மாபெரும் செவிலியர் போராட்டம் ஏன் ஏதற்காக?

Nurses Strike at DMS Day 3; 29th Nov

நவம்பர் 27 முதல் நவம்பர் 29 வரை ஒப்பந்த செவிலியர்கள் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கிராமப்புற சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை முன் தமிழ்நாடு கிராமப்புறங்களில் பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பெரும்பாலானோர் பெண்கள், மூன்று நாட்களுக்கு திறந்த வெளியில் இரவும் பகலும் குடியிருந்து இடைவிடாது போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்த நிலையில், அவர்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தின் போது இயற்கையும் மனிதர்கள் அவர்களுக்கு இடையூறு விளைவித்து கொண்டு தான் இருந்தனர். ஒரு பக்கம் பருவ மழை அவர்களை தீண்ட, இன்னொரு பக்கம் காவல் துறை அவர்களை டிஎம்எஸ் வளாகத்தில் வைத்துப் பூட்டினர். அவர்களுக்கு ஒரு கழிப்பிடம் தவிர எந்த அடிப்படை வசதிகளையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. குடிநீர் வசதியைக் கூட அனுமதிக்கவில்லை.

வேலை நிறுத்தத்தின் இரண்டாம் நாளன்று, தொழிலாளர் பிரதிநிதகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசு கூறியது. பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அதற்கு பின்னர் அரசு 90சத கோரிக்கைகளை ஒப்புக்கொண்டதாகவும், வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவதாகவும் பிரதிநிதிகள் அறிவித்தனர். ஆனால் மற்ற தொழிலாளர்களால் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளது என்று தெளிவுபடுத்தாத நிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.

ஆனால் நீதித்துறையின் கடுமையான வார்த்தைகளும், தொழிலாளர் விரோத உத்தரவும் தொழிலாளர்களின் உறுதியை உடைத்தன. செவிலியர் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு, சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிலாளர்களின் போராட்டம் நியாயமற்ற ஒன்றும் என்றும் ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள் என நீதிபதி கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. போராட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை இயக்குனர் வாய்மொழியாக அறிவித்த பிறகு நவம்பர் 29 இரவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு ஊர் திரும்பினர்.

LISTEN : A Nurse Discusses their Demands

ஏன் இந்த மோதல்?

மத்திய, மாநில அரசுகள் தங்கள் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்கிறார்கள், இதனால் சில சமயம் தொழிலாளர்கள் சரியாக பணி புரிவதில்லை என்ற ஒரு பொது கருத்து நிலவுகிறது. ஆனால் இது உண்மையல்ல. எண்ணிக்கையில் குறைவான ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் சிலருக்கு மட்டுமே முறையான ஊதியம், உயர்வு, பணி நிரந்தரம், மேம்பட்ட பணி நிலைமைகள் நிலவுகின்றன. பெரும்பாலான தொழிலாளர்கள் அரசு துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் குறைந்த ஊதியத்திற்கு ஒப்பந்த முறையில் பாதுகாப்பற்ற பணிநிலைமைகளில் பணிபுரிகின்றனர். அரசு நடத்தும் சுரங்கங்களில் இருந்து தொழிற்சாலைகளில் வரை, துப்புரவு பணியில் இருந்து ரயில்வே தொழிலாளர்கள் வரை, அரசு துறைகளில் கடைநிலையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும் தனியார் துறையில் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு பெரும் வித்தியாசம் இல்லை. தனியார் முதலாளிகளிடம் இருந்து அரசு நன்றாகவே பாடம் கற்றுக் கொள்கிறது. தொழிலாளர்களின் உரிமையை பறிக்க தனியார் துறையை போல் அரசும் பல்வேறு வகைபாடுகளை வைத்து ஒப்பந்த தொழில்முறையை புகுத்தி வருகிறது.

