மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2017க்கு எதிராக பெரும் போராட்டம்!

தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் 17 அமைப்புகளும் சங்கங்களும் ஒன்று சேர்ந்து மாபெரும்  போராட்டம் ஒன்றை நடத்தின. மோட்டார் வாகன சட்டம் 1988ஐ திருத்துவதற்கான முயற்சிகளை எதிர்த்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, ஓட்டுநர் பயிற்சியாளர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு, இருசக்கர வாகனங்கள்- நான்கு சக்கர வாகனங்கள்- ஆறு சக்கர வாகனங்கள் பழுதுபார்ப்பவர்கள் சங்கம், வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சங்கம், ஆட்டோ- டாக்சி ஓட்டுனர்கள் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில்- ஒரு நாள் வேலைநிறுத்தம்/ கதவடைப்பில் பங்கேற்றனர். வரும் மழைக்காலக் கூட்டத் (Winter Session குளிர்காலக் கூட்டத்) தொடரின்போது, ராஜ்ய சபையின் முன் வரப்போகின்ற மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2017ஐத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் போராட்டத்தின் முதன்மையான கோரிக்கை. இந்த மசோதா ஏற்கனவே, ஏப்ரல் 2017ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வணிக வானங்களை இயக்கும் ஓட்டுநர்களிடம் ஓட்டுநர் உரிமத்தின் ஒரிஜினலைக் கேட்பது, உரிய முறையைப் பயன்படுத்தாமல் காவல்துறையினர் லைசென்சைப் பிடுங்கிக்கொள்வது போன்ற புதிய போக்குகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள். GST  விகிதங்களையும் GST நடைமுறையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்வோர் சங்கங்கள் கோரின.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் திருமிகு . சுகுமார், CITUவின் மாநிலத் தலைவர் அ. சௌந்திரராஜன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் T.வெள்ளையன் ஆகியோர் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றி, போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.  GST மூலம், செல்லாப் பண அறிவிப்பின் மூலம், கட்டுப்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் சிறு தொழில்களை ஒழித்துக்கட்டுவதற்கான மத்திய அரசின் திட்டமிட்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டும் பல்வேறு பிரச்சனைகளைத் தங்கள் உரையின் போது தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் 2000 தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.

ஒருங்கிணைப்புக் கமிட்டியின் இணைச் செயலாளர் தோழர் அன்பழகன், பின்னர், தொழிலாளர் கூடத்திடம் பேசியபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து வாகனங்களின் மீது திணித்துள்ள புதிய விதிதான் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரதானமான பிரச்சனை என்று சொன்னார். “அதிமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரான விஜய பாஸ்கர், பிஜேபி அரசைத் திருப்திப்படுத்துவதற்காக ஓட்டுநர்களுக்கு நிறைய தொந்தரவு தருகிறார். போக்குவரத்து வாகனத்தில் பயணிகள் யாரும் இருக்கக் கூடாது என்று காவல்துறை வலியுறுத்துகிறது. அப்படியானால், சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூட வாகனத்தில் பயணம் செய்ய முடியாது. லாரி ஓட்டுநர்களிடமிருந்தும், வேன் ஓட்டுநர்களிடமிருந்தும் 1.4 லட்சம் லைசென்ஸ்களைக் காவல்துறைப் பறித்துக்கொண்டுள்ளது. அதிகப் பயணிகள் ஏற்றுவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை முட்டாள்தனமாக நடைமுறைப்படுத்துவதாக இதற்குப் பொருளாகும். அதுபோல, ஓட்டுநர்கள் ஒரிஜினல் லைசென்சைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அரசு கட்டாயப்படுத்துகிறது. ஆனால், ஓட்டுநர் ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் வணிக வாகன உரிமையாளர், ஓட்டுநரின் ஒரிஜினல் லைசென்சை வாங்கி வைத்துக்கொள்வது தமிழ்நாட்டில் உள்ள நடைமுறையாகும். ஒரிஜினல் லைசென்ஸ்  வேண்டும் என்று கோருவதன் காரணமாக, ஆட்டோ- டாக்சி ஓட்டுநர்களுக்கு அரசு பிரச்சனை கொடுக்கிறது“, என்று அவர் சொன்னார். அவர் சொன்னதில் கடைசியில் சொன்னதுதான் அவர்களின் பிரதான பிரச்சனை. பறிக்கப்பட்ட லைசென்ஸ்கள் திருப்பித் தரப்பட வேண்டும், விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

