நீதித்துறையின் மற்றொரு தொழிலாளர் விரோதத் தீர்ப்புக்குப் பின்னர்ப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது!

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைத் தோல்விக் கண்ட பின்பு, ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் துவங்கிய நாளிலிருந்து ஒரு வாரத்துப் பின்பு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெறவும் வேலையைத் துவங்கவும் உயர்நீதிமன்ற உத்தரவு நிர்ப்பந்தம் செய்தது. தொழிலாளர்களின் போராட்டத்தை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பழகிப்போன தந்திரமாகப் பொது நல வழக்கு போடுவது ஆகியிருக்கிறது. வேலைநிறுத்தம் துவங்கிய உடனே பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது என்று பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வாரம் வரை பற்பல நீதிமன்ற அமர்வுகளில் விசாரணை நடந்தது. அதன்பின்பு 11ஆம் தேதி, வியாழக்கிழமை மாலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எதிர் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையின் காரணமாக, பரந்துபட்ட பொதுமக்களின் நலனுக்காக வேலையைத் துவங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தபோதும், 2.57 புள்ளிகள் அளவுக்கு ஊதிய உயர்வு, ஏறக்குறைய 7 ஆயிரம் கோடி வரையிலான பழைய பாக்கிகள் என்ற பிரச்சனைகளைப் பேசி முடிவு காண்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்படுவதற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாக இதனைப் பகுதியளவு வெற்றி என்று தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் 13வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். 12வது ஊதிய ஒப்பந்தம் 2016 அக்டோபரில் முடிந்துபோயிருந்தது. கடந்த சில மாதங்களாகப் பல அமர்வுகளில் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தபோதும், எந்தவொரு பொதுக் கருத்தும் உருவாகிவிடவில்லை. பொதுத்துறையில் உள்ள பிறத் தொழிலாளர்களுக்கு இணையாகத் தங்கள் சம்பளம் இருக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரின. ஆனால், அதனைச் செய்வதற்கான நிதிநிலைமையில் தான் இல்லை என்று அரசு சொல்லிக்கொண்டேயிருந்தது. மேலும், ஏறக்குறைய 7 ஆயிரம் கோடி ரூபாய் பழைய பாக்கியைத் திருப்பித் தருவது பற்றி அரசு எந்தவொரு உறுதிமொழியையும் தரவில்லை.

இந்த நிலைமையில் தொழிற்சங்கங்கள் ஒரு பக்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மற்றொரு பக்கம், மே 2017 பொதுநல வழக்கொன்று தொடர்பான நீதிமன்ற விவகாரத்தில் பழைய பாக்கிகளைத் தர வேண்டியும், ஊதிய உயர்வு குறித்தும் தொழிற்சங்கங்கள் வாதாடி வந்தன. எந்தக் காரணியை அடிப்படையாகக்கொண்டு ஊதிய உயர்வைக் கணக்கிடுவது, கடைசி அமர்வில் பேச்சுவார்த்தையின் முறிவுக்குக் காரணமாயிற்று. தொழிற்சங்கங்கள் 2.57 புள்ளியில் நின்றன. அப்படிச் செய்தால், பொதுத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும். ஆனால், அரசாங்கம் மூன்று வருட ஒப்பந்தத்திற்கு 2.44 புள்ளிகள் என்ற நிலையில் உறுதியாக நின்றுகொண்டது. தொழிலாளர்களின் பெரும்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 சங்கங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறின. இந்தச் செய்தி பரவ ஆரம்பித்தவுடன், அன்று மாலையே வேலைநிறுத்தம் துவங்கியது. இருந்தபோதும், வெளிநடப்பு செய்யாத சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அரசு, பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தது.

மறுநாள், போலீஸ் நின்றிருந்தபோதும், டெப்போக்கள் முன்பு தொழிலாளர்கள் திரள ஆரம்பித்தனர். வேலைநிறுத்தத்தை உடைக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. தற்காலிக ஓட்டுநர்களைத் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கமர்த்தியது. தனியார் பேருந்துகள் சிலவும் இயக்கப்பட்டன. இதற்கிடையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்லித் தனிநபர்கள் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். ‘தொழிலாளர்களின் பாக்கியைத் திருப்பித் தாருங்கள்‘ என்று அரசுக்குப் பலமுறை சொல்லிவிட்டோம் என்று காரணம் காட்டி, மதுரை உயர்நீதிமன்றக் கிளை பொதுநல வழக்குகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பென்ஞ் தொழிலாளர் விரோத நிலையெடுத்தது. பொதுமக்களின் பயணப்படும் உரிமையை வேலைநிறுத்தம் பாதித்துள்ளது என்று சொல்லி, ‘வெறும் 600 ரூபாய் வித்தியாசத்துக்காக‘ வேலைநிறுத்தம் செய்யும் உரிமை தொழிலாளர்களுக்கு இல்லை என்றும் உத்தரவிட்டது. மேலும், வேலைக்கு வராதத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையையும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அளித்தது.

இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், வாரக் கடைசி வரையிலும் வேலைநிறுத்தம் ஏறக்குறைய முழுமையான ஒன்றாக இருந்தது. தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்காத காரணத்தால் அவர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். திங்கள் கிழமை அன்று வழக்கறிஞர்களின் பெரிய குழு ஒன்று முதல் பெஞ்ச்சின் முன்பு ஆஜர் ஆனது. தொழிலாளர்களின் பிரச்சனைகள் என்னவென்று நீதிமன்றம் கேட்க வேண்டும் என்று கோரியது. தலைமை நீதிபதி உத்தரவை ஓரளவு மாற்றியமைத்தார். நீதிமன்றத்தின் அனுமதியின்றி, தொழிலாளர்களை வேலைநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யக் கூடாது என்று அவரின் உத்தரவு குறிப்பிட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிற வழக்குகள் விசாரிக்கப்பட்டுவந்த மூன்றாவது பெஞ்சுக்கு வழக்கு மாற்றியளிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகள் நீடித்துக்கொண்டிருக்க, ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் திரண்டு தங்களின் எதிர்ப்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஜனவரி 8 அன்று, சென்னையின் சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பு தொழிலாளர்கள் திரண்டனர்.

This slideshow requires JavaScript.

திரண்டிருந்த தொழிலாளர்கள் முன்பு தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் உரையாற்றினர். நீதித்துறையின் செயல்பாட்டின் மீது கடுமையானத் தாக்குதல் தொடுத்தனர். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த தொழிலாளர் ஒருவர், “நாங்கள் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதிக்கு மிகப் பெரிய ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. அவர் பெறும் சம்பளத்தை விட்டுத் தள்ளுங்கள். நீதிபதியின் கார் டிரைவரின் ஊதியம் என்னவென்று பாருங்கள். அந்த டிரைவர் சம்பளத்தின் ஒரு பகுதி கூட எங்கள் சம்பளம் இல்லை“, என்று சொன்னார். CITU வைச் சேர்ந்த அ. சவுந்திரராஜன், ‘அமைச்சர் விஜய பாஸ்கரும், அரசும் (போராட்ட வெற்றியை) மறுத்துப் பேசுகிறார்கள்‘ என்றும், ‘அரசு தனக்கு ஆதரவான தொழிற்சங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நியாயப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் பெரும்பகுதி வேலைக்கு வந்துவிட்டார்கள் என்று அமைச்சர் பேசுகிறார்‘ என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர், ‘அரசுத் தொடர்ந்தது தவறானத் தகவல்களைப் பரப்பி வருகிறது. அப்படியிருந்தும் பொதுமக்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தொழிலாளர்களின் பணத்தை அரசு ஏப்பமிட்டுக்கொண்டிருப்பது மக்களுக்குப் புரிந்திருக்கிறது‘ என்று சொன்னார்.

அதற்கடுத்த நாள், தங்களின் அவலநிலையை வெளிப்படுத்தும் வகையில், சென்னையின் MTC தலைமையகத்துக்கு முன்பு தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கூடினர்.

