தன்னம்பிக்கை அற்ற வேலைநிறுத்தமும், உடனடி பின்வாங்கலும்: தொழிலாளர் துறை தலையிட்டவுடன் FEFSI  வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றது!

ஆகஸ்ட் 1 முதல் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம்   (FEFSI) காலவரையறையற்ற  போராட்டத்தில் இறங்கியது. சம்பள ஒப்பந்தத்தின்படி தமிழ்நாடு படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்று அது கோரியது.  24 வகைப்பட்ட தொழில்களைச் செய்யும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்புதான் FEFSI. அதில் இணைந்துள்ள உறுப்பு சங்கங்கள் இயக்குநர்,  நடனக் கலைஞர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டிங், சண்டைப் பயிற்றி, ஒலித் தொழில்நுட்பம், கதை- வசனம், ஒப்பனை, விளக்குகள் அமைப்பு, ஓட்டுநர்கள் என்ற பல்வேறு கலை-தொழில்நுட்ப கலைஞர்கள் – தொழிலாளர்களின் சங்கங்கள் ஆகும்.

இந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை, வேலையளிப்பவர், அல்லது முதலாளி என்றான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (TNPC) சம்பள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான ‘பொது நிபந்தனைகளை‘ ஒப்புக்கொள்ள மறுத்தது. FEFSI  உறுப்பினர்கள் வேலை செய்யும் நேரத்தையும், பணிக்கான நிபந்தனைகளையும்  ‘பொது நிபந்தனைகள்‘ வரையறுக்கின்றன. FEFSI உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் சினிமா தயாரிப்பின்போது வேலைக்கமர்த்திக்கொள்வோம் என்று TNPC சொன்னது. இந்தக் கூற்றால் எச்சரிக்கையடைந்த FEFSI  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. அதேசமயம்  இப்பிரச்சனையைத் தொழிலாளர் நலத்துறையின் சமரசப் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் சென்றது. மூத்த நடிகரான ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களின் தலையீட்டிற்குப் பின்பு, சமரச பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதை உறுதி செய்த பின்னர், ஆகஸ்ட் 3 அன்று வேலை நிறுத்தம் திரும்பப்பெறப்பட்டது.

ஒரு படப்பிடிப்பின்போது, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தயாரிப்புக்குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றின் பின்னர் பிரச்சனை ஆரம்பித்து, விரைவாக, FEFSI  மற்றும் TNPC என்ற இரண்டு சங்கங்களுக்கிடையிலான பிரச்சனையாகச் சுழன்று எழுந்தது என்றுப் பத்திரிகை செய்திகளைப் பார்க்கும்போது தெரிகிறது. பிரச்சனையின் மையம், கால் ஷீட் என்று சொல்லப்படும் வேலை நேரம் ஆகும். 8 முதல் 9 மணி வரையிலான வேலை நேரம் ஒரு கால்ஷீட் என்பது தற்போதைய நிலையாகும். அதனை 12 மணி நேரம் என்று அதிகரிக்க வேண்டும் என்று TNPC விரும்புகிறது இதனை FEFSI ஒப்புக்கொள்ளவில்லை. தொழிலாளர்களின் சம்பளம் குறைந்துவிடும் என்று வாதிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் வேலை நிறுத்தத்தினால் பாதிப்புக்கு ஆளானது. அவர் வேலை நிறுத்தத்திற்கு எதிராகப் பேசினார். மோதிக்கொள்ளும் இரு தரப்பும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கத் தொழிலாளர் துறை ஒப்புக்கொண்டது. இந்தக் காரணங்களைக் காட்டி, FEFSI விட்டுக்கொடுத்து வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. வேலைநிறுத்தத்தினால் 40 படங்கள் பாதிப்புக்கு ஆளாகின. சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை வேலைக்கமர்த்தி படத் தயாரிப்புகள் நடக்கலாம் என்ற அச்சுறுத்தல் FEFSI  வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றதற்கான காரணம் என்று விவரமறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. மேலும், FEFSI யின் முக்கியமான நான்கு உறுப்புச் சங்கங்களான இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம்,சண்டைப் பயிற்சியாளர்கள் சங்கம், நடனக் கலைஞர்கள் சங்கம் ஆகியவை இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கவில்லை.

