தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் காஷ்மீர் சமூக செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் உரையாடல்

எங்களுடைய போராட்டங்களை நாங்களே எதிர்கொள்ளும் உறுதியை காஷ்மீர் மக்கள் கொண்டுள்ளோம். ஆனால், இவ்வாறான ஒரு ஜனநாயகத்திலா இந்திய மக்கள் வசிக்க விரும்புகின்றனர்?”

5 ஜுன் 2017 அன்று அனைத்து இந்திய மக்கள் மன்றம் (AIPF) மற்றும் உழைக்கும் மக்களின் தொழிற்சங்க மய்யம் (WPTUC) இணைந்து ஒருங்கிணைத்த கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூக கூட்டமைப்பை (JKCCS) சேர்ந்த தோழர் குர்ரம் பர்வேஸ் காஷ்மீரின் விடுதலை போராட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இந்திய அரசாங்க எதிர்ப்பு குறித்த உரையை அளித்தார். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை (AICCTU, WPTUC, PTS) சேர்ந்த 100 தொழிலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். உழைக்கும் மக்களின் தொழிற்சங்க மய்யத்தின் (WPTUC) தலைமைச் செயலாளரான தோழர் துரைராஜ் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். துவக்க உரையில் தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், அங்கு நடப்பதை புரிந்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளதையும் அவர் வலியுறுத்தினார்.

Khurram Addressing Workers in Chennai

புதிய தொழிற்சங்கம் முன்னெடுப்பின் (NTUI) தலைமைச் செயலாளர் தோழர் கவுதம் மோடி, எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான போராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் குர்ரம் பர்வேஸ் தொழிலாளர்களுடன் உரையாடினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்ற 25 பேர் கொண்டக் குழுவில் கவுதம் மோடியும் சென்றிருந்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இராணுவத்தின் கொடுந்தாக்குதலுகளுக்கு ஆளாகும் காஷ்மீரிகளை இந்தக் குழு சந்தித்தது. சமீபத்திய போராட்டத்தை குறித்த அவர்களுடனான உரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் “காஷ்மீர் மக்கள் ஏன் போராடுகிறார்கள்?” என்ற ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கே காணலாம்.

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தோழர் கவுதம் மோடி தன்னுடைய உரையை தொடங்கினார். கடந்த எழுபது ஆண்டுகளாக நிகழும் போராட்டத்தின் வரலாற்றை இந்த அறிக்கை விவரிக்கிறது என்று கூறிய அவர், ஷேக் முகமது அப்துல்லா 1953-யில் கைது செய்யப்பட்டபோது முதன்முறையாக ஒரு ஜனநாயக அரசாங்கம் இந்தியாவால் நீக்கப்பட்டது என்றார். இது காஷ்மீர் விடுதலை போராட்டத்திற்கான தளத்தை அமைத்துக் கொடுத்தது. ண்பதுகளின் இறுதிவரை தொடர்ந்து நடத்தப்பட்ட இப்போராட்டம் இந்திய இராணுவத்தாலும் அரசு இயக்கிய கூலிப்படையினாலும் நசுக்கப்பட்டது.

ஆனால், போராட்டத்தின் தற்போதைய கட்டம் மாறுபட்டது என்று தோழர் மோடி கூறினார். ”இப்போது நடந்து கொண்டிருப்பது தீவிரமான ஒரு ஒத்துழையாமை போராட்டம் ஆகும். மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்த எதிர்ப்புணர்வு இன்று ஒட்டுமொத்த பகுதிக்கும் பாலினம் மற்றும் தலைமுறையையும் கடந்து பரவியுள்ளது” என்றார். தன்னுடைய கருத்தை உறுதிபடுத்தும் விதத்தில், இராணுவத்தால் கொல்லப்பட்ட சிறுவன் ஒருவனின் இறுதி ஊர்வலம் தாக்கப்பட்ட சம்பவத்தை அவர் கூறினார். “பழிவாங்கும் எண்ணத்துடன் இராணுவம் செயல்படுகிறது. ஆதலால், சிறுவனை கொன்றது போதாமல், உடைமைகளை திருடி, வீடுகளுக்குள் புகுந்து பிரிட்ஜ், டிவி ஆகியவற்றை உடைத்து, இறுதியாக ட்ரான்ஸ்பார்மர்களில் புல்லட்களை சுட்டனர். உதவிக்கு மின்சார வாரியத்தை அணுகாமல் கிராம் மக்கள் தாங்களாகவே அதை சரி செய்தனர். இது தான் உண்மையான ஒத்துழையாமை ஆகும்.” என்று கூறினார்.