This slideshow requires JavaScript.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக குழந்தைகளும் முதியோர்களும் கொட்டும் மழைக்கு அஞ்சாமல் அமர்ந்திருந்தனர். ஒரு ஓட்டுநர் தன் மனைவியையும் தங்களின் இரண்டு குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார். ஏழாண்டுகளாக வேலையில் இருக்கும் அவர் மாதம் ரூபாய் 20 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவரின் மனைவி படித்துக்கொண்டிருப்பதால், செலவுகளைச் சமாளிக்க அந்த ஓட்டுநர் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஊதியத்தை அதிகரிக்க மறுத்தது பற்றி மட்டுமல்லாமல், PF, காப்பீடு, கூட்டுறவு சொசைட்டிக்கான பணம் என்பதாக ரூபாய் 7 ஆயிரம் கோடியைத் திருப்பித் தராத அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் கடும் கோபத்தில் இருப்பது தெளிவாக வெளிப்பட்டது. “ஒருநாள் வேலை முடிந்த பின்னர் பயணக் கட்டணமாக வசூல் செய்யப்பட்ட பணத்தை நான் வைத்துக்கொள்கிறேன். அப்புறம் தருகிறேன் என்று நடத்துநர் ஒருவர் சொல்ல முடியுமா?“ என்று ஒரு தொழிலாளர் கோபத்துடன், அரசாங்கத்தின் இரட்டை அணுகுமுறை பற்றி பேசினார். இந்த நியாயத்தை நீதிமன்றம் காணத் மறுப்பது எப்படி என்று தொழிலாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.

DMS வளாகத்தில்ள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தோழர் பத்மநாபனையும் TTSFயைச் சேர்ந்த தோழர் நாகராஜனையும் தொழிலாளர் கூடம் சந்தித்தது. அப்போது அந்தத் தோழர்கள் இப்பிரச்சனைகளை மறுபடியும் வலியுறுத்திப் பேசினார்கள்.

 

“தொழிலாளர்களும், அதிகாரிகளும் சமத்துவமாக நடத்தப்படாத ஒரே ஒரு பொதுத்துறை நிறுவனம் எங்களது மட்டுமே. உயர் அதிகாரிகளுக்கு 2.57, 2.62, 2.77 என்ற கணக்கில் மிக அதிக ஊதிய உயர்வைப் பெறுகின்றனர். ஆனால், நாங்கள் இன்னமும் அடித்தட்டில் கிடக்கிறோம்“, என்று தோழர் பத்மநாபன் சொன்னார். ‘தொழிலாளர்கள் பேராசைக்காரர்கள் என்று காட்டுவதற்காக, மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காக, அரசு தவறான விவரங்களை வெளியிடுகிறது‘ என்று தொழிலாளர்கள் பலரும் சொன்னார்கள். ஆவடி டிப்போவில் இருந்து வந்திருந்த ஒரு நடத்துநர், “இப்போது நாங்கள் போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள். ஆனால், போராட்டத்தை முடித்துவிட்ட பின்னர், உங்களைப் போலவே, பொதுத்துறை போக்குவரத்தைப் பயன்படுத்தும் பொதுஜனம்தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்“, என்று வலியுறுத்தினார். “இந்தப் போராட்டத்தின் காரணமாக நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் உங்களைப் போலவே, அவதிக்குள்ளாகியிருக்கிறோம். நாங்கள் கேட்பது எங்களின் பங்கைத்தான். இருந்தபோதும், இந்த அரசு எங்களுடன் பேச மறுக்கிறது“, என்றார் அந்த நடத்துநர். தொழிலாளர்கள் பலரும் தங்களின் சம்பள பில்லை எங்களிடம் காட்டினர். 4-5 ஆண்டு அனுபவம் உள்ள ஒரு தொழிலாளர் ரூபாய் 16 ஆயிரம் வாங்குவதும், 20 ஆண்டு அனுபவம் உள்ள தொழிலாளர் ரூபாய் 30 ஆயிரம் ஊதியமாகப் பெறுவதும் தெரியவந்தது.

ஜனவரி 11 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

Hunger fast at MTC HQ

இதற்கிடையில், மூன்றாவது பெஞ்சுக்கு முன்பு வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது. பொங்கல் நெருங்கி வருவதால் தொழிற்சங்கங்கள் தங்கள் மனசாட்சிப்படி யோசித்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நீதிபதி கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு வழக்கறிஞரின் வாதமும் பல மணி நேரங்கள் நடந்தது. மாலை நேரம் முடியும் தறுவாயில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும், வழக்கு சமரசப் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் என்று உத்தரவு சொன்னது. இந்த உத்தரவைத் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுகிறது என்று அறிவித்தன. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படுவது வரலாற்றில் முதன்முறை என்றும் அதனால், போராட்டம் பகுதியளவு வெற்றியடைந்தது என்றும் தொழிற்சங்கங்கள் சொல்லின.

