பிரிக்கால் இருவருக்கு நீதி வேண்டும்! AICCTU மாநாட்டில் தீர்மானம்!

தொழிலாளர் வர்க்கத்தின் மீதான நீதிமன்றத் தாக்குதல் திகைக்க வைக்கும் நிலையை எட்டியுள்ள சமயத்தில், பிரிக்கால் தொழிலாளர் இருவரை விடுதலை செய் என்ற முழக்கத்தை தமிழ்நாடு தொழிலாளர்களின் முழக்கம் ஆக்குவதற்கு AICCTUவின் மாநில மாநாடு தீர்மானித்துள்ளது. பிரிக்கால் தொழிலாளர்களுக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சிறப்பு விடுப்பு மனுவை (special leave petition) அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பிரிக்கால் வழக்கில் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் வழக்கை மறு விசாரணை செய்யக் கோரியும் தொழிலாளர்கள் மத்தியில் பிரும்மாண்டமான கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு AICCTU தீர்மானித்துள்ளது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை, ஒரு வாரத்துக்கு 40 மணி நேர வேலை, மாதத்துக்குக் குறைந்து 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சார இயக்கம் துவக்கவும் மாநாடு தீர்மானித்துள்ளது.

செங்குன்றத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெற்ற பொதுக் கருத்தரங்கில் AITUC, CITU, HMS, LPF தலைவர்கள் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தினைத் தொடங்கி வைத்தனர். பிரச்சார இயக்கம் குறித்த குறு பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து தலைவர்கள் உரையாற்றினர். தொழிற்சங்க இயக்கம் தமிழ்நாட்டில் புறநிலையான சவால்கள் பற்றியும் அகநிலைச் சவால்கள் குறித்தும் தலைவர்கள் உரையாற்றினர். ஆயுள் தண்டனை பெற்று இன்னமும் சிறையில் இருக்கின்ற பிரிக்கால் தொழிலாளர்களான தோழர்கள் மணிவண்ணன் மற்றும் இராமமூர்த்தியை விடுதலை செய்ய தமது சங்கத்தைச் சேர்ந்தத் தொழிலாளர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்துவோம் என்றும் தலைவர்கள் உறுதி கூறினர்.

மோடி ஆட்சியின் தொழிலாளர் விரோத வேலைத்திட்டம்

HMSயைச் சேர்ந்த தோழர் ராஜா ஸ்ரீதர் மோடி அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத நச்சுக்கொள்கைகள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். “மோடியின் கொண்டாட்டம் நமக்கெல்லாம் திண்டாட்டம்என்று அவர் சொன்னார். ‘ஒரு பக்கம் வேலையின்மை, மற்றொரு பக்கம், தேவைக்குக் குறைவாக வேலை கிடைப்பது இவைதான் மோடியின் வளர்ச்சித் திட்டத்தின் அடையாளம், என்று அவர் குறிப்பிட்டார். செல்லாப் பணம், GST, புதிய FRDI மசோதா ஆகியவை உழைக்கும் வர்க்கத்தின் மீது முன்னெப்போதும் இல்லாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின் என்றும் அவர் சொன்னார்.

செயற்கை அறிவு, இயந்திர மனித மயமாக்கல் (roboticisation) காரணமாக தகவல்தொழில்நுட்பப் பிரிவின் எதிர்காலம் குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ளது என்று CITUவைச் சேர்ந்த தோழர் சுகுமாரன் குறிப்பிட்டார். பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான வேரிசான் (Verizon), சென்னை, கர்நாடகா, ஒரிசாவில் உள்ள தங்கள் தொழிலாளர்களை வேலையைவிட்டு விரட்டிக்கொண்டுள்ளது. ஆனால், தொழிலாளர் துறை கையைக் கட்டிக்கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

