இளைஞர்களாகத் தொழிலாளர்கள்… தொழிலாளர்களாக இளைஞர்கள் – RYA மாநாடு, காஞ்சிபுரம்

இன்றைய மாணவர்களும் இளைஞர்களும்தான் நாளையத் தொழிலாளர்கள். இருந்தபோதும், இளைஞர்மாணவர் இயக்கங்களுக்கும் தொழிலாளர் இயக்கங்களுக்கும் இடையிலான ஊடாடல் என்று வரும்போது, இந்த சமூகப் பிரிவினரைத் தனித் தனிப் பிரிவுகளாக அணுகுவதைத்தான் இடதுசாரி இயக்கங்கள் செய்துவருகின்றன. தொழிலாளர் வர்க்கமாகப் போகும் இளைஞர்களைத் தயார் செய்யும் வகையில் அல்லாமல், பிரச்சனைகளையும் போராட்டங்களையும் இணைத்துப் பேசாமல் இளைஞர்களின் குறிப்பான பிரச்சனைகளை மட்டுமே இடதுசாரி இயக்கங்கள் பேசுகின்றன. தொழிலாளராக இருக்கும் நிலை நிலையற்று மோசமாக வரும் நிலையில், இந்த இரண்டு குழுக்களையும் இணைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இளைஞர்களும் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து தங்களின் பொதுவான நலனுக்காகப் போராடுவதற்காக புரட்சிகர இளைஞர் கழகம் (Revolutionary Youth Association-RYA) மேற்கொண்ட முயற்சி பலனளிக்கத் துவங்கியுள்ளது.

RYA Convention at Sriperumbudur

காஞ்சிபுரத்தின் RYA தனது இரண்டாவது ஆண்டு மாநாட்டை ஸ்ரீபெரும்புதூரில் 12, நவம்பர் 2017 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்தியது. அந்த மாநாட்டில் 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் மிகப் பெரும்பாலோர் ஆலைகளில் பணியாற்றும் பயிற்சித் தொழிலாளர்கள், அது மட்டுமல்ல 25 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள். பாதுகாப்பானநிரந்தர வேலை, கௌரவமான வேலை நிலைமை, வாரத்துக்கு 40 மணி நேர வேலை, மாதத்துக்கு குறைந்தபட்சம் 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பன அவர்கள் வலுவான முறையில் முன்வைத்த கோரிக்கைகளாக இருந்தன. பயிற்சித் தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் (ஓராண்டு) குறிப்பிட்ட காலத்தில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

சமூகக் குழுக்களைச் சேர்ந்த பல இளைஞர்களும், அவர்களில் பலர் மாணவர்கள், மாநாட்டில் கலந்துகொண்டனர். டெங்கியைக் கட்டுப்படுத்துவது, தொழிற்சாலைகளால் உருவாக்கப்பட்ட உள்ளூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகள், நீட் தேர்வு முறையை ஒழிப்பது போன்ற சமூகம் தொடர்பான பிரச்சனைகளையும் அவர்கள் எழுப்பினர்.

