ஓலா, உபேர் நிறுவனங்களை எதிர்த்து சென்னை டாக்சி ஓட்டுனர்கள் போராட்டம்

கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நகரங்களில் டாக்சி ஓட்டுனர்கள் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். உத்தரவாதம் செய்யப்பட்ட ஊதியத்தை தராதது, ஓவர்டைம், பணி நிலைமைகள், நிர்வாகத்திடம் முறையிட முறையான அமைப்பின்மை குறித்து இத்தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஹைதரபாத், தில்லி, பங்களுரு ஆகிய நகரங்களில் ஆரம்பித்த போராட்ட அலை சென்னைக்கும் பரவியது. மார்ச் 6 மற்றும் 7 அன்று  CITU, AMOM, TDTUC, TADWA சென்னை ஆகிய தொழிற்சங்கங்களை சார்ந்த டாக்சி ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Cab drivers in front of Transport Secretary Office being addressed by union representatives

அனைத்து சென்னை கால்டாக்சி கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டம் மார்ச் 8 அன்று போக்குவரத்து துறை முற்றுகையுடன் முடிவுற்றது. சிஐடியுவின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மார்ச் 8 அன்று போக்குவரத்து செயலாளரை சந்தித்து ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகளை குறித்தும் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை அரசு ஓழுங்குபடுத்த கோரியும் மனு அளித்தனர். இது குறித்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து இதற்கான அரசாணையை வெளியிடுவதாக போக்குவரத்து செயலாளர் கூறியுள்ளதாக பிரதிநிதிகள் கூறினர்.

பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள்

மாதம் 80000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் கொடுத்த விளம்பர மயக்கத்தை நம்பி பல்வேறு தொழிலாளர்கள் டாக்சி ஓட்டுனர்களாக மாறி உள்ளனர். குறிப்பாக செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று டாக்சிகள் வாங்கி இத்தொழிலுக்கு மாறியதாக இவர்கள் கூறுகின்றனர். முன்னர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த ஒரு தொழிலாளர், ஓலா நிறுவனம் சென்னையில் தொடங்கிய போது அவர்களுடன் சேர்ந்து டாக்சி ஓட்ட ஆரம்பித்தார். 10 சவாரிகள் எடுத்தால் 6000 ரூபாய் உறுதி என்று அவர்கள் வாக்குறுதி கொடுத்ததாக அவர் கூறினார். ஆனால் இம்மாதிரியான வாக்குறுதிகள் தங்களுக்கு ஆசை காட்டவே என்றும் நடைமுறையில் 15000ரூ கூட சம்பாதிப்பது கடினமாகி விட்டது என்றும் அவர் கூறினார்.

Uber Ad to attract drivers states they can make 90000 a month – pc campaignindia.com

கார் ஓட்டுனர்கள் கடன் மூலம் கார் வாங்குவதற்கு இந்திய ஸ்டேட் வங்கியுடனும், முருகப்பா குழுமத்துடனும் சேர்ந்து ஓலா பிரகதி எனும் திட்டத்தை துவக்கியது. தில் முதலில் ஓட்டுனர்கள் ரூ35000 கொடுத்து சேர வேண்டும். அவர்களின் நாள் ஊதியத்தில் இருந்து ஊக்கத் தொகையை கார் கட்டணமாக பிடித்து கொள்ளும். இதன் மூலம் கார் வாங்கிய ஓட்டியத் தொழிலாளர், பிடித்தம் போக தனக்கு ஒரு நாளுக்கு 1000ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றும், இதில் முக்கிய செலவுகளான எரிபொருள் ஆகியவற்றை கணக்கிட்டால், எதுவுமே மிஞ்சவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இதனால் இத்திட்டத்தில் இருந்து விலகி வெளியில் கடன் வாங்கி கார் ஓட்டுவதாக அவர் கூறினார்.

