழித்து அவர்களை மாற்று வேலைகளில் ஈடுபடுத்துவதற்கான செயல்களை வலியுறுத்தி துப்புரவுத் தொழிலாளர்கள் இயக்கம் பாடுபட்டு வருகிறது. இந்திய மனப்பான்மை, சமூகக் கட்டமைப்புகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மூலம் எவ்வாறு சாதியம் நிலைநிறுத்தப்படுவதை விளக்கிய அவர், இக்கட்டமைப்புகளை ஒழிப்பதற்கு மாணவ இளைஞர் சமுதாயம் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து கூட்டாக உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் மெத்தனப் போக்கு
இந்திய ரயில் போக்குவரத்தில் மனிதக் கழிவுகளை அகற்ற தலித் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுதல், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தாதது, தூய்மை இந்தியா(Swachha Bharat) திட்டத்தில் உள்ள சாதியம் ஆகியவைகளை பற்றி தோழர் பெசவாடா வில்சன் விரிவாக எடுத்துரைத்தார். இந்தியாவில் மொத்தம் 1,78,000 ரயில் பெட்டிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. பல ரயில்கள் அதிகாலை நேரம் சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு வந்து சேருமாறு இயக்கப்படுகின்றன. பயணிகள் அந்நேரமே தங்கள் காலைக் கடன்களை முடிக்க நேரிடும் பொழுது மனித மலங்கள் பெட்டிகள் உள்ள திறந்த வெளி கழிப்பிடங்களில் இருந்து நிலைய ரயில் தடங்களில் விழுகின்றன. இவற்றை அகற்றுவதற்கு தலித்துகள் வேலையில் அமர்த்தப்படுகின்றனர். தோழர் பெசவாடாவின் சகோதரர் 18 வருடங்களுக்கு இந்திய ரெயில்வேயில் இப்பணியில் வேலை செய்ய நேர்ந்தது.ரயில் கழிப்பறைத் திட்டத்தை நவீனப்படுத்தக் கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் இயக்கம் 2003ல் உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டது. ரயில் போக்குவரத்து அதிகாரிகள் தடங்களை சிமென்ட் வைத்து கட்டி மலங்களை நீரால் அகற்றுவதற்கு திட்டம் வகுத்தனர். ஆனால் இத்திட்டத்தை பல ரயில் நிலையங்களில் அமல்படுத்தவில்லை. உச்ச நீதி மன்றத்தில் இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து இயக்கம் மனு தாக்கல் செய்த பின்னர், அரசு கன்ட்ரோல் டாய்லட் டிஸ்சார்ஜ் சிஸ்டம் என்ற முறையை கொண்டு வந்தது. இதன் படி, மலங்களை பெட்டியின் அடியில் சேகரித்து, ரயில் நிலையத்தை விட்டு சென்ற பின்னர், ரயில் ஓட்டுனர் நகரத்திற்கு வெளியே ரயில் தடங்களில் மலத்தை வெளியேற்றுவார். ஆனால் ரயில் 60-70 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது இவ்வாறு வெளியேற்றப்பட்ட மலம் ஜன்னல் ஓரங்களில் உள்ள பயணிகள் மேல் தெரித்து விழுந்தது. மேலும் ரயில் பாதுகாப்பிற்கான உயர் நீதி மன்றக் குழு இந்த முறை ரயில் தடங்களை வலுவிழக்கச் செய்ததாக கூறிய பின்னர், இந்த திட்டத்தையும் அரசு கைவிட்டது.