பொதுச்சேவைகளைத் தனியாருக்கு விடுவதைத் தலைவர்கள் கடுமையாகச் சாடினர். பிரிட்டனின் ரயில்வே தனியார் மயமாக்கம் செய்யப்பட்டது குறித்த ஆய்வு பற்றி தோழர் ராஜா ஸ்ரீதர் பேசினார். மான்செஸ்டர் பொருளாதாரப் பள்ளி என்ற கல்வி நிறுவனம் அந்த ஆய்வைச் செய்திருந்தது. பிரிட்டனின் ரயில்வே தனியார்மயமாக்கப்பட்டதை பேரழிவு என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது. மாபெரும் ரயில் கொள்ளை (Great Train Robbery) என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆய்வு தனியார்மயத்தின் பின்பு ரயில் சேவை மோசமானது என்று குறிப்பிட்டுள்ளதாக தோழர் ராஜா ஸ்ரீதர் சொன்னார். ‘இப்படியிருக்க, எதற்காக இந்திய ரயில்வேயைத் தனியார்மயப்படுத்த அரசு மிகக் கடுமையாக முயற்சியெடுக்கிறது?‘, என்று அவர் கேட்டார். ‘முன்பெல்லாம் ராணுவ வீரர்களுக்கான போர்காலச் சீருடைகளை அரசாங்கமே அளிக்கும். தற்போது, சீருடைக்குப் பதிலாகப் பணத்தை இராணுவ வீரர்களுக்கு கொடுக்கிறார்கள். விளைவாக, 12 ஆயிரம் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தி இராணுவ சீருடை உற்பத்தி செய்த மூன்று ஆலைகள் மூடப்பட்டன, என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர் தலைவர்களைப் பார்க்க நேரமில்லை

தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சொல்வதைக் கேட்பதற்கு மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்று தோழர்கள் ராஜா ஸ்ரீதரும் LPFன் சுப்பிரமணியனும் சொன்னார்கள். இது முந்தைய ஆட்சியிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர். டெல்லியின் நடைபெற்ற பெருந்திரள் 

தொழிலாளர் போராட்டத்திற்கு (Mahapadav) முன்பு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டும் அனுமதிக்கப்பட்டார், அதிலும், பிரதிநிதி ஒருவர் பேசுவதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது. இரண்டு நாள் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டததில் சில மணி நேரங்கள் மட்டுமே மோடி வந்திருந்து தொழிற்சங்கங்கள் சொன்ன குறைபாடுகளைக் கேட்டார். அப்போதும் கூட, ‘தனியார்மயத்தில் என்ன பிரச்சனை?‘ என்றுதான் கேள்வி எழுப்பியிருக்கிறார். தொழிலாளர்களின் நலனைக் காப்பதற்கு பேச்சுவார்த்தை இனியும் பயன்படாது என்றும் தொழிலாளர்களைப் பெருமளவு திரட்டுவது மட்டும்தான் பலன் தரும் என்றும் தோழர்கள் ராஜா ஸ்ரீதரும் LPFன் சுப்பிரமணியனும் சொன்னார்கள்.

தொழிலாளர்களுக்கு இரக்கம் காட்டாத நீதித்துறை

பல்வேறு தொழிலாளர் பிரச்சனைகளில் நீதித்துறை எடுத்த நிலைப்பாடுகள், நீதிமன்றங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகின்றன என்று தலைவர்கள் சொன்னார்கள். JACTO-GEO போராட்டமாக இருந்தாலும் சரி, நர்சுகள் போராட்டமாக இருந்தாலும் சரி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போதும் சரி, நீதிமன்றங்கள் தாமே முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்து கொண்டன, அல்லது அரசுக்கு தரவான நபர்களின் பொதுநல வழக்குகளை ஏற்றுக்கொண்டன. வேலைநிறுத்தம் செய்துள்ள தொழிலாளர்களுக்கு எதிராக வலுவான நிலையெடுத்தன.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரிக்கால் வழக்கு குறித்து AICCTUவைச் சேர்ந்த தோழர் குமாரசாமி விளக்கமாகப் பேசினார். அரசு தொடுத்த வழக்கு என்ன என்பது பற்றியும் பல்வேறு நீதிமன்றங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற நிலையெடுத்ததையும் அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதையும் விரிவாகச் சொன்னார். நிலைமை இப்படியிருக்க, ‘பிரிக்கால் தொழிலாளர்கள் பிரதிநிதிகளின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நிர்வாகம் தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்டது எப்படி?‘ என்று அவர் கேள்வியெழுப்பினார். ‘இரண்டு வழக்கையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது இரண்டையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும், என்று அவர் வாதம் செய்தார்.

