மக்கள் கோரிக்கைகளுக்கான 10 லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்கியது – (மாலெ தீப்பொறி)

தமிழ்நாட்டின் நகர்ப்புற நாட்டுப்புற உழைக்கும் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி ஏஅய்சிசிடியுவும் அவிகிதொசவும் நடத்துகிற 10 லட்சம் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் பல்வேறு புள்ளிகளிலும் துவக்கப்பட்டு பெருந்திரள் தொழிலாளர்கள் பங்கேற்புடன் நடந்துவருகிறது.

சென்னை: சென்னையில் நன்கு திட்டமிட்ட அமைப்பாக்கப்பட்ட விதத்தில் கையெழுத்து இயக்கப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இககமாலெ, ஏஅய்சிசிடியு முன்னணி தோழர்கள் தொழிலாளர் தோழர்களுடன் அம்பத்தூரில் 81, 85, 86 வார்டுகளில், குடியிருப்புப் பகுதிகளில் குழுக்களாக சென்று கையெழுத்துப் படிவங்களில் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியில் கையெழுத்துகள் பெற்று வருகின்றனர்.

செப்டம்பர் 24 அன்று அம்பத்தூர் மற்றும் சென்னை நகர் மய்யத்தில் 300 தொழிலாளர்கள் 21 குழுக்களில் 21 புள்ளிகளில் கையெழுத்துக்கள் பெற்றனர்.

கையெழுத்து இயக்கப் படிவத்துடன், அட்டைகள், கொடிகள், பேட்ஜ், கையெழுத்து இயக்க செய்தியுடன் உடலில் கட்டிக் கொள்ளும் அட்டை அணிந்து கொண்டும் உழைக்கும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று கோரிக்கைகளை விளக்கி கையெழுத்துக்கள் பெற்றனர். செப்டம்பர் 24 அன்று மட்டும் ஓஎல்ஜி ஆலையின் 110 தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். அன்று மட்டும் 300 தொழிலாளர்கள், தோழர்கள் பழனிவேல், பாலகிருஷ்ணன், மோகன், புகழ்வேந்தன், பாலசுப்பிரமணியன், முனுசாமி ஆகியோர் தலைமையில் குழுக்களாக சென்று கையெழுத்துக்கள் பெற்றனர். முன்னதாக 75 உண்டியல்கள், 75 கையெழுத்து பெறுவதற்கான அட்டைகள், 1,000 பேட்ஜ்கள், 20,000 துண்டுப் பிரசுரங்கள், 35 ஏப்ரான்கள் என ஏஅய்சிசிடியு அலுவலகத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. இந்த இயக்கத்தில் இன்னோவேட்டர், ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ், மெர்குரி பிட்டிங்ஸ் உட்பட பல ஆலைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகரத்திற்குள் அகர்வால் பவன், காஞ்சி காமகோடி மருத்துவமனை உள்ளிட்ட தொழிலாளர்கள் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 8,000 கையெழுத்துக்களும் ரூ.13,000 நிதியும் பெறப்பட்டுள்ளது. அகில இந்திய மாணவர் கழக இளம் தோழர்கள் கோகுல், சுகுமார், கோடீஸ்வரன் ஆகியோருடன் மாணவர்கள் குழு ஒன்றும் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் பங்கேற்பு இல்லாத இடங்களில் கையெழுத்து இயக்கத்தைத் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருபெரும்புதூரில் செப்டம்பர் 25 அன்று 100 தொழிலாளர் முன்னோடிகள் கலந்துகொண்ட தயாரிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கோவை: கோவையில் பிரிக்கால் பிளாண்ட் 3ல் செப்டம்பர் 21 அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஅய்சிசிடியு சங்க பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

செப்டம்பர் 22 அன்று பிளான்ட் 1ல் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். செப்டம்பர் 24 அன்று சாந்தி கியர்ஸ் ஆலை வாயிலில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. இதில் ஸ்டீர் கம்பெனி மற்றும் ப்ராஸ் ஏர் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். மூன்று கூட்டங்களிலும் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் குமாரசாமி, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 25 அன்று காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அம்பேத்கர்நகர், ஆர்.ஆர்.நகர் குடியிருப்புப் பகுதிகளில் மக்களிடம் சென்று கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இதில் பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்க பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதன், தலைவர் தோழர் நடராஜன், பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டார்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் செப்டம்பர் 26 அன்று இகக மாலெ ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் 10 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் பற்றி திட்டமிடப்பட்டது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தின் துவக்கமாக செப்டம்பர் 19 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் ராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவிகிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி ஆகியோர் உரையாற்றினர். மாவட்டத்தில் நெற்குன்றம், அழிஞ்சிவாக்கம் நல்லூர் ஆகிய பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

நாகை: நாகை மாவட்டம் திருமுல்லைவாசலில் செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. கூட்டத்தில் அவிகிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். செப்டம்பர் 27 அன்று தஞ்சையில் தஞ்சை மாவட்ட முன்னணிகள் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, இளங்கோவன் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கத்தை விரிவாக எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் 13 பேர் கொண்ட குழு சுமார் 1,000 கையெழுத்துக்களை பெற்றுள்ளது. கையெழுத்து இயக்கத்தை ஒட்டி நடந்த ஏஅய்சிசிடியு ஊழியர் கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் கலந்துகொண்டார்.

