போராட்ட யுக்திகள் குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் விளக்கம்

மே மாதத்தில் நடைபெற்ற மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்;துக் கழக நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் மாற்றம் ஏற்படாத நிலையில் தொழிலாளர்களின் மத்தியில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளி;ப்பதற்கும் போராட்ட பாதையை விளக்கவும் மண்டல வாரியாக தொழிற்சங்கங்கள் விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர். ஜுன் 29 அன்று சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப், ஹெச்எம்எஸ், எல்பிஎஃப், ஏஏஎல்எல்எஃப், எம்எல்எஃப்,பிடிஎஸ், டி.டபுள்யு.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போக்குவரத்து தொழிலாளர்களின் 3 முக்கிய கோரிக்கைகளை கூட்டம் வலியுறுத்தியது.
1. போக்குவரத்து கழகத்தில் வருவாயிற்கும், செலவுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பற்றாகுறையை அரசு கொடுக்க வேண்டும்.
2. 2003க்கு பின் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பிஎஃப் மற்றும் ஓய்வூதியம் முறைப்படுத்த வேண்டும்.
3. அனைத்து தொழிலாளர்களுக்கும் 50சத ஊதிய உயர்வு

 

 

 

 

 

 

 

 

தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகள் உள்ளதாகவும் அவற்றிற்கு விளக்கம் அளிப்பதற்கு இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிஐடியுவின் தோழர் நாய்னார் கூறினார். பேச்சுவார்த்தை ஏன் நடந்து கொண்டே இருக்கிறது? எப்போது முடியும்? வேலை நிறுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்போது நாம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே? ஏன் பென்ஷன் பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்கிறீர்கள்’ என்ற கேள்விகள் தொழிலாளர்கள் மத்தியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து ஆமோதித்தனர்.

மே மாதத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் பிண்ணனியை தோழர் நாய்னார் விவரித்தார். கடந்த நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை போக்குவரத்து கழகம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திற்கு தொழிற்சங்கங்கள் சமர்ப்பித்தன. பிப்ரவரி வரை அரசு இதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அப்போது அரசியல் நிலவரம் குழப்பத்தில் இருந்ததால் தொழிற்சங்கங்கள் இப்பிரச்சனைக்கான போராட்டங்களை தள்ளி வைத்தனர். பிப்ரவரியில் அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என்று தெரிந்த பின்னர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்தனர். தொழிலாளர் நிலுவைத் தொகையை சரிசெய்யாமல் எந்த பேச்சுவார்த்தையையும் முன்னெடுப்பதில்லை என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முடிவெடுத்திருந்தனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இது குறித்து பிரச்சாரங்களும் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஏப்ரல் மாத பட்ஜெட் அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவைத் தொகைக்கு எந்த ஒதுக்கீடும் மாநில அரசு செய்யாத நிலையில் தொழிற்சங்கங்கள் மே மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால் அரசு 37 தொழிற்சங்கங்களில் 27 தொழிற்சங்கங்களை போராட்டத்தில் பங்கேற்ற மறுக்குமாறு நிர்ப்பந்தப்படுத்தியது.

வேலை நிறுத்தம் மகத்தான போராட்டமாக இருந்தது என தோழர் நாய்னார் குறிப்பிட்டார். பொதுத் தளங்களில் மக்களின் ஆதரவும், சமூக வளை தளங்களில் மாணவர்கள் ஆதரவும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தன. மக்களின் ஆதரவு பெருகியதால் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசுவதற்கு அரசு முன்வந்தது. அரசு தொழிற்சங்கங்களுடன் பேசுவதற்கு முன்வந்ததால் வேலை நிறுத்தத்தை அறிவித்த 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்தத்தை தள்ளிப்போட முடிவு செய்தனர். போராடும் தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அஞ்சி தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டதாக நிலவும கருத்து உண்மையல்ல என தோழர் நாய்னார் கூறினார். சிஐடியு மற்றும் எல்பிஎஃப் தொழிற்சங்கங்கள் எஸ்மா சட்ட ஆணையை எதிர்த்து உடனே தாக்கல் செய்ததாகவும் அதனால் நீதிமன்றம் ஆணையை மீண்டும் வாபஸ் பெற்றதையும் அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் அன்றாட பிரச்சனைகள் பலவற்றை சந்தித்து வருவதாகவும் தோழர் நாய்னார் குறிப்பிட்டார். இது குறித்து பிடிஎஸ் மற்றும் ஏஏஎல்எஃப் போன்ற மற்ற சங்கப் பிரதிநிதிகளும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொழிலாளர்கள் அன்றாட பிரச்சனை குறித்து கருத்துரையாற்றினர.; குறிப்பாக சமீபத்தில் ஒரு மயில் பறந்து வந்து இடித்தததில் ஒரு பேருந்து கண்ணாடி உடைந்த சமயத்தில் போக்குவரத்து கழக நிர்வாகிகள் பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்தனர். தொழிற்சங்கத்திற்கும் போக்குவரத்து கழகத்திற்கும் இடையே தொழிலாளர்கள் பணியை வரைமுறை செய்வதற்கு 107 ஷரத்துகள் உள்ளதாகவும் ஆனால் போக்குவரத்து கழகம் இவற்றை செயல்படுத்துவதில்லை என தோழர் நாய்னார் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பிய பிடிஎஸ் தொழிற்சங்கப் பிரதிநிதி எண்ணூர், தொண்டையார்பேட்டை மற்றும நாகப்பட்டினத்தில் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டார். இதற்கு பதிலாக போக்குவரத்து தொழிலாளர்களை தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு உள்ள பிரச்சனைகளை களையாமல் உள்ள போக்குவரத்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை செல்வதை விட்டு விட்டு போக்குவரத்து கழகம் தொழிலாளர்களுக்கு யோகா வகுப்புகளை எடுப்பதை அவர் கண்டித்தார். தொழிலாளர்கள் அன்றாட பிரச்சனைகள் குறிப்பாக பேருந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான நேரம் மிக குறைவாக உள்ளது குறித்து பல தொழிலாளர்கள் குறை கூறினர். உதாரணமாக இன்றைய போக்குவரத்து நெரிசலில் கூடுவாஞ்சேரிக்கும் பிராட்வேக்கும் இடையே பேருந்தை இயக்குவதற்கு 2.5 மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது கொடுத்துள்ள நேரம் 80 நிமிடங்களே. தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சனைகளை களைவதில் சிக்கல் உள்ள நிலையில் தொழிலாளர்களின் அன்றாட பிரச்சனைகளை மட்டும் பேசாமல் தற்போதுள்ள நிலைமையையும் விளக்க வேண்டும் தோழர் நாய்னார் குறிப்பிட்டார்.

