தோழர் கணேசன் நம்மை விட்டுப் பிரிந்தார் – CPI ML(L)

இகக மாலெ விடுதலையின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணேசன் (பி.வி.சீனிவாசன்) டிசம்பர் 6 அதிகாலை 2.30 மணிக்கு டில்லியில் மருத்துவமனையில் காலமானார். சில வாரங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 77.
c4b7c490-db31-4c18-93dd-2f855cb26d5b
தோழர் பி.வி.சீனிவாசன் கேரளாவில் பிறந்தார். வறுமை காரணமாக அவரது பெற்றோர்கள் சென்னைக்கு இடம் பெயர்ந்தார்கள். அய்ந்தாம் வகுப்பு வரை மட்டுமே அவர் படித்தார். சென்னையில் ஓட்டல் தொழிலாளியாக இருந்த அவர் சென்னையில் முதல் ஓட்டல் தொழிலாளர் சங்கத்தைத் துவக்கினார். தொழிலாளர் அமைப்பாளராக தொழிலாளர் நீதிமன்றத்தில் தொழிலாளர் வழக்குகளில் வாதாடினார். கம்யூனிச இயக்கத்தில் இணைந்து இககமா உறுப்பினரானார். தோழர் அப்புவுடன் இணைந்து தீக்கதிர் பத்திரிகை துவக்குவதில் முக்கிய பங்காற்றினார். தேசிய இனப் பிரச்சனை, இந்தி எதிர்ப்பு இயக்கம் ஆகிய பிரச்சனைகளில்  இககமாவுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகள் காரணமாக, அவரும் தோழர் அப்புவும் இகக மாவில் இருந்து விலகி இககமாலெயை நிறுவினர்.
நக்சல்பாரி எழுச்சியால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர மாணவர் இயக்கத்தில் இணைந்த அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் மாணவர் கணேசன் கொல்லப்பட்டபோது, அவரது நினைவாக தோழர் பிவிஎஸ் தனது பெயரை கணேசன் என்று மாற்றிக் கொண்டார். அப்போது முதல் கணேசன் என்றே அவர் அறியப்பட்டார். நெருக்கடிநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல போர்க்குணமிக்க தொழிலாளர் வர்க்க போராட்டங்களை வழிநடத்தியுள்ளார்.
1980ல் தோழர் கணேசன் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரானார். 1982 – 1988 காலகட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
தொழிலாளர் வர்க்க புரட்சியாளராக, அறிவுஜீவியாக தோழர் கணேசன் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது வாழ்க்கை முழுவதும், இறுதியில் நோய்வாய்ப்படும்வரை, இந்தியாவிலும், உலகம் முழுவதும் நடக்கிற இடதுசாரி இயக்கங்களின், தொழிலாளர் வர்க்க இயக்கங்களின், மக்கள் இயக்கங்களின் முன்னேற்றங்கள் பற்றி ஆர்வத்துடன் கவனிப்பவராக இருந்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிற கட்சிகள், பிற அமைப்புகளிலும் உள்ள அறிவாளிப் பிரிவினருடனும் செயல்வீரர்களுடனும் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருந்தார். இகக மாலெ மய்ய அலுவலகத்தில் உள்ள விருந்தினர், தோழர்கள் அனைவரிடமும் அவர் காட்டி பரிவும் விருந்தோம்பலும் அவரை அனைவருக்கும் நெருக்கமானவராக ஆக்கியது.
தோழர் கணேசனுக்கு செவ்வணக்கம்.
This entry was posted in News and tagged , , . Bookmark the permalink.