மாலை நேர அமர்வில் பங்குபெற்றவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி பேசினர். பேசிய பயிற்சித் தொழிலாளர்களில் பலர், ஆண்டுகள் பலவாக பயிற்சித் தொழிலாளராகச் சிக்கிக் கிடப்பதினால் ஏற்பட்ட விரக்தியைப் பகிர்ந்துகொண்டனர். நிலையான வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தாங்கள் படித்ததாக அவர்கள் சொன்னார்கள். ஆனால், இப்போது அவர்கள் 2-3 ஆண்டுகளாகப் பயிற்சித் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் அவர்களை வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள். அடுத்த வேலைக்குப் போனால், அங்கேயும் பயிற்சித் தொழிலாளியாகத்தான் மறுபடியும் துவங்க வேண்டும். இதுபோன்ற சமூகத்திற்கு எதிராகப் மாபெரும் போராட்டத்தைக் கட்டமைப்பதில் உறுதியாக இருப்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். நெடுஞ்சாலையை மறிப்பது, தேவையானால் சிறைக்குச் செல்வது போன்ற தீவிர செயல்பாடுகளில் ஈடுபடவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மாநாட்டில் கலந்துகொண்ட குழு ஒன்றுடன் நாங்கள் பேசினோம். அவர்கள் முன்பு நிப்பான் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தவர்கள். தற்காலத்தில், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களின் கதை படமாகக் கண்ணுக்கு முன் காட்டியது. நிப்பான் எக்ஸ்பிரசில் பணியாற்றிவந்து 2016ல் வேலை நீக்கம் செய்யப்பட்ட 72 தொழிலாளர்களின் ஒரு பகுதி அந்த இளைஞர்கள். குறைவான சம்பளம், நீண்ட வேலை நேரம், வாகனத்துக்கு ஏற்பட்ட பழுதிற்கு சொந்தக் காசை செலவு செய்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக அவர்கள் போராடியிருக்கிறார்கள். அவர்களை நிர்வாகம் வேலைநீக்கம் செய்ததற்கு சில மாதங்கள் முன்பு அவர்கள் தங்களின் பிரச்சனையை (AICCTU சங்கத்தின் வழியாக) தொழிலாளர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். தற்போது அவர்கள் தங்களை வேலைநீக்கம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார்கள்.

கூடுவாஞ்சேரியின் குமிழி கிராமத்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் கொண்ட குழுவையும் நாங்கள் சந்தித்தோம். ஒரு பெயர் பலகை கூட இல்லாத சலவைத் தொழிற்சாலை அக்கிராமத்தின் நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருவதை அவர்கள் சொன்னார்கள். மாவட்ட ஆட்சியர் வரை பல்வேறு அலுவலர்களிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், தாசில்தார் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வரும்போது வெளியேற்றப்படும் நீர் சுத்தமான தண்ணீராக மாறிவிடுகிறது என்றார்கள் அவர்கள்!

வருகை தந்திருந்த தொழிலாளர்கள் தங்களின் பிரச்சனையை மட்டும் பேசவரவில்லை. மாண்டோவிலிருந்து வந்திருந்த இரண்டு தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள். ஆனால், இன்னமும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தங்களின் தோழர்கள் சார்பாக மாநாட்டில் கலந்துகொள்ள அவர்கள் வந்திருந்தனர்.

தேசிய அமைப்பானா RYA, பிராந்திய நலன் குறித்த பல்வேறு பிரச்சனைகளைக் கையில் எடுப்பதாக ஹுண்டாயைச் சேர்ந்த தோழர் ராஜகுரு குறிப்பிட்டார். காஞ்சிபுரம் தொழில்மயமான மாவட்டம் என்பதால், இளைஞர்களின் வாழ்க்கை தொழிற்சாலை வேலையை மையம் கொண்டதாக இருக்கிறது. இந்த உண்மை மாநாட்டில் பிரதிபலித்தது. விவசாய மாவட்டங்களில் RYA விவசாயிகளின் பிரச்சனையைக் கையில் எடுக்கிறது. ONGCக்கு எதிரான நெடுவாசல் பிரச்சனையையும் அவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்.

இதுதான் இந்த மாநாட்டின் புதிய அம்சம் என்று எங்களுக்குத் தோன்றியது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களை மாநாடு ஒன்று சேர்த்திருக்கிறது. நண்பர்கள் வழியாக, சமூகங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம், பல்வேறு ஆலைகளின் பயிற்சித் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்களாக மாறப் போகும் மாணவர்கள் என்று மாநாட்டில் திரண்டிருந்தனர்.

