“அட்டை இல்லையேல் அரஸ்ட்!“ போராட்டம் வெற்றி! – மதிவாணன்

NREGA சட்டத்தின்படி உடலுழைப்புத் தரத் தயார் என்று சொல்லும் எந்த ஒருவருக்கும் வேலைக்கான அட்டை உடனடியாகத் தரப்பட வேண்டும். வேலை அட்டை உள்ள ஒவ்வொருவருக்கும், அவர் கேட்கும்போது வேலை தர வேண்டும்.

Source : Mathivanan (File Photo)

இந்தச் சட்டத்தை EPS மோடி அரசுகள் விருப்பம்போல மீறி வருகின்றன. குறைவான நிதியை ஒதுக்கி மாவின் அளவுக்குத்தான், எத்தனைப் பேர் வந்தாலும் சாப்பாடு என்பது போல, வேலைக்கு வருபவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க சட்ட விரோத முயற்சிகளை மேற்கொள்கின்றன.

அரசின் இந்தப் போக்கிற்கு, மதுரை கிழக்கு ஒன்றியத்தின் பொய்கைக்கரைப்பட்டி பஞ்சாயத்துக்கு மக்கள் இன்று பாடம் கற்பித்தனர்.

இன்று (வியாழன்) காலையில் BDO கிழக்கு ஒன்றிய அலுவலகத்துக்குச் செல்வது அட்டைப் பெறும்வரை அங்கேயே இருப்பது அல்லது அரெஸ்ட் ஆவது என்று தீர்மானிக்கப்பட்டது.
2 நாளாகப் பஞ்சாயத்து நிர்வாகம் போராட்டத்தின் முன்னோடிகளை அழைத்துப் பேசியது. நேற்று இரவு வரை தீர்வு வரவில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் மிரட்டுவதையே வழியாகக் கருதியதால், மீறுவதே தீர்வு என்று மக்கள் முடிவு செய்தனர். “காலையில் பணித்தளதிற்கு வாருங்கள்“ என்று மட்டும் பஞ்சாயத்து நிர்வாகம் சொன்னதோடு நேற்றைய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

மதுரை நகரில் இருக்கும் BDO கிழக்கு ஒன்றிய அலுவலகத்துக்குக் காலையில் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்துவிட்ட முன்னணிகள் பணித் தளத்திற்குச் சென்றனர். வழக்கமான கிரமப்புர அதிகார வர்க்கத்தின் திமிறல்கள் ஏசல்கள் இருந்தன. சங்கம் வைத்தால் ஜெயிக்க முடியுமா? என்ற புளித்துப்போன வார்த்தைகளும் வந்தன.

இதற்கிடையில், கிழக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பு காவல்துறை குவிக்கப்பட்டது. ஊடகங்கள் தகவலறிந்து வந்து சேர்ந்தன. தினத்தந்தி பாஷையில் சொல்வதென்றால் மதுரையில் பதட்டம் நிலவியது.

வேறுவழியின்றி, பஞ்சாயத்து நிர்வாகம் பணிந்தது. சில பத்து நாட்களாக வேலை மறுக்கப்பட்ட மூனூர், மற்றும் நாயக்கன்பட்டி கிராமத்து மக்களில் கேட்டவர்கள் அனைவருக்கும் வேலை அளிக்கப்பட்டது.
ஒன்றரை வருடமாக அட்டை மறுக்கப்பட்டவர்களுக்குப் பஞ்சாயத்து அலுவலகத்தில் அட்டை வழங்கும் பணி தற்போது நடந்துவருகிறது. பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் கட்சித் தலைமையைத் தொடர்புகொண்டு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்தார்.

இருந்தபோதும், தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், கூலியைக் குறைக்கும் வேலையை அரசு செய்யும். மற்றொரு போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தன்னைத் தானே தள்ளிக்கொள்ளும்.

என்ன செய்வது? மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!

(போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மதுரை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தோழர் மல்லிகா. அவருக்கு உதவியாக அவிகிதொச மாநில குழு உறுப்பினர்கள் குண்டுமலையும், கருப்பையாவும் இன்று போராட்ட ஒருங்கிணைப்பில் ஈடுபட்டனர். தோழர்கள் தவமணி உள்ளிட்டவர்கள் முன்னின்றனர். RYA அமைப்பாளர் தோழர் Ganesh Kumar மதுரை மாநகர ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.)

This entry was posted in Agriculture, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.