பெண் வங்கி ஊழியர்கள் ஆண்டு மாநாட்டில் தங்கள் பிரச்சனைகளை விவாதித்தனர்

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் (Bank Employees Federation of India BEFI) பெண் பிரதிநிதிகள் அவையின் ஆண்டுக் கூட்டம் (annual convention) சென்னையில் டிசம்பர் 17-18ல் கூடியது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, திரிபுரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கெடுத்தனர். சில மாநிலங்களில் 1990கள் முதல் பெண்கள் உட்குழுக்கள் ( subcommittees) செயல்பட்டு வந்தபோதும், இது அவர்களின் மூன்றாவது மாநாடாகும். வங்கித் துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றாலும், அவர்களின் குரல் கேட்கப்படாத ஒன்றாகவும், தொழிற்சங்க இயக்கத்தில் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாதவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றனர் என்று அமைப்பாளர் தோழர் கல்யாணி சக்கரவர்த்தி சொன்னார். எனவே, தொழிற்சங்க இயக்கத்தில் பெண்களின் பங்கெடுப்பை அதிகப்படுத்தவும், BEFIக்குள் பெண்களின் தலைமையை அதிகப்படுத்தவும் பெண்கள் உட்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

சமூகப் போராட்டங்கள், தொழிற்சங்க வாதம், வங்கித் துறையில் பணியாற்றும் பெண்களின் பிரச்சனைகளுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் ஆகியவை குறித்து மாநாட்டின் அறிக்கைகளும் பிரதிநிதிகளின் உரைகளும் அமைந்திருந்தன. வங்கிகளில் தமக்கான தனிக் கழிப்பிடம் வேண்டும் என்று பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற தமிழ்நாடு சிறப்பான எடுத்துக்காட்டாக அமைந்தது. கிராமின் வங்கியைச் சேர்ந்த ஒரு தோழர் பெண்களுக்கான தனிக் கழிப்பிடம், தான் பணிபுரியும் வங்கியில் இல்லையென்றும் அது தற்போதைய மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்றும் சொன்னார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் பயன்படுத்தி பிரச்சனையை முன்னெடுக்க முயன்றபோது விவரங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் முன்னோடிப் பிரச்சாரமான சுவாட்ச் பாரத் கடந்த மூன்று வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், மிகவும் உரத்துக் குரல் எழுப்பும் வாய்ப்புள்ள தொழிலாளர்களுக்குக் கூட அது இன்னும் கிடைக்கவில்லை. மாறாக, அரசியல்வாதிகளின் புகைப்பட விழாவாக, குடிமக்களைத் துன்புறுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.

தமிழ்நாட்டின் பிரதிநிதிகளின் முன்வைப்பில் மிக முக்கிய இடம்பிடித்த மற்றொரு பிரச்சனை பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலாகும். தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்றைத் தோழர் ஒருவர் முன்வைத்தார். உதவியாளராக வேலையில் சேர்ந்திருந்த அந்தத் தோழர், 13 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் எழுத்தராகப் பணி உயர்வு பெற்றிருக்கிறார். பணி உயர்வு கிடைத்த நாள் முதல் மேலாளர் அப்பெண்மணியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்துவதைத் தொடர்ந்து செய்திருக்கிறார். ஒரு சமயம், வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் மத்தியில் கன்னத்தில் அறைந்து, அடித்துத் துவைத்திருக்கிறார். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் கமிட்டியிடம் புகார் செய்யப்பட்டு, CCTV கேமிராக்களின் ஆதாரத்தினால், மேலாளருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால், அதன்பின் அத்தோழர் தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார். அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு எந்த வழியும் இல்லை. சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தல் கமிட்டியின் செயல்பாடும், அமுலாக்கமும் வங்கித் துறையில் இப்போதும் கூட இல்லாதிருக்கிறது என்று தோழர் கல்யாணி சொல்கிறார்.

