ஓலா – உபேர் ஓட்டுநர்கள் ஒருநாள் வெற்றிகரமான வேலைநிறுத்தம்!

சேவையில் சிறு தொந்தரவு’ என்று கம்பெனிகள் பொய் பிரச்சாரம்!

2017 ஜனவரி 3 அன்று ஓலா மற்றும் உபேர் வாகனங்கள் இயக்கம் கணிசமான பாதிப்புக்கு ஆளானது. பல தொழிற்சங்கங்கள் விடுத்த வேலைநிறுத்த அழைப்பைச் சங்கத்தில் இருக்கும் ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், சங்கத்தில் இல்லாத ஓட்டுநர்களும் ஏற்றுக்கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்று நடைபெற்ற ஒரு போராட்டத்தில் ஏறக்குறைய 700 ஒட்டுநர்கள் பங்கெடுத்தனர். தங்களின் துன்பகரமான வாழ்க்கைக்குக் காரணம் மாநில அரசும் மத்திய அரசும்தான் என்று கோபம் கொப்பளிக்க முழங்கினர். தனியார் கேப் கம்பெனிகளுக்குத் தங்களை அரசுகள் விற்றுவிட்டன என்று முழங்கினர். கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது, மோட்டார் வாகன சட்டத்தின்படி ஓய்வறை கழிப்பறை வசதி அளிப்பது, 8 மணி நேரத்துக்கு மேலாக வண்டியோட்டும் ஓட்டுநர்களைத் தண்டிப்பது என்ற சட்டத் திருத்தத்தைக் கைவிடுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. போக்குவரத்து ஆணையர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளைக் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கட்டணக் கட்டுப்பாடு கொண்டுவரவும், இருவாரக் காலத்துக்குள் கட்டணப் பரிந்துரையொன்றை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

இளைஞர்கள்வயதானவர்கள் என்று டாக்சி ஓட்டுநர்கள் சென்னை எம்எல்ஏ விடுதியின் முன்பு ஜனவரி 3 அன்று திரண்டனர். வாடகைக் கார் தொகுப்புகளை இயக்குகின்ற (aggregators) ஓலா மற்றும் உபேர், அதுபோல கால் டாக்சி கம்பெனியான பாஸ்ட் ட்ரேக் ஆகியவற்றின் சுரண்டலுக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் போது நடந்த இதுபோன்ற ஒரு போராட்டத்திற்குப் பின்பு அளித்த உறுதிமொழியின்படி ஓட்டுநர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாத காரணத்தால் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

This slideshow requires JavaScript.

பிரதம மந்திரி மோடியும் அதிமுக அரசும், எந்தக் கட்டுப்பாடும் இன்றி செயல்படுகின்ற ஓலா, உபேர் போன்ற கம்பெனிகளுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரம் அளித்திருப்பதாக ஓட்டுநர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஓட்டுநர்கள் எழுப்பிய முழக்கம் ஓட்டுநர்களின் கோபத்தைக் காட்டுவதாக இருந்தது. தங்களின் வாகனங்களின் இயக்கத்துக்கு “சிறு அளவு தொந்தரவு“ என்று ஓலாவும் உபேரும் சொல்லிக்கொண்டன. ஆனால், அவற்றின் சேவை மிகவும் குறைவாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. இரண்டு கம்பெனிகளின் செயலிகளும் செயலுக்கு வர வெகுநேரம் எடுத்துக்கொண்டன. ஆனால், இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு லாபத்தைக் கறந்துவிட தங்கள் கட்டணத்தை உயர்த்தி இருமடங்காக வசூல் செய்துகொண்டன.

