வங்கித் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

வங்கிகளை தனியார்மயமாக்குதலை எதிர்த்தும், வங்கிப் பணிகளை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், பணமதிப்பு நீக்கக் கொள்கையை செயல்படுத்திய போது வங்கித் தொழிலாளர்கள் அதிகப்படி வேலை செய்ததற்கான நிவாரணத்தைக் கோரி வங்கி சங்கங்களின் ஐக்கிய முன்னணி(United Forum of Bank Unions) சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்பட்டு வந்த வேலை நிறுத்தம் பிப்ரவரி 28 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது.AIBEA, AIBOC, NCBE, BEFI, AIBOA, INBEF, INBOC, NOBW, NOBO ஆகிய வங்கி ஊழியர் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் பொது வங்கிகளில் இருந்து பலத் தொழிலாளர்கள் வந்து பெருவாரியாக கலந்து கொண்டனர். பிஎம்எஸ் உடன் இணைந்த NOBW, NOBO ஆர்.எஸ்.எஸ் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

CP Krishnan addressing Workers

வங்கித் துறையில் அரசின் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்கள் சீர்திருத்தங்கள், பணி நிலைமைகள் குறித்தும் நடத்தப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டப் போராட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முதல் முறையாக வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட இளம் தொழிலாளர்கள் நிறைய பேர் கோஷங்கள் எழுப்பி விவாதங்களில் கலந்து கொண்டனர். பணமதிப்பு நீக்கக் கொள்கை நவம்பரில் அறிவிக்கப்பட்ட பின் வங்கி தொழிலாளர்கள் நெடும் நேரம் பணி புரிய நேர்ந்தது என்றும் அதற்கு மிகை நேர ஊதியம் கொடுக்கவில்லை என்றும் அதற்காக தானும் இன்னொருத் தொழிலாளரும் கலந்து கொண்டதாக நான்கு வருட அனுபவம் கொண்ட ஒரு இளம் பெண் தொழிலாளர் கூறினார். அரசு போதிய பணத்தை ஏற்பாடு செய்யாததால் வங்கித் தொழிலாளர்களின் மக்களின் கோபத்தை சந்திக்க வேண்டியது என்று அவர் கூறினார். இது வரை எந்த வேலை நிறுத்தத்திலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் இந்த முறை இதனாலேயே தான் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

வங்கிகளில் உள்ள வாராக் கடன்களை குறித்தும் கடன்களை செலுத்தாத கார்பரேட் நிறுவனங்ககளை குறித்தும் பேசிய BEFI தொழிற்சங்கத்தை சார்ந்த தோழர் சி.பி.கிருஷ்ணன் ஒரு சிறிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் இன்று மாணவர்களும் விவசாயிகளும் தற்கொலை செய்கின்றனர், ஆனால் பெரிய நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடன்களாக வாங்கி அவற்றை திரும்பத் தரமால் சட்டத்தை ஏய்க்கின்றனர் என்று குறிப்பிட்டார். பொதுத்துறை வங்கிகளுக்கு மட்டும் அரசு பல நிபந்தனைகளை விதித்து வருகிறது என்றும் ஆனால் தனியார் வங்கிகள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் அரசு இதை நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.

பண மதிப்பு நீக்கக் கொள்கையை செயல்படுத்தி பல மாதங்கள் ஆகியும் இது வரை எவ்வளவு பணம் திரும்பியுள்ளது என்பது குறித்து எந்த கணக்கும் தரப்படவில்லை, எத்தனை வரி ஏய்ப்பாளர்கள்  பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் எந்த தகவலும் மக்களுக்குத் தரப்படவில்லை. இது குறித்து தகவல்கள் கோரினால் இமெயில் அறிக்கைகள் அனுப்பியுள்ளதாக அரசு கூறுகின்றது. இது எப்படி சரியாகும்? பண மதிப்பு கொள்கையினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் அனைவருக்கும் இதன் தாக்கம் குறித்து அரசு பதில் தர வேண்டும், இதனால் ஏற்பட்ட வணிக இழப்பிற்கு இழப்பீடு தர வேண்டும், இதற்காக வேலை செய்த தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் தர வேண்டும் என்று சி.பி.கிருஷ்ணன் கோரினார்.