இடைக்கால உத்தரவு

ஜனவரி 5, வெள்ளிக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்பிரச்சனை தொடர்பான பொதுநல வழக்கு மனு ஒன்றை ஏற்றுக்கொண்டு, தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், தொழிலாளர்கள் தரப்பு கருத்து என்னவென்று அவர் கேட்கவேயில்லை. தொழிலாளர்கள் உத்தரவிற்குக் கீழ்ப்பட மறுத்துவிட்டனர், வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர் என்று வெளிப்படையாகத் தெரிந்தவுடன் தலைமை நீதிபதி, தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனது முந்தைய எச்சரிக்கையைத் தள்ளுபடி செய்து, வழக்கை மூன்றாவது பெஞ்சுக்கு மாற்றினார். பொதுநல வழக்கின் தகுதி என்னவென்று விசாரிப்பதற்குப் பதிலாக, உடனடி முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் நீதிமன்றம் ஈடுபட்டது. அரசு விட்டுக்கொடுப்பதாக இல்லை. 32 சங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற முடியாது என்று உறுதியாக நின்றது. ஏறக்குறைய 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழிலாளர்களின் பாக்கித் தொகையைத் திருப்பித் தருவது பற்றி எந்த உறுதியும் கொடுக்க முடியாது என்றது. செய்ய வேண்டியதைச் செய்யத் தவறிய, வளைந்து கொடுக்காத அரசிடம் குற்றம் காண்பதற்கு மாறாக, பொதுமக்களின் நலன் கருதி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. தொழிலாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டனர், அத்துடன், சம்பளப் பேச்சுவார்த்தையை மீண்டும் பேச, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் கீழ் நடுவர் ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரினர். அரசு இந்தக் கோரிக்கையை ஒப்புக்கொள்ள ஆர்வம் காட்டியது. அதன்பின், நீதிபதி இ. பத்மநாபன் அவர்களை நடுவராக நியமித்து ஒரு மாதக் காலத்துக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தொழில் தகராறு சட்டம், பிரிவு 10ன் கீழ் எழுப்பப்பட்ட ஊதிய ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தொழிற்சங்கங்கள் கேட்பது 2.57, அரசு ஒப்புக்கொண்டுள்ளது 2.44 புள்ளி என்பதால்) 0.13 புள்ளிகள் ஊதியம் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்ற சங்கங்களின் கோரிக்கையின் நியாயம் பற்றி நீதிபதி விசாரிப்பார். எந்தத் தேதியிலிருந்து ஊதிய உயர்வு நடப்புக்கு வரும் என்பதையும் பாக்கிகளை அளிப்பது குறித்தும் அவர் முடிவு செய்வார். ஆனால், தொழிலாளர்களின் சம்பளப் பாக்கிகளைப் பிடித்து வைத்துக்கொண்டுள்ள, சில தொழிற்சங்கங்களுடன் தனியே ஒப்பந்தம் செய்துகொண்ட அரசு மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் சட்ட மீறலை இந்த சமரச நடுவர் மன்றம் விசாரிக்காது. வேலைநிறுத்தக் காலத்துக்கான ஊதியம் அளிக்கப்படுவது பற்றியும் அது விசாரிக்காது. ஓய்வு பெற்றத் தொழிலாளர்களுக்கும், பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய பாக்கிகளுக்கான காலவரையறை எது என்பது பற்றி அரசோ அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கான வரையறைகளோ சொல்லவில்லை. சமரசப் பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 1 அன்று துவங்கி மார்ச் 1க்கு முன்பாக நிறைவு பெற்று நீதிமன்றத்தின் முன்பு அறிக்கைத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது மக்கள் ஆதரவு vs.  ஊடகங்களின் பாரபட்சம்