தற்போது ஆட்டோக்களுக்கு நடப்பில் இருக்கும் கட்டண முறை போல ஒன்றைக் கொண்டுவந்து கேப்களின் கட்டணங்களைக் முறைப்படுத்த வேண்டும் என்பது ஓட்டுநர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாகும். “ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 50 ஆகிறது. ஆனால், எங்கள் காரை நாங்கள் ஒரு கி.மீட்டருக்கு ரூபாய் 6க்கு ஓட்டுகிறோம். இது எப்படியிருக்கிறது பாருங்கள். நாங்கள் எப்படி சாப்பிட்டு உயிரோடு இருக்கிறோம் என்று வாடிக்கையாளர்கள் யோசிக்க வேண்டாமா? நாங்கள் கால் டாக்சி பிழைப்பை விட்டுவிட்டு ஓசி டாக்சி ஓட்டுபவராக மாறிவிடலாம்“ என்று பாஸ்ட் ட்ரேக்கில் வண்டியோட்டும் டிரைவர் ஒருவர் சொன்னார். இவர் உபேர் கம்பெனியிலும் சிலகாலம் வண்டியோட்டியிருக்கிறார்.

பல்வேறு வகையினங்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தை ஓலாவும் உபேரும் தற்போது அறிவித்துள்ளன. தொழிலாளர் கூடம் சந்தித்த பல ஓட்டுநர்களும் கடனில் இருந்தனர். தங்களின் வாகனத்தை வாங்குவதற்காக பெற்ற கடனின் மாதத் தவணையை அவர்களால் கட்ட முடியவில்லை. ஒருநாளுக்கு 15 மணி நேரம் வண்டியோட்டினால்தான் ரூபாய் 1000 முதல் 1500 வரை சம்பாதிக்க முடிகிறது என்று பல ஓட்டுநர்களும் சொன்னார்கள். ஒவ்வொரு பயணத்தின்போதும் வாடகையாக ஒட்டுநர் கணக்கில் செலுத்தப்படுகின்ற தொகையில், அல்லது வங்கி அட்டைகள் / ஓலா அட்டை மூலம் பெறப்படும் தொகையில் வரியையும், கம்பெனிக்கான தொகையையும் கம்பெனிகள் பிடித்துக்கொள்கின்றன. இதற்கும் கூடுதலாக, பயணத்துக்கான டீசலுக்காக அதிகப் பணத்தை ஓட்டுநர் தன் பையிலிருந்து செலவு செய்ய வேண்டும். இவற்றின் காரணமாக, ஒருநாள் வேலை முடிந்த பின்னர் ஓட்டுநர் கையில் சிறு தொகையே மிச்சமாகிறது.

சென்னை விமான நிலையத்திலிருந்து தாம்பரம் வரையிலான சவாரிக்குப் பெறப்பட்ட கட்டண விவரங்களை உபேர் ஓட்டுநர் ஒருவர் காட்டினார். அந்த சவாரிக்கு அவர் ரூபாய் 249 பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால், கடைசியில் அவர் கையில் கம்பெனி கொடுத்தது மிகவும் குறைவான 162.77 ரூபாய்தான்.

ரூ.249.77 யிலிருந்து பயணிக் கட்டணமாக(Rider’s fee) ரூ.31.50 கழிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையில் ரூ .43.65 உபேர் கமிஷனாகக் கழிக்கப்படுகிறது. அதன்பின் உள்ள தொகையில் கட்டணத்தின் மீதான வரியாக ரூ. 11.90 கழிக்கப்படுகிறது. பின்பு கையில் நிற்பது ரூ.162.72.

இந்தப் பணத்தில், ஓட்டுநர் டீசலுக்கும் செலவு செய்ய வேண்டும். விளைவாக அவர் சம்பாதிக்கும் தொகை அற்பத் தொகையாக மாறிவிடுகிறது. எனவேதான், ஒவ்வொரு வகை வாடகை ஊர்திக்கும் ஒரேவிதமான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

தற்போதுள்ள கட்டணமும் நிர்ணயிக்க வேண்டும் என்று கோருகின்ற கட்டணமும்

(நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகின்ற கட்டணம் நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது)

வகையினம் குறைந்தபட்ச கட்டணம் கி.மீ ஒன்றுக்கான கூடுதல் கட்டணம்
மினிக்கான கோரிக்கை முதல் 4 கி.மீ ரூ. 100 ரூ.18
ஓலா மைக்ரோ அடிப்படைக் கட்டணம் – ரூ.30 ரூ.6+ ரூ.1.50/நிமிடம்
ஓலா மினி அடிப்படைக் கட்டணம் – ரூ.50 ரூ.8 + ரூ.1/நிமிடம்
உபேர் கோ அடிப்படைக் கட்டணம் – ரூ.42