மசோதாவின் சுருக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்த தொழில் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில், மோட்டார் வாகனத் சட்டம் 1988க்கு கொண்டுவரப் போகும் திருத்தங்கள் பற்றிய அச்சம் உணரத் தக்க அளவில் இருக்கிறது. இதற்கு முன்பு, 2015ல் கொண்டுவரப்பட இருந்த திருத்தங்களையும் தொழிலாளர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். சாலை விபத்துகள், மரணம் ஏற்படுத்தும் விபத்துகளைத் தடுப்பதற்காகத்தான் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று சொல்லிவந்தார்கள். சாலை விபத்துகளைப் பொறுத்தவரை இந்தியா, படு மோசமான நாடுகளின் பட்டியலில் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 4.5 லட்சம் விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1.5 விபத்து மரணங்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை எதிர்கொள்வதுதான் திருத்தங்களின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், கட்டுப்படுத்தும் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, லைசன்ஸ் அளிப்பது, பதிவு செய்வது, பராமரிப்பு மற்றும் உதிரிபாக விற்பனை ஆகியவற்றை பெரு முதலாளிய நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொள்ளுவதற்கு வாய்ப்பளித்து சிறு வியாபாரிகளையும் சுய தொழில் செய்யும் மெக்கானிக்குகளையும் பாதிப்புக்கு ஆளாக்கும் என்பது கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. (சிறு வணிகங்களையோ அல்லது சேவையளிப்பவர்களையே ஒழிக்கும் குறிப்பான சட்ட விதி எதுவும் இல்லை.) உதாரணமாக, RTOக்களின் பணிச் சுமையைக் குறைப்பதற்காக, அரசு அனுமதி பெற்ற ஓட்டுநர் திறன் பரிசோதனை  நிறுவனங்களை உருவாக்கும் திருத்தம் ஒன்று இருக்கிறது. இன்றைய நிலையில், லைசென்ஸ் வேண்டுவோருக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் பயிற்சி கொடுக்க, சோதனையை RTO நடத்தி ஒவ்வொருவருக்கும் சான்றளிக்கிறார். பயிற்சி நிறுவனத்திற்கு எந்தவித அங்கீகாரமும் தேவையில்லை. இதில் மாறுதல் வந்தால்,   வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் சிறு நிறுவனங்களைத் துவங்குவதும், இயங்குவதும் செலவு பிடிப்பதாக ஆகி, அவர்களைத் தொழிலில் இருந்து வெளியேற்றிவிடும்.  மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் வானங்களுக்குச் சான்றளிக்கும் வாகன சோதனை மற்றும் சான்றளிப்பு (தானியங்கி) மையங்களை உருவாக்கும் முயற்சியும் இருக்கிறது. தனியார் வாகனத்துக்கு ஒவ்வொரு ஐந்து ஆண்டும், வணிக வாகனங்களுக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டும் சோதனை  நடத்தப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அடிக்கட்டுமான வசதி மாநிலங்களில் இல்லை. இந்தப் பிரச்சனை நிலைக்குழுவின் விவாதத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வருமானால், அடிப்படைக் கட்டுமானம் இல்லையென்பதால், மாநிலங்கள் வேறு வழியின்றி தனியார் கம்பெனிகளை அழைக்க வேண்டிவரும். அப்படியானால், தேவையான முதலீட்டை செய்யும் வாய்ப்புள்ள கம்பெனிகள்தான் முன்வரும். தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்தின் காரணமாக, அளிக்கப்படும் சான்றிதழின் உண்மைத் தன்மை கேள்விக்குரியது ஆகிவிடும். அப்படியான தனியார் நிறுவனங்கள் சுய தொழில் செய்யும் மெக்கானிக்குகள் பார்த்த பழுதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம்,  வணிக முத்திரை பெறாத உதிரிப் பாகங்களை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். 2015ல் கொண்டுவரப்பட்ட முந்தைய மசோதாவை எதிர்த்தற்கான பிரதான காரணம் மேற்சொன்ன பயம்தான்.

