செவிலியர் கூட்டமைப்பின் கருத்தரங்கத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள செவிலியர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் பகிர்வு

தனியார் துறையில் ஒரு தொழிலாளர் வாங்கும் ஊதியத்தை விட பொதுத்துறையில் அதே பணியை செய்யும் தொழிலாளர் குறைவான ஊதியம் வாங்கும் நிலையில், உச்சநீதி மன்ற குழுவின் சம வேலைக்கான சம ஊதிய பரிந்துரையை எவ்வாறு செயல்படுத்துவது? இடதுசாரி அரசின் கீழ் உள்ள தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதியத்திற்காகவும், சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் வேலை நிறுத்தம் செய்ய நேரிடும் நிலை ஏன்? ஆகஸ்ட் 18 அன்று தமிழ்நாடு செவிலியர் கூட்டமைப்பின்(NJAC) சார்பில் சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்கத்தில் வெளிப்பட்ட சில கேள்விகள் ஆகும். இம்முரண்பாடுகளை ஆராய்ந்து செவிலியர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் பணிநிலைமைகளை கோரும் முயற்சியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

 

2011ம் ஆண்டில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம்(Training Nurses Association of India) நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது. தனியார் மருத்தவமனைகளில் உள்ள செவிலியர்களுக்கு தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்படுவதையும், மனிதநேயமற்ற தொழில்முறைகளையும் இது சுட்டிக்காட்டியது. 2016ல் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் இப்பிரச்சனைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உத்தரவிட்டது. செப்டம்பர் மாதத்தில் இக்குழு இது குறித்து அறிக்கையை வெளியிட்டு, தனியார் மருத்துவமனைகளில் செவிலியர் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்து சில பரிந்துரைகளை முன் வைத்தனர்.

செவிலியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ20000 மாத ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதியின் அடிப்படையில் இவை உயர்த்தப்பட்டு ரூ34800 வரை ஊதியம் கொடுக்கப்படவேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளதாக செவிலியர் கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் கூறுகிறார். உதாரணமாக 200க்கும் மேல் படுக்கைகள் உள்ள மருத்துவமனைகளில் இதே சேவைகளை கொடுக்கும் அரசு செவிலியர் ஊதியத்திற்கு இணையாக தனியார் துறை செவிலியர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது குழுவின் பரிந்துரையாகும்.

ஊதிய உயர்வு மற்றும் பணிநிலைமைகளுக்காக 2012ல் தமிழ்நாட்டில் அப்போலோ, MMM, விஜயா மருத்துவமனைகளில் செவிலியர்கள் போராடி வெற்றி கண்டனர். அதன் பின்னர் தனியார் துறை செவிலியர்கள், அரசு துறை செவிலியர் சங்கங்கள், பயிற்சியாளர் சங்கங்களை செவிலியர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திகிறது.
உச்சநீதி மன்ற கமிட்டியின் பரிந்துரையின் படி தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து பதிவு செய்யபட்ட செவிலியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ20000 வழங்க வேண்டும்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் Independent Nurses Practitoners Act இயற்றப்பட வேண்டும்.
அரசு துறை செவிலியர்களுக்கு உள்ளது போல, குடும்ப நல பயன், குழு காப்பீடு, ஓய்வூதியம், விடுமுறை, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் 5 லட்ச இறப்பு நிவாரணம் ஆகியவற்றை தனியார் துறை செவிலியர்களுக்கும் உறுதி செய்ய வேண்டும.
பயிற்சி பெறாத செவிலியர்களை வைத்து இயங்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் குறைகள் மற்றும் இடர்களை தீர்க்க மாவட்டரீதியான அதிகாரமிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். செவிலியர் பயிற்சி, விதி முறைகள் தொடர்பான அலுவல்கள் அடங்கிய இயக்ககத்தை(Directorate) நிறுவிடவேண்டும்.
அரசு செவிலிய ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் போல் தனியார் செவிலிய ஆசிரியர்களுக்கும் தர வேண்டும்.
தனியார் துறையில் பணிபுரியும் செவிலியர்கள் மீது திணிக்கப்படும் கட்டாய ஒப்பந்த முறை மற்றும் Bond Systems ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.
வருடந்தோறும் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதியக் குழு அகியவை தனியார் துறை செவிலியர்களுக்கும் உறுதி செய்ய வேண்டும்.
செவிலியர்களுக்கு 8 மணி நேர வேலை உறுதி செய்ய வேண்டும்.

