காலத் தாமதத்துக்கு எதிராகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்

தற்போதிருக்கும் தொழிலாளர்களுக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அளிக்க வேண்டிய பாக்கிகளைத் தமிழக அரசு இழுக்கடித்து விளையாடியது. நீதிமன்றச் செயல்பாடுகள் எந்தப் பலனையும் தரவில்லை. போக்குவரத்துத் தொழிலாளர்கள் வெறுத்துப் போனார்கள். CITU, AITUC, TTSF, LPF, HMS உள்ளிட்ட 10 மையச் சங்கங்கள் இந்த மாதம் 12 முதல் 15 வரை காத்திருப்புப் போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். மாநில அரசின் செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ள மகிழ்ச்சியற்ற நிலையை வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக, மாநிலத்தில் பகுதியளவிலான வேலைநிறுத்தம் நிகழ்ந்தது.ஐம்பது சதம் வரையிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இருந்தபோதும், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயப் பாஸ்கருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த மாதம் 27-28க்கு பேச்சுவார்த்தையைத் தள்ளி வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இது தொழிலாளர்களின் மனநிலையைப் பாதித்துக் கடும் கோபத்துடன் போராட்டத்தில் இறங்க வைத்தது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகத் திருமிகு விஜயப் பாஸ்கர் சொன்னதாகவும் ஆர்கே நகர் தேர்தல் முடிந்த பின்னர் இந்த மாதக் கடைசிக்குப் பேச்சுவார்த்தையைத் தள்ளி வைக்கும்படி அவர் கேட்டதாகவும் தொழிற்சங்கத் தலைவர்கள் சொன்னார்கள். தொழிற்சங்கத் தலைவர்களின் இந்த விளக்கத்தைக் காதில் வாங்கிக்கொள்ளும் மனநிலையில் தொழிலாளர்கள் இல்லை. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அன்று போராட்டம் வெடித்தது.

இதற்கு முன்பு கடந்த மே மாதத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பஞ்சப்படி, பணிக்கொடை, ஓய்வூதியம் மற்றும் பிற பாக்கிகளாகத் தொழிலாளர்களுக்குத் தரப்பட்டிருக்க வேண்டிய ரூபாய் ஏழாயிரம் கோடியைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. பிரச்சனையைத் தீர்க்க மூன்று மாத அவகாசம் வேண்டும் என்று மாநில அரசு கோரியது. மேலும், பாக்கிகளைத் தருவதற்காக ரூபாய் 1500 கோடி விடுவிக்கப்படும் என்றும் மாநில அரசு உறுதியளித்திருந்தது. இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பல முறை பேச்சுவார்த்தை நடந்தபோதும், எந்தப் பிரச்சனையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேபோல, கிடப்பில் இருக்கும் கூலி உயர்வுப் பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, தொழிலாளர்களின் புதிய போராட்ட அலை தோன்றியுள்ளது.

நான்கு நாள் போராட்டத்தின் பகுதியாக டிசம்பர் 13 அன்று மாலை நான்கு மணிக்குப் பல்வேறு டெப்போக்களின் பயணிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தொழிலாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். பொதுமக்களுக்குத் தொழிலாளர்களின் பிரச்சனை பற்றித் தெரிந்திருக்கவில்லை. பலருக்கும் மே மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தம் நினைவில் இல்லை, ஏன் வேலைநிறுத்தம் நடந்தது என்று கூடத் தெரிந்திருக்கவில்லை. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனையைப் பொதுமக்கள் புரிந்துகொள்வதற்குத் துண்டறிக்கைகள் உதவியாக இருந்தன. நாங்கள் பேசிய பயணிகளில் ஒரே ஒருவருக்கு மட்டும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனை பற்றி விரிவாகத் தெரிந்திருந்தது. “பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மாநில அரசுக்குச் சாத்தியமற்றதாக இருக்கலாம், ஆனாலும், தொழிலாளர்களுக்கான பாக்கியை அளிக்க மறுப்பதும், போக்குவரத்துக் கழகங்களின் சுமையைத் தொழிலாளர்கள் சுமக்க வேண்டும் என்று சொல்வதும் நியாயமற்றது, என்று அவர் சொன்னார். “ஆனால், இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாதிருப்பதற்கான முக்கியமான காரணம் தொழிலாளர்கள் மத்தியிலும் தொழிற்சங்கங்கள் மத்தியிலும் உள்ள ஒற்றுமையின்மைதான்என்று அந்தப் பயணி எச்சரித்தார். MTC யூனியனின் துணை செயலாளர் தோழர் அசோகன் போக்குவரத்துக் கட்டமைப்பே பழுதுபட்டுக் கிடக்கிறது என்றார். சிறு பழுதுகளைச் சரிசெய்து, “ஒட்ட வைக்கப்பட்டபேருந்துகளைத்தான் தொழிலாளர்கள் ஓட்டிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார். போக்குவரத்து கட்டமைப்பை மீட்டெடுக்கப் பெரும் முயற்சி எடுக்கப்படுவது மட்டுமே தீர்வு என்று அவர் கருதுகிறார்.

