மே தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு

தொழிலாளர்கள் தினத்தை அனுசரித்து மே 1 அன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் மே தின நிகழ்வுகளை நடத்தினர். கொடியேற்றுதல், பேரணிகள், கலை நிகழ்வுகள், பொதுக் கூட்டம், உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவித்தல் எனப் பல்வேறு நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உறுதியுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். 1886ல் சிகாகோ ஹேவொர்த் மார்க்கெட்டில் 8 மணி நேர வேலை கோரி பல்வேறு பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளில் இருந்து, தொழிற்சங்க உரிமைக்காக சிறையில் வாடும் மாருதி பிரிக்கால் தொழிலாளர்கள் வரை தொழிலாளர் வர்க்க தியாகிகளை நினைவு கூறிய தொழிலாளர்கள் இன்றைய பிரச்சனைகளான ஒப்பந்த தொழில் முறை, விவசாயப் பிரச்சனை, தொழிலாளர் நலன்களை சீர்குலைக்கும் மோடி அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்கொள்ளவும் கம்யூனிசப் பாதையில் சோசலிசத்தை வென்றெடுப்பதற்காகவும் உறுதியேற்றனர்.

This slideshow requires JavaScript.

சென்னையில் உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மையத்தின் கொடியேற்பு விழா

உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற கொடியேற்பு விழாவில் சிம்சன்ஸ், அஷோக் லேலன்ட், ரானே, ஹிந்துஜா பவுண்ட்ரீஸ், எல் அன்ட் டி வால்வ்ஸ் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 175 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஆதிக்க வர்க்கத்தின தாக்குதல்கள் அதிகமாகி வருவது குறித்து தொழிற்சங்க பொது செயலாளர் தோழர் துரைராஜ் எடுத்துரைத்தார்.

பிஜேபி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை பற்றி தொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர் தோழர் குசேலன் கூறினார். தங்களுடைய வேலைகளுக்கு உரிமை கோருவது தொழிலாளர்களின் கடமை என அவர் கூறினார். ஆனால் இன்று தொழிற்சங்க அங்கீகாரம் பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது வேலை பளுவை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பிளவு அதிகரித்துள்ளது என அவர் கூறினார். தொழிற்சங்க அங்கீகாரம் பெற்ற தொழிலாளர் தலைவர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பது சரியல்ல என்றும் இதனால் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தொழிற்சாலையில் நடக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளியிடை அதகரிக்கும் என்று அவர் எச்சரித்தார் பொதுத் துறையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைந்நதுள்ளதன் பின்னணியில் தொழிற்சங்க நடவடிக்கைகளும் காரணம் என்று அவர் கூறினார். ஒப்பந்த முறையை ஒழிக்கவும் சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் தொழிலாளர்கள் இயக்கம் கட்டிப் பாடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆவடி மற்றும் திருவொற்றியூரில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

திருவொற்றியூரில் நடைபெற்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பொதுக்கூட்டத்தில் 30 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பொது செயலாளர் தோழர் சுக தங்கரசு, திருவொற்றியூர் கிளைத் தலைவர் தோழர் சதிஷ், செயற் குழு உறுப்பினர் ஆனந்த் குமார் ஆகியோர் உரையாற்றினர்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோவில் இருந்து நக்சல்பாரி போராட்டங்கள், 70களின் தர்மபுரி போராட்டங்கள் வரை உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து தொழிலாளர்கள் கோஷ முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்கள் முதற் கொண்டு விவசாயிகள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய தாக்குதல்களை அவர்கள் கண்டித்தனர். போராட்டத்தில் கூடியிருந்த தொழிலாளர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுடைய உரத்த கோஷ முழக்கம் அனைத்து மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்தியாவிலும் உலகளவிலும், பன்னாட்டு நிறுவனங்களாலும், சர்வதேச நிறுவனங்களாலும் மறுகாலனியாக்கம் நடைபெறுவதை தோழர் சதிஷ் சுட்டிக்காட்டினார். உலகமயம், தனியார்மயம், தாராயமயத்தை நிலைநாட்டி மறுகாலனியாக்கத் திட்டத்தை செயல்படுத்தும் இந்திய அரசுகள் முதலாளித்துவ ஏஜன்டுகள் என அவர் சாடினார். காவேரி நீரை தமிழ்நாடுக்கு அளிப்பதற்கு கர்நாடகா அரசை நிர்ப்பந்திக்க மத்திய அரசு முயலவில்லை. மேலும் தமிழ்நாடு விவசாயிகளின் போராட்டங்களை புறக்கணித்து வருகிறது. சர்வதேச தொழில்மய விவசாயத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என தோழர் சதிஷ் வலியுறுத்தினார்.