தமிழ்நாடு மாநில அரசு சுமார் 11000 செவிலியர்களை 2015ல் பணிக்கமர்த்தியது. மத்திய அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் கீழ் அவர்களுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டாலும், கடந்த பல வருடங்களாக செவிலியர்கள் சரியான எண்ணிக்கையில் அமர்த்தப்படாமல் இருந்ததால் ஏற்பட்ட காலியிடங்களை இவை. அரசு கல்லூரியில் படித்த செவிலியர்களை மட்டுமே அரசு பணிக்கு தேர்ந்தெடுத்து வந்ததும் காலியிடங்கள் இருந்ததற்கு ஒரு பிரச்சனையாகும். தனியார் கல்லூரி மாணவர்கள் இதுக்கெதிராக தொடுத்த வழக்கில் நீதித்துறை மருத்துவ நியமன சேவை வாரியம் மூலம் செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

11000 காலியிடங்களை நிரப்புவதற்கு மாநில அரசு வயது வரம்பு, கல்வித்தகுதி எனப் பல விதிமுறைகளை தளர்த்தியது. அப்போது தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் செவிலியர் பணியில் அமர்த்தப்படுவர் என விளம்பரத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், இதை எதிர்த்து 2015ல் போடப்பட்ட வழக்கில், அப்போதைய அட்வகேட் ஜெனரல் 2-5 வருடங்களில் செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் கூறியிருந்தார். மேலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையாக செவிலியர்களின் ஊதியமும் மாற்றப்படும் என உறுதியளித்திருந்தார். இதன் அடிப்படையில் 2015 வழக்கு தள்ளுபடி செய்யப்ட்டு இடைக்கால உத்தரவு போடப்பட்டது ( WP No 16774 and 17039 of 2015, Madras High Court). இடைக்கால உத்தரவு பிறப்பிக்கபட்ட போது, நீதிமன்றம் செவிலியர்களின் ஊதியம் மிகவும் குறைவு என்றும், வழக்கின் இறுதி தீர்ப்பில் இப்பிரச்சனைகள் களையப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது. ஆனால் இது குறித்து மாநில அரசு எழுத்துபூர்வமான அறிக்கை கொடுக்கவில்லை.

இவ்வாறு 11000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்தில்அனைத்து மூலைகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். இங்கு பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தனர். பல மருத்துவமனைகளில் ஒரு ஷிப்டிற்கு ஒரு செவிலியர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவர்களுக்கு வீட்டு வசதி, போக்குவரத்து வசதி, விடுமுறை எதுவும் இல்லை. பல நாட்களில் அவர்கள் 12 நாட்களுக்கு மேலாக பணி புரிய நேர்ந்தது. மருத்துவமனையில் மருத்துவப் பணி மட்டுமல்ல நிர்வாகப் பணியையும் அவர்களே செய்ய வேண்டியிருந்தது. இதற்காக அவர்களுக்கு நிர்ணியக்கப்பட்ட ஊதியம் முதல் வருடத்திற்கு ரூ7000மும் இரண்டாவது வருடத்தில் ரூ7700மும் தான். ஆனாலும் இரண்டு வருடம் கழித்து நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற கனவோடு செவிலியர்கள் மனம் தளராது பணிபுரிந்தனர். இவர்களில் பலர் தனியார் மருத்துவமனைகளில் 10-15 வருடங்கள் பணி செய்து, ‘அரசு வேலைகிடைக்கும் என்று 40வயதிற்கும் மேல் இங்கு வந்து சேர்ந்தவர்கள்.

செவிலியர்களின் கோரிக்கைகள் பெரிதாக ஒன்றும் இல்லை. தேர்வு மூலமாக அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணிக்கு நியமனம் செய்யக்கூடாது எனும் 1962 அரசாணை 191ஐ அமல்படுத்த அவர்கள் கோருகின்றனர். அரசு கூறும் வகைபாடுகளை அவர்கள் ஒத்துக் கொள்ள தயாராக இல்லை. அரசு செவிலியர்களுக்கு இணையாக சம வேலைக்கு சம ஊதியம், சமூகப் பாதுகாப்புகள், பணி நிரந்தரம் ஆகியவற்றை கோருகின்றனர். அவர்கள் கோரும் சம வேலைக்கு சம ஊதியம்என்பது உச்ச நீதி மன்றமே ஒத்துக் கொண்ட ஒன்று. தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அவர்கள் சுகாதாரத் துறைக்கு அவர்கள் மனு அளித்திருந்தார்கள். அரசு அவர்களுடைய மனுவைப் பரீசிலனை செய்யும் மனநிலையில் இல்லை என்ற நிலையில் தான், அவர்கள் வேலை நிறுத்தத்தை கையில் எடுத்தனர்.