வரும்நாட்களில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் சூழலில் பலன் தரும் வகையில் தயாரிப்பாளர்களுடன் FEFSI யால் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா என்பது தெளிவற்ற ஒன்றாக இருக்கிறது. ஏற்கனவே ஆகஸ்ட் 17 அன்று வேலை நிறுத்தத்திற்கு தூண்டுகோலாக இருப்பதாக FEFSI கருதும் டெக்னீஷியன் தொழிற்சங்கத்தை பெப்சி கூட்டமைப்பில் இருந்து நீக்கியுள்ளது. ஆனால் FEFSIயின் தொழிற்சங்க அமைப்பை முடக்குவதில் தயாரிப்பாளர்கள் அமைப்பு குறியாக உள்ளது. ஆகஸ்ட் 21 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் தொழிற்சங்கத்தை விட்டு தொழிலாளர்களுக்கான ஊதிய நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்கள் நலனிற்காக தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை பறிக்க தயாராகி விட்டார்கள் என்பது தெளிவாகிறது.

வேலை நிறுத்தம் வாபஸ் செய்வதைப் பற்றி FEFSI தலைவரின் பதிவை இங்கு கேட்கலாம்.

தயாரிப்பாளர்கள் தரப்பு முன்வைக்கும் பிச்சனைகள்

“இந்தியாவில் சினிமா தயாரிப்பு செலவு அதிகமாக இருப்பது சென்னையில்தான்“, என்று இளம் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஒருவர் சொன்னார். திரைப்பட தயாரிப்பு நடக்கும் பிற பிராந்திய மையங்களான, பாலிவுட், டோலிவுட்  ஆகியவற்றைவிட கோலிவுட்டில் செலவு அதிகமாக இருக்கிறது என்பதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார். கதாநாயகப் பாத்திரத்தை நடிக்கும் நடிகருக்கான ஊதியச் செலவு தமிழ் சினிமாவில் அதிகம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஒட்டுமொத்த படத் தயாரிப்புச் செலவில் கணிசமான ஒரு பகுதி கதாநாயக நடிகருக்குப் போய்விடுகிறது.

FEFSI போடும் விதிகள் சிறிய செலவில் படமெடுக்கும் சிறிய தயாரிப்பாளர்களை வெளியே தள்ளிவிடுகிறது என்று அந்தத் தயாரிப்பாளர் வலியுறுத்திச் சொன்னார். “தொழில்நுட்பக் கலைஞர்களையும் பிற வகைப்பட்ட தொழிலாளர்களையும், அவர்களின் திறனோ அல்லது வேலையோ தேவையில்லாத சமயத்தில் கூட பயன்படுத்த வேண்டும் என்று FEFSI நிர்ப்பந்தம் செய்கிறது. உதாரணமாக, ஒப்பனைக் கலைஞர் தேவையில்லாத சமயத்தில் கூட, அவர்களில் சிலருக்கு வேலையளிக்க வேண்டும் என்று அவர்களின் யூனியன் வலியுறுத்துகிறது. அதன் காரணமாக வேலை செய்யும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுகிறது. செலவு கூடுகிறது“, என்று அவர் சொன்னார்.