மேலும், தீவிரமாக முஸ்லீம் எதிர்ப்பாளர்களாகவும் அரசாங்கத்தின் பரப்புரையான பாகிஸ்தான் கட்டவிழ்க்கும் தீவிரவாதம் என்பதை தொடர்ச்சியாக நம்பிவரும் மேல்சாதி இந்துத்துவ வாக்குவங்கியை பலப்படுத்த பிஜேபி தலைமையிலான அரசாங்கம் காஷ்மீர் பிரச்சினையை நிலுவையில் வைத்திருக்க முனைகிறது என்று கவுதம் மோடி கூறினார். இந்தத் தொடர் கூட்டங்கள் நடத்தப்படுவதின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், சுயநிர்ணய உரிமை மற்றும் தனி தேசக் கோரிக்கையை முன்னெடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்றார். இறுதியாக, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க விரிவான ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி முற்போக்கு சக்திகளிடம் கோரினார். ”இங்கே மக்கள் தொழிற்சாலைகளில் ஊதியப் போராட்டங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களையும் எதிர்கொள்கின்றனர். ஆனால் இந்தச் சிறு போராட்டங்கள் போதுமானதாக இருக்காது. காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேசியக் கோரிக்கையை முன்னெடுக்கவில்லை என்றால் நம்மால் ஒரு முற்போக்கு இடதுசாரி இயக்கத்தை அமைக்க இயலாது” என்று கூறினார்.

டாக்டர். பாலகோபால் தலைமையிலான உண்மை அறியும் குழுவில் 2008-யில் காஷ்மீருக்கு சென்ற அனுபவத்தை பேராசிரியர் அ.மார்க்ஸ் நினைவு கூர்ந்தார். 40 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அம்மாநிலத்தில் உலகிலேயே பெருமளவிலாக 8 லட்சம் இராணுவ வீரர்கள் அணிதிரட்டப்பட்டிருந்தனர். அவர்கள் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பது மட்டுமல்லாமல், பொதுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் போன்ற மோசகரமான சட்டங்களாலும் பாதுகாக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார். சமீபத்தில் இளைஞன் ஒருவன் ஜீப்பில் மனித கவசமாக பயன்படுத்தப்பட்டதைப் பற்றி பேசும் போது, அந்த இளைஞன் ஒரு தீவிரவாதியோ, கல் வீச்சு போராட்டத்தில் கலந்துக் கொண்டவனோ அல்ல, தன்னுடைய ஜனநாயக உரிமையை பூர்த்திச் செய்ய வாக்களிக்க சென்ற ஒருவனே என்றார். நாம் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளித்து பொது வாக்கெடுப்புக்கான கோரிக்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் கூறினார். இதற்கு, இந்திய அரசங்கத்தை அப்பகுதி (அரசியல்ரீதியான) பிரச்சினைக்குரிய நிலையில் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும், மற்றும் பிரிவினைவாதிகளுடனும் பாகிஸ்தான் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக வேண்டும். ”காஷ்மீர் பிரச்சினையை பிஜேபி, காங்கிரஸ் இருவருமே கையாளுவதில் எந்த மாற்றமும் இல்லை. சமீபத்திய இடைத்தேர்தலில் வெறும் 7 சதவீத வாக்குகள் தான் பதிவாகி இருந்தது. காஷ்மீர் மக்கள் இந்திய ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இழந்துள்ளனர்.” என மார்கஸ் கூறினார்.