கடின நேரத்தில் முறையாக உழைத்த வங்கித் தொழிலாளர்களை பாராட்டிய AIBEA தோழர் வெங்கடாசலம் இதை அரசு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என்று கூறினார். நிரந்தரத் தொழிலாளர்களை அதிகிரித்து வங்கித் துறையில் அதிகரித்து வரும் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்ஸ் முறைகளை கைவிட அவர் கூறினார். இது குறித்து பேசிய 7 வருட அனுபவமிக்க பெண் தொழிலாளர், இன்று பல பணிகள் தனியார் ஏஜன்டுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றன, பல மூத்தத் தொழிலாளர்கள் ஓய்வு பெரும் போது அவர்களுக்கு பதில் புதிய நியமனங்களை வங்கிகள் செய்வதில்லை என்று குறிப்பிட்டார். தனியார் ஏஜன்டுகளால் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் எந்த பணிப் பாதுகாப்பும் தொழிலாளர் பயன்களும் கொடுக்கப்படுவதில்லை. இது எங்களுடைய பணி நிலைமைகளையும் பாதிக்கிறது என்று அந்த பெண் தொழிலாளர் கூறினார்.

பணமதிப்பு நீக்கக் கொள்கையை தான் ஆதரிப்பதாகக் கூறிய ஒரு இளம் ஆண் தொழிலாளர் இதனால் என்ன ஆதாயம் அடைந்துள்ளோம், இது குறித்து எந்தத் தகவல்களையும் ரிசர்வ் வங்கி தராதது குறித்து ஆதங்கம் அடைந்தார். கணிக்கப்பட்ட பணத்தை விட இன்னும் அதிகப் பணம் அரசுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் ஆனால் எந்த தகவல்களும் இல்லாமல் குறிப்பாக எவ்வளவு பணம் வந்துள்ளது? எவ்வளவு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது? எத்தனை கணக்குகளை அரசு கண்காணிக்கிறது என்ன தகவல்கள் இல்லாமல் இதன் தாக்கத்தை அறிவது கடினம் என்று அவர் கூறினார். பணி மதிப்பு நீக்கத்தின் போது அரசு போதுமான அளவு கரன்சிகளை தராததால் தானும் மற்ற வங்கித் தொழிலாளர்களும் நிறைய இன்னல்களை சந்தித்ததாக அவர் கூறினார். அதே போல் ஏடிஎம்களை புது நோட்டுகளுக்கு ஏற்ப மாற்ற போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என்றும் தொழிற்சங்கங்கள் எழுப்பிய மற்ற கோரிக்கைகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் அரசு தன் வாக்குறுதியை காப்பாற்றாததால் தான் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக அவர் கூறினார். பல பிரச்சனைகளை சந்தித்தும் மக்கள் அரசின் கொள்கையை ஆதரித்தனர் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் வளத்திற்காக சிரமத்தை தாங்கி கொள்ள இளைஞர்கள் தயாராக இருந்தனர் குறிப்பாக 18-35 வயதினர் எந்த பொறுமையை கடைபிடித்தனர் என்றும் சில முதிய வாடிக்கையாளர்கள் தங்கள் சிரமத்தை வெளிப்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கித்துறையை பாதுகாக்கவும், மக்களின் செல்வத்தை பாதுகாக்கவும் வங்கித் தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அரசு தனியாரமயத்தை கைவிடாவிட்டால், கார்ப்பரேட் வாராக் கடன்களை நிறுவனங்கள் சார்பில் தள்ளுபடி செய்தால், வங்கிப் பணிகளை ஒப்பந்தமுறைக்கு மாற்றினால் தங்கள் போராட்டம் தீவிரமடையும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர். வங்கி நடவடிக்கைகளை இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் முடக்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர். இது குறித்து பேசிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் அதிகரித்து வரும் தனியாரமயத்தினாலும், வங்கி நடவடிக்கைகள் கணிணிமயமாவதாலும் வேலை நிறுத்தத் தாக்கம் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் போராட்டத்தின் வடிவத்தையும் யுக்திகளையும் மீண்டும் யோசிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் பொருளாதாரத்தின் முக்கியத் துறை தொழிலாளர் வர்க்க கட்டுப்பாடில் இருந்து வெளியேறி விடும்.

பல்வேறு இளைஞர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வைத்த பணமதிப்பு நீக்கக் கொள்கை குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பிஎம்எஸ் உடன் இணைந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. கடந்த அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திலும் பிஎம்எஸ் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுக்கும் முதலாளிகளுக்கும் ஏதுவாக செயல்படும் இத்தகையான சங்கங்களை புறக்கணித்து அவர்களின் முதலாளித்துவத்திற்கு ஆதரவான நிலையை தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க இடது சாரி தொழிற்சங்கங்கள் முன் வர வேண்டும்.

This entry was posted in News, Public Sector workers, Strikes, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.