வீட்டு வேலை செய்பவர்கள் தங்களது கொள்கை திட்டங்களுக்கான சாசனம் உருவாக்குவதற்காக பயிற்சிப் பட்டறையை நடத்தினர்

(Tamil translation of the post on 2nd November 2016)

21 அக்டோபர் (வெள்ளிகிழமை) அன்று எழும்பூரில் உள்ள ICSA வில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த எழுபதுக்கும் மேற்பட்ட வீட்டு வேலை செய்பவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேசிய அளவிலான கொள்கையை மேம்படுத்தும் திட்டத்துக்கான சாசனம் உருவாக்கவும், கலந்துரையாடவும் இப்பட்டறை உதவியது.  இக்கூட்டம், தொழிலாளர் மேலாண்மை மையம் (CWM) எனும் ஆராய்ச்சி மற்றும் ஆதரவாளர் குழுவால் ஆக்ஷன் எஐட் இந்தியாவுடன் சேர்ந்து நடத்தப்பட்டது. இப்பயிற்சி பட்டறையில் ‘அருணோதயா’வில் இருந்து ரெஜினா பீட்டர் அவர்களும் NDWM-ல் இருந்து அந்தோணியம்மாளும் தலைமை தாங்கினர்.

 தோழி சுமதி

தோழி சுமதி

பயிற்சி பட்டறையை துவங்கி வைத்த  CWM-ன் இயக்குனரான தோழி தித்தி பட்டாச்சார்யா அவர்கள், ‘பெண்களால் கோரிக்கைகளையோ திட்டங்களையோ தெளிவாக முன்னிறுத்தி வைக்க முடியாது என்றும் கிசுகிசுக்கவே முடியும் என்றும் பொதுவான நம்பிக்கை உள்ளது. இன்று, பெண்கள் அனைவரும் வீட்டு வேலை செய்பவர்களின் தொழில் சூழ்நிலைகளை மேம்படுத்த தெளிவாக புலப்படுத்தும் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்காக ஒன்றுதிரண்டு இந்த போலியான நம்பிக்கையை உடைத்தனர்’ என்று கூறினார். தேசிய கொள்கை திட்டங்களை உருவாக்கும் ஆண் ஆதிக்கம் கொண்ட கொள்கை வட்டாரங்கள், தொழிலாளர்களிடமிருந்து கற்றுகொள்வதை காட்டிலும் ஒரு வெளிப்புற பார்வையை மட்டுமே விதித்து தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறுகின்றனர். தொழிலாளர்களின் அனுபவங்கள் அறிந்து உருவாகும் ஒரு சாசனத்தை தோற்றுவிப்பதற்கான முயற்சியாகும்.

வீட்டு வேலை செய்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

வீட்டு வேலை செய்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

பெண் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழி. சுமதி, வீட்டு வேலை செய்பவர்களுடைய ஆய்வுகள் மற்றும் ஒப்பீடுகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய பேட்டிகள் மற்றும் சில மாதங்களாக நடத்திய வாழ்வாதார நிலைமைகளை பற்றிய பகிர்வுகள் பற்றிய தகவல்கள் அளித்தார். வீட்டு வேலை தொழிலாளிகளின் முக்கிய பிரச்சனைகளை பற்றிய முக்கியத்துவத்தை அறிய இதே போன்ற ஆலோசனைகள் கிளை மற்றும் பகுதி அளவில் நடத்தப்பட்டதாக கூறினார்.

பகிர்வு அமர்வின் போது, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வீட்டு வேலை தொழிலாளிகள், குழந்தைகளுக்கு கல்வி, காலனிகளுக்கு இடமாற்றம் போன்றவற்றைப் பற்றி குறிப்பிடாமல், ஒரு நாள் வார விடுமுறை, ESI போன்ற சுய மருத்துவ காப்பீடு, குடியிருப்பு பகுதிகளில் வீட்டு வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். பெருங்குடியில் வசிக்கும் லதா கூறியது “நான் முதலில் சேர்ந்தபோது, வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் காலப்போக்கில், பல பிரச்சனைகள் இருந்ததாக உணர்ந்தேன். என் குழந்தையை சரியான முறையில் கவனிக்க முடியவில்லை, ஊதியம் போதுமானதாக இல்லை, விடுமுறை எடுக்க முடியவில்லை. நாங்கள் யூனியன் என்று ஒன்று சேர்ந்த பொது தான் பிரச்சனைகளை சுட்டிக்காட்ட தொடங்கினேன். இவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படாமல் போகலாம், எனினும் நாம் இக்கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். நமக்காக நாம் பேசாவிட்டால் யார் பேசுவார்?”என்று தன் கருத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

சோழன் நகரிலிருந்து வரும் மாலதி, வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் களங்கம் பற்றியும் அதனை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் பற்றியும் கூறினார். “எங்கள் முதலாளிகள் எங்களை ஏளனமாக பார்ப்பதுண்டு, நாங்கள் செய்யும் வேலையினால் எங்களை எப்படி அவர்கள் இழிவுபடுத்த முடியும்? சொந்த வீட்டையே  பார்த்துக்கொள்ள முடியாத,  அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். நாங்களோ இரண்டு வீடுகளை கவனித்துக்கொள்கிறோம்.” முன்பண ஊதிய வழக்கத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், அது தங்களை தரக்குறைவாக காட்டும் என்பதால் வேலை செய்யும் வீடுகளிலிருந்து முன்பண ஊதியமாக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இதனை ஒப்புக்கொள்ளாத சிலர் “மற்றவர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து கடன் வாங்கும் பொழுது நாங்கள் மட்டும் ஏன் வாங்க கூடாது?” என்று கேள்வியெழுப்பினர்.