பொது மக்களிடம் துண்டறிக்கை விநியோகிக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்

சென்னையின் பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தின் முன்னே தொழிலாளர்கள் 14 அன்று மாபெரும் போராட்டத்தில் திரண்டனர். ஏறக்குறைய 2500 தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என்ற இரண்டு நாட்கள் நீண்ட அந்தப் போராட்டத்திற்கு ஷிஃப்ட்டில் இல்லாத தொழிலாளர்கள் மேலும் மேலும் வந்துகொண்டேயிருந்தனர். அரசுக்கு இனியும் நேரம் தரத் தயார் இல்லை என்பதாகத் தொழிலாளர்களின் மனோநிலையும் தொழிற்சங்கத்தின் மனோநிலையும் இருந்தது. பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நேரம் வேண்டும் என்று அரசு கேட்டபோது, தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தி நிறுத்தியது யூனியன்களின் தலைமைதான் என்று தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் விளக்கினார்.

தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய HMSயைச் சேர்ந்த தோழர் சுப்பிரமணியன் பிள்ளை செயல்படாதிருக்கும் மாநில அரசையும் நீதித்துறையையும் கண்டம் செய்தார். பல்வேறு பெரும் பிரச்சனைகளுக்கு இடையில் இயங்குகின்ற போக்குவரத்துக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்குத் தொழிலாளர்கள் இன்னமும் முயற்சியெடுக்கிறார்கள் என்பதை அவர் விளக்கினார். சேதமடைந்த பேருந்துகள், பழுதுபார்ப்பதை அயல் பணிக்கு விட்டதால் ஏற்படும் பிரச்சனைகள், பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காதது, குறைவான ஊதியம் போன்றவற்றை அவர் விளக்கினார். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஏழாவது சம்பளக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டினார்.

தொழிலாளர் கூடத்திடம் CITUவுடன் இணைக்கப்பட்ட MTC போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் பேசினார். பழைய பாக்கிகளைத் தொழிலாளர்களுக்குக் கொடுப்பதற்காக ரூபாய் 1500 கோடியை மாநில அரசு இன்னும் அளிக்காத நிலையில், கழகத்தின் அன்றாட இயக்கத்தை நடத்துவதற்காகத் தொழிலாளர்களின் பணிக்கொடை, வைப்பு நிதி தொகைகளை நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என்று அவர் சொன்னார். எனவே, தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கிகள் ரூபாய் 7 ஆயிரம் கோடியிலிருந்து குறையவேயில்லை என்று அவர் சொல்கிறார். இதற்குக் காரணம் என்னவென்றால், அதிகாரப்பூர்வக் கணக்கீட்டின்படி, 3 முதல் 6 கோடி வரையிலான இழப்பில் கழகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்து என்பது பொதுச் சேவை. எனவே, அதற்கு அரசு மான்யம் வழங்க வேண்டும், இப்படித்தான் மற்ற நாடுகளில் விதி இருக்கிறது என்று தோழர் பாலகிருஷ்ணன் அழுத்தமாகச் சொன்னார். அமைச்சரகக் கமிட்டியோடு கூட்டம் ஒன்று இருக்கிறது என்றும், அந்தக் கூட்டின் விளைவு என்ன என்பதைப் பொறுத்துத்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த மே மாதத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது ESMA பாயும் என்று அச்சுறுத்திய உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் ஆளுகையில் உள்ள குழப்படியைக் கட்டுக்குக் கொண்டுவரும் என்று தோன்றவில்லை. ஆறு மாதங்களாக நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்தபோதும், பிரச்சனைகளுக்கான தீர்வு நோக்கி எந்த முன்னேற்றமும் இல்லை. ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவர் தொடர்பாக நீதிமன்றம் தானே முன்வந்து மேற்கொண்ட வழக்கில் 14 டிசம்பர் அன்று விசாரணை நடைபெற்றபோது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான இரண்டாவது தவணை அளிப்பதற்கான காலத்தை ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருந்தபோதும், உழைக்கும் வர்க்கத்தின் வேலைநிறுத்தத்திற்கு எதிர் நிலை எடுத்த நீதித்துறை, போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனையைப் போதுமான அளவுக்குத் தீர்த்து வைக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்கள் போராட்டத்தில் திரண்டதால் 15 அன்று பொதுப் போக்குவரத்துச் சேவை பாதிப்புக்கு ஆளானது என்று செய்திகள் வந்தன. 75 சதத்துக்கும் அதிகமான பாதிப்பு என்று தொழிற்சங்கங்கள் சொல்லின. 40 முதல் 60 சதம் வரை பாதிப்பு என்று செய்தியறிக்கைகள் சொல்லின. 80 சதம் பேருந்துகள் இயங்கின என்று போக்குவரத்துக் கழகம் குறிப்பிட்டதாக ஒரு குறிப்பிட்ட செய்தியறிக்கை சொன்னது. போக்குவரத்து அமைச்சருடனும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடனும், பத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கலந்துகொண்ட கூட்டத்தில், ஆர்கே நகர் தேர்தல் முடிந்த பின்னர், டிசம்பர் 27 மற்றும் 28ல் தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், பேச்சுவார்த்தையைத் தள்ளி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு போராட்டத்தை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தது. இந்தச் செய்தியைப் பல்லவன் இல்லப் போராட்டத்தில் இருந்த தொழிலாளர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் பகிர்ந்துகொண்டபோது, தொழிலாளர்கள் சிலர் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக் கூட்டத்தில் ஒரு பேருந்து உட்பட நாற்காலிகள் இன்ன பிற சொத்துகள் சேதமடைந்ததாகச் செய்தி வெளியானது. சாலை மறியல் நடந்தது என்றும் செய்தி வெளிவந்தது. தொழிற்சங்க உள் தகராறுதான் எதிர்ப்புப் போராட்டத்திற்குக் காரணம் என்று தொழிற்சங்கவாதிகள் வலியுறுத்திச் சொன்னதுடன், அதிமுக அரசின் போக்குவரத்துக் கழக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் செய்தது என்றும் சொன்னார்கள். ஆனால், போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்தெழுந்தது என்பதால் உள் பிரச்சனைகள் மட்டும்தான் தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் காரணம் என்று இருக்க வாய்ப்பில்லை.

