போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பழிவாங்கல் நடவடிக்கை

ஆயிரக்கணக்கான தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் தொழிலாளர்கள் மே மாதத்தில் வெற்றிகரமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து போக்குவரத்து கழகப் பணிகள் ஸ்தம்பித்தன. அதன் எதிரொலியை தொழிலாளர்கள் உணர ஆரம்பித்துள்ளனர். வேலை நிறுத்தம் தொடராமல் இருப்பதற்கு தொழிலாளர்களுக்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு மாநில அரசு 1250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக உறுதி செய்திருந்தது. இத்தொகை செலுத்தப்பட்டுவிட்டாலும், இன்னொரு பக்கம், தொழிலாளர்களின் போராட்ட குணத்தை அடக்குவதற்கான முயற்சியில் மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் இறங்கியுள்ளனர். போராட்டத்தில் உற்சாகமாக ஈடுபட்டத் தொழிலாளர்களை பொய் வழக்கு போட்டு பணி இட மாற்றம் செய்தும் தற்காலிக வேலை நீக்கம் செய்தும் தொழிலாளர்களைப் பழி வாங்கி வருகின்றனர். சிஐடியு தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சேதத்தை தடுத்தல் பிரிவின் கீழ் 226 தொழிலாளர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 47 தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் தருவாயில், சில அடிப்படை பிரச்சனைகள் களையப்படாமல் உள்ளது.


