எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க உயர் நீதி மன்றம் உத்தரவு, சமரச பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவு

மாநில அரசின் அமைச்சர் குழுவுடன் 16 மே இரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிக சமரசம் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் காலவரையற்ற மாநில வேலை நிறுத்தம் இரு நாட்களுக்கு பின் முடிவுற்றது. இதுவரை நடந்த பேச்சு வாரத்தைகள் தோல்வியுற்ற நிலையில், வேலை நிறுத்தத்தை நிறுத்த எஸ்மா சட்டத்தை உபயேக்கிக்க வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றம் மே 16 அன்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிரப்பித்த நிலையில், மே 16 இரவில் அரசுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே அறிவித்திருந்த ரூ750 கோடியுடன், ரூ500 கோடி அதிகமாக அரசு ஓதுக்கீடு செய்ய ஒத்துக்கொண்டது.

1250 கோடி ரூபாய் போக்குவரத்து தொழிலாளர்களின் அகப்படி நிலுவைத் தொகைக்கும், ஓய்வூதியத் தொகைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். செப்டம்பர் 2017க்குள் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகை ஈடுகட்டப்படும். தொழிலாளர்களுக்கு தரப்பட வேண்டிய மற்ற நிலுவைத் தொகைகள் (காப்பீடு, பிஎஃப்) ஆகியவற்றை ஈடுகட்ட 3 மாதங்களில் அரசு கொள்கை அளவில் அறிக்கை வெளியிடும். 13வது ஊதிய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும. பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்னர் மே 16 மாலை சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Agreement signed between the unions and transport secretary

மே 15 முதல் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு LPF, CITU, AITUC, HMS, TTSF, TMTSP, PTS, MLF, AALLF, TWU ஆகிய 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அனைத்து தொழிற்சங்கத்தை சார்ந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதனால், வேலை நிறுத்தம் ஏறக்குறைய முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. ஆளும் கட்சியைச் சார்ந்த அண்ணா தொழிலாளர் பேரவையைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்ததாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறினர். ‘அனைத்து தொழிலாளர்களும் ஒரே பிரச்சனைகளை தான் சந்திக்கின்றனர். அவர்களுடைய நிலுவைத் தொகைகளும் இன்னும் செலுத்தப்படவில்லை. அவர்கள் ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில் இருந்தாலும் அவர்களுடைய பிரச்சனைகளும் தான் தீர்க்கப்படவில்லை. அவர்களுடைய குடும்பங்களும் இன்று பட்டினியால் வாடுகின்றனர்.’ என சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் சந்திரன் கூறினார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறாத நிலையில், தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத் தொகைகள், நிலுவைத் தொகைகள் மொத்தம் ரூ7000 கோடி பாக்கியை(விவரம் கீழே) நிர்வாகம் செலுத்தாமல் உள்ளன. அதனால் தொழிற்சங்கங்கள் இதற்கான கோரிக்கைகளை மையமாக வைத்து போராடி வருகின்றனர். போக்குவரத்து நிர்வாகத்தின் நிலுவைத் தொகைகளை அரசு ஈடுகட்ட வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. போக்குவரத்து நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதன் பின்னணியில் கட்டமைப்பு பிரச்சனைகள் உள்ளன என்றும் அவற்றை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. இவை களையப்படாமல் ஊதிய உயர்வு கோரிக்கைகளும் வெற்றி பெறாது எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விவரங்கள் மொத்தம் (கோடிகளில்)
கடன் சொசைட்டி Rs.320
லோன்களுக்காக கழிக்கப்பட்ட ஊதியத் தொகை Rs.360
பிஎஃப் Rs.2200
ஓய்வூதிய பங்களிப்பு Rs.1400
பணிக்கொடை Rs.450
விடுமுறை Rs.210
அகப்படி நிலுவைத் தொகை Rs.40
ஓய்வுபெற்ற தொழிலாளர்கள்
பிஎஃப் Rs.310
பணிக்கொடை Rs.900
விடுமுறை Rs.100
கம்யூடட் ஓய்வூதியம் Rs.170
மொத்தம் Rs.6460

போக்குவரத்து தொழிலாளர்களுக்காக அரசு ரூ 750 கோடி ரூபாயை ஒதுக்கியள்ளதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரன் கூறினார். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் நலனுக்காக போராடவில்லை என்றும் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என்று அவர் குறை கூறியுள்ளார். திங்கள் அன்று அவர் பல்வேறு பேருந்து பணிமனைகளுக்கு நேரில் சென்றார். வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு தனியார் பேருந்துகளை நகரப் போக்குவரத்திற்காக உபயோகித்தது. மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு தனியார் ஓட்டுனர்களையும் அரசு தற்காலிகமாக நியமித்தது.