“மேலும், அவர்கள் தங்கள் யூனியனின் ஆட்களைத்தான் வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அது மிகவும் பிரச்சனைக்குரிய ஒன்று. குறிப்பாக, நாங்கள் வெளியூரில் படப்பிடிப்பு செய்யும்போது இது இன்னும் பிரச்சனைக்குரிய ஒன்றாகிறது“, என்று அந்த இளம் தயாரிப்பாளர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் சார்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கியமான கோரிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் உரிமை.
  2. FEFSIயால் பரிந்துரைக்கப்படும் குறைந்தபட்ச தொழில்நுட்ப கலைஞர்கள்/ தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு கீழ்ப்படாமல் குறைந்தபட்ச தொழில்நுட்பக் கலைஞர்களை/ தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் உரிமை.
  3. ஒரு கால் ஷீட் என்பதை 12 மணி நேரத்துக்கு நீட்டிக்க வேண்டும். (நேரம் அதிகரிப்பதற்கு ஏற்ப பேட்டாவும் அதிகரிக்கப்படும்). இப்படிச் செய்தால், 8 மணி நேரத்துக்கு மேல் 1 மணி நேரம்  வேலை நீண்டாலும் 2 மடங்கு பேட்டா கொடுக்க வேண்டும் என்று  FEFSI தொழிலாளர்கள் கோருவது முடிவுக்கு வந்துவிடும்.
  4. பயணத்திற்கான பேட்டாவைக் குறைப்பது. (ஒரு தொழிலாளி 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணப்பட வேண்டியிருந்தால் கொடுக்கப்படும் கூலியைத்தான் பயணத்திற்கான பேட்டா என்று  குறிப்பிடுகின்றனர்).

கோரிக்கைகள் பற்றிய மதிப்பீடு

முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம், அத்துடன் மார்கெட்டிங் செலவுகள்தான் படத்தயாரிப்பில் கூடுதல் செலவாகும் பிரிவுகள் என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். தொழிலாளர் கூடத்திடம் பேசிய தயாரிப்பாளர்- நடிகர் தமிழ் திரைப்பட உலகின் நடிகரின் சம்பளம் மிக அதிகமானதாக இருப்பதாகக் கூறினார். நட்சத்திர நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களையும் உருவாக்கிக்கொள்வது சாதாரணமானதாக இருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள், பிற தொழில்களைச் செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மொத்த பட்ஜெட்டில் சிறு பகுதியாக இருக்கிறது. இருந்தபோதும், தயாரிப்பாளர்கள் சங்கம் தொழிலாளர்களிடமும் அவர்களின் சங்கங்களுடனும் நீண்ட காலமாக (ஊதியக் குறைப்புக்காக) மோதி வருகிறார்கள்.

பேட்டா தொகை விகிதம் பற்றியும், அதற்கான வழிகாட்டு விதிகளும் வேலை நேரத்தைப் பற்றியும் இன்ன பிறவற்றைப் பற்றியும் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் வரவிருக்கின்ற புதிய ஊதிய ஒப்பந்தத்தின்போது பேசிக்கொள்ளலாம். ஆனால் உறுப்பினர்கள் அல்லாதவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வதும், தயாரிப்பு நிர்வாகி தீர்மானிக்கும் எண்ணிக்கையில் வேலைக்கு ஆட்களை எடுப்பதும், தொழிலாளர்களின் பேரம் செய்யும் ஆற்றல் குறைவாக இருக்கின்ற படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அவர்களை ஆபத்துக்குத் தள்ளிவிடும். சிறு தயாரிப்பாளர்கள்  பாதிக்கப்படுகிறார்கள் என்பது தப்பிப்பதற்கான வாதம் மட்டுமே. கூலி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான FEFSI யின் திறனைக் குறைப்பதும், தன் உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஆற்றலை அழிப்பதும்தான் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முயற்சிகளின் சாரம்.

“குறைந்தபட்சம் இத்தனை பேரை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று FEFSI சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சில தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறைவு செய்வதற்காகக் கூடுதல் வேலை செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவதைத் தடுக்கத்தான் இப்படியொரு நிபந்தனை விதிக்கப்படுகிறது“, என்ற ஒளிப்பதிவாளர் ஒருவர் சொன்னார். ஒரு இயக்குநரோ அல்லது தயாரிப்பாளரோ ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு சில கலைஞர்கள், அல்லது தொழில்நுட்ப கலைஞர்கள் தேவையில்லை என்று வாதிடலாம். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் தங்களின் உதவியாளர்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதைத் தடுக்க எந்த வழியும் இல்லை. சிறிய செலவிலான படங்களின் தயாரிப்புச் செலவை, தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்த ஊதியம் அதிகரித்துவிடுகிறது என்பதை ஏற்றுக்கொண்டால், நிகழ்கால நிலைமைகளுக்கு ஏற்ப, தொழிலாளிகளைச் சுரண்டாமல், அந்த குறைந்த ஊதியம் பற்றியும், அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது, எதனைக் கொண்டு கண்காணிப்பது என்பனவற்றை FEFSIயுடன் பேசி வழிவகைகளைக் காண வேண்டும்.

