அரசுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட துப்புரவுத் தொழிலாளர்கள்

பெங்களூரு மாநகராட்சிக்கும் (Bruhut Bangaluru Mahanagar Palike-BBMP) நகரத்தின் குப்பைகளை அகற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கும் நடக்கும் சண்டைக்கு இடையில் பெங்களூர் மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 23 முதல், பெங்களூருவின் திடக் கழிவுகளைச் சேகரிப்பதையும் அகற்றுவதையும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் நிறுத்தி விட்டனர். இதற்கு முன்பு, ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளில் இதுபோன்ற அறிவிக்கப்படாத வேலை நிறுத்தத்தை ஒப்பந்தக்காரர்கள் செய்திருக்கின்றனர். துப்புரவுப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவர BBMP முடிவு செய்துள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. அப்படிச் செய்யப்பட்டால், துப்புரவுத் தொழிலாளர்களின் சம்பளம், தனியார் ஒப்பந்தக்காரர்கள் வழியாக அல்லாமல், நேரடியாகத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும். துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக் கூடாது என்பதுதான் தனியார் ஒப்பந்தக்காரர்களின் நிலை. தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதைத் தடுப்பதற்காகத்தான் துப்புரவுப் பணிகளை நிறுத்தி வைக்கும் ‘வேலை நிறுத்தத்தை‘ ஒப்பந்தக்காரர்கள் மேற்கொண்டனர்.

ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை. அவர்களுக்கான கூலி நான்கு மாதங்களுக்கு மேலாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. நவம்பர் 2016க்கும் ஜனவரி 2017க்கும் இடைப்பட்ட கால சம்பளப் பாக்கியை இன்னும் அவர்கள் பெறவில்லை. குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியதால் தொழிலாளர்களுக்கு வர வேண்டிய சம்பள பாக்கிதான் மேலே சொன்ன காலத்துக்கான சம்பள பாக்கி.

தனியார் ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய BBMP, மாநில அரசின் வழியாகக் குப்பை அள்ளுவதை அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (ESMA -Essential Services Maintenance Act) கீழ் ஓராண்டுக் காலத்துக்குக் கொண்டுவந்ததுள்ளது. தொழிலாளர்களின் சம்பளத்திற்கு உத்திரவாதம் தராத அரசாங்கம், வேலை நிறுத்தம் செய்வதற்கான தொழிலாளர்களின் உரிமையைப் பறித்துள்ளது.ஆனால், ஒப்பந்தத்தை மீறிய ஒப்பந்தக்காரர்கள் மீது இன்னமும் தண்டனை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தனியார் முறையை ஒழிப்பது என்ற தன்னுடைய சொந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை!

File photo PC The Logical Indian

ஒப்பந்தக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களிலும் கூட, பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தை (BBMP Guttige Pourakarmikara Sangha) சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சங்கத்தின் வழியே, தங்களின் பணியைச் செய்து வந்தனர். ஒப்பந்தக்காரர்கள் தாக்குதல் தொடுப்பார்கள் என்ற ஆபத்திற்கும் தங்களை உட்படுத்திக்கொண்டனர். வேலையைச் செய்ய விடாமல், ஒப்பந்தக்காரர்கள் தடுக்கிறார்கள் என்று தொழிலாளர்கள் புகார் செய்தும் கூட அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பணிகளுக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்து, தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற 7 ஆகஸ்ட் 2017 தனது சொந்த அரசு ஆணையையும் கூட அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, சட்டப்பூர்வமான வேலை நிறுத்தம் செய்யும் உரிமையைப் பறிக்கும் கொடூர சட்டமான ESMA வை பிரகடனம் செய்துள்ளது. தனியார் ஒப்பந்தக்காரர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையை எதிர்க்கின்ற துப்புரவுத் தொழிலாளர்கள், ESMA வைத் திணிப்பதையும் கண்டனம் செய்துள்ளனர்.

நடப்பது பற்றி ஊடகங்களில் முறையான செய்திகள் இல்லை. என்ன நடக்கிறது என்று பொது மக்களுக்குத் தெரியவில்லை என்பதாலும் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். குடியிருப்பாளர்களும், கடை உரிமையாளர்களும் துப்புரவுத் தொழிலாளர்கள்தான் நடந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று பழிபோட்டனர். செப்டம்பர் 25 முதல் குப்பையை அள்ளுவதை ஒப்பந்தக்காரர்கள் துவக்கினாலும், இரண்டு நாட்களாகச் சேர்ந்த குப்பையை அள்ளுவது துப்புரவுத் தொழிலாளர்களின் முதுகை உடைக்கும் பணியானது. அதுமட்டுமல்லாமல், காலந்தாழ்த்தி குப்பையை அள்ளுவதாகக் கருதிய குடியிருப்பாளர்களின் கோபத்திற்கும் தொழிலாளர்கள் ஆளாக வேண்டி வந்தது.

பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் மாநில அரசையும் BBMP யையும் கோரி வருகின்றனர்.

1. குப்பை அள்ளுவதை ESMAவின் கொண்டுவரும் அறிவிக்கையை உடனடியாயத் திரும்பப் பெறு!

2. தனியார் ஒப்பந்தக்காரர்களை ஒழித்து துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யும் 7 ஆகஸ்ட் 2017 அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்து!

3. ஒப்பந்தத்தை மீறிய, பெருநகரத்தில் ஆரோக்கியப் பிரச்சனைக்குக் காரணமான, தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்த தனியார் ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடு!

4. துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய பழைய பாக்கிகளை, சம்பள பாக்கிகளை உடனே கொடு! ஜூலையில் ஒப்புக்கொண்டது போல நேரடியாகச் சம்பளம் வழங்கு!

This entry was posted in Contract Workers, News, Sanitation Workers, Service Sector, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.