தற்போது தற்பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி இயக்கம்(DRDO) மலத்தை உண்ணும் பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள சியாச்சன் பனிப்பாறைகளில் உள்ள ராணுவ முகாம்களில் இவற்றை பயன்படுத்தியுள்ளனர். இம்முறையை பயன்படுத்தி 500 பயோ டாய்லெட்டுகளை நிறுவுவதாக அரசு கூறியுள்ளது. இந்தியாவில் 1லட்சத்து 78 ஆயிரம் பெட்டிகள் உள்ள போது இவர்கள் 500 டாய்லெட்டுகளை மாற்றி வந்தால் எப்போது இந்த வேலை முடிவது. இது குறித்து ஹசார்ட்ஸ் சென்டர் நடத்திய ஆய்வில் இந்த பாக்டீரியாக்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்கு இது வரை எந்த பதிலும் இல்லை.

நாடாளுமன்ற நிலைக் குழு மற்றும் மந்திரிகள் கூட்டங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் இயக்கம் இந்த கேள்விகளை எழுப்பினால் உடனே அவர்கள் இயக்கத்திடம் என்ன செய்வது என்று கூறுங்கள் என்று மறு கேள்வி எழுப்பிகி;ன்றனர். இயக்கத்தில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களிடம் இதற்கான பதில்கள் கேட்பது எவ்வாறு மடத்தனம் என்று தோழர் பெசவாடா வினவினார். ஒரு பக்கம் கிரியோஜனிக் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கிறோம் என்று பெருமை பட்டு கொள்ளும் இந்திய விஞ்ஞானிகள் இன்னொரு பக்கம் இதற்கான தீர்வுகளுக்கு ஏன் முயற்சிகள் எடுப்பதில்லை என்று அவர் கோரினார். இயந்திரங்கள் மலங்களை சரியாக அள்ளுவதில்லை என்றும் அதற்காக மனிதர்கள் தேவைப்படுகிறது என்ற அரசு தரப்பு கூற்று நியாயமானதா என்று கோரும் அவர் மலங்களை பற்றி யோசித்தால் தாங்கள் அசுத்தமானவர்கள் ஆகி விடுவோம் என்ற விஞ்ஞானிகளின் மனப்பான்மையை சாடினார்.

ஒரு பக்கம் நகரமயமாக்குதலை கொள்கைகள் மூலம் அதிகரித்துள்ள அரசு, அதற்கான துப்புரவு கட்டுமானப் பணிகளிலும், கழிவுநீர் மேலாண்மைகளிலும் கவனம் செலுத்தவில்லை. கழிவுநீரை அகற்றுவதில் இயந்திரங்களை பயன்படுத்தவதில் அரசு முயற்சிகள் எடுக்கவில்லை. இதனால் கழிவு நீரை அகற்றுவதில் ஈடுபடுத்தப்படும் மனிதர்கள் இறக்கின்றனர். கழிவுநீர் தொட்டிகளில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் தமிழ்நாடு முதன்மை வகிக்கின்றது. 2014 உச்சி நீதி மன்ற தீரப்பிற்கு பின்னர் இந்தியாவில் 1372 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை தேசிய குற்றப்பதிவுகள் மையத்தில் (NCRB) இதுவரை மனிதக் கழிவுகளை அகற்றி இறந்தவர் பற்றி எண்ணிக்கை இல்லை. இதைப் பற்றி பேசுவதற்கு அதிகளரிகள் தயாராக இல்லை. அதனால் தான் துப்புரவு தொழிலாளர்கள் இயக்கம் தேசிய அளவில் பீம் யாத்ராவை மேற்கொண்டு சென்ற இடங்களில் இம் மரணங்களை பற்றியும் இறந்தவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டதையும் பேசியது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அரசு 12 கோடி கழிப்பிடங்களை 2019க்குள் கட்டுவதாக அறிவித்துள்ளது. அதன் மூலம் வெளியேறும் கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதற்கான திட்டங்கள் இல்லாமல் இவ்வளவு கழிப்பிடங்களை கட்டினால், இன்னும் பல மரணங்கள் தான் நிகழும். துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்கும் இந்த திட்டத்தில் கழிப்பிடங்கள் கட்டுவது ஒரு பெரிய வியாபாரமே என்று தோழர் பெசவாடா குறிப்பிட்டார். தில்லி குடிசைப் பகுதிகளில் 1300 கழிப்பிடங்களை அரசு கட்டுகிறது என்றும் அவை அனைத்தும் கட்டணக் கழிப்பிடங்கள் என்றும் 5 பேர் உள்ள ஒரு குடும்பம் தினமும் 10 ரூபாய் செலவழித்து கழிப்பிடங்களை உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பசியெடுப்பவர்களுக்கு இந்நாட்டில் உணவு கொடுக்க தவறிய நாம் தற்போது ஏழைகள் சிறுநீர், மலம் கழிப்பதற்கு கூட அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் சாடினார்.

