க்யூபா நாட்டின் புரட்சிகரத் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ மறைவிற்கு வீரவணக்கம்

‘தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் மார்க்சியம் அதாவது விஞ்ஞான சோசலியமே!’
– பிடெல் காஸ்ட்ரோ, டிசம்பர் 1961

Photo Source: Al Jazeera

Photo Source: Al Jazeera

க்யூபா நாட்டில் பத்திஸ்தாவின் சர்வாதிகாரத் தலைமையை புரட்சிகரப் படையைக் கொண்டு வீழ்த்தி அதிகாரத்தை வென்றெடுத்து, 50 வருடங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்ட க்யூபா நாட்டின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் மரணமடைந்தார். 10 அமெரிக்க அதிபர்களையும், சோவியத் வீழ்ச்சியை கண்டபோதிலும் க்யூபாவின் சோசலிசப் பாதையில் இருந்து அவர் மாறவில்லை.

32 வயதான பிடெல் காஸ்ட்ரோ 1959ல் லத்தீன் அமெரிக்காவிலேயே இளம் தலைவரானார். வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக எண்ணெய் வள நிறுவனங்களிடம் இருந்த மக்கள் வளங்களை அவர் பறித்தார். மேலும் க்யூபா நாட்டில் விவசாய சீர்திருத்தங்களை அவர் உடனடியாக அமுல்படுத்தினார். அதுவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக செயல்பட்டு வந்து இருந்த க்யூபா அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தது. 1961ல் அமெரிக்காவின் ஆதரவுடன் நடைபெற்ற நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய படையினரை காஸ்ட்ரோ அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டது. சிஐஏவின் தூண்டுதல்களில் தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இருந்து காஸ்ட்ரோ உயிர் பிழைத்துள்ளார்.

1962 முதல் அமெரிக்கா க்யூபா நாட்டின் மேல் பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. க்யூபாவின் பொருளாதாரத்தை நசுக்கி அங்கு மேற்கொள்ளப்பட்ட சோசலிசப் பாதையை வீழ்த்துவதே இத்தடையின் நோக்கமாகும். 1992 முதல் ஐநா சபை பொருளாதாரத் தடைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியும், இந்தப் பொருளாதாரத் தடை கடைபிடிக்கப்படுகிறது. க்யூபாவிற்கு முதலில் சோவியத் பொருளாதார உதவிகளை செய்து வந்தது. 1991ல் சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர், 2005 வரை க்யூபா தன்னந்தனியே பொருளாதாரத் தடையை எதிர்கொண்டு வந்தது. 2005ல் சாவேஸ் தலைமையிலான வெனிசுவலா அரசுக்கும் க்யூபாவிற்கும் இடையே பொருளாதார உறவுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு பக்கம் உலக முதலீடு ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டு இன்னாரு பக்கம் தேசியவாதத்தைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச அமைப்புகள் மத்தியில், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் க்யூபாவின் தேசியவாதம் பிடெல்காஸ்ட்ரோ தொழிலாளர் வர்க்கத்திற்கு விட்டுச் சென்ற பாடமாகும். உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி சமத்துவ சோசலிச உலகத்தை நிலைநாட்டும் தொழிலாளர் வர்க்க போராட்டத்திற்கு பாடுபடுவதே நாம் இந்த புரட்சிகரத் தலைவரும் செலுத்தும் அஞ்சலி ஆகும்.

This entry was posted in News, தமிழ் and tagged , . Bookmark the permalink.