தோழர் குர்ரம் பர்வேஸ், தன்னுடைய உணர்ச்சிமிக்க முடிவுரையில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற போர்வையில் கொலைகளை நிகழ்த்தும் இந்திய அரசாங்கத்தை எதிர்த்து இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் கேள்வி எழுப்பும் படி சவால் விடுத்தார். இலங்கையில் தமிழர்களின் ஈழப் போரட்டத்தையும் காஷ்மீர் போராட்டத்தையும் ஒப்பிட்டு பேசிய அவர், “ராஜபக்சே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை அறிந்த போது காஷ்மீர் மக்களால் அவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் பாதிப்புக்குள்ளானோம். ஆனால், இந்தப் பிரச்சினை சிறிதளவு சர்வதேச கவனத்தை பெற்றிருந்தது. ஐநா இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் எங்களுடைய போராட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாமல் அரசாங்கத்தின் குற்றங்களுக்கு நீதியளிக்க யாருமில்லை. இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்திய அரசாங்கம் ஐநாவிற்கு போர் நிறுத்த கோரிக்கையை எடுத்துச் சென்றது. அப்போது இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு நிலைமை சுமுகமான பிறகு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். இதைப் பூர்த்திச் செய்ய தீர்மானம் கூட நிறைவேற்றபட்டது ஆனால் இன்று வரை நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை. தன்னை ஒரு ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தி கொள்ளாத பாகிஸ்தானே காஷ்மீர் தன்னுடைய நாட்டின் பகுதி என்ற நிலையில் இருந்து பிரச்சினைக்குரியப் பகுதி என்ற அங்கீகரித்துள்ளது. ஆனால் ஜனநாயகம் என்று தன்னை கூறிக்கொள்ளும் இந்திய அரசாங்கம் காஷ்மீர் தன்னுடைய தேசத்தை சேர்ந்தது என்று கூறுகிறது.” என கூறினார்.

படைகளின் அணிவகுப்பு குறித்து பேசிய தோழர் பர்வேஸ், இராணுவத்தினர் உடனான தொடர்புகள் மூலமாகவே காஷ்மீர் மக்கள் நாட்டின் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளை புரிந்துக் கொள்ள முடிகிறது என்று கூறினார். மாநிலங்களை குறித்த காஷ்மீரிகளின் பார்வை அம்மாநிலங்களை சார்ந்த இராணுவத்தினரின் மிருகத்தன்மையை பொருத்து தான் உள்ளது. உலகிலேயே பெருமளவிலான இராணுவ அணிவகுப்பாக கிட்டதட்ட 7.5 லட்சம் இராணுவத்தினர் அந்தப் பகுதியில் ஒன்று திரட்டபட்டுள்ளனர். காஷ்மீர் போராட்டங்கள் குறித்து இந்திய ஊடகங்களின் தொடர்ச்சியான பொய் பரப்புரைகளாக இருப்பவை, அது தவறான பாதையில் தள்ளப்பட்ட சிறு இளைஞர் குழுக்களின் மத்தியில் மட்டுமே குறுகியிருக்கிறது மற்றும் பாகிஸ்தானால் கட்டவிழ்க்கப்படுகிறது எனும் கூற்றுகளை பர்வேஸ் நிராகரித்தார்

அவர், “இதனுடன், சட்டசபை மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் அவ்வபோது நிகழ்த்தப்படும் போது அதில் வாக்களிப்பதால் காஷ்மீரின் மேல் இந்தியா உரிமைக்கோருவதை நிரூபிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார். “காஷ்மீரிகள் வாக்களிப்பது ஒரு குறிப்பிட்ட கட்சி எங்களது பிரதிநிதிகளாக இருப்பதற்கும் ஆட்சி செய்வதற்கும் ஆகும். இது இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது என்பது அல்ல. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் அதிமுக அல்லது திமுகவிற்கு வாக்களித்தாலும் தனி தேசத்தின் தேவையை நம்புவது போல தான். இதுக் குறித்து கேள்வி எழுப்புவது முட்டாள்தனமாகும். நாங்கள் வாக்களிப்பதால் இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்புகிறோம் என்பதல்ல” என்று கூறினார்.