மார்க்சியத் தொழிலாளர் தத்துவம் மூலம் பிரச்சனைகளின் புள்ளிகளை இணைத்தல்

தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளை முதலாளித்துவ உற்பத்திமுறையின் இணைப்பது மற்றும் மனிதச் செயல்பாடான ‘உழைப்பு‘ குறித்த பல்வேறு உலகப் பார்வைகள் பற்றிய ஆழமான சிந்தனையும் மாநாட்டில் இடம்பெற்றது. AICCTUவின் தேசியத் தலைவரான தோழர் குமாரசாமி எழுதிய கட்டுரையொன்று விவாதிக்கப்பட்டது. ஒரு தொழிலாளி கட்டுரையை உரக்கப் படிப்பதுடன் அமர்வுத் துவங்கியது. அதன்பின் தோழர் குமாரசாமி விளக்கங்களை அளித்தார்.

ஓர் உற்பத்திக் கருவியாக பரிணமித்த மனிதக் கரம், அதனால் உருவாக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்கள், அவற்றை அபகரித்த முதலாளித்துவவாதிகள் என்ற வரலாற்றை விவாதம் வெளிப்படுத்தியது. உற்பத்திச் சாதனங்கள் அபகரிக்கப்பட்டதால் உழைப்பாளர்கள் முதலாளிகளிடம் தங்களின் உழைப்புச் சக்தியை விற்க வேண்டி வந்தது. கொடுக்கப்படும் ஓர் கூலிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு உழைக்க வேண்டி வந்தது. உழைப்பாளி தன் கூலிக்காக பாதி நேரமும், மற்றொரு பாதி நேரம் முதலாளியின் லாபத்துக்காகவும் உழைக்கும்படி முதலாளி செய்கிறார். எனவே, தொழிலாளியின் கூலியைக் குறைப்பதையும், அல்லது அவர்கள் வேலை செய்யும் நேரத்தை அதிகரிப்பதையும் சார்ந்ததாக முதலாளிகளின் லாபம் இருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் நாம் இன்று காண முடிகிறது.

எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டு மணி நேரம் ஓய்வு, விருப்பப்படி செயல்பட எட்டு மணி நேரம்“ என்ற தொழிலாளர்களின் வரலாற்றுப் போராட்டம் பற்றி குமாரசாமி பேசினார். இதனுடன் தொடர்புள்ளதுதான் மே தினம். 1886 ஆம் ஆண்டு மே 1 அன்று எட்டு மணி நேர வேலை நேரம் கோரி பல பத்தாயிரக் கணக்கான ஆண்பெண் தொழிலாளர்கள் சிகாகோவில் வேலைநிறுத்தம் செய்தனர். ஆனால், இன்றோ, எட்டு மணி நேர வேலை நாள் என்பது காற்றில் கரைந்துகொண்டு வருகிறது.

யந்திரமயமாதல் காரணமாக உடல் உழைப்பின் தேவை குறைந்திருக்கும்போதும் கூட தொழிலாளர்கள் மிகையாக உழைக்க வேண்டியிருக்கும் முரண்பட்ட சூழலை நாம் ஏன் எதிர்கொள்கிறோம் என்ற கேள்வியை கட்டுரை எழுப்பியது. கூலியைக் குறைப்பதற்காகவும் பணி நிலைமையைக் குறைப்பதற்காகவும் வேலையற்ற உழைப்பாளர் படையைத் தக்க வைத்துக்கொள்ளும் முதலாளிகளின் பேராசைதான் காரணம் என்று தோழர் குமாரசாமி குறிப்பிட்டார்.