துப்புரவுத் தொழிலாளர் இயக்க உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு கோரி இயக்கம் மனு அளிக்கும் போது, மாவட்ட நிர்வாகம் அதற்கான பட்ஜெட் ஒதுக்கிடப்படவில்லை என்று கூறுவதாக தோழர் பெசவாடா, 2014ல் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்த உடனேயே அதற்காக 2 லட்ச கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டதையும் அதற்காக செஸ் வரி விதிக்கப்பட்டதையும் ஒப்பிட்டார். கழிப்பிடங்கள் கட்டுவதற்கு பணம் திரட்ட முடிந்த அரசுக்கு ஏன் தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு பணம் ஒதுக்க முடியவில்லை என்று அவர் கோரினார். ’30 ரூபாய்க்கு இன்னொருவர் மலத்தை அள்ளுவதற்கு 1.6 லட்ச பெண்களை நாம் ஈடுபடுத்துகிறோம் என்றால் நம்முடைய உணர்வுகள் எங்கே போய் விட்டன?’ என்று அவர் கோரினார். 2003ல் இருந்து 2014 வரை 3 தலைமை நீதிபதிகளுடனும் 26 உச்ச மன்ற நீதிபதிகளுடனும் இருந்த உறவில் தான் நீதித்துறையில் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், மக்களுடைய மொழிகளை நீதிபதிகள் அறிய முற்படுவதில்லை என்றும், நீதிபதிகள் மொழிகளை தனக்கு புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலாளித்துவ கட்டமைப்பிற்கு வேலை செய்யும் அரசின் போக்கை எடுத்துரைத்த தோழர் பெசவாடா தனியார் முதலாளிகளுக்கு அரசு வங்ககளின் மூலம் கொடுத்த 1.14 லட்ச கோடி ரூபாய் கடன்களை திரும்ப மீட்க முற்படாததை குறிப்பிட்டார். அதே சமயம் தனது இயக்க உறுப்பினர்கள் மறுவாழ்விற்காக ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி அவர்களால் 3 மாதங்கள் திரும்ப தர முடியவில்லை என்றதும் குண்டர்களை அனுப்பி ரிக்ஷாக்களை பறிமுதல் செய்யும் போக்கை அவர் எடுத்துரைத்தார்.