பல ஆயுத போராட்ட தலைவர்கள் விடுதலைக்கு அமைதியான பாதையை தேர்ந்தெடுத்து தேர்தல்களில் போட்டியிட்டனர் என்றும் அவர் கூறினார். ”ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை அமைத்த பல தலைவர்கள் முன்னர் தேர்தல்களில் போட்டியிட்டு, வெல்லவும் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு, சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டு, பதவியை விட்டு விலக்கப்பட்டனர் 1987-யின் தேர்தல்களில் மிக அப்பட்டமாக மோசடி செய்யப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் இவ்வித நடவடிக்கைகள் தான் காஷ்மீர் மக்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்ததற்கு காரணமாக இருந்து அவர்களை ஆயுதம் ஏந்த செய்தது.” என்று அவர் கூறினார்.

கொடூரமான வன்முறை சம்பவங்களை விவரித்த அவர், இது வரை 70,000 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார். அதில் 20,000 பேர் கூலிப்படையினர் என்று இந்திய அரசாங்கம் கோருகிறது. இந்த கணக்கில் அப்பாவி மக்கள், மற்றும் போலி என்கவுண்டர் போன்றவற்றில் கொல்லப்பட்டவர்கள் அடங்கியிருப்பார்கள் என்பதால் இதை நம்ப இயலாது. 8000 நபர்கள் காணாமல் போயுள்ளனர். பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிகழ்த்தப்படும் வன்புணர்ச்சி மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் 7000-த்திற்கும் அதிகமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலும் நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை. பிப்ரவரி 1993-யில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் 50-ற்கும் மேற்பட்ட பெண்கள் இராணுவத்தினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். சம்ந்தப்பட்ட வழக்கு பல வருடங்களாக நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை சட்ட அமைப்புகள் எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட ஒரு மனுவிற்கு அளித்த பதிலின் படி காஷ்மீரிகளுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு இது வரை ஒரு இராணவத்தினர் கூட தண்டிக்கப்படவில்லை. “ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு சட்டம் இராணுவத்தின் மன உறுதியை அதிகரிப்பதற்கு தேவையானவை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் செய்த குற்றங்களை தண்டிப்பது எப்போது? வன்புணர்ச்சியும் அவர்களது கடமைகளில் ஒன்று என்று எடுத்துக் கொள்வதா? மனிதர்களை கவசங்களாக பயன்படுத்துவது போன்ற செயல்களை அராசங்கம் நியாயப்படுத்துவது மட்டுமல்லாமல் அவற்றை கொண்டாடி வருகிறது. போர் குற்றங்களை கொண்டாடும் ஒரு நாட்டை எவ்வாறு ஜனநாயகமாக கருத முடியும்”, என்று தோழர் பர்வேஸ் கூறினார்.

இந்திய மக்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் இந்திய அரசாங்கம் நிகழ்த்தும் குற்றங்களை எதிர்ப்பதற்குமான நேரம் வந்துவிட்டது என்ற கடுமையான எச்சிரிக்கையுடன் தோழர் குர்ரம் தன்னுடைய உரையை முடித்தார். ”காஷ்மீரிகள் எங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் உறுதியை கொண்டுள்ளோம். ஆனால், உங்களுடைய எதிர்காலத்தை கருதி நீங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். காஷ்மீரில் மக்களை ஒடுக்க கற்றுக்கொண்ட அரசாங்கம் நாட்டின் பிற பகுதிகளிலும் அதை செயல்படுத்தும். ஆதலால் காஷ்மீருக்காக இல்லையென்றாலும் இந்தியாவை காப்பாற்ற போராட்டாத்தில் இணைந்து கொள்ள உங்களிடம் முறையிடுகிறேன்”, என்று கூறினார்.

முன்னர் ஜுன் 4 அன்று இளங்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்த ஒரு பொதுக்கூட்டத்தில் தோழர் குர்ரம் உரையளித்தார். இதற்கு பல ஐ.டி ஊழியர்கள் வருகை தந்திருந்தனர். அந்த இயக்கத்துடன் சம்ந்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புகள் காஷ்மீர் குறித்த அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்களை முன்னெடுத்து செல்வதென முடிவெடுத்தது.

This entry was posted in News, Political Economy and tagged , , , , , , , , . Bookmark the permalink.