தொழிற்சங்கத் தலைமையையும் மீறித் தொழிலாளர்கள் செல்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண் மே மாதத்தின் போது, தொழிற்சங்கத் தலைமை மேற்கொண்ட தொழில் முடிவைத் துப்புரவுத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

முடிவேயில்லாத பேச்சுவார்த்தைகள், தொழிலாளர்களின் குரலை மௌனமாக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் கரணமாக எழுந்த தொழிலாளர்களின் கோப வெளிப்பாடே தன்னெழுச்சியான போராட்டம். தற்போது தொழிலாளர்கள் வேலைக்குப் போகிறார்கள். 27 பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பது குறித்தே அவர்களின் சிந்தனை இருப்பதால் பதட்டமான அமைதி நிலவுகிறது. தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க அரசு முயற்சி எடுக்கலாம். அல்லது, அற்பத் தொகையைக் கொடுத்துத் தொழிலாளர்களை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். தொழிலாளர்களின் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுகளைத் தொழிற்சங்கத் தலைவர்கள் முன்வைக்க வேண்டிய நேரம் இது. தொழிலாளர்களின் கோபத்தைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பது நோக்கித் திருப்ப வேண்டிய நேரமிது.

இதற்கிடையில், நொறுங்கிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழக அடிக்கட்டுமானத்தின் பலியாகத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அக்டோபரில் நாகை மாவட்டத்தில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து அவர்களைக் கொன்றது. காரைக்கால் மாவட்டத்தில், டிசம்பர் 13 அன்று, கூரையில் இருந்த சிமெண்ட் பெயர்ந்து வீழ்ந்த சம்பவத்தில் தொழிலாளர் ஒருவர் மயிரிழையில் தப்பித்தார். பேருந்துகள் பெரிய அளவில் பழுதுபட்டவையாக இருக்கின்றன. இதன் காரணமாகத் தொழிலாளர்களுக்கும் பொது மக்களுக்குமான அபாயமாக அவை மாறிவிட்டன.

அரசு பண உதவி அளிப்பதும், இந்த அற்ப உதவி அளிக்கப்படுவதை நீதிமன்றம் கண்காணிப்பதும், பிரச்சனையின் தீவிரத்தைத் தணிக்க உதவலாம், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைக்காது.

தோழர் பாலகிருஷ்ணன் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியபடி, மலிவான போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு வழங்குவது அரசின் கடமையாகும். முன்பு இயக்கப்பட்டு வந்த பெண்கள் மட்டும் பேருந்துகள், மாணவர்களுக்கான பேருந்துகள் போன்ற சிறப்பு சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதனைச் சரி செய்ய வேண்டுமென்றால், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் பொது மக்களிடம் பிரச்சனையை எடுத்துச் செல்ல வேண்டும். ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அன்றாடம் மக்களோடு பழகுபவர்கள் . இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பொதுமக்களிடம் தகவலைக் கொண்டு செல்வதற்கான மேடைகளைத் தொழிற்சங்கங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் அவர்களின் முதுகெலும்பின் மீது மலிவான போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதைக் கைவிட வேண்டும் என்ற பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல நல்ல பிரச்சார மேடையைக் கட்டமைக்க வேண்டும்.

துண்டறிக்கை

துண்டறிக்கை

For more information:http://tnlabour.in/news/6077

http://tnlabour.in/news/5923

http://tnlabour.in/news/5734

http://tnlabour.in/news/5661

http://tnlabour.in/news/5366

This entry was posted in News, Public Sector workers, Service Sector, Strikes and tagged , , . Bookmark the permalink.