ஓய்வறை கூரை விழுந்து 8 போக்குவரத்துத் தொழிலாளர்கள் மரணம்

தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் கிரிமினல் அலட்சியத்தனால் ஏற்பட்ட பரிதாபம்

அக்டோபர் 20 அதிகாலையில் நாகப்பட்டினத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பொறையூர் பேருந்து நிலையத்தில் ஓய்வறை இடிந்து விழுந்ததில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 8 போக்குவரத்துத் தொழிலாளர்கள் அகால மரணம் அடைந்தனர்.  இரவில் இரண்டாவது ஷிப்ட் முடித்து வி;ட்டு காலை முதல் ஷிப்டு வேலைக்காக, இறந்த 7 ஓட்டுனர்களும் 1 நடத்துனரும் உட்பட 24 தொழிலாளர்கள் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.

இடிந்து விழுந்த ஓய்வறை 1943ல் பேருந்தை இயக்கிய தனியார் நிறுவனங்களால கட்டப்பட்டது. மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்களில் பல கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளன என்றும், அவற்றை இடித்து புதிய கட்டிடங்களை கட்டுமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போக்குவரத்து கழகம் இக்கோரிக்கையை புறக்கணித்து வந்ததன் விளைவாக இன்று 8 தொழிலாளர்கள் தங்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர். இதற்கு தமிழக அரசும், போக்குவரத்துக் கழகமும், தொழிலாளர் துறையும் பொறுப்பெடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. அக்டோபர் 21 அன்று தமிழ்நாடு முழுவதும் பேருந்து நிலையங்களில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. பேருந்துகள் ஒரு மணி நேரம் கழித்து இயக்கப்பட்டன.

(courtesy TTSF)

தொழிற்சங்கக் குழுவின் செய்திகள் படி, அக்டோபர் 20 அதிகாலை 3.30 மணியளவில் தொழிலாளர்கள் முதல் மாடியில் காற்றாடி இருந்த ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது.   இரு மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதாகி இருந்ததாகவும், முதல் மாடி தரை இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக சிஐடியு பொதுச் செயலாளர் தோழர் மணிமாறன் கூறினார். இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த உடல்களை 6.30 மணியளவில் தான் அதிகாரிகள் மீட்டிருக்கின்றனர்.

ஆனால் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு அரசு உடனடியாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று சட்டசபை உறுப்பினர்கள் உடனடியாக வந்து உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப அவர்கள் துரிதமாக செயல்பட்டனர் என்றும், ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தோழர் மணிமாறன் குறிப்பிட்டார். 5 குடும்பங்கள் அவர்கள் உறுப்பினர்களின் உடல்களை பெற்று விட்ட போதும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வந்து போராடிய பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என அவர் கூறினார்.

போக்குவரத்து கழகத்துடனும் தொழிலாளர் துறையுடனும் பேருந்து நிலையக் கட்டமைப்புகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றி கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாக கட்சி சார்பற்ற டிடிஎஸ்எஃப் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறினர். ஒரு மாதம் முன்னர் தொழிலாளர் துறை முன் நடைபெற்ற கூட்டத்திலும் கூட அனைத்து ஓய்வறைகளையும் கழிப்பறைகளையும் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக டிடிஎஸ்எஃப் இணைச் செயலாளர் தோழர் நாகராஜன் குறிப்பிட்டார். ஒரு பேருந்து நிலையத்தில் கழிப்பறை வாசலில் முன் தொழிலாளர்கள் போராட்டம் கூட நடத்தியதாக சிஐடியு பிரதிநிதி ஒருவர் கூறினார்.

(Building constructed in 1943 and not maintained)

போக்குவரத்து கழகம் மற்றும் தமிழக அரசின் கிரிமினல் அலட்சியத்திற்குப் பின்னால் மிகப் பெரிய சிக்கல் உள்ளது. கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்குவதாக போக்குவரத்துக் கழகம் கூறி வருகிறது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவை பாக்கி தர வேண்டியுள்ளது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வுதியமும் தரப்படுவதில்லை. தொடரும் நிதிப்பற்றாக்குறையால் போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளையும் குறைத்து வருகிறது.

