வேலையின்றி இரண்டு மாதங்கள்: முடிவின்றி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள்

இந்த ஆண்டு தீபாவளி அவர்களுக்கு அமைதியானதாகவும் இருண்டதாகவும் ஆகிவிட்டது. தென்னிந்திய சினிமா மற்றும் டீவி வெளிப்புறப் படப்பிடிப்பு தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான 1300 தொழிலாளர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலையில்லை. நடிகரும் படத் தயாரிப்பாளருமான விஷால் கிருஷ்ணன் தலைமையிலான தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மேற்சொன்ன சங்கத்தின் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மறுத்துவிட்டது. திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான பெப்சி (FEFSI) அந்த சங்கத்தைக் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது.

தீர்க்கப்பட முடியாத இப்பிரச்சனை இரண்டு மாதங்கள் நீண்ட நிலையில், தொழிலாளர்கள் முன்பு இருக்கும் தீர்வு மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. ஒன்று தொழிலாளர்கள் சங்கத்திற்குத் துரோகம் செய்ய வேண்டும். அந்த சங்கம்தான் பணம் கொடுக்காமல் தப்பிக்கப் பார்த்தத் தயாரிப்பாளர்களிடமிருந்து அவர்களின் சம்பளத்தை வாங்கிக் கொடுத்தது. அல்லது, வேலையிழப்பின் காரணமாக துன்பப்படும் மனைவி- குழந்தைகள்- பெற்றோர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.

“மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கையில் இருந்த சேமிப்பை வைத்தும், சின்னச் சின்ன கடன் வாங்கியும் வாழ்க்கையை ஓட்டினோம். எனது மனைவி வேலைக்குப் போகிறார். ஆனாலும், கஷ்டமாக இருக்கிறது. பண்டிகை வந்துவிட்டதால் செலவும் கூடுதலாக இருக்கிறது. எங்கள் யூனியனிடமிருந்து பண்டிகை உதவித் தொகையாக ரூபாய் 2500 பெற்றோம். அவ்வளவுதான். இப்போது தினமும் சீரியல்களைப் பார்த்து வருகிறோம். அவ்வளவுதான் நாங்கள் செய்யக் கூடியது“, என்று கடந்த 7 ஆண்டுகளாகத் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றும் ஒருவர் சொன்னார்.

GST பற்றி தயாரிப்பாளர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் பற்றியும், மெர்சல் படத்திற்கு மத்திய அரசின் பிரதிநிதிகள் கொடுக்கும் தொந்தரவுகள் பற்றியும் பத்திரிகைகள் எழுதித் தள்ளுகின்றன. ஆனால், பணத்தை அள்ளிக் குவிக்கும் திரைப்படங்களை உருவாக்குவதற்காக உழைத்த 1300 தொழிலாளர்களின் சோகத்தை எழுத யாரும் இல்லை.

சினிமா தொழிலாளர்களின் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் குறித்து படிக்க இங்கே சொடுக்கவும்

போராட்டத்தில் சினிமா தொழிலாளர்கள் – கோப்புப் படம்

சினிமா தொழிலின் அங்கமாக 23 தொழில்கள் இருக்கின்றன. அத்தொழில்களைச் செய்யும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்புதான் FEFSI. கடந்த ஆகஸ்ட் மாதக் இறுதியில், உறுப்பினராக இருந்த சினி தொழில்நுட்ப கலைஞர்களின் சங்கத்தை, கூட்டமைப்பில் இருந்து FEFSI நீக்கம் செய்தது. FEFSIயின் நடத்தை விதிகளை மீறிவிட்டதாகவும் பிற தொழிலாளர்களின் வேலைகளுக்கு மேற்படி யூனியன் பாதிப்பு ஏற்படுத்தி விட்டதாகவும் FEFSI சொன்னது.