மோட்டார் வாகன திருத்த மசோதா 2015 குறித்த சந்திரனின் பேட்டியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தைவிட மத்திய அரசின் அதிகாரம் அதிகமாக்குவதற்கு திருத்தங்கள் வழிவகுக்கின்றன. உதாரணமாக, டாக்சி- ஆட்டோக்களின் மிகப் பெரும் வாகனத் தொகுப்பு நிறுவனங்களை (aggregators) கட்டுப்படுத்துவதற்கான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை, இந்தத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு அளிக்கின்றன. இதன் காரணமாக மாநிலங்கள் உருவாக்கும் கட்டுப்பாடுகள் இல்லாது போகும். மிகப் பெரும் வாகனத் தொகுப்பு இயக்குநர்கள் நிறுவனங்களின் (aggregators) பண பலத்துக்கு முன்பு சிறிய மூலதனமிட்டு இயங்குபவர்கள் பொருளாதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால்  ஆட்டோ- டாக்சி உரிமையாளர்கள் அச்சத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

திருத்தத்தின் மற்ற அம்சங்கள் சாலை வடிவமைப்பையும் சாலைக் கட்டுமானத்தில் பொறுப்பேற்புடமையையும் (accountability) வலியுறுத்துகின்றன. ஆனால், சோதனை செய்வதும், கண்காணிப்பதும் மறுபடியும் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. இது, ‘லாபம் நோக்கம்‘பற்றிய கேள்வியை எழுப்புகிறது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டத் தொகை அதிகரிக்கப்படுவதுடன், இன்சூரன்சுக்கான தொகையும் அதிகரிக்கிறது. மேலும், வாகனங்களைப் பதிவு செய்வதற்கான  தேசிய பதிவு அமைப்பையும்,  வாகனங்களைத் தேசிய அளவில் பதிவு செய்வதையும் திருத்தம் கொண்டுவருகிறது. மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்றாலும்,  பயோ மெட்ரிக் முறையிலான ஆதார் முறையைப் பயன்படுத்தி கூடுதல் கண்காணிப்பு செய்வதும் சாத்தியமானதுதான்.

திருத்த மசோதாவின் வாக்கிய மொழியமைப்பின் காரணமாகவும், அத்துடன், திருத்தங்கள் பற்றி பொது மக்களிடம்  கலந்தாலோசனை செய்யப்படாதது, தெளிவேற்படுத்தாதன் காரணமாகவும், நடைபெற்றுக்கொண்டிருப்பது குறித்த தொழிலாளர்கள் அச்சத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். மேலும், தங்களின் வாழ்வாதாரத்திற்கு எப்படிப்பட்ட குறிப்பிட்ட வகையில் திருத்தங்கள் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறித்தும் தொழிலாளர்களுக்குத் தெளிவில்லை. தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான முறையில் பதிலளிக்கவில்லை என்றால், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.  மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மெக்கானிக்குகளும், வாகன உரிமையாளர்களும் பிறரும்  தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக நவம்பர் மாதம் டெல்லியில் திரளவிருப்பதாக திருமிகு அன்பழகன் மேலும் சொன்னார்.

This entry was posted in Drivers Auto, Informal sector, News. Bookmark the permalink.