நீதிதுறையும் பாலியல் துன்புறுத்தலும் – மற்றவருக்கு சட்டம், தமக்கு சமரசம்

உலகத்தில் எங்கு பார்த்தாலும், ஒடுக்குமுறை அரசியலின் மையமாக பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை என்பது தெளிவாகிக் கொண்டு வருகிறது. இந்தியாவில், பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக உள்ள சட்டங்களும் விதிமுறைகளும் செயல்படுவதில்லை என்று பெண்ணியவாதிகளில் ஒரு சாரார் எடுத்துரைத்து வருகின்றனர். கல்வி நிறுவனங்கள், தனியார் வெளிகள், அல்லது நமது வீடுகளில் கூட, இப்பிரச்சனை குறித்து கடும் விவாதங்கள் இடம்பெறுகின்றன. இந்த விவாதம் அனலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, ஒடுக்குமுறை அதிகாரத்தின் ஆளுமையை எதிர்கொள்வதில் நிறுவனங்கள் தோல்வியடைகின்றன என்பதற்கு மேலும் மேலும் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. இதற்கான சமீபத்திய சாட்சியமாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் வளாகத்திற்குள் நடைபெற்ற ஒரு பாலியல் துன்புறுத்தலை சென்னை உயர் நீதிமன்றம் கையாண்ட விதம் அமைந்துள்ளது.

தோழர் சீதா சட்டம் படிக்கும் மாணவி. புரட்சிகர இளைஞர் கழகத்தின் செயல்வீரர். இவர் ஏப்ரல் 25 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் முறைப்படி ஒரு புகாரை அளித்தார். மற்றொரு வழக்குரைஞரான ராகவன் என்பவர் தோழர் சீதாவைப் பாலியல் உறவுக்கு அழைத்ததே அந்தப் புகாருக்கான காரணம். சம்பவம் நடந்த பின்னர் குற்றமிழைத்த வழக்குரைஞரை சீதாவும் மற்றொரு வழக்குரைஞரும் மறித்துக் கேள்வியெழுப்பியதாகவும், அப்போது அந்த வழக்குரைஞர் கேவலமாகப் பேசியது மட்டுமல்லாமல், தாக்குதல் நடத்தியது பற்றியும் தனது புகாரில் முறையாக சீதா ஆவணப்படுத்தியிருந்தார். இச்சம்பவம் பலரும் பார்க்க நடந்திருக்கிறது. பாதுகாப்புக்குப் பொறுப்பான CISF யைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். CISF ராகவனை அந்த இடத்திலிருந்து அகற்றியது. ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்கத்தின் (Democratic Advocates Association-DAA) பிரதிநிதிகளான தோழர்கள் சங்கர் மற்றும் பாரதியுடன் சென்று பதிவாளரிடம் ராகவனுக்கு எதிராகத் தோழர் சீதா புகாரைப் பதிவு செய்தார். பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவாளர் உறுதியளித்திருக்கிறார்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, ஒழிப்பு மற்றும் பரிகாரம்) சட்டம் 2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act) என்ற சட்டம் உருவாவதற்கு பெண்கள் இயக்கங்களும், உழைக்கும் வர்க்கத்தின் இயக்கங்களும் விடாப்பிடியாகப் போராட்டம் நடத்தியதே காரணம். மிகப் பிரபலமான பன்வாரி தேவி வழக்கின்போது 1997ல் உச்சநீதிமன்றம் விசாகா வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டியதானது. பாலியல் துன்புறுத்தல்கள் பணியிடத்தில் நேரும்போது, அதனைக் கையாள்வதற்கான சட்டப்பூர்வ அமைப்பு இல்லாத நிலையில் அப்பிரச்சனையை எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டுதல்களே விசாகா வழிகாட்டுதல்கள் என்று அறியப்படுகின்றன.

இப்பிரச்னைக்கான சட்டம் இயற்றப்பட்டது வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். உள் விசாரணை கமிட்டி 90 நாட்களுக்குள் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சட்டம் சொல்லியிருந்தபோதும், புகார் அளித்த சீதாவோடு விசாரணை பற்றிய எந்தத் தகவலும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று அவர் அளித்த செய்தி அறிக்கை கூறுகிறது. இந்நிலையில், நவம்பர் 8 அன்ற நடைபெற்ற விசாரணையின் போது “குற்றம் சாட்டப்பட்டவர் சமரசத்துக்குத் தயார் என்றால், பிரச்சனையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரா?“ என்று புகார் கமிட்டியின் உறுப்பினர் தன்னிடம் கேட்டதாக தோழர் சீதா குற்றம்சாட்டினார். புகார் அளித்தவருக்கும் புகாருக்கு ஆளானவருக்கும் இடையில் சமரசத்திற்கான வாய்ப்பைச் சட்டம் வழங்குகிறது. ஆனாலும், புகார் அளித்த பெண் விரும்பவில்லை என்றால் அதற்கான வாய்ப்பு இல்லாது போய்விடும். இந்த வழக்கில், தோழர் சீதா, “நான் சமரசத்திற்குத் தயார் இல்லை, என்று நிலையெடுத்துவிட்டார். சட்டத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சீதா குறிப்பிட்டார்.