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்(NRHM) கீழ் செவிலியர்களை பணியில் அமர்த்தியுள்ளதாகவும் அதனால் அரசு செவிலியர்களுக்கு இணையாக ஊதியமோ பணிநிரந்தரமோ கோர முடியாது என அரசு தரப்பு கூறுகின்றனர். இத்திட்டங்கள் முடியும் போது தொழிலாளர்களின் பணியும் முடிந்து விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அரசின் வாதத்தில் இரு பிரச்சனைகள் உள்ளன. முதலாவதாக இது குறித்து போடப்பட்ட வழக்கில் செவிலியர்கள் 2-5 வருடங்களில் நிரந்தரப்படுத்தப்படுவர் என அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். இரண்டாவதாக, இச்செவிலியர் செய்யும் பணிகளுக்கும் அரசு செவிலியர் செய்யும் பணிகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு செவிலியர்கள் இல்லாத நிலையில் இச்செவிலியர்களின் பணிகள் நீக்கப்பட்டால், சுகாதார நிலையத்தையே மூட வேண்டும்.

அரசு துறைகளில் முழுநேர வேலையை வாங்கி தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. மாநகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் 7 வருடங்களுக்கும் மேலாக பணி செய்தும் நிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே கொடுக்கப்படுகின்றது. அங்கன்வாடிகளை நடத்தும் ஆசிரியர்களை வேறு வகைப்படுத்தி, அவர்களுக்கு நர்சரி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் கொடுப்பதில்லை. தமிழ்நாடு தன்னுடைய மாநில மக்கள் நலக் கொள்கைகளை பறைசாற்றிக் கொள்கிறது ஆனால் அதற்கான விலையை கொடுப்பது தொழிலாளர்களே. இதற்கு எதிராக தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்களில் இருந்து செவிலியர்கள் வரை போராடும்போது அவர்கள் மீது அரசும் நீதித்துறையையும் அடக்குமுறையையே ஏவுகின்றனர்.

அரசு ஒடுக்குமுறைக்கு மத்தியில் பெருகிய ஆதரவு

அரசுக்கு முன்னறிவிப்பு கொடுத்திருந்தபடி, தமிழ்நாட்டின் வெவ்வெறு பகுதிகளில் இருந்து வந்த செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் குவிந்தனர். தொழிலாளர்களை உள்ளே விட காவல்துறை மறுத்தவுடன், தொழிலாளர்கள் அண்ணாசாலையை மறியல் செய்ய முயன்றனர். அதை முறியடித்த காவல்துறை தொழிலாளர்களை குவிந்ததை கண்டு அவர்களை டிஎம்எஸ் வளாகத்தில் சேர்த்து வளாக வாயில்களை பூட்டினர்.

Toilets Locked at DMS Complex

செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளே அமர்ந்து இரவும் பகலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தொழிலாளர்களின் மன உறுதியை குலைக்க காவல்துறை கழிப்பறைகளையும், குடிநீர் அறைகளையும் பூட்டினர். ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே திறந்து விடப்பட்டது. மேலும் ஊடகங்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மக்களுடன் செவிலியர்களின் தொடர்பையும் மறுத்தனர். இதனால் செவிலியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டது. மாதவிடாய் போக்கில் கரை படிந்த மாதவிடாய் பட்டைகளை அகற்றுவதில் கூட அவர்களால் முடியவில்லை. பட்டைகள் குவிந்த சுகாதாரமற்ற கழிப்பரையின் போட்டோக்கள் சமூகதளங்களில் பரவி மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்தன. தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க எதையும் தயாராக உள்ள மனிதாபிமற்ற அரசின் போக்கை இவை வெட்டவெளிச்சமாக்கின.

இளம் குழந்தைகளை கொண்டு வந்த செவிலியர் தாய்மார்களுக்கு மேலும் கொடுமை. செவிலியர் தாயுடன், குழந்தையை பார்த்துக் கொள்ள வந்த பாட்டிக்கு உடம்பு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனத் தொழிலாளர்கள் கூறினர். இரண்டாம் நாளன்று இரு செவிலியர்களுக்கு வலிப்பு வந்து ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும் இவற்றை தொழிலாளர்கள் உறுதியுடன் சந்தித்தனர். மருத்துவமனையில் தாங்கள் அன்றாடம் சந்திப்பதைவிட இது ஒன்றும் மிகுதியல்ல என்று ஒரு செவிலியர் சிரித்து கொண்டே கூறினார்.

Notice at the gate of DMS

தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிக்க அரசு பலவழிகளை மேற்கொண்டது. ஒரு பக்கம் தொழிலாளர் பிரதிநிதிகளை வைத்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என அறிவித்தது. ஆனால் போராட்டத்தை தொடர்ந்த செவிலியர்கள் பிரதிநதிகள் மிரட்டப்பட்டதாக கூறினார். பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என வாட்ஸ்ஆப் செய்திகள் தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டன. இதனால் சுமார் 500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர். ஆனால் மற்ற தொழிலாளர்கள் உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.