தொழிலாளர் கூடத்துடன் பேசிய ஒரு ஆண் செவிலியர் பயிற்சியாளர், பயிற்சி பெறும் தொழிலாளர்கள் பலர் அரசு வேலை வாய்ப்பை எதிர் நோக்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டார். அவருக்கு தெரிந்த செவிலியர்கள் அரசு பணியில் 4-5 வருடங்களாக குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த முறையில் வேலை செய்வதாக அவர் கூறினார். மேலும் அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து எந்த தகவல்களும் தெரிவிப்பதில்லை என அவர் கூறினார்.

தனியார் துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ரூ7000-ரூ8000 மட்டுமே ஊதியம் என்றும் இதுவும் கிராமப்புறங்களில் ரூ3000-ரூ5000 மட்டுமே கொடுக்கப்படுகிறது என தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் கூட்டமைப்பு பொருளாளர் ஹெப்சீபா கூறினார். இவ்வளவு குறைவான ஊதியம் வாங்கும் செவிலியர்கள் 12 மணி நேரம் பணிபுரிய வேண்டியுள்ளது.

கட்டாய ஒப்பந்த முறை மற்றும் Bond சிஸ்டம்ஸ் தனியார் மருத்துவமனைகளில் இருப்பதாக அவர் கூறினார் வேலைக்கு சேரும் போது தங்களுடைய சான்றிதழ்களை வைத்துக் கொள்வதாகவும் பின்னர் அதை கொடுக்க மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2011 வழக்கில் இம்முறையை ஒழிக்க வேண்டும் என வழக்குதாரர்கள்(Trained Nurses Association of India) முறையிட்ட போது இம்முறை அழிக்கப்பட்டு விட்டதாக இந்திய நர்சிங் கவுன்சிலின் கூறியது. இதன் அடிப்படையில் 2011 வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் இக்கோரிக்கையை தள்ளுபடி செய்தது. ஆனால் நடைமுறையில் இன்னும் இம்முறை தொடர்கிறது என்பதை செவிலியர் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

முன்னர் அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணிக்கு சேர்த்து கொண்டனர் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் சங்கத்தின் பிரதிநிதி தோழர் கோபிநாத் கூறினார். இது தனியார் கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்களுக்கு எதிராக உள்ளது என ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்(MRB) மூலமாக தேர்ச்சி பெறும் அனைத்து செவிலியர்களும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தகுதி பெறுவர் என வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர், அரசு மருத்துவமனைகளி;ல் எம்.ஆர்.பி தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் பணிக்கு எடுக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்டு ரூ7000-8000 ஊதியமே பெறுகின்றனர் என தோழர் கோபிநாத் குறிப்பிட்டார். இதே பணியை செய்யும் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்றும் சம வேலைக்கு சம ஊதியம் என்பது நடைமுறையில் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஏஐடியுசி சார்பில் சுமார் 15000 தொழிலாளர்கள் பேரணி நடத்தியதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் முத்தரசன் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒரு சட்டத்தை இயக்குவதற்கு 10 வருடங்கள் ஆகின்றன எனக் கூறிய அவர் அதை ஒரளவுக்கு செயல்படுத்துவதற்கு இன்னொரு 10 வருடங்கள் வேண்டியுள்ளது எனக் கூறினார்.

1991ல் இருந்து திணிக்கப்பட்ட நவீன தாராளமயக் கொள்கையின் தாக்கத்தை விளக்க முயற்சித்தும் இடதுசாரிகளால் மக்களை நம்பவைக்க முடியவில்லை என அவர் கூறினார். நவீன தாராளமய வளர்ச்சியில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால் குறைந்த ஊதியத்திலும் மனிதத்தன்மையற்ற பணி நிலைமைகளிலும் பணி செய்ய தொழிலாளர்கள் தயாராகி விட்டனர்.

அரசு மருத்துவனைகளை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட முயற்சிகள் நடைபெறுவதாகவும், அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் செயல்களை கூட்டமைப்பு வலுவாக எதிர்க்க வேண்டும் என தோழர் முத்தரசன் கூறினார். எண்ணிக்கையில் பலம் இல்லை எனினும் இது ஒரு நெடிய போராட்டத்தின் ஆரம்ப கட்டம் என்று அவர் கூட்டமைப்பு முயற்சியை பாராட்டினார்.