பொதுமக்கள் வேலைநிறுத்தத்திற்குக் காட்டிய ஆதரவு, குறிப்பாக, வழக்கமான பயணிகள் காட்டிய ஆதரவு தொழிலாளர்களின் மன உறுதிக்குப் பின்னுள்ள முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். எட்டு நாட்கள் வரை வேலைநிறுத்தம் நீடிப்பதில் இது முக்கியமான பங்கு வகித்தது. பொதுமக்கள் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர் என்பது உண்மைதான். ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதும், அரசுதான் பிரச்சனைக்குக் காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதும் பொதுமக்களோடு தொழிலாளர் கூடம் பேசியபோதும், நேர் காணல் செய்த போதும் தெளிவாக வெளிப்பட்டன. வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பின்போது, பொது ஆர்ப்பாட்டங்கள், டெப்போக்களில் துண்டறிக்கை வினியோகம், சமூக வலைதளப் பிரச்சாரம் போன்றவற்றைத் தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயமும், பொதுமக்களிடம் ஆதரவு திரட்ட எடுத்த முயற்சிகளும் அவர்களுக்கு நல்ல ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளன. பிற துறைகளைச் சேர்ந்தத் தொழிலாளர்களும் கூட தங்களின் தொழிற்சங்கங்கள் மூலமாக, அசோசியேஷன்கள் மூலமாக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். CITU, AICCTUவோடு இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களும், வங்கி- காப்பிட்டுக் கழகங்களின் யூனியன்களும், FITE உடன் இணைந்துள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கமும் தங்களின் ஆதரவை அளித்திருந்தன. இந்த அமைப்புகளில் சில பொதுக் கூட்டங்களையும் நடத்தின. ஆனால், பிரதான அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் இரண்டகம் செய்தன. அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இழுபறியில் அப்பாவி பயணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகப் படம் காட்டின. தொழிலாளர்களின் முரட்டுத்தனத்தின் காரணமாக பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள் என்ற ரீதியில் கதையளந்தார்கள். மேலும், இரு தரப்பினரின் நிலைப்பாடுகள் என்னவென்று பாரபட்சமற்ற முறையில் பொதுமக்கள் முன்பு கருத்துகளை வைப்பதற்கு போதுமான வாய்ப்புகளை அளிக்கவும் ஊடகங்கள் தவறிவிட்டன. அதுமட்டுமல்ல, நீதிமன்றக் கூற்றுகளையும், அரசின் கூற்றுகளையும் சார்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் சரிபார்க்கப்படாத செய்திகளையே அவை வெளியிட்டன. ஊடகங்களின் தவறான செய்திகளைச் சரிசெய்ய, தொழிற்சங்கங்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தின. தங்களின் தரப்பு நியாயங்களை முன்வைத்தன. The Hindu போன்ற முன்னணி செய்திப் பத்திரிக்கைகள் கூட பிரதான ஊடகங்களுக்குள் உட்பொதிந்து கிடக்கும் தொழிலாளர் விரோதப் பார்வையைத் தெளிவாக வெளிப்படுத்தின. “அதிகக் கட்டண வசூலை எதிர்கொள்ளும் பயணிகள் முரட்டுத்தனமாக இயக்கப்படும் வாகனத்தில் அவதி“ என்று பொருள்பட The Hindu தலைப்புச் செய்திபோட்டது. “சென்னையைக் காப்பாற்ற தனியார் பேருந்துகள் வந்தன. இலவசமாகப் பயணிகளை அழைத்துச் சென்றன“, என்று the News Minute தலைப்பிட்டது. இவை சில உதாரணங்கள் மட்டுமே. மேலும் உதாரணங்களைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

http://www.hindustantimes.com/india-news/bus-strike-over-wage-hike-leaves-thousands-stranded-in-tamil-nadu/story-vLoSmvnXF345bK6mpqPIsM.html

http://www.hindustantimes.com/india-news/tamil-nadu-commuters-hit-hard-as-transport-workers-go-on-strike-seeking-wage-hike/story-oZWjsSu5fOsGdGnMaIooyL.html

வெற்றிகரமான வேலைநிறுத்தமா?

அரசின் அச்சுறுத்தல்களையும் நீதிமன்றத்தின் எச்சரிக்கைகளையும் எதிர்கொண்டு, எட்டு நாட்களுக்கு ஏறக்குறைய முழுமையான வேலைநிறுத்தத்தை எட்டு நாட்களுக்குத் தொழிலாளர்கள் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களை போதுமான அளவுக்கு வேலைக்குக் கொண்டுவர அரசால் முடியவில்லை. உரிமம் பெறாத ஓட்டுநர்களை வேலைக்கு அழைத்து ஒப்பந்தத் அடிப்படையில் வாகனங்களை இயக்க வேண்டிவந்தது. இப்படிச் செய்த போதும் ஓரளவுக்குக் கூட ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. வேலைநிறுத்தக் காலம் முழுவதும் தொழிலாளர்களின் தீர்மானமான நிலைப்பாடும், மன உறுதியும் மிக உயர்வானதாக இருந்த.ன பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், வியாழன் அன்று அரசு மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது.