தொழிற்சங்கங்களின் முன்னுள்ள சவால்கள்

தொழிற்சங்கவாதம் ஆபத்துகள் நிறைந்த ஒன்று என்று பல்வேறு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். AITUC வைச் சேர்ந்த தோழர் T M மூர்த்திதொழிற்சங்கம் நிலப்பிரபுத்துவ பாணி உடமையாகப் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மாற்றம் தென்படுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் மற்ற தலைவர்களுடன் உறவு கொள்ளவும் புதிய ஐக்கியத்தைக் கட்டவும் செய்கிறார்கள், என்று அவர் சொன்னார். ஒரு தொழிற்சங்கத்தின் மாநாடுகளில் மற்ற சங்கங்களின் தலைவர்கள் பங்கெடுப்பது அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டு தனது கருத்துக்கு அவர் வலுசேர்த்தார். இருந்தபோதும் சங்கங்களில் இன்னமும் குழுவாதப் போக்கு இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஒரு தொழிற்சங்கத்தின் தனிப்பட்ட பிரச்சனையாக பிரிக்கால் தொழிலாளர்கள் பிரச்சனையைப் பார்க்காமல், அதனைத் தொழிலாளர் வர்க்கத்தின் பொதுப் பிரச்சனை ஆக்குவதற்காக மற்றத் தொழிற்சங்கங்களை அணுகிய AICCTUவை அவர் பாராட்டினார்.

தொழிற்சங்கங்களின் ஐக்கியப்பட்ட போராட்டம் அரசியலின் போக்கை மாற்றிவிடவில்லை என்பதை தோழர் சுகுமார் ஒப்புக்கொண்டார். ‘கேரளாவின் இடதுசாரி வேலைத்திட்டம் போன்ற மாற்றுகளைத் தொழிலாளர்கள் முன்பு வைக்க வேண்டும், என்று அவர் சொன்னார். மத்திய அளவிலும் மாநில அளவிலும் ஐக்கியப்பட்ட போராட்டச் செயல்பாடு இருக்கின்ற போதும், பிராந்திய மட்டத்திற்கும் ஆலைகள் அளவிலும் ஐக்கியப்பட்ட போராட்டத்தைக் கொண்டுசெல்வது சவாலாக இருக்கிறது என்று தோழர் ராஜா ஸ்ரீதரும் மற்றவர்களும் சொன்னார்கள்.

அன்றாட வாழ்வின் அங்கமாக யூனியன்கள் இருக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், சட்டவாதத்தின் காரணமாக, தொழிற்சங்கங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவே தொழிலாளர்களை அணிதிரட்டுகின்றனர். இதற்கு மாறாக, தொழிலாளர்கள் தங்களின் விழிப்புணர்வை அதிகரித்துக்கொள்ளும் பள்ளிகளாகத் தொழிற்சங்கங்கள், குறிப்பாக, இடதுசாரித் தொழிற்சங்கங்கள் இருக்க வேண்டும், என்று AIUTUCவைச் சேர்ந்த தோழர் சிவகுமார் குறிப்பிட்டார். “கோரிக்கைகளை வென்றெடுப்பது தொழிற்சங்கத்தின் வெற்றியாகக் காட்டப்படுகிறது. ஆனால், தொழிலாளர்கள் தங்களின் சுயமேம்பாட்டின் மட்டத்தை அதிகரித்துக்கொள்வதே தொழிற்சங்க வெற்றியின் அளவுகோலாக மதிப்பிடப்பட வேண்டும். அத்தகு மொழியைத் தொழிற்சங்கங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும், என்று அவர் சொன்னார். தொழிலாளர்களுக்குத் தொழிற்சாலை மட்டத்தில் அரசியல் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். “காவல்துறை, நீதித்துறை, ஊடகம் மற்றும் இன்ன பிற என்று அரசின் கைகளில் பல சாதனங்கள் உள்ளனஆனால், தொழிலாளர் இயக்கத்தின் கையில் தொழிற்சங்கம் என்ற ஒரேயொரு ஆயுதம் மட்டுமே உள்ளது. பிற நிறுவனங்களையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான சமூக மூலதனத்தை நாம் உருவாக்க வேண்டும், என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள தோழர் மணிவண்ணனின் இணையர் தோழர் ஜெயலட்சுமி மணிவண்ணன் தனது கணவர் சிறைபட்ட விவரங்களை விரிவாகச் சொன்னார். ‘பிரிக்கால் இருவரை விடுதலை செய்என்று குறு பிரசுரத்தை வெளியிட்டார். கோஷங்களோடு கூட்டம் நிறைவுக்கு வந்தது. பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எத்தனைக் கையெழுத்துகளைச் சேகரிக்க முடியுமோ அத்தனைக் கையெழுத்துகளைச் சேகரிக்கவும், தொழிலாளர்களின் சர்வதேச மேடையான தொழிற்சங்கங்களின் உலகக் கூட்டமைப்பின் (World Federation of Trade Unions -WFTU) ஆதரவைப் பெறவும் AICCTU மற்றும் பிற தொழிற்சங்கங்கள் உறுதியேற்றன.

This entry was posted in News, தமிழ் and tagged , . Bookmark the permalink.