வெறுமனே 10 அல்லது 12 மணி வேலை நேரத்தை ஒப்புக்கொள்வதற்கு மாறாக, ஒரு அறையில் பத்து பேருடன் வாழ்வதற்கு மாறாக, நாம் நமது கற்பனையை விரிக்க வேண்டும். இது சிரமான வேலைதான், என்றார் அவர். இன்றைய நிலையில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் குறைவான வேலை நேரத்தையும் வாழ்க்கைக் கூலி கேட்பதும் பாதுகாப்பற்றது என்று கருதும் நிலையில் இருப்பதாக உணர்கிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் கற்பனை செய்த கற்பனை உலகங்களைக் கட்டுரை விவாதித்தது. பின்னோக்கிப் பார்ப்பது (Looking backwards) என்ற 1888ல் எழுதப்பட்ட எட்வர்ட் பெலாமியின் (Edward Bellamy) நாவல் 2000 வருடத்தில் பாஸ்டனில் இருக்கும் சோசலிச சமூகத்தைக் கற்பனை செய்தது. அச்சமூகத்தில் எவ்வொருவரும், அனைத்துப் பலன்களுடனும் 45வது வயதில் ஓய்வடைவது சாத்தியமாக இருந்தது. இருந்தபோதும், பெலாமியின் அந்த கற்பனை உலகத்தில், உழைப்பது தாங்க முடியாத பிழுக்கை வேலையாக இருந்தது.

இல்லாத இடத்திலிருந்து செய்தி‘ (News from nowhere) என்ற நாவல் பற்றியும் கட்டுரையில் பேசப்படுகிறது. அந்த நாவல் 1890ல் எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் பெயர் வில்லியம் மோரிஸ் (William Morris). உற்பத்திச் சாதனங்களை ஜனநாயக ரீதியாகக் கையாளும் ஒரு சமூகம் பற்றி நாவலாசிரியர் கற்பனை செய்துள்ளார். அந்த சமூகம் விவசாய சமூகம். அந்த சமூகத்தின் மக்கள் இயற்கையில் இன்பம் காண்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சி காண்கிறார்கள். நாம் செய்யும் வேலையில் மகிழ்ச்சி காணும் ஓர் உலகத்தை நோக்கி நாம் முன்னேற முடியுமா என்று யோசியுங்கள் என்று குமாரசாமி மாநாட்டிற்கு வந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மனிதர்கள் முழு வளர்ச்சி காண வேண்டுமானால், குறைந்த அளவு உழைக்கும் நேரம் உள்ள வேலை நாள் வேண்டும் என்பதை முன்வைப்பதோடு உரை முடிவடைந்தது. பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும், சமூகச் செயல்பாட்டுக்கும் மக்களுக்கு நேரம் வேண்டும். உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள, இயற்கையை ரசிக்க மனிதர்களுக்கு நேரம் வேண்டும். உரை முடிவடைந்த பின்னர், நிரந்தரமானபாதுகாப்பான வேலைக்காகவும், வாரத்திற்கு 40 மணி நேர வேலைக்காகவும் குறைந்தபட்சம் 21,000 

ரூபாய் சம்பளத்திற்காகவும் போராடுவதற்கு தொழிலாளர்கள் முழக்கமிட்டு ஒப்புக்கொண்டனர்.

மாநாட்டுத் தீர்மானங்கள்

மாநாட்டுத் தீர்மானங்கள் பின்வருமாறு:

1. பயிற்சிக் காலம் ஓராண்டைத் தாண்டக் கூடாது. தகுதிகாணும் கால வேலை (probation)ஆறு மாதங்களை விட அதிகமாக இருக்கக் கூடாது. தகுதிகாணும் காலத்துக்குப் பின்பு தொழிலாளிக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும்.

2. 240 நாட்களுக்கு மேல் வேலை செய்யும் அனைத்து தற்காலிகத் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.

3. ஆள் குறைப்பிற்கு ஆளான தற்காலிகத் தொழிலாளர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு, வேலைக்கு ஆள் எடுக்கும்போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

4. எந்த ஒரு துறையிலும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 5 சதத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

5. உச்ச நீதிமன்றத் உத்தரவின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், சம வேலைக்கு சம கூலி வழங்கப்பட வேண்டும்.

6. மாதத்திற்குக் குறைந்தது ரூபாய் 20 ஆயிரம் சம்பளம்.

7. தொழிற்சாலைகள் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்று.