அதற்குப்பின்பு, பாதிப்புக்கு ஆளான சீதாவிற்கு ஆதரவாக இருந்த தோழர்கள் சங்கரையும் பாரதியையும் வழக்குரைஞர் கழகமும் (Bar Council) நீதிமன்ற நிர்வாகமும் குறிவைக்கத் துவங்கின. நவம்பர் 9 அன்று தோழர்கள் பாரதி மற்றும் சங்கருக்கு அனுப்பப்பட்ட அறிவிக்கையின் தகவல்படி, CISF ஆட்களைத் தாக்கியதாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் நீதிமன்றப் பதிவாளர் செப்டம்பர் 22 அன்று காவல்துறையில் புகார் செய்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்த தோழர் சீதாவின் புகார் குறித்து மேற்படி முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று DAA சொல்கிறது. அதேசமயத்தில் தோழர் சீதாவிற்கு ஆதரவாக இருக்கும் வழக்குரைஞர்களுக்கும் வழக்குரைஞர் கழகம் நோட்டீஸ் அளித்துள்ளது. இப்போது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதற்கு முன்பு எந்தத் தகவலும் இல்லை என்று DAA கூறியுள்ளது. சமரசம் செய்துகொள்ளலாம் என்ற கோரிக்கையை தோழர் சீதா மறுத்த மறுநாளான நவம்பர் 9 அன்று வழக்குரைஞர் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தோழர் சீதா சமரசத்திற்கு உடன்படவில்லை என்பதால் தான் இக்குற்றச்சாட்டுகளை நீதிமன்ற நிர்வாகம் கையெடுத்துள்ளதாக DAA குற்றம் சாட்டுகிறது.

துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்கும் பெண்களை அச்சுறுத்துகின்ற, பெண்களைத் துன்புறுத்திய ஆணைக் காக்கும் ஆண்கள் கூட்டமாகவேகல்வி நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசு நிறுவனங்களாக இருந்தாலும் சரிசெயல்படுகின்றன என்பது பெண்ணிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. எனவே, இந்த நிறுவனங்களில் விதிமுறைகள் சரியாக செயல்படுத்தப்படுவதில்லை. பெண்கள் நீதி வேண்டும் என்று கோரும்போது, இந்த நிறுவனங்கள் இன்னும் ஒரு அடி முன்னேறிச் சென்று நிறுவனத்தின் கௌரவம் என்ற பெயரில் குற்றங்களை மறைக்கக் கோருகின்றனர். சமரசத்தை அவர்கள் கையில் எடுக்கின்றனர். பாதிக்கப்பட்டவரை கெட்டவர் ஆக்குகிறார்கள். நீதி வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியவர்கள் எந்த ஆதிக்கத்தை எதிர்த்தார்களோ அதே ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வேலையை நிறுவனங்கள் செய்கின்றன.

குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தும் தன் வேலையைச் செய்ததற்காக பன்வாரி தேவி, சாதி வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களைக் கடுமையாகக் கையாள்வதற்கான நிறுவன வழிமுறைகளை உருவாக்கியது. ஆனால், தனது வாசலிலேயே பாலியல் துன்புறுத்தல் நடக்கும்போது அதற்கான நீதி வழங்கி முன்மாதிரியாகத் திகழும் வாய்ப்பை நீதி நிறுவனம் மறுத்துள்ளது. மாறாக, நீதிக்குப் பதிலாக சமரசம் அதற்குப் பின்பு இழப்பீடு என்று அடம்பிடிக்கிறது. சமரசம் செய்வதும், இழப்பீடு செலுத்துவதும், செலவு குறைவானவை என்பதால், குற்றமிழைத்தவர் மீண்டும், மீண்டும் குற்றமிழைக்க வழிவகுக்கும். பணியிடங்களில் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதிலும் இதனை நாம் அடிக்கடி காண்கிறோம். பாதுகாப்பு விதிகளை மீறுவதற்கான இழப்பீடு, சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமயங்களில் கூட, பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் செலவை விட, அளிக்கப்படும் இழப்பீடு அற்பமானதாக இருக்கிறது. ஆனால், நாகரீக சமூகம் ஒன்றில் நீதி அளிக்கப்படும்போது, மறுபடியும் அந்தக் குற்றம் நடைபெறாதிருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது நீதித்துறையில் நிகழ்ந்துள்ளது ஒரு மோசமான செய்தியைச் சொல்கிறது. நீதியைக் காக்க வேண்டிய கடமையில் உள்ளவர்களுக்கே நீதி பற்றிய கோட்பாடு தெரியாது இருக்கிறது என்பதுதான் மோசமான செய்தி!

This entry was posted in News, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.