பெப்சிக்கும் (FEFSI ) தயாரிப்பாளர் சங்கத்திற்கும் எதிராக சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்

லைட்மென் சங்கமும், பின்னணிக் குரல் கலைஞர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துக் கலந்துகொண்டனர்.

20, செப்டம்பர் 2017

தென்னிந்திய சினிமா தொலைக்காட்சி அவுட்டோர் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் (South India Cine and TV Outdoor Technicians Union -Technicians Union) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. FEFSI யிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் நீக்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களின் பேட்டா மற்றும் சம்பளத்தைத் தயாரிப்பாளர்கள் குறைக்கக் கூடாது என்று கோரியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. செப்டம்பர் 1 முதல் மேற்சொன்ன இரண்டு காரணங்களால் வெளிப்புற படப்பிடிப்பு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலைக் கிடைக்கவில்லை. அவர்களில் 400 பேர் சென்னையின் வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு ஆதரவு அளித்தது. தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தம் கட்சி ஆதரவாக இருக்கும் என்றும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் சொன்னார்.

Cine workers at the protest

உண்ணாவிரதப் போராட்டத்தில் லைட்மேன் யூனியன் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் பங்கெடுத்துக்கொண்டனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை தாங்கள் முழுமனதுடன் ஆதரிப்பதாகவும், ‘பெப்சி அமைப்புக்குள் இருந்துகொண்டே பெப்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், ‘தங்களின் நலனுக்காகவும்போராடப்போவதாகவும், லைட்மேன் யூனியனின் செயலாளர் ராமன் தெரிவித்தார். “நாங்களெல்லாம் சக தொழிலாளர்களாகிய உங்களுடன் இத்தனை ஆண்டுகாலமாக ஒரே வண்டியில் பயணித்திருக்கிறோம். நீங்கள் இல்லாமல், இப்போது எங்களால் தனியே பயணிக்க முடியாது. உங்களின் கோரிக்கைகளையும் உங்களின் வேதனைகளையும் நாங்கள் அறிவோம். உங்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் சமமானதாக இருப்பதற்கும், அத்துடன், உங்களைத் திரும்பவும் பெப்சியில் சேர்த்துக்கொள்ளவும் நாங்கள் போராடுவோம். ஒருவேளை பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் எங்களை வெளியேற்றுவார்கள் என்றால், நாங்கள் எப்போதும் போல உங்களுடன் சேர்ந்துகொள்வோம். நீங்கள் பட்டினியாகக் கிடக்கும்போது, எங்களால் சாப்பிட முடியாது, என்று லைட்மேன் யூனியனின் செயலாளர் ராமன் பேசினார்.

சினிமா கேமிரா கலைஞரான திருமிகு வெள்ளாளனும், ஓராண்டுக்கு முன்பு பெப்சிக்குத் தலைமை தாங்கிய இயக்குநர் சிவாவும் உரையாற்றினர். பிரச்சனை ஒரு சில நாட்களில் நல்ல முறையில் தீர்க்கப்படும் என்று அவர்கள் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தனர். ஆனால், தற்போதைய மோதலை நல்ல முறையில் தீர்வு காண்பதற்கு தாங்கள் எடுத்த முயற்சிக்கு பெப்சி சாதகமான வகையில் பதிலளிக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரச்சாரச் செயலாளரும், முன்னாள் சினிமா இயக்குநருமான சிபி சந்திரன், தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் தலைவருக்கும், செயலாளருக்கும் பழ ரசம் அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Sec Dhanapal addresses the workers

பிற சங்கங்களின் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் தங்களின் ஆதரவைத் தெரிவித்த போது தொழில்நுட்பக் கலைஞர்கள் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். இருந்தபோதும், வேலையிழப்பும், சம்பளம் பற்றிய நிச்சயமற்ற நிலையையும் அவர்கள் மத்தியில் கோபத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. மேலும், அவர்கள் பயணப்படி எனப்படும் பேட்டாவைக் குறைத்ததில் மகிழ்ச்சியை இழந்திருந்தனர். தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பயணப்படி என்பது அவர்கள் செய்யும் வேலைக்கான கூலியின் வகையினத்தில் ஒன்றுதான். தொழிலாளர் கூடத்திடம் பேசிய ஆனந்த் சினி சர்வீசின் தொழிலாளி ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “யூனியன் இல்லை என்றால், எங்களுக்குச் சம்பளம் கிடைக்காது. தயாரிப்பாளர்கள் பல சமயங்களில் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள். சங்கத்தின் கூட்டுப் பலத்தின் காரணமாகத்தான் நாங்கள் எங்கள் பணத்தைப் பெற்று வருகிறோம். சம்பளம் சில நாட்கள் கழித்து கிடைப்பது சாதாரண விஷயம். ஆனால், சங்கம் இல்லையென்றால் எங்களுக்குச் சம்பளம் ஒருநாளும் கிடைக்காது. எங்களுடைய சம்பளத்தைக் கொடுக்காமலேயே தயாரிப்புக் கம்பெனியை மூடிவிட்டு முதலாளிகள் போய்விடுவார்கள். தற்போதைய பிணக்கின் காரணமாக ஒரு மாதமாக அந்தத் தொழிலாளிக்கு வேலை கிடைக்கவில்லை. “நாங்கள் எங்கள் கம்பெனிக்குப் போகவில்லை. சங்கத்திலிருந்து வெளியேறுங்கள் என்று அவுட்டோர் யூனிட்கரர்கள் எங்களிடம் சொல்கிறார்கள். சில வட இந்தியர்கள் கம்பெனி வாசலில் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்களுக்கு வேலையளிப்பார்களா இல்லையா என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அந்தத் தொழிலாளிகளுக்குப் பயிற்சி அவசியம். எங்களை அனுப்பிவிட்டு அந்தத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்வது சாதாரணமான காரியம் அல்ல, என்று அந்தத் தொழிலாளி தனக்குத் தானே தெம்பூட்டிக்கொண்டார்.