குறைந்தபட்ச கட்டணம் – ரூ.52.50

15கி.மீக்கு ரூ.6.3 + 15கி.மீட்டருக்குப் பின்னர் கி.மீட்டருக்கு ரூ.8.4 + ரூ.1.58/நிமிடத்திற்கு
பிரைமுக்கான கட்டணக் கோரிக்கை முதல் 4 கி.மீட்டருக்கு – ரூ.100 ரூ.20
ஓலா பிரைம் அடிப்படைக் கட்டணம் – ரூ.50 ரூ.10 + ரூ.1/நிமிடம்
உபேர் எக்ஸ் அடிப்படைக் கட்டணம் – ரூ.52.50

குறைந்தபட்ச கட்டணம்ரூ.63

15 கி.மீட்டர் வரை கி.மீட்டருக்கு ரூ 8.4

+ 15 கி.மீட்டருக்குப் பின்பு கி.மீட்டர் ஒன்றுக்கு ரூ.6.3 + 1.58/நிமிடம்

SUV வாகனத்துக்கான கட்டணக் கோரிக்கை முதல் 3கி.மீ – ரூ.150 ரூ.23
ஓலா பிரைம் SUV முதல் 5 கி.மீ – ரூ.150 கி.மீட்டருக்கு ரூ.18 + நிமிடத்திற்கு ரூ.2
உபேர் XL அடிப்படைக் கட்டணம்ரூ.105, குறைந்தபட்ச கட்டணம்– ரூ.157.50 கி.மீட்டருக்கு ரூபாய் 18.90 + நிமிடத்திற்கு ரூ. 2.10
இரவு நேரக் கட்டணம் கூடுதலாக 25% கட்டணம்
ஓலா மற்றும் உபேர் இல்லை
கமிஷன் 7%
ஓலா 19%
உபேர் 20% *(உத்தேசமாக)

 

Source

  1. https://www.uber.com/en-IN/blog/chennai/know-your-ubergo-and-uberx-fares-in-chennai/
  2. Rate cards on Ola App
  3. http://www.hindustantimes.com/business-news/uber-clears-air-on-falling-driver-income-pegs-per-day-earning-at-rs-1-500-2-500/story-F3Bn3yQ76Rnjp7EnGRGgmN.html

நீங்கள் ஏன் இந்தக் கம்பெனியில் சேர்ந்தீர்கள் என்று பலரும் எங்களைக் கேட்கிறார்கள். ஒரே பதில்தான் சொல்ல முடியும். ‘கம்பெனிகள் எங்களை ஏமாற்றிவிட்டன‘. அவ்வளவுதான். ஓட்டுனர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தனர். அதில் நாங்கள் மயங்கிவிட்டோம்“, என்று ஓலாவிற்கு வண்டியோட்டும் ஓட்டுநர் ஒருவர் சொன்னார். கம்பெனிகள் கொடுத்த விளம்பரத்தால் முட்டாளாக்கப்பட்ட இந்த ஓட்டுநர்கள் முன்பு சிறிய சுற்றுலாக் கம்பெனிகளுக்கு வேலை பார்த்தவர்கள். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வேலையை உதறிவிட்டு வந்து சிக்கிக்கொண்டவர்கள்.

ஓலா மற்றும் உபேரின் சுரண்டல் ‘ஊக்கத்தொகை’ முறை

ஓட்டுநர்களைக் கவர்ந்து இழுப்பதற்காக ஊக்கத் தொகை முறை அல்லது ‘ஸ்கீம்‘களை ஓலாவும் உபேரும் பயன்படுத்துகின்றன. துவக்கத்தில் ‘ஸ்கீம்‘கள் நன்றாக இருந்ததாகவும் தங்களுக்குப் பணம் கிடைத்ததாகவும் ஓட்டுநர்கள் சொல்கின்றனர். பின்னர், இரண்டு கம்பெனிகளும் ஊக்கத் தொகையையும் அதனை அளிக்கும் முறையையும் மாற்றிக்கொண்டுவிட்டன. தொடர்ந்து மாற்றி வருகின்றன.