FEFSI அல்லாதத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்வது என்ற TNPCயின் கோரிக்கை நயவஞ்சகத்தனமானது. படப்பிடிப்புத் தளத்தில் இரண்டு வகையான தொழிலாளர்கள் இருப்பார்கள் என்பதுதான் இதன் சாரம். ஒரு தரப்புத் தொழிலாளர்கள் FEFSIயின் உறுப்பினர்கள் என்பதால், பாதுகாப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்ற தரப்புக்கு அதுபோன்ற பாதுகாப்பு இருக்காது. உறுப்பினர்கள் அல்லாதவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டாம் என்று குறுகிய பாதையை FEFSI  உறுப்பினர்கள் மேற்கொண்டால், தயாரிப்பாளரும், தயாரிப்பு நிர்வாகிகளும், உறுப்பினர்கள் அல்லாதவர்களை அதிகமாகப் பயன்படுத்தி தங்களின் லாப அளவைப் பெருக்கிக்கொள்வார்கள். FEFSI உறுப்பினர்கள், படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிக்கொள்வது என்ற பரந்த அணுகுமுறையைப் பயன்படுத்தினால், FEFSI யின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் உறுப்பினர் தகுதி பொருளற்றதாகிவிடும். மேலும் மேலும் அதிகத் தொழிலாளர்கள் FEFSI  யிலிருந்து வெளியேறுவதைத் தேர்ந்தெடுப்பார்கள். இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் FEFSI யின் செயல்படும் திறன் குறைந்துபோகும். இப்படி எந்த வழியை FEFSI  தேர்ந்தெடுத்தாலும், தொழிலாளர்களைப் பிளப்பதன் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கம் பலன் பெறும். தயாரிப்பாளர்களின் ‘உரிமை‘ பற்றிப் பேசுகின்ற இப்பிரச்சாரம் தொழிலாளர் வர்க்க அமைப்பை உடைப்பதையும், தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதையும்  நோக்கமாகக் கொண்டது.

FEFSIயையும் அதன் உறுப்பு அமைப்புகளையும் மறுவடிவத்திற்கு மாற்ற வேண்டியதின் அவசியம்

பண  பாக்கி வைப்பது வழக்கமாகிப் போன இந்தத் தொழிலில் தொழிலாளர்களின் மாபெரும் பாதுகாப்பு அரணாக FEFSI தான் இருக்கிறது. தற்போதைய நிலையில் FEFSI யையும் அதன் உறுப்பு சங்கங்களையும் நீண்ட காலப்போக்கில்,  பாதிக்கும் நான்கு பிரச்சனைகள் முன்வந்துள்ளன.

குறைவான தயாரிப்புடனும், ஒத்த கருத்து குறைவான நிலையிலும் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நான்கு பிரதான சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை என்று காட்டுகிறது. அவர்கள் கலந்துகொள்ளாதது வேலைநிறுத்தத்தின் விளைவைப் பாதிக்கவில்லை, ஏறக்குறைய முழு வேலைநிறுத்தம் நடந்தது என்றாலும் கூட, தகவல் தொடர்பு பற்றாக்குறை இருந்ததையும், FEFSIக்குள் வெவ்வேறு தரப்பினரின் நலன்கள் குறித்து தெளிவாகப் பேசிக்கொள்ளவில்லை என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. தொழிலாளர் கூடத்திடம் பேசிய, பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு நடன உதவியாளர், “எங்களின் பிரச்சனைக்கும் வேலைநிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை. தொழில்நுட்ப  தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரச்சனை“ என்று சொன்னார்.