போக்குவரத்து கழகத்தின் சிவில் என்ஜினியரிங் துறையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக சிஐடியு மாநகரப் போக்குவரத்து தொழிற்சங்க துணைத் தலைவர் தோழர் சந்திரன் கூறுகிறார். பேருந்து நிலையங்களை ஆய்வு செய்து பராமரிப்பது இத்துறையின் பொறுப்பாகும். ‘இத்துறை சரியாக வேலை செய்தால், கட்டிடங்களை புதுப்பிக்க செலவாகும். இதற்கு நிர்வாகம் தயாராக இல்லை’ என அவர் கூறினார். பணி நிலைமைகள் மற்றும் ஓய்வறை, கழிப்பிடம், காண்டீன் போன்ற கட்டமைப்புகளை குறித்து இயற்றப்பட்டுள்ள மோட்டர் வாகனத் தொழிலாளர் சட்டம் 1961 செயல்படுத்தப்படுவதில்லை எனத் தோழர் சந்திரன் குற்றம் சாட்டினார்.

ஊதியம், உயர்வு, போனஸ் போன்ற தொழிலாளர்கள் பிரச்சனைகளில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கோரிக்கைகள் பின்தள்ளப்படுகின்றன. சீனியாரிட்டி அடிப்படையில் தொழிலாளர்களுக்கு சுளுவான வேலை மற்றும் சுளுவான ரூட்டுகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை என சிஐடியு வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் சவுந்தரராஜன் கூறுகிறார். ‘வேலைகள் நியமிக்கப்படுவதற்கு முறையான விதிமுறைகள் தேவையாக உள்ளன. பேருந்துகள் பல பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருக்கும் நிலையில், யார் எந்த வேலை செய்ய வேண்டும் என்பதற்கு விதிமுறைகளை ஏற்படுத்துமாறு நாங்கள் கோரி வருகிறோம். வயது மிகுந்த தொழிலாளர்கள், நோய் அல்லது விபத்தில் இருந்து நலம் பெற்று வரும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு குறுகிய பஸ் ரூட்கள் கொடுக்கப்படவேண்டும். ஆனால் ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பேருந்து நிலைய நிர்வாகம் முன்னுரிமை தருகிறது’ என அவர் குற்றம் சாட்டினார்.

(Workers in Vellore wearing black badges)

மேலும் செலவுகளை குறைக்கிறோம் என்ற பெயரில் விபத்துகள் நடக்கும் பேருந்துகளை சரியாக பராமரிப்பதில்லை. மே மாதத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் கூடத்துடன் பேசிய பல தொழிலாளர்கள் பேருந்துகள் மோசமான நிலைமையில் உள்ளதாக கூறினர். பேருந்து ஓட்டும் காலம் முடிந்த பின்னரும் அவற்றை போக்குவரத்து கழக நிர்வாகம் உபயோகப்படுத்தி வருகின்றது. தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்த பின்னர் பேருந்துகளின் பராமரிப்பு இன்னும் மோசமாகி உள்ளது.

அக்டோபர் 21 அன்று மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றியும், கருப்பு பேட்ஜ் அணி;ந்தும் தொழிலாளர்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமான தொழிலாளர் துறையை மீதும் போக்குவரத்து கழகம் மீதும் சட்டபூர்வமான போராட்டங்களை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் உறுதியேற்றுள்ளனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடும் அரசு வேலையும் அவர்கள் கோரியுள்ளனர். ஊதிய உயர்வு குறித்து தற்போது நடக்கும் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான கோரிக்கைகளை முக்கியத்துவம் அளிக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

This entry was posted in News, Public Sector workers, Worksite Accidents/Deaths and tagged , , , , , , . Bookmark the permalink.