கடலூரில் சாக்கடை அடைப்பை அகற்ற நுழைந்த மூன்று தொழிலாளர்கள் மரணம்

கடலூரில் சாக்கடை வடிகாலில் இருந்த அடைப்பை நீக்குவதற்காக இறங்கிய மூன்றுத் தொழிலாளர்கள் நச்சு வாயுக்களால் மூச்சு திணறி இறந்தனர். இதில் இரண்டு தொழிலாளர்கள் தலித் தொழிலாளர்கள் ஆவர். இம்மூன்று தொழிலாளர்களும் தமிழ்நாடு குடிநீர் வழங்கு மற்றும் கழிவநீர் அகற்றும் வாரியத்தால்(TWAD) வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். சாக்கடைக் குழாய்களில் இறங்கி அடைப்பை அகற்றும் செயல் மனிதக் கழிவுகளை அகற்றும் செயலாக(பகுதி 2(ஜி) 2013 மத்திய சட்டம் குறிப்பிட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அன்றி தொழிலாளர்களை ஈடுபடுத்துவது குற்றமாக கருதப்படுகிறது(பகுதி 2(டி). சட்டம் இயற்றப்பட்டு நான்கு வருடங்கள் ஆகியும் இச்செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாக்கடைக் குழாய்களில் இறங்கி இறந்தும்(பாடம் 3, பகுதி 9) இச்சட்டத்தின் கீழ் யாருக்கும் தண்டனை அளிக்கப்படவில்லை. கடந்த இரண்டு வாரங்களிலேயே பங்களுர், விஜயவாடா நகரங்களிலும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் சம்பவம் குறித்து மார்ச் 22 அன்று காவல்துறையுடன் தொடர்பு கொண்ட போது, சட்டத்தின் படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக மட்டும் கூறிவிட்டு திருப்பாபுலியூர் காவல் நிலைய ஆய்வாளர் தொடர்பை துண்டித்து விட்டார். எந்த சட்டங்களில் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்பதை அவர் கூற மறுத்து விட்டார்.

மார்ச் 20 அன்று பிரேதப் பரிசோதனைக்கு பின்னர், தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே மறியல் செய்தனர். அதற்கு பின்னர் காவல்துறை அவர்களுக்கு நிவாரணம் அளிக்க ஒத்துக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடலூர் மாவட்ட ஆட்சியர் குடும்பத்தினரை இது குறித்து அழைத்துள்ளதாக தெரிகிறது. 2014ல் கீழ் உச்ச நீதி மன்றம் இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் தர உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து தாசில்தார் தலைமையில் விசாரணையை துவக்கியுள்ளார்.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணி ஒழித்தல் சட்டத்தின் கீழும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் குடிநீர் வாரியத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஃபாய் கரம்சாரி அந்தோலன் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர். இத்தொழில்முறைகளை அகற்ற மார்ச் 19 அன்று கழிவுநீர் தொட்டி தொழிலாளர்கள் இயக்கம் ஒன்றை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக தொழிலாளர்களை கழிவுநீர் தொட்டியில் இறக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் சிபிஎம் கடலூர் மாவட்டக் குழுவின் 100 உறுப்பினர்கள் கடலூர் பொது மருத்துவமனைக்கு முன்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இக்கோரிக்கைகளை முன் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களும் போராட்டம் நடத்தினர்.

உச்சநீதி மன்ற உத்தரவிற்கு பின்னர் 141 தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை இதற்கு காரணமாக ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு இறக்கும் பலத் தொழிலாளர்கள் இளம் வயது தொழிலாளர்கள் ஆவர். இவர்களின் இழப்பிற்கான நிவாரணம் போதாது. ஆனால் அதைவிட முக்கியம் சட்டத்திற்கு புறம்பாக இவர்களை வேலையில் ஈடுபடுத்தபவர்கள் மீது கிரிமினல் தண்டனை வழங்கப்படாதது தான். இவ்வாறு பொது மக்களின் பணத்தை நிவாரணமாகக் கொடுத்து அரசும் தனியார் ஒப்பந்ததாரர்களும் தப்பித்து கொள்கின்றனர். ஆனால் தொழிலாளர்களை இந்த ஈவிறக்கமற்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். தண்டனை அளிக்காமல் அவர்களை பாதுகாப்பது ஜனநாயகத்திற்கு புறம்பான செயலாகும். இதற்கு காரணம் சமூகத்தில் உள்ள ஆதிக்க சாதிய மனப்பான்மை தான்.

This entry was posted in Manual Scavenging, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.