தங்களின் சொந்தத் தொழிலை ஓட்டுநர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்து தொழில்முனைவர்கள் ஆகலாம் என்று கம்பெனிகள் சொல்லின. ஓலா மற்றும் உபேர் கம்பெனிகள் ஓட்டுநர்களை “டிரைவர்பார்ட்னர்“ என்றுதான் குறிப்பிடுகின்றன. ஆனால், கம்பெனிக்கும் அதன் பார்ட்னர் டிரைவருக்கும் இடையிலான தொழில் உறவு இருண்டுகிடக்கும் ஒன்றாக உள்ளது. அதனை ஒழுங்குபடுத்த எந்தச் சட்டமும் இல்லை. எனவே, ஓட்டுநர்கள் ‘வேலையளிக்கப்பட்டவர்களாக அதாவது தொழிலாளர்களாக இல்லை. அவர்களின் கார் ‘அட்டாட்ச்‘ செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. எனவே, ஓட்டுநர் தொழில்முனைவர் ஆவார் என்ற கருத்தாக்கம் ஏமாற்றும் தன்மைகொண்டது. ஏனென்றால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை. தொகை அளிப்பு, பயண ஒதுக்கீடு போன்றவை கம்பெனிகளால் ஒருதலைப்பட்சமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் புரிபடாத ஒன்றாக உள்ளது. வாடகைக் கட்டணம், ஊக்கத்தொகை முறை, பணம் எப்படி அளிக்கப்படும் என்பது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு நாள் காலையிலும் எந்த ‘ஸ்கீம்‘ வந்து தொலைக்கும் என்று ஓட்டுநர்களுக்குத் தெரியாது. ஓட்டுநர்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்கிறார்கள்…. ‘இது பகல் கொள்ளை‘ என்கின்றனர். இதனைப் பார்த்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டிருக்கும் அரசுகளைக் கண்டிக்கிறார்கள்.

மினிமம் பிசினஸ் கேரண்டி என்றொரு ஸ்கீமை ஓலா பின்பற்றுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை ஓர் ஓட்டுநர் வசூல் செய்ய வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு ஓட்டுநருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். ஜனவரி 3 அன்று MBG ஸ்கீம் என்ற ஒன்றை ஓலா செயலி மூலம் ஓட்டுநரின் போனுக்குச் செய்தியாக அனுப்பிவைத்தது. ஓட்டுநர் ரூபாய் 800க்கு ஓட்டினால் ரூபாய் 1100 கொடுக்கப்படும் என்றும், ரூபாய் 1400 சம்பாதித்தால் ரூபாய் 2000 அளிக்கப்படும் என்றும் இன்னும் இது போலவும் அந்த செய்தி சொன்னது. இருந்தபோதும், ரூபாய் 1100 என்று சொல்லப்படுவதில் கமிஷன் தொகை, வரிகள், பயணர் கட்டணம் ஆகியவற்றைப் பிடித்துக்கொள்ளும். இதற்குமேல், ஓட்டுநர் டீசலுக்குப் பணம் கொடுக்க வேண்டும். மேலும் வாகனப் பராமரிப்புக்குச் செலவு செய்தாக வேண்டும். அதற்குப்பின் ஓட்டுநரின் தேவைக்குக் குறைவான பணமே அவரின் கையில் மிச்சமாகும். உதாரணமாக, கீழே உள்ளப் படத்தைப் பாருங்கள். ஓட்டுநர் 7 மணி 30 நிமிடம் வேலை செய்திருக்கிறார். ஆனால், அவருக்குக் கிடைத்த தொகை ரூபாய் 355 மட்டுமே.