ஒப்பனைக் கலைஞர்கள் முதல் ஓட்டுநர்கள் வழியாக ஒளிப்பதிவாளர்கள், ஏன் இயக்குநர்கள் வரை உள்ள பல்வேறு தொழில்களின் கூட்டமைப்புதான் FEFSI. சம்பளத்தின் அளவு, அல்லது பல்வேறு பணிகளின் திறன் குறித்ததாக அல்லாமல், வேலையின் வகையினத்தின் அடிப்படையில் அமைப்பாகியிருப்பதால், FEFSI பிளவுண்டதாகவும், அமைப்பின் உள் தன்மையைப் பொறுத்தவரை மேலிலிருந்து கீழாக அதிகாரப் பரவல் கொண்டதாகவும் இருக்க நேர்கிறது.  மிக அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடன இயக்குநரும், ஒரு நாள் வேலைக்காக அலைய நேரிடும் நடனக் கலைஞரும் ஒரே சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த வேறுபாடுகள் அதிகரிக்கும்போது அவர்களின் நலன்களும் விலகிச் செல்ல ஆரம்பிக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஒரு யூனியனின் தலைமை அந்த யூனியனின் வெற்றிகரமாகத் தொழில் செய்யும் உறுப்பினருக்குப் போய் சேர்கிறது. இப்படி தலைமை பொறுப்புக்கு வருபவர், தயாரிப்பாளர்கள் மற்றும் பைனான்சியர்களின் நலன்களுக்குத் துணை போகிறவராக இருக்கிறார். அவர்களில் பலர் தயாரிப்பாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதும் நடைமுறை. இந்தச் சமரசத்தின் காரணமாக, பிரச்சனைகளை முறையாக எழுப்புவதற்கு மாறாக, ‘பேட்டா‘ பிரச்சனையுடனும், வராத சம்பளத்தை வாங்கித் தருவதுடனும் யூனியன்கள் முடங்கிப் போகின்றன.

இந்த யூனியன்களில் உறுப்பினர் ஆவதற்கான செலவும் மிக மிக அதிகம். உறுப்பினர் ஆவதைத் தடுக்கும் வகையில் நுழைவுக் கட்டணம் அமைந்துள்ளது. திரைப்பட தையல் கலைஞர் சங்கம், நடனக் கலைஞர்கள் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணம் பல லட்ச ரூபாய்களாக இருக்கிறது. FEFSI  அல்லது அதன் உறுப்பு சங்கங்கள் உறுப்பினரின் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய முடியாது என்ற நிலையில்,   உறுப்பினர்கள் நுழைவுக் கட்டணம் அதிகமாக இருப்பதும், வருமானத்திற்கு ஏற்ப மாறும் உறுப்பினர் கட்டணமும் அர்த்தமுள்ளவையாக இல்லை.

தற்போதைய படத் தயாரிப்பு முறைக்கு ஏற்ற, அதேசமயம், படைப்பு வெளியின் தன்மையை மேம்படுத்தும் வகையில், குறைவான செலவில் எடுக்கப்படும் படங்களுக்குத் தோதான வழிகாட்டு நெறிமுறைகளை FEFSI  உருவாக்கிக் கொள்வது தேவையானதாக இருக்கிறது. இந்த நோக்குநிலையில் நின்று கூலி மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஒப்பந்தங்களை FEFSI உருவாக்குவது அவசியமாகும். ஆனால், அப்படியான ஒன்றை நோக்கி முன்னேறும்போது, தற்போதிருக்கும் FEFSI  கட்டமைப்பு தரும் பாதுகாப்பைச் சிதைப்பதோ, அல்லது FEFSI யின் பாத்திரத்தைக் குறைப்பதோ கடுமையான தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவுதான் பல கோடி மதிப்புள்ள இந்தத் தொழிலையும் ‘யதார்த்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட‘ நட்சத்திரங்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால், திரைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பின்னால், அறியப்படாத தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது. தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் சினிமா நட்சத்திரங்கள் ஆகி, பின்னர் தயாரிப்பாளர்கள் ஆனவர்களை நம்புவதில் பயனில்லை. தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் முக்கியமானது தொழிலாளர்களின் மதிப்பைச் சினிமா ரசிகர்கள் உணர்வதும்,  தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பதும்தான்.

This entry was posted in Contract Workers, News, Strikes and tagged , , . Bookmark the permalink.