ஆனால் பல்வேறு வகைகளில் சவாரிகளை குறைத்து ஊதியத்தை குறைப்பதாக ஓட்டுனர்கள் புகார் கூறுகின்றனர். இவை அனைத்தும் சாப்டவேர் வழியாக செயல் படுத்தப்படுவதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஓலா நடத்தி வரும் இன்னொரு நிறுவனம் வழியாக கார் குத்தகை எடுப்பவர்களுக்கு சவாரிகள் முன்னுரிமை அளிக்கப் படுவதாக சொந்தமாக கார் வைத்திருக்கும் ஓட்டுனர்கள் கூறுகின்றனர். குத்தகை காரை ஓட்டும் தொழிலாளர்களுக்கு 20-25 கிமீ சவாரிகள் கொடுக்கப்படுவதாகவும் தங்களுக்கு 10-15 கிமீ சவாரிகளே கொடுக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்கள் நிறைய சவாரிகள் செய்ய வேண்டியுள்ளது என்றும் ஒரு நாளைக்கு போதுமான அளவு ஊதியம் சம்பாதிக்க ஓவர்டைம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

சில நிறுவனங்கள் 50-100 கார்களை வாங்கி ஓட்டுனர்களை தினக்கூலிகளாக வைத்து ஓலாவிற்கு ஓட்டுவதாகவும், இந்நிறுவனங்களுக்கும் ஓலா முன்னுரிமை கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஊக்கத் தொகையை குறைப்பதற்காக தேவையான சவாரிகள் முடிக்கும் தருவாயில் இருக்கும் போது, அடுத்த சவாரிகளை நேரம் தாழ்த்தியே கொடுப்பார்கள் என்று அவர்கள் கூறினார்கள். கடைசி சவாரியை முடிப்பதற்காக இரவு முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதுண்டு, இதனால் தாங்கள் 16 மணி நேரம் வரை வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள். தங்கள் உழைப்பை உறுஞ்சி சந்தையை கைபிடித்த இந்த நிறுவனங்கள் தற்போது தங்களை கைவிட்டு விட்டதாக அவர்கள் கூறினர்.

ஊக்கத் தொகை மாற்றம் அதனால் ஊதியம் பாதிப்பு

ஓலாவைப் போல் உபேர் பாரபட்சமான கொள்கைகளை செயல்படுத்தாவிட்டாலும், இரு நிறுவனங்களின் கட்டணக் கொள்கை ஓட்டுனர்களுக்கு போதுமானதாக இல்லை. தற்போது இந்நிறுவனங்கள் கிமீக்கு 6 ரூபாய் கட்டணம் கொடுப்பதாக கூறுகின்றனர். இது ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கிமீக்கு 12ரூ விட மிகவும் குறைவானதாகும்.

மேலும் இந்த கட்டணத்தில் 20 சதத்தை கமிஷனாகவும், 6 சதத்தை வரியாகவும் நிறுவனம் கழித்து விடுகின்றது. அதாவது கிமீக்கு 4.80 ரூபாய் தான் கட்டணமாக ஓட்டுனர்களுக்கு தரப்படுகின்றது. இந்த வரியும் தங்கள் வருமான வரி கணக்கில் செலுத்தப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

சிஐடியுவின் தோழர் அன்பழகன் குறிப்பிடும் போது, ஓலா இந்திய நிறுவனமானாலும் அதனுடைய மூலதனம் அன்னிய முதலீடாகும், அதனால் இரு நிறுவனங்களும் தொழிலாளர் விரோதப் போக்கிற்காக எதிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.

சிறைச்சாலை போன்ற ஒலா அலுவலகம்

தங்களுடைய குறைகளை தீர்ப்பதற்கு நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்வது கடினம் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கஸ்டமர் கேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனைகளை கூறும் போது, கஸ்டமர் கேர் பிரதிநிதி சவாரி பங்கீடு கொள்கைகள் மேலிடத்தில் முடிவு செய்யப்பட்டு சாப்ட்வேரில் கோட் செய்யப்பட்டுள்ளதால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறுகின்றனர். கஸ்டமர் கேர் பிரதிநிதியும் தங்களைப் போல் ஒரு தொழிலாளர் என்றும் அவருக்கு மேலிடக் கொள்கைகள் குறித்து எதுவும் பகிரப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் அறிந்துள்ளனர்.

ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஓலா அலுவலகத்தை நாடி தங்களை குறைகளை தீர்க்க சென்றதாகவும், சிறைச்சாலைக்குள் செல்வதை விட இங்கு உள்ளே செல்வது கடினம் என்றும் ஓட்டுனர்கள் கூறினர். வெளியில் இருந்து உள்ளே செல்வதற்கு பலமுறை டோக்கன் வாங்கி அரை டஜன் செக்யூரிட்டி பவுன்சர்களை தாண்டிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறினர். அலுவலகத்திற்குள் ஒவ்வொருவராக தான் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் கூட்டமாக செல்ல முடியாது என்றும் அவர்கள் கூறினர். இக்கட்டுப்பாட்டுகளையும் மீறி தாங்கள் சென்று முறையிட்டாலும் எந்த பலனும் இல்லை என்று தொழிலாளர்கள் கூறினர்.