விரைவில் பிரச்சனைத் தீர்க்கப்படவில்லையென்றால், காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாக தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் சொன்னது.

பின்னணி:

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், பில்லா பாண்டி என்ற தமிழ் படத்திற்கு வேலை செய்ய மாட்டோம் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் மறுத்துவிட்டனர். இது சில நாட்கள் நீடித்தது. அவர்களின் தினக் கூலியைக் கொடுக்கவில்லை என்பதுதான் அவர்கள் சொன்ன காரணம். அப்படத்தின் தயாரிப்பாளர் தனது முந்தைய படத்திற்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் கிருஷ்ணாதான் படத்தின் கதாநாயகன். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தயாரிப்பாளர் தாணு தலைமையிலான அணியைத் தோற்கடித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் கிருஷ்ணா வெற்றி பெற்றிருந்தார். தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பெப்சியில் இணைந்துள்ள சங்கங்களுக்கும் இடையில் வேலை மற்றும் கூலி பற்றிய பேச்சுவார்த்தை (இதனை பொதுநிபந்தனைகள் என்று சினிமா வட்டாரத்தில் குறிப்பிடுகின்றனர்) நடந்துகொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்க தலைமை மாற்றம் நடந்தது. பில்லா பாண்டி படப்பிடிப்பின்போது நிகழ்ந்த வாய்த் தகராற்றைத் தொடர்ந்து பொது நிபந்தனைகளில் குறிப்பிடத்தக்க அம்சங்களை மறுபடியும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மட்டும் வேலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்படமாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கம் சொன்னது. இதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் பெப்சி ஈடுபட்டது. (மேலும் கூடுதல் விவரங்களுக்கு பெப்சி வேலைநிறுத்தம் பற்றிய எங்கள் செய்திக் கட்டுரையைப் படிக்கவும்.)

ஆகஸ்ட் வேலைநிறுத்தம் மூன்று நாட்களில் திரும்பப் பெறப்பட்டது. பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தையை தொழிலாளர் துறை நடத்தியது. இந்த சமரசப் பேச்சுவார்த்தையின் போது, தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தை பெப்சி இடை நீக்கம் செய்தது. பின்னர், அந்தச் சங்கத்தை பெப்சியை விட்டு நீக்கியது. பில்லா பாண்டி படப்பிடிப்பின்போது, தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், அது பெப்சியின் நடைமுறை விதிகளுக்குப் புறம்பானது என்றும் பெப்சி தரப்பு தன் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்தது. இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கைகள் அனைத்துக் கலைத்துறை சங்கங்களுக்கும் சேதாரம் ஏற்படுத்துவது என்றும் அதனைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் பெப்சி தரப்பு நிலையெடுத்தது. சரியான முறையில் காரணம் காட்டவில்லை அல்லது வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதால், அவர்களை நீக்க வேண்டிய நிலை பெப்சிக்கு ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பெப்சியின் இதர உறுப்பு சங்கங்கள் எதனோடும் ஆலோசனை செய்யப்படவில்லை. தங்களின் யூனியன் மிகத் தெளிவாகப் பதில் அளித்தது என்றும், தங்களின் செயலுக்கான காரணம் என்னவென்று சொன்னது என்றும், சம்பளம் அளிப்பதில் தயாரிப்பாளர்கள் செய்யும் ஒட்டுமொத்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டியதாகவும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் சொல்கிறார். பேச்சுவார்த்தைக்கு ஓர் முன்னிபந்தனையாக தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நெருக்கடி கொடுத்த காரணத்தால் தாங்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். இப்பிரச்சனை குறித்து பெப்சி சங்கத்தின் செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது அவற்றுக்குப் பதில் கிடைக்கவில்லை.

தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தை பெப்சி நீக்கிய போதும், தயாரிப்பாளர் சங்கம் தங்களின்பொது நிபந்தனைகளைத் தன்னிச்சையாக வெளியிட்டனர். படத் தயாரிப்பிற்கு சங்கத்தில் இல்லாத புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்தனர். இதன் காரணமாக, செப்டம்பர் 1 முதல் 12 செப்டம்பர் வரை பெப்சி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. செப்டம்பர் 12 அன்று ஒப்பந்தத்தின் சாரமான விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டன. பயணப்படியை (வெளியூர் படப்பிடிப்புக்கு அளிக்கப்படும் பேட்டா) பாதியாகக் குறைப்பது என்றும் பெப்சி தொழிலாளர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஆனது. ஆனால், தொழில்நுட்பக் கலைஞர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கவில்லை என்பதால் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தாது என்ற நிலை ஏற்பட்டது.

பெப்சியிலிருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் நீக்கப்பட்டதின் பின், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் குறைவான சம்பளத்தைத் தயாரிப்பாளர்கள் அளிக்க ஆரம்பித்தனர். உதாரணமாக, மூன்று கேமிரா கலைஞர்கள் கொண்ட குழுவிற்கு, ஒரு கால் ஷீட்டுக்கு, ரூபாய் 7500க்குப் பதிலாக ரூபாய் 6000 அளிக்க ஆரம்பித்தனர். தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும், ஒலிப் பதிவாளர்கள், மற்றும் பிற பிரிவினருக்கும் குறைவான சம்பளம் அளிக்கப்படலாயிற்று. வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சாதனங்களை அளிக்கும் (ஆனந்த் சினி சர்வீஸ் போன்ற) கம்பெனிகளை அணுகிய தயாரிப்பாளர் சங்கம், தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்துடன் தொடர்புடைய யாரையும் வேலைக்கு அனுப்பக் கூடாது என்று நிலையெடுத்தது.

இதன் காரணமாக தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளானார்கள். 20 நாட்களுக்கும் மேலாக அவர்களுக்கு வேலை அளிக்கப்படவில்லை. வெளிப்புற படப்பிடிப்பு சாதனங்களை வாடகைக்கு அளிக்கும் கம்பெனிகள், ‘உங்களுக்கு வேலை வேண்டும் என்றால், சங்கத்தில் இருந்து வெளியேறுங்கள், என்று தங்கள் ஊழியர்களை நிர்ப்பந்தம் செய்ய ஆரம்பித்தனர். தொழில்நுட்பக் கலைஞர்களை வெளியேற்றிவிட்டு அவர்கள் இடத்தில் வேலைக்கு வைக்கப்படுவதற்காக கேரளாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் ஆட்கள் கொண்டுவரப்படுவார்கள் என்ற அச்சமும் பரவ ஆரம்பித்தது. தொலைவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவருவது தயாரிப்பாளர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றாலும், விடாப்பிடியாக நின்றுவிட்டால், உள்ளூர் தொழிலார்களின் முயற்சிகளைத் தோற்கடித்துவிட முடியும். உடனடியாக, படப் பிடிப்புகள் இடையூற்றைச் சந்தித்த போதும், மிகப் பெரும் செலவில் தயாரிக்கப்படும் படங்களின் படப்பிடிப்பு மறுபடியும் துவங்கிவிட்டன என்பதைச் செய்திகள் காட்டுகின்றன.

பில்லா பாண்டி படத்திற்கு முன்பே பிரச்சனை இருந்தது என்று தொழில்நுட்பக் கலைஞர்களின் சங்கம் சொல்கிறது. விஷால் கிருஷ்ணாவுக்குச் சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி, சமீபத்தில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற முந்தைய படத்திற்கான சம்பளத்தை வழங்கவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். 30 நாட்களுக்கு மேலான சம்பளம் கொடுக்கப்படாதபோது, அதாவது பாக்கிப் பணம் 30 லட்சத்திற்கும் மேல் சென்றபோது, தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்திடம் புகார் அளித்தனர். சம்பளப் பாக்கி அளிக்கப்படும்வரை அந்தப் பட நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சங்கம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஆலோசனை அளித்தது. இதனால், தயாரிப்பாளர்கள், குறிப்பாக, விஷால் கிருஷ்ணாவும், கடுங்கோபத்துக்கு ஆளானார்கள். சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் யூனியன் தயாரிப்பாளர்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை என்று நினைத்தார்கள். இருந்தபோதும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு சம்பளப் பாக்கியை அளிக்க வேண்டிவந்தது. இதன் காரணமாக, சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் தலைமைக்கும் விஷாலுக்கும் இடையில் பெரிய பிளவு ஏற்பட்டது. சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் விஷால் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்த்ததனால் தான் பெப்சி கூட்டமைப்பு சினிமா தொழில்றுட்பக் கலைஞர்கள் சங்கத்தை வெளியேற்றியதற்காக காரணம் என தொழில்நுட்பக் கலைஞர்கள் கருதுகின்றனர். பெப்சியும் தயாரிப்பாளர்கள் சங்கமும் சேர்ந்து பழி வாங்கும் நடவடிக்கையாக அவர்கள் கருதுகின்றனர்.