 

திங்கள் கிழமை துவங்கி வியாழக் கிழமை வரை 54 சவாரிகள் செய்தால் ஓட்டுநருக்கு ஊக்கத் தொகை வழங்கும் முறை உபேரில் தற்போது இருக்கிறது. அப்படிச் செய்தால் சவாரியில் சம்பாதித்த தொகையைவிட அதிகமாக ரூபாய் 2700ஐ ஓட்டுநருக்கு உபேர் அளிக்கும். ஆனால், இந்த இலக்கை எட்டுவது ஏறக்குறைய சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், எத்தனை சவாரி செய்வது என்பது ஓட்டுநரின் கையில் இல்லை. அதனைக் கம்பெனிதான் தீர்மானிக்கிறது. “ஒரு சமயம், நான் ஒரு நாளைக்கு 14-15 மணி நேரம் வண்டி ஓட்டி, 53 சவாரிகளை முடித்துவிட்டேன். இன்னுமொரு சவாரி கிடைத்தால் 54 ஆக்கிவிடலாம் என்று காத்திருந்தேன். ஆனால், அது எனக்குக் கொடுக்கப்படவேயில்லை. அதற்குள் நேரக் கணக்கு முடிந்துவிட்டது“, என்று ஓர் ஓட்டுநர் சொன்னார்.

தங்களுக்கு குறுகிய தூரப் பயணங்களே கொடுக்கப்படுகின்றன என்று ஓலா ஓட்டுநர்கள் சொல்கிறார்கள். அதனால், அவர்கள் சவாரிக்காகப் பெறும் தொகை சிறியதாக இருக்கிறது. எனவே, அவர்கள் தொகை ரீதியான MBG இலக்கை எட்டுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. உபேர் ஓட்டுநர்களுக்கு நீண்ட தூரப் பயணங்கள் அளிக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள போக்குவரத்து நெருக்கடியில், அதிக தூரம் ஓட்டும்போது அதிக எண்ணிக்கையில் சவாரிகள் செய்ய முடியாது. அதனால், சவாரி அடிப்படையிலான இலக்கை அவர்களால் பூர்த்தி செய்ய முடியாது. இதன் காரணமாக, கூடுதல் நேரத்துக்கு உழைக்கும் நெருக்கடிக்கு ஓட்டுநர்கள் ஆளாகிறார்கள். இலக்கை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் இரவில் கூட காரிலேயே தூங்குகின்றனர்.

இப்படியான சூழலில் மோட்டார் வாகனச் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டுவரவிருக்கிறது. 8 மணி நேரத்துக்கு மேலாக வாகனத்தை ஓட்டும் ஓட்டுநருக்குத் தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் வழி செய்கிறது. இது ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. RTO அளிக்கும் டிரிப் ஷீட் ஒன்றை ஓட்டுநர் பராமரித்து வர வேண்டும். அந்த டிரிப் ஷீட்டை போலீசோ அல்லது வேறு அதிகாரிகளோ அவ்வப்போது சரிபார்ப்பார்கள். ஓட்டுநர் 8 மணி நேரத்துக்கு மேலாக வண்டியோட்டியிருந்தால் அவருக்குத் தண்டம் விதிக்கப்படும். இரண்டாவது முறையும் ஓட்டுநர் அந்தக் குற்றத்தைச் செய்தால் அவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது. தங்களின் பொருளாதாரச் சுமையை அரசும் அதிகாரவர்க்கமும் மேலும் அதிகப்படுத்துகிறார்கள் என்று ஓட்டுநர்கள் கருதுகின்றனர். தனது வாகனத்துக்கு ஆண்டு தகுதிச் சான்று (FC) எடுப்பதற்கு ரூபாய் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிவந்தது என்றும், அதற்குக் காரணம் போக்குவரத்துத்துறையில் புரோக்கர்கள் வழியாகத்தான் வேலை நடப்பது என்றும் ஓர் ஓட்டுநர் சொன்னார். அதுபோல, 1100 ரூபாய் விலையுள்ள மீட்டரை வண்டியில் பொருத்துவதற்கு மேலும் ஓராயிரம் ரூபாயை ஓட்டுநர்கள் அழ வேண்டியிருக்கிறது.