8. மாதாந்திர உதிரப்போக்கு காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கு.

9. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் கமிட்டியை அமை.

10. டெங்கியை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடு.

11. கந்து வட்டிக்கு முடிவு கட்டு.

12. தொழிலாளர் சீர்திருத்தத்தை நிறுத்து.

13. கல்வி, மருத்துவம், வேலையை அடிப்படை உரிமையாக்கு

14. நீட் தேர்வை ரத்து செய். கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா.

புதிய வடிவிலான போராட்டங்களை வலுப்படுத்துவது

நவ தாராளவாதமும், தொழிலாளர் சீர்திருத்தங்களும் மிகவும் கொடிய சுரண்டலுக்கும், ஆபத்தான உற்பத்திக்கும் தொழிலாளர்களை ஆளாக்குகின்றன. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தக்க வைப்பது தொழிற்சங்கங்களுக்கு கடினமானதாக ஆகிக்கொண்டிருக்கிறது. பயிற்சியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இப்பிரிவுத் தொழிலாளர்களுக்கு இடையில் கலந்து பேசிக்கொள்வது மேலும் மேலும் கடினமான ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. தொழிற்சங்கங்களின் கட்டமைப்பு சாதகமானதாக இல்லை, அல்லது தொழிலாளர்கள் கலந்துரையாடுவதற்கு தங்குதடையின்றி தொடர்ந்து வாய்ப்பளிப்பதாக இல்லை. உதாரணமாக, மாநாட்டில் கலந்துகொண்ட, தொழிலாளராக ஆகப் போகும் ஒரு மாணவர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றியும், நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேறுபட்ட முறையில் நடத்தப்படுவது குறித்தும் மிகத் தெளிவாகப் பேசினார். பிரித்து வைப்பதற்கான வழிவகை என்ன என்பதை முதலாளித்துவமுறை தெளிவாக கண்டுபிடித்து வைத்துள்ளது. உதாரணமாக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் உணவகத்திற்கு வருவதற்கென்று தனி நேரம் வைத்துள்ளனர். ஆனால், அமைப்பு என்று வரும்போது இடதுசாரிகள் பழைய வார்ப்பிலான அமைப்பு முறையை மாற்றி புதிய முயற்சிகளை உருவாக்கத் தவறுகின்றனர். தொழிற்சங்கம் என்பது தொழிற்சாலைக்குள் ஒரு அமைப்பாக முடிந்து விடுகின்றது.

பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்றாகத் திரட்டுவதில் இந்த மாநாடு முக்கியமான முன்னேற்றமாகும். வந்தவர்கள் அனைவரும் தமிழ் பேசுகின்ற, ஒன்றாகக் கலக்க வாய்ப்புள்ள ஆண் இளைஞர்கள்தான். இருந்தபோதும், அவர்கள் தங்களின் சின்ன குழுவிற்குள்தான் தென்பட்டார்கள். அன்னியமான, புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ளத் தயங்கியதைப் பார்க்க முடிந்தது. பல்வேறு வகைப்பட்ட மற்றும் பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்குள் ஊடாடுவதை அதிகரிப்பதில், இதுபோன்ற புதிய வடிவத்திலான சந்திப்புகள் இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது. வெவ்வேறு முறைசாரா நடவடிக்கைகள் மூலம் வலுவூட்டப்பட்டு, தொழிலாளர்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் புதிய சமூக வெளிகள் உருவாக்கப்பட்டு, முதலாளித்துவ அரசையும் சுரண்டல் தன்மை கொண்ட உற்பத்தி முறையையும் உடனடியாக ஒழிப்பதற்காக இல்லை என்றாலும் கூட, தொழிலாளர்கள் தங்களுக்குள் ஊடாடுவதை அதிகரிப்பதற்கான வேலை இன்னமும் கூடுதலாகச் செய்யப்பட வேண்டியிருக்கிறது.

This entry was posted in News, Working Class Vision, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.