மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளலாம் ஆனால் அவர்கள் பற்றிய திரைப்படம் கூடாது

கக்கூஸ் படத்தை திரையிட காவல்துறை தடை

மனிதக் கழிவுகளை மனிதரைக் கொண்டு அகற்றும் பணிகளைத் தடை செய்ய 2013ல் சட்டம் வந்தும் தலித் மக்கள் இன்றும் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி வேலை செய்யும் அவலமும், இறக்கும் நிலைமையும் தொடர்வதை ‘கக்கூஸ்’ஆவணப்படும் மூலம் பதிவு செய்துள்ளார் இயக்குனர் திவ்யபாரதி. தூய்மை இந்தியா திட்டங்கள், 1993 சட்டம், 2013 சட்டம் எனப் பல வந்தாலும், அதிகார வர்க்கத்தின் மெத்தனப் மனப்போக்கும், சமூகத்தின் சாதிய மனப்போக்கும் இந்த வேலை இன்றும் தொடர வழி வகை செய்கின்றன என்பதை இந்த ஆவணப்படம் தெளிவாக்குகிறது. 2013 சட்டம் வந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்தும் இது வரை யாரும் தண்டனை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 27 அன்று வெளியடப்பட்ட இந்த ஆவணப்படத்தை ஊடகங்களும், தொழிலாளர் அமைப்புகளும் மக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். ஆனால் இவற்றை திரையிடுவது சட்டம் ஓழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு காவல்துறை கருதுகிறது. மார்ச் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டம், கோயம்பத்தூர், மதுரை எனப் பல இடங்களில் திரையிடப்படவிருந்த நிகழ்வுகளை காவல்துறை அனுமதிக்கவில்லை.

அரசு தனது சட்டத்தை சரியாக அமல்படுத்துவதில்லை என்று நாங்கள் ஆவணப்படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால் நாங்கள் தேசிய விரோதிகள் என்று முத்திரை குத்துகிறது அரசு என்று தோழர் திவ்யபாரதி கூறினார். உண்மையில் அரசு மற்றும் காவல்துறைகளில் உள்ள சாதிய மனப்போக்கை காட்டுவது தான் அதிகாரத்திற்கு பிரச்சனை என்று அவர் குறிப்பிட்டார்.

மதுரையில் AISA அமைப்பு திரையிடலுக்கு காவல்துறை அனுமதி மறுத்த போது அவர்கள் எழுத்துவடிவமாகக் கொடுத்த அனுமதி மறுப்பு அவர் பகிர்ந்தார். அதே சமயம் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதுரையில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டது. இது குறித்து முன்னதாகவே காவல்துறைக்கு தெரியாமல் போயிருக்கலாம் இல்லையென்றால் அதுவும் தடுக்கப்பட்டிருக்கும் என்று தோழர் திவ்யா கருதினார். ஆனால் விசிகவின் திரையிடலினால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது தான் உண்மை. சென்னையில் நடந்த திரையிடல் போதும்  எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் தடையை எதிர்த்து SFI, DYFI, AISF, AISA, RYI அமைப்புகள் கக்கூஸை திரையிட திட்டமிட்டுள்ளன. AIPF சார்பில் மார்ச் 19 அன்று கக்கூஸ் சென்னையில் திரையிடப்பட்டது.  அதில் சபாய் கரம்சாரி அந்தோலனின் பெசவாடா வில்சனும், இசைக்கலைஞர் டிஎம்கிருஷ்ணாவும் சிறப்புரை ஆற்றினர். மறுபக்கம் திரைப்பட விழாவிலும் கக்கூஸ் திரையிடப்பட்டது.

 

This entry was posted in Manual Scavenging, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , . Bookmark the permalink.