மாட்டிறைச்சி தடைக்கு பின்னால் இருக்கும் இந்துத்துவா அரசியல் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

கடந்த இரு வருடங்களாக நடைபெறும் மாடு குறித்தான அரசியல் இந்திய சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் தாக்கி வருகின்றது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், ஹரியானா போன்ற மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான கொலைகள், தாக்குதல்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன. இவற்றிற்கு பின்னால் உள்ள இந்துத்துவா கும்பல்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

Source: dailyo.in

இதில் அடுத்த கட்டமாக மாட்டிறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே விவசாயப் பொருளாதாரக் கொள்கை, வறட்சி ஆகியவற்றால் வாடும் விவசாயிகளின் வாழ்நிலை மாநில அரசின் கொள்கையால் படு மோசமாகி வருகின்றது.

2015 செப்டம்பர 28 அன்று உத்தர பிரதேசத்தின் தாத்ரியில் மொகம்மது அக்லக் வீட்டை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. அவருடைய வீட்டில் மாட்டிறைச்சி உண்பதாக ஒரு புரளியை நம்பிய இந்த கும்பல் மொகம்மது அக்லக்கை வீட்டிலிருந்து இழுத்து வந்து அடித்தே கொன்றனர். அவருடைய இறப்பிறகு இதுவரை அரசோ நீதிமன்றமோ எந்த பொறுப்பான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக 10 மாதங்களுக்கு பின்னர் அக்லக் மீதும் அவருடைய வீட்டினர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்ய உள்ளுர் நீதிமன்றம் ஒன்று ஆணையிட்டுள்ளது.

ஹரியானாவிலும் ராஜஸ்தானிலும் பசுப் பாதுகாப்பு என்ற போர்வையில் சுத்தும் அணிகள் பசு அல்லது காளைகளை கொண்டு செல்லும் வண்டிகளை தடுத்து வருகின்றனர். 2017 ஏப்ரல் 1ல் ஜெய்பூர் மாட்டு சந்தையில் இருந்து கரவை மாடுகளை வாங்கி தங்கள் கிராமத்திற்கு கொண்டு செல்ககையில் பெஹ்லு கான் மற்றும் அவரது இரு மகன்களை இந்துத்துவ கும்பல் ஒன்று பிடித்து அடித்துள்ளது. இதில் குறிப்பாக பெஹ்லு கான் தாடி வைத்திருந்ததால் அவரை இன்னும் தீவிரமாக அடித்து அவரை கொன்றே விட்டனர். அவரை அடித்தவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இவ்வாறான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடக்கும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் அல்ல. மார்ச் 2016ல் ஒரு சிறார் உட்பட இருவர் ஜார்க்கண்டில் மாட்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்த போது கொல்லைப்பட்டனர். ஜம்முவில் மாடுகளை கொண்டு சென்றதற்காக ஒரு வாகன ஓட்டுனர் கொல்லப்பட்டார். குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரி;த்ததற்காக 5 தலித் இளைஞர்களை பொது இடத்தில் வைத்து அடித்தனர். அதை படம் பிடித்து இணைய தளத்திலும் வெளியிட்டனர்.

ராஜஸ்தானில் இக்கும்பல்களை பாதுகாப்பதற்காகவே ராஜஸ்தான் மாநில அரசு பசு மாடுகள் சட்டம் 1995ஜ மாற்றி மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்தது. இவ்வாறு சில மாநிலங்களில் தொடுக்கப்பட்டு வந்த தாக்குதல்கள் தற்போது மத்திய அரசால் தேசிய அளவில் சட்டமாக்கப்பட்டுள்ளது. விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புதிய விதிகளை பிறப்பித்து மாடுகளை இறைச்சிக்காக சந்தையில் விற்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்ட இரு வாரங்களிலேயே தமிழ்நாட்டில் மாடு விற்பனை 80 சதமாக குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏற்கனவே வறட்சியால் வாடும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு கால்நடை பொருளாதாரம் பக்கபலமாக இருந்து வந்துள்ளது. வயது முதிர்ந்த மாடுகளை விற்க முடியாத நிலையில் புதிய கரவை மாடுகளை வாங்குவதும் கடினமாகி உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் சண்முகம் கூறுகிறார். ‘வயது முதிர்ந்த மாடுகளை சந்தைக்கு கொண்டு செல்வதும் அதே சமயம் புதிய மாடுகளை விவசாயிகள் வாங்குவர். இந்த இரண்டு செயல்களும் ஒரே நேரத்தில் நடக்கும் செயல்கள். இதில் ஒன்றை முடக்கினால் இன்னொன்று எவ்வாறு நடக்கும்?’ என அவர் குறிப்பிட்டார்.

மாட்டிறைச்சி விற்பதை தடை செய்யும் மத்திய அரசின் ஆணையை எதிர்;;த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஜுன் 5 அன்று சென்னை சாஸ்திரி பவன் எதிரில் போராட்டம் நடத்தினர். ஆணையின் பிரதிகளை கொளுத்தியதனால் சுமார் 60க்கும் மேலான விவசாயிகள் பிரதிநிதிகளை காவல் துறை கைது செய்து ஒரு நாள் காவலில் வைத்தனர். விவசாயிகளை பாதிக்கும் இந்த ஆணைக்கு எதிராக மாநில அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தோழர் சண்முகம் கூறினார்.

This entry was posted in Agriculture, Featured, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.