ஆனால் உண்மை நிலவரங்களைப் பற்றி தொழிலாளர்கள் வேறு கருத்துகளை பகிர்ந்தனர். அமைச்சர் பணிமனைக்கு வந்த போது அடுத்த நிறுத்தம் வரை பேருந்துகள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் அமைச்சர் சென்றவுடன் மீண்டும் பணிமனையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன என பேசின் பிரிட்ஜ் பணிமனையைச் சார்ந்த ஒரு ஒட்டுனர் கூறினார். மாநகரப் பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் அவற்றை ஓட்டுவதற்கு மாநகரப் போருந்து ஓட்டுனர்களுக்கு மட்டுமே அனுபவம் உள்ளது எனப் பல்வேறுத் தொழிலாளர்கள் கூறினர். ‘பல பஸ்களில் பிரேக் வேலை செய்வதில்லை. அவற்றை ஓட்ட எங்களுடைய ஓட்டுனர்களுக்கு மட்டுமே தெரியும். அனுபவம் இல்லா ஓட்டுனர்களை வைத்து இயக்கி பொதுமக்களின் உயிர்களுடன் அரசு விளையாடுகிறது’ என மாதவரம் பணிமனையின் ஒரு டெக்னிக்கல் தொழிலாளர் குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தம் பெரிய வெற்றி என்று பலத் தொழிலாளர்கள் கருதினர். அரசு கட்டாயப்படுத்தியதாலும் மிரட்டியதாலும் தான் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பணி புரிகின்றனர் என்று தொழிலாளர்கள் கூறினர். தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சட்டரீதியான தொகையையே கோருவதனால் இது ஒரு தார்மீக வேலை நிறுத்தம் என்றும் பல்வேறு பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் தோல்வி அடைந்துள்ளதால் தான் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் தொழிலாளர்கள் கருதினர்.

தொழிற்சங்கங்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தாத அதிமுக அரசின் மெத்தனப்போக்கை அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் விமரிசித்தனர். ‘தொழிலாளர்கள் நலன்கள் குறித்து அக்கறை கொள்ளும் அரசாக இருந்திருந்தால் பிப்ரவரியில் நாங்கள் வேலை நிறுத்த மனுவை அளித்தவுடனே அரசு எங்களை அழைத்திருக்க வேண்டும். அரசிற்கு போதுமான அவகாசம் கொடுத்தே நாங்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்கிறோம். அதனால் இது சட்டவிரோதமானது என எவரும் கூற முடியாது’ என சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் கூறினார்.
காவல்துறையிடம் இருந்தும் உள்ளுர் ரவுடிகளிடம் இருந்தும் பலத்த ஒடுக்குமுறையை சந்தித்தாக தொழிலாளர்கள் கூறினர். காவல் துறை தன்னுடைய வீட்டிற்கு வந்து மிரட்டுவதாகவும் அதனால் இருநாட்கள் வீட்டுக்கு செல்லவில்லை என ரெட்டேரி எல்பிஎஃப் தொழிலாளர் ஒருவர் கூறினார். வேலை நிறுத்தத்தின் போது பணி செய்வோம் என்று தொழிலாளர்களிடம் மிரட்டி அரசு கடிதம் வாங்குவதாவும் உத்தரவாதம் தர மறுக்கும் தொழிலாளரகளை காவல்துறை கைது செய்வதாகவும் ஏஐசிசிடியுவின் தோழர் ஏ.எஸ்;. குமார் குறிப்பிட்டார்.

இரு நாள் வேலை நிறுத்தத்தை விடுமுறையாக கருதுவோம் எனவும், எந்த தொழிலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என போக்குவரத்து கழகங்கள் கூறியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பணி மாற்றம், மெமோக்கள் போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்வர் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் மதுரை வளாகத்தின் உயர்நீதி மன்றத்தில் போடப்பட்ட பொது நல வழக்கில் தொழி;லாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லையேல் அரசு எஸ்மா சட்டத்தை உபயோகித்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் இடைக்கால் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்த வழக்கில் ஆஜரான சிஐடியு, எல்பிஎஃப், டிடிஎஸ்எஃப் தொழிற்சங்கங்கள் இந்த ஆணையை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். தொழிற்சங்கங்கள் தங்களுடைய வாதத்தை வைப்பதற்கு உரிய அவகாசம் தரப்படவில்லை என அவர்கள் வாதாடிய பின் நீதிமன்றம் வழக்கையும், இடைக்கால உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

வேலை நிறுத்தம் 75சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக டிடிஎஸ்எஃப் தொழிற்சங்கத் தலைவர் தோழர் சம்பத் குறிப்பிட்டுள்ளார். ‘வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. எஸ்மா சட்டத்தை அரசு பிரயோகம் செய்தால் தொழிலாளர்கள் கைது செய்வதை தடுக்கும் முயற்சியில் எங்கள்(தொழிற்சங்கங்களின்) கவனம் திரும்பியிருக்கும். முக்கிய கோரிக்கைகளில் இருந்து விலகாமல் இருப்பதற்கு தற்காலிக உடன்படிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்றுள்ளன’ என அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை வெகுவாக கட்டுப்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர் இது குறித்து தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கருதினார். உடன்படிக்கையில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை தெளிவாக்கி செயலாக்கம் செய்வதில் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மே 24 முதல் தொடங்க உள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கை தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் செலுத்துவாக உள்ளன. அடிப்படை பிரச்சனைகள் குறித்து எந்த தீர்வுகளும் தெளிவாக்கப்படாத நிலையில் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளன.

This entry was posted in News, Public Sector workers, Service Sector, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.