வீட்டுப் பொறுப்புகள், மற்றொரு பக்கம் வங்கித்துறையின் சவால்கள் என்று இரட்டைச் சவால்களைப் பெண்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள் என்பதை பிரதிநிதிகள் பலரின் முன்வைப்புகளும் காட்டின. வங்கி வேலையின் நேரம் காரணமாக, வீட்டு வேலைகளைச் சமாளிப்பது எளிது என்று கருதி பெண்கள் பலரும் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ஆனால், நெருக்கடியான வேலை என்று எதுவும் இல்லாத நிலையில் கூட, மாலை ஐந்து மணிக்குப் பின்னும் வங்கியில் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதாக பெண்கள் பலரும் சொன்னார்கள். வீட்டில் எந்த வேலையையும் செய்ய வேண்டியிருக்காத ஆண்களுக்கும், வீட்டிலும் வேலை செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கும் பெண்களுக்கும் அலுவலகத்தில் ஒரே உற்பத்தி இலக்குதான் இருக்கிறது. வேலை செய்யும் பெண்கள் ‘பெண்களின் பொறுப்புகளை‘ நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். உதாரணமாக, பாலின சமத்துவம் பற்றிய மாநாட்டில் பெண்கள் கூடியிருக்க, ஒரு மூத்த ஆண் தலைவர் மாநாட்டில் உரையாற்ற வந்திருந்தார். அவர் பிரதிநிதிகளைப் பார்த்துச் சொன்னார்: ‘மூடத்தனங்களை மறு உற்பத்தி செய்வது, பிரதானமாகப் பெண்கள்தான்‘. இப்படி சொன்ன அவர், ‘குழந்தைகளுக்குப் படிப்புச் சுமையைக் கூட்டாமல் பெண்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்‘ என்றும் அறிவுரை சொன்னார். சக ஆண் பணியாளர்கள் என்ன சொல்கிறார்களோ அவற்றின் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க, தொழிற்சங்கத்தில் தொழிலாளராக சேர்க்கப்படும் பெண்கள், பெண்கள் என்ற வகையில் சமூக மறு உற்பத்திக்குப் பொறுப்பாக வேண்டும் என்று ஆண் சகாக்கள் நினைப்பது மிக முக்கியமான பிரச்சனையாகும்.

இதுபோன்ற நிகழ்வுகளில், வீட்டுப் பொறுப்புகள் குறித்த பிரச்சனைகளைப் பெண்கள் எழுப்பும்போது, இரட்டைச் சுமைக்குப் பெண்களை ஆளாக்கும் ஆணாதிக்க முதலாளித்துவத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். பெண்கள் என்ற வகையில் அவர்களின் தலையில் சுமத்தப்பட்ட சமூக மறு உற்பத்திப் பொறுப்புகளைப் பெண்கள் செய்தே தீர வேண்டிய அதேசமயம், ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட உற்பத்தி முறையில் அரும்பாடுபட்டு உழைக்கவும் வேண்டியிருக்கிறது. ஆனால், வீட்டுப் பொறுப்புகள் குறித்துப் பேசுவதற்கான அரங்கு இதுவல்ல. மேலும் வீட்டின் பொறுப்புகள் என்றால் அது பெற்றோரான இருவரின் சமப் பொறுப்பாகும். தாய், மகள் போன்ற பிற அடையாள அட்டைகள் ஒட்டப்பட்டவர்களாக அல்லாமல், தொழிலாளி என்று பெண்ணை அங்கீகாரம் செய்வதற்குப் பெண்கள் இன்னும் எத்தனை தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதை மேலே சொன்ன உதாரணங்கள் காட்டுகின்றன.

BEFI பெண்கள் உட்குழுக்கள் ஈடுபட்டுள்ள பல்வேறு சமூகப் பிரச்சனைகள் குறித்து அவை முன்வைத்த அறிக்கைகள் காட்டின. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த BEFI கிளைகள் (chapters) பிற உழைக்கும் பெண்களோடு மிக நெருக்கமாக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்தன. பல்வேறு அரசியல் குழுக்களோடு இதுபோன்ற இணைந்து செயல்படாமல், பாலினச் சமத்துவத்தை எட்ட முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். உதாரணமாக, ஆலைத் தொழிலாளர்கள் மத்தியிலும், சேவைத்துறைத் தொழிலாளர்கள் மத்தியிலும் பணியாற்றும் CITU போன்ற தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து கேரளா குழுவினர் பணியாற்றுகின்றனர். அதுபோல, தமிழ்நாட்டின் குழு, பெண்கள் மீதான வன்முறை, சமூக வெளியில் பாலினச் சமத்துவம் போன்ற பிரச்சனைகளைக் கையாளும் AIDWAவுடன் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இதுபோன்ற பல உதாரணங்களை மாநாட்டில் பகிர்ந்துகொண்டனர். எடுத்துச் சொல்லப்பட்ட பல்வேறு கிளைகளின் உதாரணங்கள் அவற்றின் வளர்ச்சிக் கட்டத்தின் பல்வேறு நிலைகளில் தற்போது இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. இப்படிப் பகிர்ந்துகொள்வது மற்ற கிளைகளின் பணியைச் சிறப்பாக்க உதவும் என்பதால், இந்த மாநாடு மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

This entry was posted in News, Public Sector workers, Women Workers, தமிழ் and tagged , . Bookmark the permalink.