தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில சாலை மறியல் போராட்டம்

விவசாய கிராமப்புறப் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததனாலும், காவேரிப் பாசன நீர் கிடைக்காததாலும் தமிழ்நாட்டு விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்துள்ளனர். கடந்த வருடம் அவர்களின் சம்பா மற்றும் குருவை சாகுபடிகள் கருகி உள்ளன. காவேரி டெல்டா பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பயிர்களை 100 சதம் வரை இழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மன அழுத்தத்தாலும் இறந்துள்ளனர். இது குறித்து பலர் குரல் எழுப்பிய பின்னர், மாநில அரசு பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ5465 நிவாரணமாக 2247 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது வரை 17 விவசாயிகள் மட்டும் தான் தற்கொலை செய்துள்ளதாக அறிவித்துள்ள மாநில அரசு அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ3 லட்சம் இழ்ப்பீடு அறிவித்துள்ளது. ஆனால் இந்நிவாரணங்கள் பல விவசாயிகளுக்கு போய் சேர்வது கடினமே.

Farmers protest at Thiruporur

உதாரணத்திற்கு ஜனவரியில் காலமான அருந்ததியர் இளைஞர் 30 வயது வீரமணிக்கு சொந்தமாக நிலம் கிடையாது. நாகை மாவட்டத்தின் கீழ்வேளுர் தாலுகா கடமக்குடி கிராமத்தைச் சார்ந்த அவரும் அவருடைய மனைவியும் தனியார் மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்களிடம் 50000 ரூபாய் கடன் வாங்கி 1.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் இட்டனர். இதுவே அவர்கள் முதல் முறையாக பயிர் செய்யும் முயற்சியாகும். இங்கு காவேரி நீர் பாசன முறையில் தான் பயிர் செய்யப்படுகிறது.

காவேரியில் நீர் கிடைக்காததாலும், மழை இல்லாததாலும்(நாகையில் 17சத மழையே பெய்ததாக ஒரு விவசாயி கூறுகிறார்), அவர்களின் முதல் முயற்சியே கருகியது. இதைக் கண்ட வீரமணி வயலிலேயே விழுந்து இறந்தார். அவருடைய மனைவி பினான்ஸ் நிறுவனத்திற்கு கடன் கட்டியாக வேண்டிய நிலைமை. இரு குழந்தைகள் வேறு. ஆனால் அவர்களிடம் நிலமும் இல்லை, குத்தகைக்கான ஒப்பந்தமும் இல்லை. காப்பீடும் இல்லை. இந்நிலையில் இக்குடும்பத்திற்கு அரசு நிவாரணம் போய் சேருவதற்கு எந்த வழியும் கிடையாது.

மத்திய மாநில அரசுகள் விவசாய நெருக்கடியை புறக்கணிப்பதை எதிர்த்தும், அவர்களின் கண்துடைப்பு நிவாரணத்தை கண்டித்தும் மார்ச் 14 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவி சாலை மறியல் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். திருப்போருரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 30 இருளர், விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

வறட்சி காரணமாக மத்திய அரசு ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக தமிழ்நாட்டிற்கு உயர்த்தி உள்ளது. ஆனால், இதற்கான ஆணை பிப்ரவரியில் தான் வந்ததாகவம், மார்ச் மாதத்தில் ஆண்டு கணக்கு முடிவதனால் இது சரியாக அமல்படுத்தப்படவில்லை என்று விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் நேரு கூறினார். இந்த ஆணை அடுத்த வருடத்திற்கும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

மேலும், ஒரு கிராமத்தில் உள்ள தொழிலாளர்களை குழுவாரியாக பிரித்து ஒரு குழுவிற்கு ஒரு வாரம் என்ற விகிதத்தில் வேலை கொடுக்கப்படுவதாகவும், இதனால் மாதத்தில் சில நாட்களே கிராமங்களில் வேலை ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பணமதிப்பு நீக்கக் கொள்கையின் காரணமாக நவம்பரில் இருந்து யாருக்கும்; ஊரக வளர்ச்சி ஊதியங்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மத்திய அரசின் அறிவிப்பால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று தோழர் நேரு குறிப்பிட்டார்.

விவசாய நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு குறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ரேஷன் போன்ற உணவுப் பாதுகாப்புத் திட்டத்தால் ஓரளவு தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால் இத்திட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் வழியாக அடிப்படை உணவுப் பொருட்களை உறுதி செய்யாமல் நேரடி பணப் பறிமாற்றத்தை(Direct Cash Transfer) செயல்படுத்தும் மத்திய அரசின் போக்கை பகுதிச் செயலாளர் தோழர் மாரி கண்டித்தார். ரேஷன் கடைகளில் அரிசி அளவு 20கிலோவில் இருந்து 10கிலோவாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக 5 கிலோ கோதுமை கொடுக்கப்படுகிறது என்று தோழர் மாரி குறிப்பிட்டார். கோதுமை தங்களுக்கு ஏற்ற உணவல்ல என்றும் மீண்டும் அரிசி முழு அளவு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இருளர் பெண்கள் கூறினர்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைப் போல் காஞ்சிபுரம் மாவட்டமும் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உத்திரமேரூர், காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் சில நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன. மக்களுக்கு குடிநீரை ஏற்பாடு செய்யாத அரசு பாலூர் அருகில் ரெயில் நீர் பாட்டில் தொழிற்சாலைக்கு தினமும் 1லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ள அனுமதி கொடுத்துள்ளதை தோழர் நேரு கண்டித்தார். மாமண்டூர் அருகே உள்ள பெப்சி தொழிற்சாலையும் தினமும் 2000 லிட்டர் நீர் எடுப்பதாகவும் இத்தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று அவர் கோரினார். காஞ்சிபுரத்தில் உள்ள ஏறத்தாழ 2000 ஏரிகளையும் குளங்களையும் தூர் வாரி மழை நீரை சேமித்து நீர் பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்று அவர்; கோரினார்.

கீழ்கண்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக மாநிலப் பிரதிநிதி தோழர் சண்முகம் கூறினார்.
வறட்சி நிவாரணமாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள 38000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உடனடி நிவாரணமாக 1000 கோடி ரூபாயை மாநில அரசுக்கு தர வேண்டும்.
ஏக்கருக்கு ரூ15000 நிவாரணமாக அறிவிக்க வேண்டும். தற்போது 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு மட்டும் அறிவித்துள்ள நிவாரணம் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ10000 நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.
ரேஷன் கடையில் மீண்டும் 20கிலோ அரிசியும் பருப்பு வகைகளும் கொடுக்க வகை செய்யப்பட வேண்டும்.
ஊரக வேலைச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை அளிக்கப்பட்டு 150 நாள் வேலை உறுதி செய்யப்பட வேண்டும்.
மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி கடன் தொல்லைகளில் இருந்து விவசாயிகளை மீட்க வேண்டும்.

விவசாய நெருக்கடி குறித்து பல்வேறு அமைப்புகள் உண்மை அறியும் குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்துள்ளனர். உண்மை அறியும் குழுவின் அறிக்கையை இங்கே காணலாம்.

Download (PDF, 169KB)

This entry was posted in Agriculture, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.