தொழிலாளர் கூடத்தில் ஏற்கனவே பதிவு செய்தபடி, முதல் முறையாக வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் ஊதியத்திற்காகவோ அல்லது போனஸிற்காகவோ நடைபெறவில்லை. மாறாக தொழிலாளர் நிலுவைத் தொகை 7000 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து மீட்பது நோக்கமாக இருந்தது. ஓய்வூதியம், வைப்பு நிதி, தொழிலாளர்கள் கடன் சொஸைட்டிக்கு பணம் செலுத்துதல், பணிக்கொடை, பஞ்சப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு போன்ற பல தொழிலாளர்களின் உரிமை நலன்களில் போக்குவரத்துக் கழகம் போதுமான தொகை செலுத்தாமல் வந்துள்ளதால் ஏற்பட்ட பாக்கியாகும். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வென்றெடுப்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் எஸ்மா சட்டத்தின் கீழ் போராட்டத்தை முறியடிக்க நீதிமன்றமும் அரசும் முயற்சி செய்ய, அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இப்பேச்சுவார்த்தையின் கீழ் அரசு 1250கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கீடு செய்ய ஒத்துக் கொண்டது. மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் தற்போது பணிபுரியும் தொhழிலாளர்களின் பஞ்சப்படி நிலுவையையும் தீர்ப்பதற்கு அரசு ஒதுக்கீடு செய்த தொகை பயன்படுத்தப்பட்;டது.
சிலத் தொழிலாளர்கள் இதனால் அதிருப்தியுற்றுள்ளனர் என சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் சந்திரன் கூறினார். தொழிற்சங்கத்திற்கு அப்பால் தொழிலாளர்கள் ஒன்றுபட்டனர், முழுமையாக தொகையை பெறும் வரை போராட அவர்கள் தயாராக இருந்தனர், ஆனால் அரசு ஏற்கனவே ஒதுக்கீடு செய்த தொகையை உயர்த்தி தர ஒத்துக் கொண்ட போதும் மற்ற பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயாரான போதும் வேலை நிறுத்தத்தை தொடர்வது சரியல்ல என அவர் கூறினார். இது போக்குவரத்துக் கழகத்தின் நிதி நிலைமை பற்றிய பிரச்சனை என்றும் இது குறித்து அரசின் கொள்கையை மாற்றாமல் மற்ற எதுவும் செய்ய முடியாது என்று சிஐடியு தலைவர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி எஸ்மா சட்டத்திற்கு அஞ்சி தாங்கள் வேலை நிறுத்தத்தை முடிக்கவில்லை, பிரச்சனைகளை களைய நெடிய பேச்சு வார்த்தை நடத்த வேண்டியுள்ளது அதனால் தான் வேலை நிறுத்தத்தை முடித்து கொண்டோம் என அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே அவர்கள் நீதிமன்றத்தின் ஒரு தலை ஆணையை எதிர்த்து கண்டனம் செய்துள்ளனர். மேலும் சிஐடியு மற்றும் எல்பிஎஃப் தொழிற்சங்கங்கள் மதுரை வளாக நீதிமன்ற ஆணையை எதிர்த்துள்ளனர். அதனால் நீதிபதி ஆணையை திரும்பப் பெற வேண்டியதாகியது. ஆனால் தொழிலாளர்கள் அரசு இயந்திரத்துடனும் போக்குவரத்துக் கழகங்களுடனும் நேரடியாக மோதாமல் காலம் தாழ்த்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகள் களையப்படுமா என்பது சந்தேகமே.
ஒரு பக்கம் தனது வாக்குறுதியை பூர்த்தி செய்துள்ள அரசு, இன்னொரு பக்கம் தொழிற்சங்க பிரதிநிதிகளை திட்டமிட்டு பழி வாங்கி வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு(TTSF) தொழிற்சங்கத்தைச் சார்ந்த தோழர் பத்மநாபன் மற்றும் தோழர் மணிவண்ணன் ஆகியோரை பொய் வழக்கில் தற்காலிக பணிநீக்கம் செய்து வருகிறது. தங்களுடைய பராமரிப்பு பணியை செய்யவில்லை என்பதால் ஒரு பஸ் செயலிழந்தது எனக் கூறி இருவருக்கும் ஓழுங்கீன அறிவிக்கையை கழக நிர்வாகம் தந்துள்ளது. அதே போல் பல தொழிலாளர்கள் தொலை தூர இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தங்கள் உடல்நிலை காரணமாக எளிதான வேலையை செய்து வந்த சில மூத்தத் தொழிலாளர்களுக்கு சிரமம் மிக்க வேலை கொடுக்கப்பட்டு வருகிறது. சிஐடியு தோழர் பக்தவத்சலம் கூற்றுப்படி, வேலை நிறுத்தம் விடுமுறையாக கணக்கிடப்பட வேண்டும் என அரசும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒத்துக் கொண்டனர் ஆனால் பலத் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுடைய ஊதிய உயர்வு மற்றும் பணி நலன்கள் பாதிக்கப்படும்.
சிஐடியு மாநிலக் குழு துணைத் தலைவர் தோழர் காளியப்பன் கோவையில் உள்ளார். இப்பிரச்சனைகளுக்கு காரணமாக அவர் மாநில அரசு அதிமுகவைச் சார்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவையை சுட்டிக் காட்டுகிறார். கோவை கழக மண்டலத்தில் 18 தொழிலாளர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு 47 நாட்களுக்கு பின்னர் பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நடவடிக்கைகளை கைவிடாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம் செய்வோம் என நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தான் தொழிலாளர்களை அடையாளம் காட்டி இந்நடவடிக்கைகளை தூண்டுவதாகவும் குறிப்பாக அனுபவமில்லா ஒப்பந்தத் தொழிலாளர்களை குறிவைத்து நிரந்தரம் செய்ய பணம் கோருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலை நிறுத்தத்திற்கு பின்னர் கழக நிர்வாகிகள், போக்குவரத்து செயலாளர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே 5-6 பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை வைப்பதில் பிரயோஜனம் இல்லை என தொழிற்சங்கத் தலைவர்கள் கருதுகின்றனர். தற்போது போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம் மற்றப் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள ஊதியத்திற்கு தகுந்தவாறு குறிப்பாக மின்சார வாரியத்திற்கு தகுந்தவாறு வர வேண்டும் என்றால் ஊதியம் 50 சதமாக உயர வேண்டும் என தோழர் காளியப்பன் கூறுகிறார். ஆனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு இடையே உள்ள நிதி பற்றாக்குறையை அரசு தீர்க்காமல் இது சாத்தியமல்ல என சிஐடியு கருதுகின்றனர். அவ்வாறு ஊதிய உயர்வு கேட்கும் பட்சத்தில் அது தொழிலாளர்களின் மற்ற பணப்பயன்களில் இருந்தே கொடுக்கப்படும் என அவர்கள் கருதுகின்றனர். 14 ஜுலை அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓய்வுபெற்றத் தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் மற்றத் தொகைகளை அவர்கள் ஓய்வு பெறும் நாளில் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கழக இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என TTSF பிரதிநிதிகள் கூறியுள்ளனர். மேலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம் என்றும் போக்குவரத்து துஐற மற்றும் நிதித் துறை செயலாளர்களை சந்திக்க தொழிற்சங்கம் முடிவெடுத்துள்ளனர்.

This entry was posted in News, Public Sector workers, Strikes and tagged , , , . Bookmark the permalink.