புதிய கல்வி கொள்கைகளால் கல்வி தனியார்மயமாக்கப்படுகிறது. தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் தொழிலாளர் உரிமைகளை பறித்து வருகின்றன. முந்தைய காங்கிரஸ் அரசின் அதே தாராளமயக் கொள்கைகளை பின்பற்றும் மோடி அரசு, சமூக தளங்களில் இந்துத்துவா பாசிசத்தை கட்டமைப்பதாக தோழர் சதிஷ் கூறினார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் அரசியல் கருத்தியல் வேறுபட்டு இருந்தாலும் மறுகாலனியாக்கத்தை தடுக்க தவறிவிட்டன எனக் கூறிய தோழர் சதிஷ் புரட்சிகர இயக்கமே இப்போராட்டத்தை வெல்லும் எனக் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவில் சுரங்கம் அமைப்பதற்காக அதானி குழுமம் கோரிய 7000 கோடி ரூபாய் கடன் அளிக்க பாரத ஸ்டேட் வங்கி நிராகரித்துள்ளது. ஏற்கனவே வங்கியில் இருந்து அதானி வாங்கிய ரூ3000 கோடி கடன் இதுவரை அடைக்கப்படவில்லை. இவ்வாறு கார்ப்பரேட்டுகள் கடன் வாங்கி திரும்பக் கொடுக்காததால் வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்துள்ளது. இதனால் கடன் கொடுப்பதற்கு வங்கிகளிடம் பணம் இல்லை. அதனால் தான் மோடி அரசு பணமதிப்பு நீக்கத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது எனத் தோழர் சதிஷ் கூறினார். இதனால் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் பணம் வங்கிகளிடம் சேரந்துள்ளது இதை வைத்து மேலும் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து அவர்களின் செல்வத்தை அதிகரிக்க மோடி அரசு வழிவகுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். இதை எதிர்த்து தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் நெடிய கடினமான போராட்டம் ஆகும் ஆனால் தொழிலாளர் வர்க்கம் வெற்றி அடைந்தே தீரும் எனக் கூறிய தோழர் சதிஷ் நவீன தாராளமயத்திற்கும், பாசிசத்திற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் எழுச்சி பெற வேண்டும் எனக் கூறினார்.

ஆவடியில் நடைபெற்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பேரணியில் சுமார் 300 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பறை ஆட்டத்துடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் முகிலன் மற்றும் தோழர் கணேசன் உரையாற்றினர்.

வட சென்னையில் சிஐடியு மற்றும் ஏஐடியுசியின் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்

மே தினத்தை கொண்டாடும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட வட சென்னை பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சார்ந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொண்டையார்பேட்டை க்ளாக் டவரில் ஆரம்பித்தப் பேரணியை சிஐடியு மாநிலத் தலைவர் தோழர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

பேரணியின் ஆரம்ப கட்டத்திலும் பொதுக்கூட்டத்திலும் ஜெனி மார்க்ஸ் கலைக் குழுவினர் பறை ஆட்டம் நிகழ்த்தினர்.; விவசாயிகளின் நெருக்கடிகள் குறித்து பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகளின் நெருக்கடியை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்காததை குறித்து கலை நிகழ்வுகள் நையாண்டியுடனும் ஆத்மார்த்தத்துடனும் காட்டமாகும் எடுத்துரைத்தன. பிஜேபியின் தொழிலாளர் விரோதப் போக்கை தோழர் சவுந்தரராஜனும் சிபிஐ கட்சியின் தோழர் தா.பாண்டியனும் எடுத்துரைத்தனர்.

தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி முழக்கமாக மேதினத்தை கருவதாக காங்கர் ஐஎஸ்ஓ வில் கடந்த 20 வருடங்களாக பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர் கூறினார். சிகாகோவில் உயிர் நீத்த தொழிலாளர் போராளிகளால் நமக்கு 5 நாள் 8 மணி நேர வேலை கிடைத்துள்ளதை அவர் நினைவு கூர்ந்தார்.

சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 பேரணிகளை நடத்தினர்.

கோவையில் ஏஐசிசிடியு மற்றும் ஏஐஏஆர்எல்ஏ பேரணி மற்றும் பொதுக் கூட்டம்

ஏஐசிசிடியு, ஏஐஏஆர்எல்ஏ வின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் பிரிக்கால் தொழிலாளர்களின் கோவை மாநகரத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் வௌ;வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 3000 தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பிரிக்கால், மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் என்பதே பேரணியின் முக்கிய கோரிக்கை முழக்கமாக இருந்தது.

தற்போதும் பிரிக்கால் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 25ல் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து பிரிக்கால் தொழிலாளர்களும் வேலை நிறுத்த அறிக்கையை நிர்வாகத்திடம் சமர்ப்பித்து இருந்தனர். ஆனால் நிர்வாகமோ வேலை நிறுத்தம் செய்தால் 8 நாள் ஊதியத்தை பிடிப்பதாக மிரட்டியுள்ளது. ஆனால் அதற்கும் அசராத பிரிக்கால் தொழிலாளர்கள் சுமார் 900 பேர் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். தற்போது நிர்வாகம் 8 நாள் ஊதியத்தை பிடிக்கும் பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாக பிரிக்கால் தொழிற்சங்கப் பிரதிநிதி தோழர் ஜெயபிரகாஷ் கூறினார்.