அரசு மருத்துவமனைகளில் சேவைகள் தனியார்மயமாக்கப்படுவதை தொழிலாளர் கூடத்துடன் பேசிய தோழர் கோபிநாத் உறுதி செய்தார். மருந்தகம், பரிசோதனை சேவைகள், துணை செவிலியர் ஆலோசகர்(ANM) ஆகிய சேவைகளை அரசு தனியாருக்கு விட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார். மேற்கூறிய வழக்கு தீர்ப்பினால் அரசு செவிலியர் சேவைகளை ஒப்பந்ததாரரிடம் விடமுடியாது எனக் கூறிய அரசு மருத்துவமனை சேவைகளில் தனியார்மய முயற்சியில் பானியன், ஏகம் பவுண்டேசன் போன்ற அரசு சாரா அமைப்புகளும் உள்ளன எனக் கூறினார்.

2012ல் அப்போலோ மற்றும் இதர தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற போராட்டங்களை தோழர் ரவீந்திரநாத் நினைவு கூர்ந்தார். போராட்டத்தை முறியடிப்பதற்கு செவிலியர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் ஆகிய சேவைகளை மருத்துவமனை நிர்வாகங்கள் நிறுத்தினர், அவர்களை தங்கும் விடுதிகளில் இருந்து விரட்டியடித்தனர். ஆனாலும் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் 4500 ரூபாய் ஊதியம் பெற்று வந்த அவர்களுக்கு ரூ12500 வரை ஊதிய உயர்வு கிடைத்தது.

மாறாக தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இன்று ரூ7500 ஊதியமே பெற்று வருகின்றனர். இதனால் அரசு துறைக்கு ஈடாக தனியார் துறையிலும் ஊதியம் கோருவது தமிழிநாட்டிற்கு பொருந்தாது. மத்திய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ஈடாக மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஊதியம் தர வேண்டும் என தோழர் ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.

செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரினால் இது ஒரு புன்னிய சேவை என்றும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும் என முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் கூறுகின்றனர். தங்களுக்கு அனைத்தும் இலவசமாக கொடுக்கப்பட்டால் செவிலியர் சமூகமும் இலவசமாக சேவை செய்ய தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டார். செவிலியர் இயக்கத்தை வளர்ப்பதற்கு செவிலியர் பயிற்சி பெறும் மாணவர்களிடம் செல்ல வேண்டும் என அவர் கூட்டமைப்பை வலியுறுத்தினார்.

கேரளாவில் செவிலியர்கள் முறையான ஊதியம் கோரி வலுவான போராட்டம் ஒன்றை நடத்தினர். செவிலியர்களின் பிரச்சனைகளை இப்போராட்டம் வெளி உலகிற்கு பறைசாற்றியது. தனியார் மருத்துவமனைகளில் ரூ20000 குறைந்த பட்ச ஊதியத்தை தருவதாக நிர்வாகங்கள் ஒப்புக் கொண்ட பின்னர், போராட்டம் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் ஒப்பந்த முறையை திணித்து பொதுத்துறை தொழிலாளர்களின் ஊதியத்தை வெகுவாக குறைத்து, பொதுத்துறை பணி நிலைமைகளை பல ஆண்டுகளாக மாநில அரசு அழித்து வருகிறது. தற்போது, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், பஞ்சாயத்துகளில் பணிபுரியும் துப்புரவாளர்கள், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள், அரசு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்கள் பலர் தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களை விட குறைந்த ஊதியமே பெற்று வருகின்றனர்.

ஆனாலும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு அரசு துறை வேலை என்பதே கனவாக உள்ளது ஏனென்றால் இப்பணி நிரந்தரமாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையே. இவ்வாறு பல்வேறு தளங்களில் பல்வேறு நிலைமைகளில் பணிபுரியும் செவிலியர்களையும் செவிலியர் பயிற்சியாளர்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கான பொது தளத்தை உருவாக்கவும் ஒற்றுமையை வளர்க்கவும் செவிலியர் கூட்டமைப்பு முயற்சித்து வருகிறது.

This entry was posted in Contract Workers, News, Political Economy, Women Workers, Working Class Vision, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.