ஏதேச்சையான சட்டமீறல்கள்

ஓலா மற்றும் உபேர் தற்போது ஒரே சவாரியில் பல வாடிக்கையாளர்கள் பங்கு கொள்ளும் ரைட் ஷேர் திட்டத்தை அறிவித்துள்ளன. மாநில விதிகளின் படி பொதுத்துறை போக்குவரத்து பேருந்துகளுக்கு மட்டுமே பல்வேறு இடங்களில் நிறுத்தி வாடிக்கையாளர்களை ஏற்றி இறக்கும் அனுமதி உண்டு என்றும்  ஓலா, உபேர் திட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஓட்டுனர்கள் கூறுகின்றனர். இது குறித்து சமீபத்தில் கர்நாடகா மாநிலம் இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைகள்

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் 2015 மே மாதத்தில் உபேர் நிறுவனத்திலும், 2017 பிப்ரவரியில் ஓலா நிறுவனத்திலும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரி;க்கைகள் குறித்து மனு அளித்ததாகவும் ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தோழர் அன்பழகன் கூறினார். மார்ச் 5 அன்று தமிழ்நாடு அரசு எரிபொருளுக்கான வாட் வரியை அதிகரித்த பின்னர் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்கம் இத்தொழிலின் செலவுகள் ஏறிக்கொண்டே இருக்க இன்னொரு பக்கம் கட்டணத்தை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. இதனால் அரசு தலையிட்டு ஓட்டுனர்களுக்கு நிறுவனம் தர வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

  • மீட்டர் கட்டணம் – மினி கார்களுக்கு முதல் 4 கிமீக்கு ரூ 100 பின்னர் கிமீக்கு 17 ரூ, செடான் கார்களுக்கு முதல் 4 கிமீக்கு ரூ 100 பின்னர் கிமீக்கு 19 ரூ, எஸ்யூவிகளுக்கு முதல் 4 கிமீக்கு ரூ 150 பின்னர் கிமீக்கு 22 ரூ. வெயிட்டிங் கட்டணம் – நிமிடத்திற்கு ரூ 2, இரவு சேவைக்கு கூடுதல் 25சதம்.
  • கமிஷனை 7 சதமாகக் குறைத்து யஉஉநிவயnஉந சயவiபெஇ ளவயச சயவiபெ ஆகிய நிபந்தனைகளை நீக்க வேண்டும்.
  • புது ஓட்டுனர்களை சேர்க்கக் கூடாது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எழிலகத்தில் போக்குவரத்து செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து பேசிய தோழர் அன்பரசன், போக்குவரத்து செயலாளர் மாநில அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளார் என்றும் 15 நாட்களுக்குள் இது குறித்து அரசு தனது முடிவை அறிவிக்கும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அங்கு கூடியிருந்த சுமார் 75 ஓட்டுனர்கள் ஆரவாரத்துடன் இதை வரவேற்றனர். அடுத்த கட்ட நடவடிக்கைகள், வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத ஓட்டுனர்களை இயக்கத்தில் இணைப்பது குறித்து தொழிலாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

ஊதிய குறைபாடுகள் குறித்து கூட்டமைப்பு கோரிக்கைகள் எழுப்பிய நிலையில் சவாரி பங்கீடு குறித்த தெளிவின்மை, நிர்வாகத்துடன் உள்ள தொடர்பு, தொழிலாளர் பயன்கள் போன்ற மற்ற பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகள் எழுப்பவில்லை. இது குறித்த கோரிக்கைளை சேர்த்து போராடுவது தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை கட்டுப்படுத்தும் செயல்முறைகளை அறிந்து அதை மாற்ற வழி செய்யும்.

மேலும் இன்று ஒலா மற்றும் உபேர் நிறுவனங்களின் புதுவகையான சுரண்டல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெற்று வருகின்றன. நாம் எவ்வாறு நுகர்கிறோம் என்பதை டிஜிட்டல் பொருளாதாரம் நிர்ணயிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இவற்றை எதிரப்பதற்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் ஒருங்கிணைய வேண்டும்.

 

 

This entry was posted in News, Self Employed, Strikes, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.