கோவை வேளான்மைப் பல்கலைகழகத்தின் தொழிலாளர்கள் 22 வருடங்களுக்கு பின்னரும் தற்காலிக வேலை அடிப்படையில் தினக் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரம் கோரி வருகின்றனர். பி.என்.புதூரில் வாழும் இவர்களுக்கு இதுவரை அடிமனைப் பட்டா வழங்கப்படவில்லை.

ஓரகடத்தில் உள்ள சான்மீனா தொழிற்சாலையில் இருந்து சுமார் 20 தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். ஏற்கனவே மார்ச் மாதத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சான்மீனாத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ளனர். ஏனென்றால் சமீபத்தில் மேலும் இரண்டு தொழிலாளர்களை மேலாளர் ஒருவர் தரக்குறைவாக பேசியுள்ளார். எதிர் கொள்ளும் வேலை நிறுத்தத்ததை குறித்து தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர்.

சென்னையின் ஆன் லோடு கியர்ஸ், டிஐடிசி, சௌந்தர்யா டெக்கரேட்டர்ஸ், கோவையின் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களும் பேரணியில் கலந்து கொண்டனர். சென்னை வண்டலூரில் இருந்து கலந்து கொண்ட அறிஞர் அண்ணா உயரியல் பூங்கா தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர்கள் 140 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணி கோரியும், 7வது ஊதிய குழுயின் பரிந்துரை அடிப்படையில் ஊதியம் கேட்டும் போராடி வருகின்றனர். கடந்த செப்டம்பரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த பின் அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பெருவாரியாக கிராமப்புறத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விவசாய நெருக்கடி, ரேஷன் கடை பற்றாக்குறை ஆகியவை தொழிலாளர்களின் அன்றாட பிரச்சனையாக அவர்கள் கூறினர். விவசாய நெருக்கடி மற்றும் மத்திய அரசின் பாராமுகம் பல தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளிலும் வெளிப்பட்டன.

சேலம், நாமக்கல், கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து கோஆப்டெக்ஸ் தொழிற்சங்கத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 8 மணி நேர வேலை, வார விடுமுறை, ஊதிய உயர்வு கோரி அவர்கள் போராடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டப் பிரதிநிதி தோழர் கஜேந்திரன் இருளர்களின் பட்டா உரிமை குறித்து எடுத்துரைத்தார். காடு உரிமைச் சட்டத்தின் கீழ் இத்தொழிலாளர்களுக்கு பட்டா கொடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து பேசிய அவர், இதனால் இருளர்கள் ஆந்திராவில் சந்தன மரங்கள் கடத்தல் பணிகளில் ஈடுபடும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள் எனக் கூறினார்.

இளைஞர்கள் பெருவாரியாக பேரணியில் கலந்து கொண்டனர். என்ஜினியரிங் துறையில் மாஸ்டர்ஸ் படித்து வரும் தோழர் ஜோதி, இளைஞர்களால் தான் சமூக மாற்றம் ஏற்படும் என்று தான் கருதுவதாகவும் அதனால் புரட்சிகர இளைஞர் முன்னணியில் சேர விண்ணப்பத்துள்ளதாகவும் கூறினார். பொதுக் கூட்டத்தில் நடனம் ஆடிய இளம் தோழர்கள் மீத்தேன் போன்ற திட்டங்களால் பாழாகும் விவசாயிகளின் வாழ்வையும் பாடல், நடனம் மற்றும் நாடகம் மூலமாக எடுத்துரைத்தனர், இது குறித்த மத்திய தர மற்றும் ஊடகங்களின் பார்வையையும் அவர்கள் சாடினர்.

பொதுக் கூட்டத்தில் தோழர் குமாரசாமி உட்பட பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் இன்றைய மக்கள் பிரச்சனைகள் குறித்தும், அரசின் முதலாளித்துவ பார்வை குறித்தும் விரிவாக பேசினர்.

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்வில் கட்டிடத் தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலப்பயன்களில் முடக்கம், பல்வேறு அமைப்பு சாரா துறைகளில் தொழிலாளர்கள் நலனுக்காக விதிக்கப்படும் செஸ்(ஊநுளுளு) வரி நீக்கம் ஆகியவற்றை கூட்டமைப்பு எதிர்த்து வருகிறது.

ரெட்டேரியில் DTUC சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் நடந்த நிகழ்வில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம், சாலையோர வியாபாரிகள் ஒருமைப்பாட்டுச்சங்கம்,தமிழ்நாடு சனநாயக விவசாய தொழிலாளர் சங்கம், பந்தல் மற்றும் குடிசை கட்டும் தொழிலாளர் சங்கம், சனநாயக ஆட்டோஓட்டுனர் தொழிற்சங்கம்.,கிரிவ்ஸ் காட்டன் தொழிலாளர் சங்கம் ஆகிய DTUC யின் உறுப்பு அமைப்புகள் கலந்துக் கொன்டன.

This entry was posted in News, Working Class Vision, தமிழ் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.