ஆனால், இறுதியாகப் பார்க்கும்போது, நீதிமன்றத்தின் உத்திரவு அரசுக்கான ஓர் பின்னடைவு என்று கருத வாய்ப்பில்லை. தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையைக் கூட உத்தரவு நிறைவேற்றி வைக்கவில்லை. இதுவரை நடந்துவந்த பேச்சுவார்த்தை மற்றொரு பேச்சுவார்த்தையாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான். நீதித்துறை ‘இயற்கை நியாயம்‘ என்ற கோட்பாட்டின்படி வழக்கை விசாரிக்கவில்லை. மாறாக, அவசரப்பட்டு தீர்ப்புகளை வெளியிட்டன. சமரசப் பேச்சுவார்த்தைக்கு நடுவம் ஒன்றை நியமனம் செய்வதற்கு முன்பு மனம்போன வாக்கில் கோர்ட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்தின. CITUவின் நிர்வாகியும் MTCயின் தொழிலாளருமான அசோகன் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் கோரிக்கையில் உள்ள நீதியை கோர்ட் உத்தரவு வெளிப்படுத்தவில்லை. திமிர் பிடித்த மாநில அரசைப் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், அரசு ஏற்கனவே ஒப்பந்தம் முடிந்துவிட்டது அதுதான் இறுதியானது என்பதால் உங்களோடு பேச முடியாது என்று அரசு ஏற்கனவே சொல்லியிருக்கிறது. இருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்பின் காரமாக மறுபடியும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்திருக்கிறது. அந்த சமரசப் பேச்சுவார்த்தை தொழிலாளர் துறை முன்பு நடக்காது ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் முன்னிலையில் நடப்பது நல்லதுதான். எங்கள் கோரிக்கைகள் நியாயமானது என்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்“. ஆனால், அவர் அதற்கு மேலும் சென்று நீதிமன்றம் பாரபட்சமாக நடந்துகொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பைத் தொழிலாளர்களின் தலையில் சுமத்தின. ‘‘அரசுக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூட நீதிமன்றம் உச்சரிக்கவில்லை. தொழிலாளர்களின் கூலியைக் கொடுக்காது இருப்பது எங்ஙனம் என்று நீதிமன்றம் அரசைக் கேட்கவில்லை. எங்களின் கோரிக்கையில் நாங்கள் இறங்கி வந்திருக்கிறோம் என்பதை நீதிமன்றம் பாராட்டவில்லை. பொது நலன் கருதி வேலைநிறுத்தத்தை நாங்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியது“, என்று முடித்தார் தோழர் அசோகன்.

தொலைக்காட்சியில் வெளிவந்த நேர்க்காணலில் தொழிற்சங்கத் தலைமை தீர்ப்புக்கு ஆதரவாகப் பேசியது. பலத் தரப்பு தொழிலாளர்களும் விழாக் காலத்தின்போது பயணம் செய்வதற்கு வசதியாகவும் வேலைநிறுத்தத்தால் அவதிப்பட வேண்டாம் என்பதற்காகவும் மீண்டும் வேலையைத் துவங்கினோம் என்றும் அவர்கள் சொன்னார்கள். மேலும், வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றது இடைக்கால நடவடிக்கைதான் என்று சொன்ன அவர்கள், பேச்சுவார்த்தையின் போக்கைப் பொறுத்து அது மாறுதலுக்கு ஆளாகக் கூடியது என்றும் தெளிவுபடுத்தினர்.

வரவிருக்கும் சமரசப் பேச்சுவார்த்தையின் விளைவு என்னவாக இருக்கும் என்று முன்கூட்டியே சொல்ல முடியாது என்ற போதிலும், வேலைநிறுத்தத்தின் விளைவின் காரணமாகத்தான் அரசு எதிர்வரும் பேச்சுவார்த்தைக்கு இணங்கியது என்பதையும் மறுக்க முடியாது. அரசு அதிகாரத்தைச் சவாலுக்கு அழைக்க முடியும் என்பதைத் தொழிலாளர்கண் தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் காட்டியுள்ளனர். தொழிலாளர்கள் தங்களின் போர்க்குணமிக்க இயக்கத்தைத் தக்க வைத்துக்கொள்வது கோரிக்கைகளை வென்றெடுக்கத் தேவையானது என்பது மிக முக்கியமானது.   

This entry was posted in News, Public Sector workers, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.