நடந்தவை பற்றிய மதிப்பீடு

சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி என்று பெப்சி சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அது மொத்தமாகப் பார்க்கும் போது சரியானதல்ல. இந்த மோதலுக்குக் காரணமான பொறி, தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அளிக்காததுதான். இதுபோன்று சம்பளம் அளிக்காது போவது வழக்கமாக நடக்கும் ஒன்று. தயாரிப்பாளர்கள் அளிக்கும் பண ஓலைகள்பணம் இல்லைஎன்று வங்கிகளால் திருப்பி அனுப்பப்படுவது அடிக்கடி நடக்கும். இது குற்ற நடவடிக்கை என்ற போதும், தயாரிப்பாளர்கள் மீது குற்ற தண்டனை நடவடிக்கை எடுக்காமல், தொழிலாளர்களின் சம்பளத்தைப் பேசி வாங்கித் தருவது சங்கங்களின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. தயாரிப்பாளர்களிடமிருந்து சம்பளப் பாக்கியை வசூல் செய்ய வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி பட பிடிப்பின் போது வேலை நிறுத்தம் செய்வதுதான் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட நடைமுறை. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, நீண்ட பேச்சுவார்த்தைகள், பெரும் அளவு சம்பளப் பாக்கி ஆகிவிடுவது போன்ற பாதிப்புகளுக்குத் தொழிலாளர்கள் ஆளாகி விடக் கூடாது என்று பெப்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் மீது, போதுமான காரணம் இல்லாமல், தண்டனை நடவடிக்கையை பெப்சி மேற்கொண்டது, யூனியன்களின் பேர ஆற்றலைக் குறைத்துவிட்டிருக்கிறது. நீக்கத்தை உடனடியாக, எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெறவில்லை என்றால், எதிர்காலத்துக்கான மோசமான முன்னுதாரணமாக இது மாறிவிடும்.

Cine Outdoor Lightmen Union leader speaks at protest

பயணப் படியைப் பாதியாகக் குறைப்பது என்பது சில தொழில் பிரிவுகளைப் பொருத்தமற்ற முறையில் பாதிக்கும். லைட்மேன்கள், தயாரிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்ற சில பிரிவினர்தான் பயணப் படி வாங்குகிறார்கள். இவர்கள் அதிக எடைகொண்ட சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. சாதனங்களை வாடகைக்கு அளித்தவர்களிடம் அவற்றைத் திருப்பி ஒப்படைப்பது வரை அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் அவர்களுக்குப் பயணப்படி வழங்கப்படுகிறது. பயணப்படியைக் குறைத்தால், பெறும் சம்பளத்தை வைத்துத்தான் அதனைச் சரிக்கட்ட வேண்டும். விளைவாக, சம்பள இழப்பு ஏற்படும். இதனை லைட்மேன்கள் முதலில் எதிர்த்தாலும், பெப்சி எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் விட்டுத்தர வேண்டிவந்தது.

யூனியனில் இல்லாத தொழிலாளர்களை தயாரிப்பாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் பெப்சியின் முதன்மை கோரிக்கை. அப்படி வைத்துக்கொண்டால், யூனியனில் உள்ள தொழிலாளர்கள், யூனியனில் இல்லாத தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். ஒரு பிரிவினருக்கு யூனியன் பாதுகாப்பும், மற்றொரு பிரிவினருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் பாதிக்கும். எதிர்காலத்தில் வேலைக்கு வெளி ஆட்களை ஈடுபடுத்துவது அதிகரிக்கும். தொழிலாளர்களின் பாதுகாப்பின்மை மேலும் மேலும் அதிகரிக்கும்.

எனவே, சமநிலையைக் கொண்டு வருவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துவதையும், அவர்களின் கூட்டுப் பேர உரிமையைத் தக்க வைத்துப் பாதுகாப்பதையும் பெப்சி செய்ய வேண்டும். நீக்கப்பட்ட சங்கத்தைத் தானே முன்வந்து எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும், உடனே, சேர்த்துக்கொள்ள வேண்டும். சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ள சம்பளத்தைத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்குப் போதுமான பயணப் படியை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

சினிமா தொழிலாளர் சங்கத்துடன் சேர்ந்து செயல்படுவதற்கும், அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் தவறியது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.

This entry was posted in News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.