சமூகக் கட்டமைப்புகளும் மனப்பான்மைகளும்
தனது வாழ்வின் அனுபவங்கள் மூலம் சாதியம் எவ்வாறு நீடிக்கின்றது எனத் தோழர் பெசவாடா வில்சன் விவரித்தார். சிறுவராக உள்ளபோது தன்னை மற்ற சிறுவர்கள் பல விதங்களில் கேலி செய்துள்ளனர் என்றும் குறிப்பாக தனது பள்ளி எவ்வாறு சின்னதாக உள்ளது, தகரங்களால் அமைக்கபட்டுள்ளது, பள்ளியில் மணி இல்லை என்று அவர்கள் கேலி செய்வார்கள் என்றும் அதற்கு தான் தனது பள்ளியில் பெரிய மரம் உள்ளது என்றும், தனது பள்ளிக்கு மணி தேவை இல்லை ஏனென்றால் தகரத்தில் ஒரு கல் எடுத்து அடித்தால் பள்ளியே ஒரு மணி தான் என்று தான் வாதமிட்டதாகவும் அவர் கூறினார். அவர்கள் உனது பள்ளியில் நாற்காலி மேஜை இல்லை என்ற போது தான் எங்கு வேணும் என்றாலும் சாயலாம், தூங்கலாம் என்று எதிர்வினையாற்றியதாகவும், ஆனால் அவர்கள் தன்னை தோட்டி(பெசவாடாவின் சாதிப் பெயர்) என்று அழைத்தபோது தான் எதுவும் கூற முடியவில்லை என்று கூறினார். சாதியின் கொடூரத்தில் இருந்து தன்னை காக்க விரும்பிய தாய், தனது வீட்டின் அருகே உள்ள தொட்டியைக் காட்டி அதனால் தான் தன்னை அவர்கள் கூறுவதாக அவர் நினைவு கூர்ந்தார். சாதியத் தொழிலான மனித கழிவுகளை அகற்றுவதை விட்டு தான் முன்னேற வேண்டும் என்று தன் தாய் அரும்பாடு பட்டதாக அவர் கூறினார்.

ஆனால் அண்மையில் தில்லியின் ரேஸ் கோர்சில் ஒரு சிநேகிதரை சந்தித்து விவாதம் நடத்தி தான் கிளம்பிய பின்னர், கூட்டத்தில் இருந்த ஒருவர் இவர் யார் என்று வினவியதாகவும் அதற்கு இன்னொருவர் இவர் தோட்டி(சாதி) என்றும் பாங்கி(உலர் கழிப்பிடங்களில் இருந்து மலம் அள்ளுபவர்) என்றும் பதில் அளித்துள்ளார். தான் இந்த வேலையில் ஈடுபடாவிட்டாலும் சாதியும் அதைச் சார்ந்த தொழிலும் பின் தொடரவதை தன்னை அவர் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், வணிக வளாகங்கள்(மால்) என்று வளர்ந்து விட்ட இந்தியாவில் சாதி இல்லை என்று கூறுபவர்கள் எவ்வாறு சாதியத்தை விடுவதில்லை என்று கூறினார். ஐஐடி மெட்ராஸ் உட்பட அனைத்து கல்லூரி வளாகங்களிலும் சாதியம் இருந்தாலும், அதைப்பற்றி பேசுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார். இது உயர் ஜாதியில் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ஜாதியிலும் பிரதிபலிக்கிறது என்று அவர் உதாரணமாக ஒரு தடவை, தனது குடும்பத்தினர் ஒருவரைப் பற்றி பேசுகையில் அவர் மிகவும் புத்திசாலித்தனமாக பேசுகிறார். அவர் பிராமணன் ஆக இருப்பார் என்ற கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.

இன்றும் கிராமக் கட்டமைப்பு சாதியக் கட்டமைப்பின் அடிப்படையில் தான் உள்ளது. எந்த கிராமத்திலும் இந்த கட்டமைப்பு உடைக்கப்படவில்லை. இன்றும் அக்கிரஹாரத்தில் பிராமணர்கள் என்று படிப்படியே கீழே தீண்டத்தகாதவர்கள் உள்ளனர். ஆற்றில் இருந்து முதலில் பிராமணருக்கு தான் நீர் எடுக்கும் உரிமை உள்ளது. பின்னர் மற்றவர்களுக்கு என்று ஒரு படிநிலை உள்ளது. கடைசியில் தான் அங்கு வாழும் தீண்டத்தகாதவர்களுக்கு நீர் எடுக்கும் உரிமை உள்ளது. அவர்கள் எடுத்த பின்னர் நீரைச் சுமந்து செல்லும் ஆற்றின் கரையில் உள்ள இன்னொரு கிராமத்தில் மீண்டும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு பகுத்திறிவு இல்லாமல் கட்டப்பட்ட இந்த படிநிலையை நாம் இன்னும் நம்புகிறோம் என்று தோழர் பெசவாடா கூறினார். மாடு பாதுகாப்பு அரசியலை குறித்து அவர் கூறுகையில், உயர்ஜாதியினர் மாடை அம்மா என்று அது உயிருடன் பால் தரும் வரை வணங்குகின்றனர். ஆனால் மாடு இறந்தவுடன், அதை புதைப்பதற்கு தாழ்த்தப்பட்டோர் காலில் விட்டுவிடுகின்றனர். இந்த படிநிலையில் அனைவருக்கும் சில பயன்கள் உள்ளதால் அவற்றை பொருத்துகொள்கின்றனர் என்றும், தலித்துகள் இந்த படிநிலைமைக்கு அப்பால் உள்ளதால் ஒரு வகையில் சுதந்திரம் பெற்றவர் இதுகுறித்து கேள்வி எழுப்பக் கூடியவர் என்று அவர் குறிப்பிட்டார்.