சமூக வலைதளங்களில் போராட்டத்தை அரசு கையாளும் விதத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் கட்சி தலைவர்கள் செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு தெரிவிக்கச் சென்ற தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தைச் சார்ந்த இரு சமூகப் போராளிகள் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டனர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மனிதியின் பிரதிநிதிகள் செவிலியர்களை சந்தித்து, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை மறுக்கக்கூடாது எனக் கோரிய பின்னர், டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பத்திரிக்கையாளர்களை காவல்துறை உள்ளே அனுமதிக்காததால், பத்திரிக்கையாளர்கள் டிஎம்எஸ் வளாகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

நீதித்துறையின் அக்கறையின்மை

நவம்பர் 29 அன்று போராடும் தொழிலாளர்கள் இன்னொரு இரவைக் கழிப்பதற்கு தயார்நிலையில் இருந்த போது சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவு தொழிலாளர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக வந்து சேர்ந்தது. சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இது ஒரு நியாயமற்ற போராட்டம் என செவிலியர் போராட்டத்தை சாடினார். அரசின் கடமையையும், செவிலியர்களின் கோரிக்கைகளையும் என்னவென்று கூட நீதிமன்றம் கேட்காமல், பொது நல வழக்கின் வாயிலாக செவிலியரின் போராட்டத்தை தடைசெய்தது. ‘உங்களுக்கு ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள்எனக் கூறிய நீதிபதி தொழிலாளர்கள் கலந்தாலோசிப்பதற்கும் நேரம் தரவில்லை. அடுத்த நாளே பணியில் சென்று சேர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்துள்ளனர், ஒரு நாள் அவகாசம் தாருங்கள் என செவிலியர் தரப்பு வழக்குறைஞர்கள் கேட்ட போது வேலை நிறுத்தத்திற்கு வந்த தொழிலாளர்களுக்கு போகத் தெரியாதா என்று நீதிபதி கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நீதிபதி உத்தரவிற்கு பின்னர் செவிலியர்களிடம் பேசிய ஊரக மருத்துவத் துறை இயக்குனர், எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என உத்தரவாதம் அளித்தார். செவிலியர் கோரிக்கைகள் குறித்து கிருஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர் அரசு அறிக்கை தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெறும் ரூ7700 வாங்கும் செவிலியர்கள் ஊதிய உயர்வு கோராமல் பணியை விட்டு செல்ல வேண்டும் என நீதிபதிகள் கூறுவது அதிர்ச்சியை ஊட்டுகின்றது. நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இவ்வருட மார்ச் மாதத்தில் தான் கோரினார். மத்திய அரசும் உடனடியாக இதற்கு செவிசாய்த்து அதற்கான சட்டதிருத்தம் தற்போது பாராளுமன்றத்தில் உள்ளது. பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால, உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட உள்ள ஊதியம் மாதத்திற்கு ரூ2.25 லட்சம், அதாவது 1 லட்ச ஊதிய உயர்வு! அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு நிலுவைத் தொகையும் கொடுக்கப்படும்(கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய்). அது தவிர அவர்களுக்கு வீடு, கார், ஓட்டுனர், பணியாட்கள் அனைத்தும் இலவசம்.

தொழிலாளர்களுக்கு எதிராக இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு போடுவது இது முதல் முறையல்ல. அரசின் தொழிலாளர் சட்டமீறல்களை நீதிமன்றம் பலமுறை ஆதரித்துள்ளது. இவ்வருடம் மே மாதத்தில் நீதி மன்றம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட ஆணையிட்டது. ஆனால் இன்னும் அவர்களுடைய கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை. செப்டம்பர் மாதத்தில் ஜாக்டோஜியோ போராட்டத்தையும் நீதிமன்றம் தடைசெய்தது. பல வழக்குகளில், நீதிமன்றங்கள் வருடக்கணக்காக தொழிலாளர் நல வழக்குகளை இழுத்தடித்துள்ளது. இதனால் பல தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிலைக்கு நீதிமன்றம் தள்ளியுள்ளது. மாருதி மற்றும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதித்துறையின் முதலாளித்துவ அடையாளத்தை இத்தீர்ப்புகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