ஓட்டுநர்களுக்கு வாடிக்கையாளர்கள் தகுதி மதிப்பெண் வழங்கும் ஸ்டார் ரேட்டிங் முறையைக் கைவிட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோருகின்றன. சிலசமயங்களில் பயணிகள் அநியாயமான முறையில் குறைவான ஸ்டார் மதிப்பீடு வழங்குகிறார்கள். அல்லது, அடுத்த புக்கிங் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும், அவசரத்தில் 1 அல்லது 2 ஸ்டார்களை அழுத்திவிட்டு ஓடிவிடுகிறார்கள். பயணி ஒருவர், தனது முந்தைய பயணத்தின் பின் ஸ்டார் ரேட்டிங் செய்தால் மட்டுமே அவர் அடுத்த முறை வண்டி புக் செய்யும்போது அனுமதிப்பது என்ற முறையை ஓலாவும் உபேரும் பின்பற்றுகின்றன. ரேட்டிங் குறைந்தால் அது ஓட்டுநர் பெறும் சவாரிகளின் எண்ணிக்கையைப் பாதித்து அவர்களின் குறைவான சம்பாத்தியத்தை மேலும் குறைத்துவிடும்.

யதார்த்தத்தில் பார்த்தால் ஓலாவும் உபேரும் கடன்பட்ட தொழிலாளிகளைத்தான் உருவாக்குகிறார்கள். நிலைமை இப்படியிருக்க, தொழிலாளர்களைத் தொழிலதிபர்கள் ஆக்குகிறோம் என்று ஓட்டுநர்களையும் பொது மக்களையும் ஓலாவும் உபேரும் தொடர்ந்து ஏமாற்றி வருவது எப்படி? மேலும், வாகனத் தொகுப்புகளை இயக்கும் ஓலா, உபேர் தொழிலுக்கு வந்த பின்னர், பாஸ்ட் ட்ரேக், NTL போன்ற பழைய கால் டாக்சி கம்பெனிகளும், தனியாக வாடகை வண்டி ஓட்டும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்குச் சவாரி கிடைப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு 8 மணி நேரத்தில் சம்பாதித்த தொகைக்குச் சவாரி பார்ப்பதற்கு மிக அதிக நேரத்துக்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த காரணத்தினால்தான், பல நாடுகளில் உபேரை நாட்டை விட்டு விரட்டினர். வாடகை வண்டி ஓட்டுநர்களின் போராட்டத்தின் காரணமாக, அல்லது, அடிப்படையான பாதுகாப்பு முறைகளை உபேர் பின்பற்றாததின் காரமாக அந்நாட்டு அரசுகள் உபேரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

CITU, உரிமைக் குரல், வாழ்வுரிமை டிரைவர் தொழிற்சங்கம், நண்பர்கள் மகிழுந்து டிரைவர் வெல்பேர் யூனியன், தொழிலாளர்கள் கார் டிரைவர்கள் அமைப்பாகத் தொழிலாளர் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் போக்குவரத்து ஆணையரைச் சந்தித்தனர். கட்டணத்தை முறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதற்கு 10 நாள் அவகாசம் வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் கேட்டுக்கொண்டார். CITUவோடு இணைக்கப்பட்ட மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அன்பழகன், ‘பேச்சுவார்த்தை நடந்த 15 நாட்களுக்குள் முறைப்படுத்தப்பட்ட கட்டண விகிதம் கொண்ட கருத்துரை ஒன்றை அரசுக்கு அனுப்பி வைப்பதாக ஆணையர் உறுதியளித்ததாக‘ சொன்னார். “போன ஆண்டு போராட்டத்தின்போது அவர்கள் எங்களின் கோரிக்கை மனுவை வாங்கிக்கொள்ள மட்டும் செய்தனர். ஆனால், இந்தமுறை எங்களோடு உட்கார்ந்து பேச வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் செயல்படவில்லை என்றால், எங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்“, என்று தோழர் அன்பழகன் சொன்னார்.

 

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நல்ல விளைவு ஏற்படுமா அல்லது சென்ற ஆண்டின் கதை திரும்பவும் அரங்கேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மேலும் மேலும் அதிக ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதைப் பார்க்கும்போது அதிருப்தி அதிகரித்து வருவதை மறுப்பதற்கில்லை. மேம்படுத்தப்பட்ட கட்டணம் மற்றும் ஒழுங்குமுறைகள் வேண்டும் என்ற கோரிக்கையின் பின்பு மேலும் மேலும் கூடுதல் தொழிலாளர்கள் திரள்வது தவிர்க்கப்பட முடியாதது.

 

This entry was posted in News, Strikes, Workers Struggles and tagged , , , , . Bookmark the permalink.