தற்போதைய பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது என்பதை தோழர் நாய்னார் விவரித்தார். தொழிலாளர்கள் நிலுவைத் தொகையை கட்டுவதற்கு போக்குவரத்து கழகத்தில் நிதி இல்லை என்று நிர்வாகிகள் கூறிவருவதாக அவர் குறிப்பிட்டார். வேலை நிறுத்தத்தின் போது நிதிப் பற்றாகுறையை தீர்க்க 3 மாத கால அவகாசம் கேட்டதாகவும் அதனால் கால அவகாசம் முடியும் போது (ஆகஸ்ட் 15) அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் முடிவு செய்யும் என அவர் கூறினார். தற்போது போராட்டம் சரியான பாதையில் செல்வதாக அவர் கூறினார்.

தொழிலாளர் கூடத்துடன் பேசிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றி என்றும் பொது மக்களின் ஒத்துழைப்பிற்கு இன்றியமையாத பங்கு இருந்தது என்றும் கூறினர். ஆனால் பேச்சுவார்த்தை தங்களுக்கு சாதகமான தீர்வை தரும் என்று தொழிலாளர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ஓய்வு பெற்ற ஒரு தொழிலாளர் அரசு மாறினால் ஒழிய தீர்வு வராது எனக் கூறினார். இன்னொரு தொழிலாளர் அரசு மாறினாலும் இதற்கு தீர்வு இல்லை என்று கருத்துரைத்தார். முன்னர் ஆட்சியில் இருந்த கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் மேடை மேல் அமர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக 50சத ஊதிய உயர்வை கொடுத்து விடுவார்களா என்று கேட்டார்.

சென்னையில் நடந்த விளக்கக் கூட்டத்தில் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். மேலும் பேச்சுவார்த்தை மூலம் அரசு காலம் தாழ்த்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த விளக்கக் கூட்டம் மூலம் தொழிலாளர்கள் பேச்சு வார்த்தையின் உண்மை நிலவரத்தை அறிய முடிந்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இணையாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டகாரர்கள் மாநிலத்தின் அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு தங்கள் போராட்டத்தை அரசின் நலனிற்காக தள்ளிப்போடவில்லை என்பதையும் தொழிற்சங்கங்கள் கவனம் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களின் அன்றாட நிலைமையை குறித்தான செயல்களிலும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக தொழிலாளர் நலன்கனை காப்பதற்கு 100க்கான ஷரத்துகள் இருந்தால் அவை குறித்து தொழிலாளர்கள் மத்தியில் பயிற்சியளித்து அவற்றை நடைமுறை செய்வதற்கான தளத்தை தொழிந்சங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். இல்லெயெனில் இதன் தாக்கம் தொழிலாளர்கள் மேல் மட்டுமல்ல அன்றாட போக்குவரத்தை நம்பியுள்ள பொதுமக்களின் மேலும் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறிப்பாக தொழிலாளர்களின் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இவை தொடர்ந்தால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உள்ள பலவீனமான உறவை உடைக்கக்கூடும். குறிப்பாக இன்று அரசு மற்றும் நிர்வாகத்தை சார்ந்த குறுகிய சாதிய மனப்பான்மையுடைய தொழிற்சங்க சக்திகள் இதையே சாக்காக கொண்டு தங்களுடைய நலன்களுக்காக தொழிலாளர்களின் போராட்டங்களை கைப்பற்றும் நிலைமையும் உள்ள சூழ்நிலையில் இவ்வாறான முயற்சிகள் முக்கியமாகும்.

 

This entry was posted in News, Public Sector workers, Service Sector, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.