செவிலியர் போராட்டம் கற்று கொடுக்கும் பாடம்

தொழிற்சங்க கட்டமைப்புகள் அரசால் ஒடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் பிரச்சனைகளை களைய தொழிற்சங்கங்களால் சட்டரீதியான யுக்திகளை தாண்டி மாற்று யுக்திகளையும் அமைப்புகளையும் கட்டமைக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் செவிலியர்கள் தங்களை தாங்களே ஒருங்கிணைத்து வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கென ஒரு கட்டமைப்பை அமைக்க முயற்சித்துள்ளனர். அதை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கவலைப்படவில்லை. இதில் தலைவர்கள் என யாரும் பெரிதாக உருவெடுக்கவில்லை. அதனால் தான் இரண்டாம் நாளன்று, தொழிலாளர்கள் பிரதிநிதிகளை மிரட்டி அரசு போராட்டத்தை ஒடுக்க முயன்றபோது தொழிலாளர்கள் உறுதியோடு நின்றார்கள். தொழிலாளர்களின் கூற்றுப்படி, மூன்றாம் நாள் கூட, தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அனுப்புமாறு மீண்டும் அரசு கூறிய போது எங்கள் அனைவருடனும் பேசுங்கள் என தொழிலாளர்கள் கூறினர். அப்போது அரசு பிரதிநிதிகள் உங்களால் தலைவர்களை கூட தேர்ந்தெடுக்க முடியாதபடி நீங்கள் இருந்தால், உங்களுக்கு அனுபவம் போதாது என பரிகசித்ததாக தொழிலாளர்கள் கூறினர். ஆனால் அங்கு தொழிற்சங்க தலைமை என்று ஒன்று இருந்திருந்தால் இரண்டாம் நாளே போராட்டம் ஓய்ந்திருக்கும். மாறாக அங்கு தனிமனித பலவீனங்களைத் தாண்டி தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பலம் ஓங்கியது.

இந்த கூட்டு முயற்சி இன்னும் பலப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக நீதிமன்ற தீரப்பிற்கு எதிராக எந்த யுக்தியும் யோசிக்கப்படவில்லை. அரசின் ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் எவ்வாறு ஆலோசித்து முடிவெடுப்பது என்பதற்கான கட்டமைப்புகளை செவிலியர்கள் யோசிக்க வேண்டியுள்ளது. கடந்த சில வருடங்களாக பொதுத்துறை மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் இதே பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இது ஊடகங்களிலும் செய்திகளாக வந்துள்ளன. அவர்களிடம் ஆதரவு தேடவும் கூட்டு முயற்சிக்காகவும் செவிலியர்கள் முயற்சிக்கவில்லை.

General Secretary of Jacto Geo addressing Nurses

அரசு மற்றும் நீதித்துறையின் போக்குகள் தொழிற்சங்கங்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் புதிதல்ல. அவர்கள் தொழிலாளர்களுக்கு இது குறித்து சில ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம். தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புகளும் தொழிலாளர்களுக்கும் ஆதரவு தந்தனர். ஆனால் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்தவும் இல்லை. இது வரும் என்று தெரிந்த நிலையில் தங்களது தொழிலாளர்களை செவிலியர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்க்கவும் முயற்சிக்கவில்லை. செவிலியர்களின் போராட்டங்கள் தொழிற்சங்க தலைமைக்கு வெளியே எங்கும் பெரிதாக பேசப்படவில்லை. தொழிற்சங்கங்கள் செவிலியர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களை திரட்டியிருந்தால் போராட்டம் வேறு திசையில் சென்றிருக்கும். குறிப்பாக, டிஎம்எஸ் வளாகத்தில் போராடிய செவிலியர்களுக்கு உள்ளே பணியில் இருந்த அரசு ஊழியர்களே உதவி செய்யவில்லை மாறாக பகைமையுடன் இருந்தார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய கட்டமைப்புகள் சுருங்கும் வேலையில் தொழிற்சங்கள் புதிய யுக்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இப்போராட்டங்களே அதற்கான தளங்களாகும்.

செவிலியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தனது குறிக்கோளை எட்டவில்லை என்றாலும், முதலாளித்துவ அரசு ஒடுக்குமுறையால் அதை முறியடிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. தொழிலாளர்கள் விரக்தியடையும் நேரமல்ல முன்னேறுவதற்கான காலம் இது.

This entry was posted in Analysis & Opinions, Contract Workers, News, Public Sector workers, Strikes, Women Workers, Workers Struggles and tagged , , , , , . Bookmark the permalink.