மதமும், சாதியும் ஒருவர் வாழ்வில் மூன்று முறை குறுக்கிடுகிறது என்று அவர் கூறினார்: பிறப்பில், மணம் முடிக்கும் போது, இறப்பில். தனது பிறப்பில் தனது சாதியோடு அடையாளப்படுத்துவரை ஒருவர் மாற்ற முடியாதது. மற்ற இரண்டு நிகழ்விலும் அதை மாற்ற முடிந்தாலும், முற்போக்குவாதி என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்பவர்கள் கூட அதை செய்வதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சாதியை பராமரிக்கும் கட்டமைப்புகளே ஆணாதிக்கத்தையும் பராமரிப்பதாக தோழர் பெசவாடா கூறினார். பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடும் என்று பெண்களுக்கு அசைவம் கொடுப்பதை நிறுத்திவிட்டதை அவர் கூட்டிக்காட்டினார். குர்காவ் பகுதியில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து காவல் ஆணையர் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில் பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வெளியில் நடமாட வேண்டாம் என்று ஆணையிட்டதை குறிப்பிட்டு ஏன் அவர் ஆண்களை 7 மணிக்கு மேல் வெளியே வராதே என்று ஆணை போடவில்லை என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தொகையில் 50சதப் பெண்கள் உள்ள போது ஏன் 33சதம் ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் அவர் கோரினார். ஒதுக்கீடு மேல் இன்று உள்ள தாக்குதலைக் குறிப்படுகையில், இன்று பொதுத் துறையில் 18சத வேலை வாய்ப்புகளே உள்ளன என்றும் மற்ற 80சத வேலை வாய்ப்புகள் மற்றவர்களுக்கு தானே போய் சேருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு, கட்டமைப்புகள், மனப்பான்மைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்

சாதியம், ஆணாதிக்கம் பற்றி பேசுவதற்கு அனைவரும் தயங்குகின்றனர் என்றும், நாட்டின் எந்த பாடத்திட்டங்களிலும் சாதி, ஆணாதிக்கத்தைப் பற்றி பாடங்கள் இல்லை என்று தோழர் பெசவாடா குறிப்பிட்டார். இந்நிலையில் நாங்கள் மற்றவர்களின் மலங்களை அள்ள மாட்டோம் என்று மாவட்ட ஆட்சியரின் முன் கூடையை வீசி எறிய முன்வந்துள்ள தலித் பெண்களின் வீரத்தையும், தைரியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மனிதர்களை தாழ்த்தப்பட்டவர்களாக்கும் சாதியம், ஆணாதிக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பவதற்கு இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார். இளைஞர்களிடம் தான் மாற்றுவதற்கான சக்தி உள்ளது என்றும், சாதிய சுவர்களை உடைத்து, ஆணாதிக்கத்தை தூள்தூளாக நொறுக்க வேண்டும் என்று அவர் ஐஐடி மாணவர்களை கோரினார்.

This entry was posted in Featured, Manual Scavenging, News, Political Economy, Sanitation Workers, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.