சேலம்: சேலத்தில் அம்மாபேட்டை, குப்பனூர், பருத்திக்காடு பகுதிகளில் 20 பேர் குழுவாக சென்று 1000 கையெழுத்துக்கள் பெற்று இயக்கத்தை தொடர்கின்ற நிலையில் மாவட்ட ஊழியர் கூட்டம் செப்டம்பர் 25 அன்று நடைபெற்றது. இதில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் தோழர் சந்திரமோகன், மாநிலச் செயலாளர் தோழர் வேல்முருகன், இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஏஅய்சிசிடியுவின் 15 கிளைகளுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டு தோழர் மணிவேல் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. கிளைகளில் தோழர்கள் ஜானகி, வெள்ளையம்மாள் ஆகியோர் கையெழுத்து இயக்கத்துக்கு தலைமை தாங்குகின்றனர். தங்கள் கிளைகளில் தலா 2,000 கையெழுத்துக்கள் பெற பொறுப்பேற்றுள்ளனர். தோழர் பரமேஸ்வரி தலித் குடியிருப்புப் பகுதிகளில் கையெழுத்தும் நிதி வசூலும் செய்து வருகிறார். திண்டுக்கல் நகரம், ஒய்எம்ஆர்பட்டி, சிதம்பரனார் தெரு, நல்லாம்பட்டி பிள்ளையார் பாளையம் பகுதிகளிலுள்ள அமைப்புச்சாரா பெண் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 15 பேர் கையெழுத்துப் படிவங்களுடன் மக்களிடம் கையெழுத்துப் பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிற பெண் தோழர்களிடம் ஒரு படிவம் தரப்பட்டு அதில் 40 கையெழுத்துக்கள் பெறும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் தோழர் பொன்னுதுரை தலைமையிலான குழு கையெழுத்துக்கள் பெற்று வருகிறது.

மதுரை: மதுரையில் அவிகிதொச மாவட்ட ஊழியர் கூட்டம் கூட்டப்பட்டு திட்டமிட்டதன் அடிப்படையில் கச்சைகட்டி சந்தையிலும், பூச்சம்பட்டி நூறுநாள் வேலை நடக்கும் இடத்திலும் 3,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும். உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.20,000 சம்பளம் வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாள் கூலி ரூ.500, ஆண்டில் 300 நாட்கள் வேலை, குடும்பத்தில் இரண்டு பேருக்கு வேலை வேண்டும். திட்டம் பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும்.

வீடில்லா மக்களுக்கு வீட்டுமனை உரிமை, வீட்டுவசதி உரிமை சட்டபூர்வமானதாக்கப்பட வேண்டும். கோயில், மடம், அறக்கட்டளை, அரசு நிலங்களில் குடியிருக்கும் வறியவர்களுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டு பட்டா வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியமும் பணி நிரந்தரமும் வேண்டும். நிலையாணைகள் திருத்தச் சட்டம் 2008 மூலம், பயிற்சியாளர்கள், தற்காலிக, தற்செயல் மற்றும் பிற நிரந்தரமற்ற தொழிலாளர்கள், நிரந்தரமாக்கப்படவும், நிரந்தரத் தொழிலாளர்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் 5% தாண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட சட்டத் திருத்தம் வேண்டும்.

முதலீட்டு வருகை, முதலீட்டாளர்களுக்குத் தரப்படும் சலுகைகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் மாதம் ரூ.7,500 வேண்டும். வாரிய நலப்பயன்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் கடைகள், சாராய ஆலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்.

மனித கழிவகற்றுதல் எந்திரமயமாக்கப்பட வேண்டும்.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியாரிடமும் உழைக்கும் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அனைத்தும் தழுவிய நிலச்சீர்த்திருத்தம், விவசாய உள்கட்டுமான மேம்பாடு, கட்டுப்படியாகும் விவசாயம், விளைநிலங்கள் பாதுகாப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி உள்ளிட்ட நீர் உரிமை, நீர்ப்பாசன உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

மீனவர்களின் மீன்பிடி உரிமைகள், வாழ்வுரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். கல்வி, மருத்துவம் முழுவதும் அரசின் பொறுப்பாக வேண்டும். வேலையில்லா காலப் படி மாதம் ரூ.7,500 என உயர்த்தப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்பட வலியுறுத்த வேண்டும்.

சாதியாதிக்கக் கொலைகள், குற்றங்களைத் தடுக்க, தண்டிக்க, கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகளைக் களைய, அனைத்து சாதியக் கொடுமைகளுக்கும் முடிவு கட்ட, சாதி சமத்துவம் நிலைநாட்ட, பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தலித் மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் மீட்டுத் தரப்பட வேண்டும். பழங்குடியினர் நிலஉரிமை, வனஉரிமை, வாழ்வுரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஊழலை தடுக்க, தண்டிக்க திறன்வாய்ந்த லோக்பால் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும்.

இயற்கைவளக் கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும். கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற ஆபத்தான மக்கள் விரோதத் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்.

அவதூறு, தேசத் துரோக சட்டப் பிரிவுகள் நீக்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

பெண் தொழிலாளர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் நிலைமைகளை கண்டறிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, குழுவின் பரிந்துரைகள் 6 மாதங்களில் அமலாக்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறை தடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

This entry was posted in Labour Laws, News, தமிழ் and tagged , . Bookmark the permalink.