மேலும் மாலதி ESI காப்பீடு பற்றின கோரிக்கையை தொழிலாளர்கள் சார்பாக முன்வைத்தார்.  ஊதியத்தை வரையறுப்பதன் மூலம் குறைந்தபட்ச ஊதியத்திற்கு கீழாக வேலை செய்யும் நிலை தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.  பண்டிகை நாட்களில் தொழிலாளர்கள் வேலை செய்வதால் அதற்கு ஈடு செய்யும் வகையில் அடுத்த நாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  “நாங்கள் பண்டிகை நாட்களில் அதிகமாக வேலை செய்கின்றோம், எனவே வீட்டில் எந்தவித கொண்டாட்டமும் இல்லை. நாங்களும் எங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் பண்டிகைகளை கொண்டாட விடுப்பு வழங்கப்பட வேண்டும்” என்பது அவரது வாதம்.

அண்ணா நகரை சேர்ந்த மல்லிகா என்பவர், வீட்டு சமையல் வேலை செய்து வருகின்றார். இவர் தனக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியம் மிக குறைவானது என்றும், அதையும் பேரம் பேசியே வாங்கும் நிலைமையுள்ளது என்றும் வருத்ததுடன் தெரிவித்தார்.  இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக தினம் வேலை செய்தும் மாதம் வெறும் 2000 முதல் 3000 ரூபாய் வரையே கொடுக்கப்படுவதாகவும் அதனை வைத்து அன்றாட வாழ்வாதாரத்தை நடத்துவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் அவர், ஒரு மணி நேர வேலைக்கு குறைந்தது 50 ரூபாயாவது கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அந்தந்த பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் பகிர்வுக்கு பின்னர், ஊதியம், விடுப்பு மற்றும் போனஸ்  ஆகிய மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றின கலந்தாய்வு நடைப்பெற்றது.  தங்களது உழைப்பிற்கு மிகக்குறைவான ஊதியமே தரப்படுகின்றது என்று தொழிலாளர்கள் கருதியதையடுத்து, ஒருமணி நேர வேலைக்கு 85ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டது (மணி நேர அடிப்படையில் மாதம் ரூபாய் 18000 ).  ஆனால் , எந்த ஒரு முதலாளியும் ஒருமணி  நேர வேலைக்கு  50 ரூபாய் கூட கொடுக்க முன்வர மாட்டார்கள் என்று தொழிலாளர்கள் திட்டவட்டமாக கூறினர். சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய தோழர்.தீதி, அக்காலக்கட்டத்தின் நடைமுறைக்கு அப்பாற்பட்ட போராட்டமாக சிகாகோ போராட்டம் திகழ்ந்தாலும் எதிர்கால சந்ததியர் பயன்படும் வகையில் அப்போராட்டம் வெற்றியை கண்டது என்று குறிப்பிட்டார். அதற்கு நம் தொழிலாளர்கள்,  “ஊதிய உயர்வை முதலில் சட்டமாக்குவதற்கு நம் அரசிடம் கோரிக்கை விடுத்து சட்டமாக்கினால், பின் முதலாளிகளை எதிர்த்து போராடுவதற்கு அச்சட்டம் நமக்கு அதிகாரமளிக்கும்” என்று கூறினர்.  அதேபோல், வார விடுப்பு பற்றி வாதிடுகையில், திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஞாயிற்று கிழமை விடுப்பு சாத்தியமில்லாதது என்று சுட்டிக்காட்டினர். ஏனெனில் ஞாயிற்று கிழமை தான்  வீட்டு வேலை செய்பவர்களுக்கு பரபரப்பான வேலை பளுவுள்ள நாளாகும், ஆகவே அதற்கு பதிலாக, வாரத்தின் பிற நாட்களில் ஒரு நாளை விடுப்பு நாளாக ஏற்க ஆமோதித்தனர். மேலும் அவர்கள் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், வருடத்திற்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பிற்கான (12 நாட்கள் சாதாரண விடுப்பு மற்றும் 18 நாட்கள் மருத்துவ விடுப்பு)   கோரிக்கைக்கு சம்மதித்தனர்.  போனஸ் பற்றி விவாதிக்கும் பொழுது, ஒரு மாத ஊதியத்திற்கு குறைவாக போனஸ் தொகை இருக்கக்கூடாது என்று அனைவரும் ஒருமித்த கருத்துடன் தெரிவித்தனர்.

இவர்களது இந்த கோரிக்கைகள் அதிகாரப்பத்திரமாக தயாரித்த பின்னர், சம்மந்தப்பட்ட  அமைச்சகங்களுக்கு  சுற்றறிக்கையாக அனுப்பப்படும்.  இவை வீட்டு வேலை செய்பவர்களின்  தேசிய அளவிளான கொள்கைகளை சீர்திருத்தி மேம்படுத்தவும்,  அவர்களின் வேலை நிலைகளை சட்டமாக்க மாநில அரசிற்கு அழுத்தம் கொடுக்கவும் உதவும்.

This entry was posted in Domestic Workers, Labour Laws, News, Service Sector, Working Class Vision, தமிழ் and tagged , , . Bookmark the permalink.