தனியார்மயம் ஆக்குவதிலிருந்து பொதுத்துறை நிறுவனத்தைக் காப்பதற்காக BSNL ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தம்

டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் BSNL ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். பொதுத்துறை நிறுவனமான BSNLலுக்கு மத்திய அரசு குழிபறிப்பதைக் கண்டித்தும், 3வது சம்பளக் கமிஷன் பரிந்துரையின்படி BSNL ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க வேண்டியும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. வேலைநிறுத்தம் முழு வெற்றி என்பதை துவக்கத்தில் வந்த செய்திகளே காட்டின அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் என்று அனைத்துச் சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

சென்னையில், தொழிற்சங்கத் தலைவர்களும், ஊழியர்களும் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டனர். அலுவலக வேலைகள், பழுதுகளைச் சரிசெய்வது, பராமரிப்புப் பணிகள் என அனைத்தும் நின்றுபோயின.

BSNL ஊழியர் சங்கத்தின் (BSNL EU) அடையாறு கிளைச் செயலாளர் தொழிலாளர் கூடத்திடம் பேசினார். அந்தக் கிளையின் அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் சொன்னார். பிரதான அலுவலகத்தின் கதவுகளை அவர்கள் பூட்டிவிட்டனர். கோரிக்கைகளை பற்றி நிர்வாகத்திடம் வெகு காலமாகப் பேசி வருவதாகவும், வேலைநிறுத்தத்திற்கு முன்பு முறையான நோட்டீஸ் அளித்திருப்பதாகவும் அவர் சொன்னார்எங்களின் கோரிக்கை இரண்டுதான்.

1. அரசு எங்கள் சம்பளத்தை மாற்றியமைக்க வேண்டும். முன்பு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் மூன்றாவது சம்பளக் கமிஷன் அமைக்கப்படவில்லை. ஊதியக் கட்டமைப்பில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஊதியங்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

2. தொலைதொடர்புத் துறையைத் தனியார்மயமாக்க அரசு தொடர் உறுதியுடன் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இப்போது, செல் டவர்களை தனியாருக்கு வாடகைக்கு விட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இப்படிச் செய்தால் தனியார் செல் கம்பெனிகளின் செயல்பாட்டுக்கான செலவு குறைந்துவிடும். அதேசமயம் BSNL தனது விரிவாக்கத்தையும் சேவைகளையும் இழக்கும். அரசியல்வாதிகள் தனியார் நிறுவனங்களுக்கு உதவ முயற்சிக்கிறார்கள். BSNL மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனமாகும். அவர்கள் விடாப்பிடியாக BSNLக்கு இழப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் BSNLலை விலைபேசி விற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். இந்த முயற்சிக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்¨, என்று அவர் சொன்னார்.

திருமிகு ரமேஷ் இளநிலை கணக்கு அலுவலராகவும், SEWA BSNL யூனியனின் (அடையாறு) வட்ட துணை செயலாளராகவும் இருக்கிறார். 1995 முதல் BSNLல் வேலைக்கு ஆள் எடுப்பது குறிப்பிடத்தக்க அளவுக்கு நடைபெறவில்லை என்று அவர் சொன்னார். 1988 முதல் எழுத்தர்கள் வேலைக்கும், இளநிலை தொழில்நுட்பப் பணிகளுக்கும் ஆளெடுப்பு நடைபெறவில்லை. முறையான கால இடைவெளியில் நடைபெற வேண்டிய பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லை. உரிய நேரத்தில் பழுதுகளை சரிசெய்வதற்கான தகுதியுள்ள ஊழியர்கள் போதுமான அளவுக்கு இல்லை. பழுதுகளைச் சரிசெய்வதற்கான பொருட்களை வாங்குவதற்கான பணம் எங்களிடம் இல்லை. ஒரு பழுதைச் சரிசெய்ய எங்களுக்கு ஒரு வாரம் ஆனால், வாடிக்கையாளர் வேறு கம்பெனிக்கு மாறிக்கொள்கிறார். எங்களின் வருமானம் போய்விடுகிறது. ஆனால், ஒரு டெக்னீஷியன் எந்த அளவுக்குத்தான் வேலை செய்ய முடியும்? இப்போது அவர்கள் டவர்களுக்கான புதிய கம்பெனியை அமைப்பதாகச் சொல்லிக்கொண்டு எங்களின் சொத்துகளை விற்றுத் தள்ளிக்கொண்டுள்ளனர். பொதுத்துறையை அழிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு நிறுவனம் இழப்பில் நடக்கிறது என சொல்கிறார்கள், என்ற ரமேஷ் சொன்னார்.

அலுவலகத்துக்கு வந்த வாடிக்கையாளர்கள் வேலைநிறுத்தம் பற்றி அறிந்து ஆச்சரியமடைந்தனர். முகவரி மாற்றம், இணைப்பைப் பூட்டிவைப்பது போன்றவற்றை ஆன்லைன் வழியாகச் செய்துகொள்ள முடியாத முதியவர்கள்தான் வந்தவர்களில் மிக அதிகமானவர்கள். மறியலில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கான காரணங்கள் என்னவென்பதை வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் உரையாடித் தெரிவிக்கவில்லை. அதனால், வாடிக்கையாளர்கள் திருப்தியடையாதவர்களாகத் திரும்பிச் சென்றனர். ஒரு மாதத்துக்கு மேலாக வெளியூர் செல்லவிருக்கின்ற ஒருவர் தனது இணைப்பைப் பூட்டி வைப்பதற்காக வந்திருந்தார். வேலைநிறுத்தம் மறுநாளும் நடக்கும் என்று தெரியவந்ததால், எப்படி பூட்டி வைப்பது என்று தெரியாது குழம்பினார். ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றியும் வேலைநிறுத்தம் பற்றியும் விவரம் தெரிந்திருந்தால், அவர்கள் ஊழியர்களின் கோரிக்கைகளைப் பாராட்டியிருப்பார்கள், வேலைநிறுத்தத்திற்கு ஆதரவான நிலையெடுத்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

இரண்டு நாள் வேலைநிறுத்தம் என்பது வெறும் முன்னோட்டம் மட்டும்தான் என்ற BSNL ஊழியர்கள் சொன்னார்கள். தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால், பொதுத்துறைக்கு எதிரான நிலையையும் ஊழியர்களுக்கு எதிரான நிலையையும் அரசு கைவிட வேண்டும் என்று காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

பிற துறைகளிலும் உள்ள அரசு அளிக்கும் சேவைகளைக் கூட சீர்குலைக்கும் பொதுத்துறை விரோதக் கொள்கைகள் அரசு கடைபிடித்து வருகிறது. அதற்கு நல்லதொரு உதாரணமாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை இருக்கிறது. அது பற்றி படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்.

This entry was posted in News, Public Sector workers, Strikes and tagged , , . Bookmark the permalink.