யூனியனில் இல்லாதத் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு வேலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி வந்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு அடிபணிந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டோம் என்று சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சினிமா படப்பிடிப்புச் சாதனங்களை வாடகைக்கு விடுபவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த இரட்டைத் தாக்குதல் காரணமாக, யூனியனை விட்டு விலகாவிட்டால் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

FEFSI -யுடனும் சினிமா தயாரிப்பாளர் சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த யூனியன் முயற்சி செய்து வருகிறது. ஆனால், பலன் ஏதும் இல்லை. முந்தைய ஒப்பந்தத்தை மீறும் வகையில், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான ஊதியத்தைத் தயாரிப்பாளர் சங்கம் குறைத்துள்ளது. கூலியைக் குறைப்பது இதுதான் முதன்முறை. மேலும், சங்க ஒப்புதல் இல்லாமல், ‘பொது நிபந்தனைகளும்‘ பாதகமான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

FEFSIயின் முடிவை எதிர்த்து அதன் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் அமரப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்தார்கள். ஆனால், அனுமதி வழங்க முடியாது என்று எழுத்துபூர்வமற்ற முறையில் அறிவித்து, கைது செய்வோம் என்று காவல்துறை மிரட்டிய பின்னர் உண்ணாவிரத முயற்சி கைவிடப்பட்டது.

FEFSIயின் பிற சங்கங்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தொழில்நுட்பக் கலைஞர்கள் கூறினாலும், பல யூனியன்கள் தங்கள் ஆதரவை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை. ஒளிப்பதிவாளர்களுடன் நெருக்கமாகப் பணிபுரியும் லைட்மேன் சங்கம் தனது ஒருமைப்பாட்டை தெரிவித்திருப்பதுடன் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தை வெளியேற்றியது குறித்து FEFSI தலைமையிடம் பிரச்சனை எழுப்பவும் செய்தது. தங்களின் கருத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட FEFSI இணைப்புச் சங்கங்கள் அனைத்திற்கும் கடிதமொன்றை எழுதியிருப்பதாக லைட் மேன் யூனியன் சங்கத் தலைவர் தெரிவித்தார். வெளியேற்றம் குறித்து சங்கங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று FEFSI அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. தாங்கள் மறுபடியும் FEFSIக்குள் விரைவில் இணைக்கப்பட்டுவிடுவோம் என்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
கமல்ஹாசன், விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் பல்வேறு பொதுப் பிரச்சனைகள் பற்றி பேசுகிறார்கள். ஆனால், இப்பிரச்சனை பற்றி பொது வெளியில் பேசவில்லை. அரசியல் கட்சிகளோ அல்லது தொழிற்சங்கங்களோ கூட இப்பிரச்சனை பற்றி பேசவில்லை அல்லது சினிமாத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.விடுதலை சிறுத்தைகள் கட்சி துவக்கத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர்களின் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது. அந்தப் போராட்டத்தின்போது, தனது கட்சி 48 மணி நேரத்தில் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பெரும் போராட்டம் ஒன்றை கட்டமைக்கும் என்று தொல். திருமாவளவன் சொன்னார். ஆனால், ஏறக்குறைய ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் திட்டம் என்ன என்பது பற்றியோ ஆதரவு பற்றியோ அக்கட்சி தெளிவாக எதனையும் வெளிப்படுத்தவில்லை. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, தலைவர்களும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் FEFSI க்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் சொன்னார். ஆனால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டார். சுரண்டப்படும் தொழிலாளர்களுக்குத் தங்களின் ஆதரவு உண்டு என்ற பொதுவான கருத்துரைக்கு மேல் சென்று பிரச்சனைக்கான குறிப்பான வேலைத் திட்டம் எதனையும் அவர் சொல்லவில்லை. தங்களின் போராட்டத்திலிருந்து அக்கட்சி விலகிக்கொண்டுவிட்டது என்று தொழிலாளர்கள் கருதத் துவங்கிவிட்டனர். தயாரிப்பாளர்களின் அரசியல் பலமும் பண பலமும் சேர்ந்துத் தங்களைத் தனிமைப்படுத்திவிட்டன என்று அவர்கள் கருதுகிறார்கள்.

பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் தென்படவில்லை என்பதால் தொழிலாளர்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள். இந்த இக்கட்டான நிலை நீடித்தால், யூனியனைத் தயாரிப்பாளர்கள் உடைத்து விடுவார்கள் என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். “உறுப்பினர்கள் அல்லாத பலரையும் தயாரிப்பாளர்கள் வேலைக்கு வைத்துக் கொண்டுள்ளனர். அதிக கூலி கொடுத்து ஆசைகாட்டி வரவழைக்கப்பட்ட ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகின்றனர். எங்களின் உறுப்பினர்கள் சிலரும் கூட, யூனியனை விட்டு விலகுவதாக சொல்லி வேலைக்குச் சேர்ந்து குறைவான கூலிக்கு வேலை செய்து வருகிறார்கள். பலன் தரும் வகையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே போராட்டம் நடத்தக் கூடிய யூனியனாக நாங்கள் இருந்தோம். நாங்கள் வேலைக்குப் போனால், மற்றவர்களும் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள்“, என்று யூனியனின் மூத்த உறுப்பினர் ஒருவர் சொன்னார். யூனியன் அலுவலகத்தில் திரண்டிருந்த பலரும் இரு தலைக் கொள்ளி எறும்பு போல தவித்துக்கொண்டிருந்தனர். அச்சமும், விரக்தியும் உச்சத்தில் இருந்தன.

தன்னுடைய கோரிக்கைகளில் யூனியன் தலைமை விடாப்பிடியாக இருக்கிறது. குறைக்கப்பட்ட கூலியை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை, அத்துடன், மறுபடியும் தங்களை FEFSIயில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். ஆனால், தங்களின் செயல் திட்டங்களையும் போராட்ட வடிவங்களையும் மறு சிந்தனை செய்யவும் அவர்கள் தயாராக இல்லை. அதிகாரப்பூர்வமான தொடர்புகள் வழியாகவும், அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் வழியாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும், FEFSIயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரே வழியாக இருக்கிறது.

படத் தயாரிப்பையும், படப்பிடிப்பையும் சீர்குலைப்பவர்களாகப் காணப்படக் கூடாது என்ற கவலையின் காரணமாக, பொதுமக்களின் கவனத்தையும், பிற தொழிலாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் கடும் போராட்டங்களை எடுப்பதற்கு அவர்கள் தயங்குகிறார்கள். போராட்ட காலத்தின்போது உறுப்பினர்கள் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, யூனியனின் உறுப்பினர் நிதியைக் கொண்டு வேலைநிறுத்த நிதியை உருவாக்குவதற்கும் கூட யூனியன் முயற்சி எடுக்கவில்லை.

துரதிருஷ்ட வசமாக, அரசியல் கட்சிகளோ, அவர்களின் வெகுஜன அமைப்புகளோ போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரவில்லை. நடிகர் விஜயின் ‘கருத்துச் சுதந்திர‘த்தைப் பாதுகாக்க மிகுந்த ஆர்வத்துடன் குரல் கொடுத்த இடதுசாரி சங்கங்கள் கூட இத்தொழிலாளர்களின் வேதனையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. சென்சார், வரி போன்ற விவகாரங்களில் மத்திய மாநில அரசுகளுடன் மோதல் நடத்தும் தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்களின் சங்க உரிமை மேலும், கூலி மேலும் வெற்றிகரமாகத் தொடர் தாக்குதல் நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள்- இடதுசாரித் தொழிற்சங்கங்களின் மௌனம் சாதகமாக உள்ளது.
கேமிராவின் பின்னேதான் தொழில்நுட்பக் கலைஞர்கள் செயல்படுகின்றனர். நாம் அவர்களின் முகத்தை ஒருநாளும் பார்க்க முடியாது. அவர்களின் சோகக் கதைகளைக் கேட்க முடியாது. ஏன், அவர்களின் திறமைகளைக் கூட நாம் பாராட்ட முடியாது. இப்போதும் கூட, அவர்களின் போராட்டம் பொதுமக்களின் கவனத்துக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளது. Minalya TV மட்டுமே இப்பிரச்சனையைக் கேமிராவில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. Youtube

This entry was posted in Informal sector, News, Workers Struggles and tagged , , , , . Bookmark the permalink.